-மகாத்மா காந்தி

ஐந்தாம் பாகம்
6. நயந்துகொள்ள முயற்சி
நாங்கள் புனா வந்து சேர்ந்தோம். சிரார்த்தச் சடங்குகளெல்லாம் முடிந்த பிறகு இந்திய ஊழியர் சங்கத்தின் எதிர்காலத்தைக் குறித்தும் விவாதங்கள் எழுந்தன. அச்சங்கத்தில் நான் அங்கத்தினனாவது என்ற விஷயம் எனக்கு மிகவும் சங்கடமான பிரச்னையாக இருந்தது. கோகலே இருந்தபோது அதில் அங்கத்தினன் ஆவதற்கு நான் முற்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் விருப்பம் எதுவோ அதை அப்படியே பணிவுடன் நிறைவேற்றி வந்திருப்பேன். அத்தகையதோர் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரியமும். இந்தியப் பொது வாழ்க்கை என்ற கொந்தளிப்பான கடலில் பிரயாணம் செய்வதற்குச் சரியான மாலுமி ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். கோகலேயை நான் அத்தகைய மாலுமியாகக் கொண்டிருந்ததோடு, அவர் இருக்கப் பயமில்லை என்ற தைரியத்துடனும் இருந்தேன். இப்பொழுதோ, அவர் போய்விட்டதால் என் சக்தியைக் கொண்டே நான் இருக்க வேண்டியவனாகி விட்டேன். ஆகவே அச்சங்கத்தில் அங்கத்தினனாகி விட வேண்டியது என் கடமை என்பதை உணர்ந்தேன். அப்படிச் செய்தால் கோகலேயின் ஆன்மாவும் திருப்தியடையும் என்று எண்ணினேன். ஆகவே, தயக்கம் எதுவும் இல்லாமல், அதே சமயத்தில் உறுதியுடனும், அச்சங்கத்தின் அங்கத்தினர்களை நயந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன்.
இச்சமயத்தில் அச்சங்கத்தின் அங்கத்தினரில் பெரும்பாலானவர்கள் புனாவில் இருந்தார்கள். என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டேன். என்னைக் குறித்து அவர்களுக்கு இருந்த பயத்தையெல்லாம் போக்குவதற்கும் முயன்றேன். ஆனால், என்னைச் சேர்த்துக் கொள்ளும் விஷயத்தில் அவர்களிடையே பிளவு இருந்தது என்பதைக் கண்டேன். அவர்களில் ஒரு பகுதியினர், என்னைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஆதரவாக இருந்தார்கள். மற்றொரு பகுதியினரோ, அதைப் பலமாக எதிர்த்து வந்தனர். என்னிடம் கொண்டிருந்த அன்பில் இந்த இருசாராரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நான் அறிவேன். ஆனால், சங்கத்தினிடம் அவர்களுக்கு இருந்த விசுவாசம், என்னிடம் அவர்கள் கொண்டிருந்த அன்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம்; என்மீது கொண்ட அன்பை விடக் குறைவாகவாவது இல்லாமல் இருந்திருக்கும். ஆகையால், எந்த விதமான மனக்கசப்புமின்றியே விவாதித்து வந்தோம். அந்த விவாதம் முழுவதும் கொள்கையைப் பற்றியதாகும். என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுவதை எதிர்த்தவர்கள், அநேக விஷயங்களில் நானும் அவர்களும் வடதுருவம் – தென்துருவம் போல் வெகு தொலைவில் இருப்பதாகக் கூறினர். என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக் கொண்டு விட்டால், எந்த நோக்கத்திற்காக அச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கே ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணினார்கள். இயற்கையாகவே இத்தகைய ஆபத்தை அவர்களால் தாங்க முடியாதுதான்.
நீண்ட நேரம் விவாதித்த பிறகு நாங்கள் கலைந்து விட்டோம். முடிவான தீர்மானத்திற்கு வரும் விசயம் பிந்திய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.
அதிகப் பரபரப்பு அடைந்துவிட்ட நிலையிலேயே நான் வீடு திரும்பினேன். பெரும்பான்மை வோட்டுக்களின் மூலம் நான் அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளப்படுவது எனக்குச் சரியா? கோகலேயிடம் நான் கொண்டிருந்த பக்திக்கு அது பொருத்தமானதாக இருக்குமா? ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகத் தோன்றியது. என்னை அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளுவதில் அச்சங்கத்தின் அங்கத்தினர்கள் இடையே அபிப்பிராய பேதம் இவ்வளவு கடுமையாக இருக்கும்போது, சேர்த்துக்கொள்ளக் கோரும் என் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டு என்னை எதிர்ப்பவர்களுக்கு இருக்கும் சங்கடத்திலிருந்து அவர்களைத் தப்புவிப்பது ஒன்றே நான் செய்யக்கூடிய சரியான காரியம். சங்கத்தினிடமும் கோகலேயிடத்திலும் நான் கொண்டிருந்த பக்திக்கு ஏற்ற காரியமும் அதுதான் என்று எண்ணினேன். இந்த யோசனை பளிச்சென்று எனக்குத் தோன்றியதும், ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தைக் கூட்டவே வேண்டாம் என்று உடனே ஸ்ரீ சாஸ்திரிக்கு எழுதினேன். என் மனுவை எதிர்த்தவர்கள், நான் செய்த தீர்மானத்தை முற்றும் பாராட்டினர். இது, ஒரு சங்கடமான நிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது. எங்களுக்குள் நட்பையும் இன்னும் அதிகப் பலமானதாக்கியது. மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டது, உண்மையில் என்னை அச்சங்கத்தின் அங்கத்தினனாக்கியது.
அச்சங்கத்தில் சாதாரணமாக நான் அங்கத்தினன் ஆகாமலிருந்தது சரியானதே. நான் அங்கத்தினன் ஆவதை ஆட்சேபித்தவர்களின் எதிர்ப்பும் நியாயமானதே என்பதை, அனுபவம் இப்பொழுது தெளிவாக்குகிறது. கொள்கையைப் பற்றிய விஷயங்களில் எங்கள் கருத்துக்கள் முற்றும் மாறுபட்டவை என்பதையும் அனுபவம் காட்டிவிட்டது. ஆனால், இந்த மாறுபாட்டை அறிந்ததனால் எங்களிடையே எந்தவிதமான மனஸ்தாபமோ, மனக் கசப்போ இல்லை. சகோதரர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். புனாவிலுள்ள சங்கத்தின் இல்லம் எனக்கு என்றுமே யாத்திரைக்குரிய புண்ணிய ஸ்தலமாகவே இருந்து வருகிறது.
அச்சங்கத்தின் விதிகளின்படி நான் அதில் அங்கத்தினன் ஆகவில்லை என்பது உண்மை. ஆனால், ஆன்ம உணர்ச்சியில் என்றும் அதன் அங்கத்தினனாகவே இருந்து வருகிறேன். ஸ்தூல தொடர்பை விட ஆன்ம தொடர்பு அதிக மேன்மையானது. ஆன்ம தொடர்பில்லாத வெறும் ஸ்தூல தொடர்பு உயிரில்லாத உடல் போன்றதேயாகும்.
$$$
7. கும்ப மேளா
அடுத்தபடியாக டாக்டர் மேத்தாவைச் சந்திப்பதற்காக ரங்கூனுக்குப் போனேன். போகும் வழியில் கல்கத்தாவில் தங்கினேன். அங்கே காலஞ்சென்ற பாபு பூபேந்திரநாத வசுவின் விருந்தினனாகத் தங்கினேன். வங்காளிகளின் விருந்தோம்பல் குணம் இங்கே உச்ச நிலையை எட்டிவிட்டது. அந்த நாளில் நான் பழங்களைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. ஆகவே, கல்கத்தாவில் கிடைக்கக்கூடிய எல்லாப் பழங்களும் கொட்டைப் பருப்புகளும் எனக்காகத் தருவிக்கப்பட்டன. அவ்வீட்டுப் பெண்மணிகள் இரவெல்லாம் கண்விழித்துப் பலவிதமான கொட்டைகளையும் உடைத்து உரித்தார்கள். பழங்களை இந்திய முறையில் பக்குவம் செய்து, பரிமாறுவதற்கும் எவ்வளவோ சிரமம் எடுத்துக் கொண்டார்கள். என்னுடன் வந்தவர்களுக்கென்று எத்தனையோ வகையான பலகாரங்கள் செய்யப்பட்டிருந்தன. என்னோடு என் மகன் ராமதாஸு ம் வந்திருந்தான். அன்போடு நடந்த இந்த விருந்தோம்பலை நான் எவ்வளவோ பாராட்டக்கூடும். ஆயினும் இரண்டு மூன்று விருந்தினரை உபசரிப்பதற்காக ஒரு குடும்பம் முழுவதுமே வேலை செய்வதை என்னால் சகிக்க முடியவில்லை. என்றாலும், இவ்விதமான சங்கடமான உபசரிப்புகளிலிருந்து தப்பும் வழியும் அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
ரங்கூனுக்கு போகும்போது கப்பலில் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்தேன். ஸ்ரீ போஸின் வீட்டில் அதிகப் படியான உபசாரம் எங்களுக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் கப்பலில் எங்களுக்கு ஏற்பட்ட கதியோ? மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் சாதாரண வசதிகளைக் கூட கவனிப்பார் இல்லாமல் இருந்தது. குளிக்கும் அறை என்று சொல்லப்பட்ட இடம், சகிக்க முடியாத வகையில் ஆபாசமாக இருந்தது. கக்கூசு ஒரே நாற்றமெடுத்தது. கக்கூசுக்குப் போவதாக இருந்தால் மலத்தையும் மூத்திரத்தையும் மிதித்துக் கொண்டு தான் போக வேண்டும். இல்லையானால், தாண்டிக்கொண்டு செல்ல வேண்டும்.
இந்த ஆபாசங்களைச் சகித்துக்கொண்டு என்னால் இருக்க முடியவில்லை. கப்பலின் பிரதம அதிகாரியிடம் முறையிட்டும் பயனில்லை. இந்த விதமான ஆபாசங்களும் நாற்றங்களும் போதாதென்று பிரயாணிகளும் தங்களுடைய புத்திகெட்ட பழக்கங்களினால் மேலும் ஆபாசப்படுத்தினார்கள். உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி துப்பி வைத்தனர். சாப்பிட்டதில் மிஞ்சியது, புகையிலை, வெற்றிலை ஆகியவைகளைக் கழித்தது ஆகியவற்றையெல்லாம் சுற்றிலும் போட்டார்கள். அவர்கள் போட்ட கூச்சல்களுக்கோ முடிவே இல்லை. முடிந்த அளவு அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டு விட ஒவ்வொருவரும் முயன்றனர். அவர்களைவிட அவரவர்களுடைய சாமான்களே அதிக இடத்தை அடைத்துக் கொண்டுவிட்டன. இவ்விதம் இரண்டு நாட்கள் எங்களுக்கு மிகவும் கடுமையான சோதனையாகி விட்டது.
ரங்கூனுக்குப் போனதும் கப்பல் கம்பெனியின் ஏஜெண்டுக்கு எழுதினேன். இருந்த நிலைமை முழுவதையும் அவருக்குத் தெரிவித்தேன். இந்தக் கடிதத்தினாலும், டாக்டர் மேத்தாவின் முயற்சியினாலும், திரும்புகையில் மூன்றாம் வகுப்புப் பிரயாணம் அவ்வளவு மோசமாக இல்லை.
எனது பழ ஆகார விரதம் ரங்கூனிலும் டாக்டர் மேத்தாவின் வீட்டினருக்கு அதிகப்படியான சங்கடத்தை விளைவித்தது. டாக்டர் மேத்தாவின் வீடு என் சொந்த வீடு மாதிரி. ஆகவே, ஆகார வகைகள் மிக அதிகமாகப் போய் விடாதவாறு ஓரளவுக்குக் கட்டுப்படுத்த என்னால் முடிந்தது. என்றாலும், இத்தனை வகையான உணவுதான் சாப்பிடுவது என்பதற்கு நான் இன்னும் ஒரு வரம்பை விதித்துக்கொள்ள வில்லை. ஆகவே, பரிமாறப் பட்டவைகளை ஓரளவோடு நிறுத்திக் கொள்ளுவதற்கு என் சுவை உணர்ச்சியும் கண்களும் மறுத்துவிட்டன. சாப்பாட்டுக்குக் குறிப்பிட்ட நேரம் என்பதும் இல்லை. என்னைப் பொறுத்த வரையில் கடைசிச் சாப்பாட்டை இருட்டுவதற்கு முன்னால் முடித்துக்கொண்டு விடவே நான் விரும்பினேன். ஆனால், அனேகமாக இரவு எட்டு, ஒன்பது மணிக்கு முன்னால் சாப்பிட்டு முடிவதில்லை.
அது 1915-ஆம் ஆண்டு. கும்ப உற்சவம் நடக்க வேண்டிய ஆண்டு அது. இந்தத் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்துவாரத்தில் நடக்கிறது. அத்திருவிழாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இல்லை. என்றாலும், மகாத்மா முன்ஷிராம்ஜியை, அவருடைய குருகுலத்திற்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தேன். கும்பத் திருவிழாவில் சேவை செய்வதற்கென்று கோகலேயின் சங்கத்தினர் ஒரு தொண்டர் படையை அனுப்பியிருந்தார்கள். அத்தொண்டர் படைக்குப் பண்டித ஹிருதயநாத குன்ஸ்ரு தலைவர்; காலஞ்சென்ற டாக்டர் தேவ், வைத்திய அதிகாரி. தங்களுக்கு உதவி செய்ய போனிக்ஸ் கோஷ்டியினரை அனுப்புமாறு என்னைக் கேட்டிருந்தார்கள். எனவே, மகன்லால் காந்தி எனக்கு முன்னாலேயே அங்கே போயிருந்தார். ரங்கூனிலிருந்து திரும்பியதும் நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.
கல்கத்தாவிலிருந்து ஹரித்துவாரத்திற்கு ரெயில் பிரயாணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. சில சமயங்களில் வண்டிகளில் விளக்குகளே இல்லை. சகரன்பூரிலிருந்து நாங்கள், சாமான்களையும் கால்நடைகளையும் ஏற்றும் வண்டிகளில் அடைக்கப்பட்டிருந்தோம். இந்த வண்டிகளுக்கு மேல் கூரை இல்லை. மேலே தகிக்கும் வெயில்; கீழேயோ கொதிக்கும் இரும்புத் தளம். இவற்றிற்கு நடுவே நாங்கள் வறுபட்டுப் போனவர்கள் போல் ஆகிவிட்டோம். இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில்கூட வைதிக ஹிந்துக்கள், முஸ்லிம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். ‘ஹிந்து’ தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், இதே ஹிந்துக்கள் நோயுற்று விடும்போது டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிறிஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லிம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும்.
தோட்டி வேலையே இந்தியாவில் எங்களுடைய விசேஷ வேலையாக இருக்க வேண்டும் என்பதை சாந்திநிகேதனத்தில் தங்கியதிலிருந்து நாங்கள் அறிந்துகொண்டோம். ஹரித்துவாரத்தில் தொண்டர்கள் தங்குவதற்கு ஒரு தரும சாலையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கக்கூசுகளாக உபயோகிப்பதற்கு டாக்டர் தேவ் அங்சே சில குழிகளைத் தோண்டியிருந்தார். அவைகளைச் சுத்தம் செய்வதற்கு, கூலி பெறும் தோட்டிகளையே அவர் எதிர்பார்க்க வேண்டியிருந்தது. போனிக்ஸ் கோஷ்டியினர் வேலை செய்வதற்கு இங்கே சந்தர்ப்பம் ஏற்பட்டது. மலத்தை மண் போட்டு மூடிப் பிறகு அங்கிருந்து அகற்றிச் சுத்தம் செய்துவிடும் வேலையை நாங்கள் செய்வதாக முன்வந்தோம். டாக்டர் தேவ் மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக்கொண்டார். இந்த வேலையைச் செய்வதாகச் சொன்னது நான்தான் என்றாலும் அதை மகன்லால் காந்தியே நிறைவேற்ற வேண்டியதாயிற்று. கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டு ‘தரிசினம்’ கொடுப்பதும், என்னைப் பார்க்க அங்கே வந்த அனேக யாத்திரிகர்களுடன் மத சம்பந்தமாகவும் மற்றவைகளைக் குறித்தும் விவாதிப்பதுமே பெரும்பாலும் என் வேலையாக இருந்தது. இதனால், என் வேலை எதையும் கவனித்துக்கொள்வதற்கு எனக்கு நேரமே இல்லை. என்னைப் பார்க்க வந்தவர்கள், நான் நீராட ஸ்நான கட்டிடத்திற்குச் சென்ற போதும் என்னை விடாது பின்தொடர்ந்தார்கள். நான் சாப்பிடும் போதுகூட அவர்கள் என்னைத் தனியாக விட்டு வைப்பதில்லை. தென்னாப்பிரிக்காவில் நான் செய்த சாதாரணச் சேவைக்கு இந்தியா முழுவதும் எவ்வளவு ஆழ்ந்த கவர்ச்சியை உண்டாக்கியிருந்தன என்பதை இவ்விதம் ஹரித்துவாரத்திலேயே நான் அறியலானேன்.
ஆனால், இது யாரும் பொறாமைப்பட வேண்டிய நிலைமை அன்று. இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் நான் இருப்பதாகவே எண்ணினேன். என்னை யாரும் தெரிந்து கொள்ளாத இடங்களில், ரெயில்வே பிரயாணம் போன்ற சமயங்களில் இந்நாட்டு மக்களில் கோடிக்கணக்கானவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நானும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால், என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பவர்கள் என்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் போது அவர்களுடைய தரிசனப் பித்துக்குப் பலியாக வேண்டியவனாக இருக்கிறேன். இந்த இரு நிலைமைகளில் எது அதிகப் பரிதாபகரமானது என்பதை எப்பொழுதுமே நிச்சயமாகக் கூற என்னால் முடிந்ததில்லை. ஆனால், ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். இந்தத் தரிசனப் பித்தர்களின் குருட்டு அன்பு, பல தடவைகளிலும் எனக்குக் கோபத்தையும் அடிக்கடி மன வேதனையையுமே உண்டாக்கி வந்திருக்கிறது. ஆனால், ரெயில் பிரயாணமோ, மிகவும் கஷ்டமானதாகவே இருந்தபோதிலும், ஆன்மத் தூய்மைதான் அளித்துவந்ததேயன்றி எனக்கு ஒருபோதும் கோபத்தை மூட்டியதில்லை.
எவ்வளவு தூரமாயினும் ஊரெல்லாம் சுற்றித் திரிவதற்கு வேண்டிய பலம், அந்த நாளில் எனக்கு இருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் அவ்வளவு தூரம் ஊருக்கெல்லாம் தெரிந்தவனாகவும் ஆகிவிடவில்லை. ஆகையால், எவ்விதப் பரபரப்பையும் உண்டாக்கிவிடாமல் அப்பொழுது தெருவில் போய் கொண்டிருக்க என்னால் முடிந்தது. அவ்விதம் சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரிகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளிவேஷமும், ஒழுங்கீனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்.
இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன்! நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால், விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்து கால் பசு, கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதேயன்றி வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன்! இவ்வித இரட்டைக் கொடுமையின் பலனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த ஐந்து கால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத ஹிந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாக தருமம் செய்யாத ஹிந்துவும் இல்லை.
உற்சவ தினமும் வந்தது. அது எனக்கு மிக முக்கியமான தினமாகவும் ஆயிற்று. நான் ஹரித்துவாரத்திற்கு யாத்திரை நோக்கத்துடன் போகவில்லை. புண்ணியத்தை நாடி யாத்திரை ஸ்தலங்களுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை. ஆனால், அங்கே கூடியிருந்ததாகக் கூறப்பட்ட பதினேழு லட்சம் மக்களில் எல்லோருமே வெளி வேஷக்காரர்களோ, வெறும் வேடிக்கை பார்க்க வந்தவர்களோ அல்ல. அவர்களில் எண்ணற்றவர்கள், புண்ணியத்தைத் தேடவும், ஆன்மத் தூய்மையை அடையவுமே வந்தார்கள் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட நம்பிக்கை எந்த அளவுக்கு ஆன்மாவை மேன்மைப்படுத்துகிறது என்பதைச் சொல்லுவது இயலாதது அல்ல என்றாலும், சொல்லுவது கஷ்டம்.
ஆகையால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவாறே அன்றிரவைக் கழித்தேன். தங்களைச் சூழ்ந்திருந்த வெளி வேஷத்திற்கு நடுவில் பக்தியுள்ள ஆன்மாக்களும் இருந்தன. ஆண்டவனின் சந்நிதானத்தில் அவர்கள் குற்றமற்றவர்களே. ஹரித்துவாரத்திற்கு வந்ததே, அதனளவில் பாவச் செயல் என்றால், ஹரித்துவார யாத்திரையை நான் பகிரங்கமாகக் கண்டித்துக் கூறி விட்டுக் கும்பதினத்தன்றே அங்கிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஹரித்துவார யாத்திரையை மேற்கொண்டதும், கும்ப உற்சவத்திற்கு வந்ததும் பாவச் செயலன்று என்றால், அங்கே நடக்கும் அக்கிரமங்களுக்குப் பிராயச்சித்தமாக நான் ஏதேனும் எனக்கு நானே மறுத்துக்கொண்டு என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது எனக்கு மிகவும் இயல்பானது. என் வாழ்க்கையே கட்டுத் திட்டங்களடங்கிய முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. கல்கத்தாவிலும் ரங்கூனிலும் நான் தங்கிய வீட்டினர் ஏராளமாகச் செலவு செய்து எனக்கு விருந்தளித்தார்கள். அவர்களுக்கு நான் அனாவசியமான தொந்தரவுகளைக் கொடுத்து விட்டதாக எண்ணினேன். ஆகையால், என் ஆகாரத்தில் இத்தனை பண்டங்களைத் தான் சாப்பிடுவது என்று கட்டுப்படுத்திக் கொள்ளுவதோடு கடைசிச் சாப்பாட்டை இருட்டுவதற்கு முன்னால் முடித்துக் கொண்டுவிடுவது என்றும் தீர்மானித்தேன். எனக்கு இத்தகைய தடைகளை நானே விதித்துக் கொள்ளாவிட்டால், இனி என்னை அதிதியாக ஏற்பவர்களுக்கு அநேக இடைஞ்சல்களை நான் உண்டாக்க நேரும். சேவையில் நான் ஈடுபடுவதற்கு மாறாக அவர்களை எனக்குச் சேவை செய்வதில் ஈடுபடுத்திக் கொள்ளவும் வேண்டி வரும். ஆகையால், இந்தியாவில் இருக்கும்போது இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்துக்கு அதிகமான பொருள்களை நான் சாப்பிடுவதில்லை என்றும், இருட்டிய பிறகு சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டேன். இதனால் எனக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களைக் குறித்துத் தீரச் சிந்தித்தேன். ஆனால், இதில் எந்தவிதச் சந்தேகத்திற்கும் பின்னால் இடம் வைத்துவிட நான் விரும்பவில்லை. நான் நோய்வாய்ப்பட்டு, மருந்தும் உணவுப் பொருள்களில் ஒன்றாகி, அச்சமயம் விசேஷமாகச் சாப்பிட வேண்டிய ஆகாரத்திற்காக விதி விலக்கு எதுவும் செய்யாது போனால், அப்பொழுது என்ன ஆகும் என்பதைக் குறித்தும் யோசித்தேன். என்னவானாலும் சரி, இந்த விரதத்திலிருந்து எந்த விதிவிலக்கும் செய்து கொள்ளுவதில்லை என்று முடிவாகத் தீர்மானித்துக் கொண்டேன்.
இந்த விரதத்தை இப்பொழுது நான் பதின்மூன்று ஆண்டுகளாக அனுசரித்து வருகிறேன். இதனால் எனக்குப் பல கஷ்டங்கள் ஏற்பட்டதும் உண்டு. ஆயினும் இந்த விரதம் எனக்குப் பாதுகாப்பாகவும் இருந்தது என்பதை நிச்சயமாகக் கூற முடியும். இது என் வாழ்நாட்களில் சில ஆண்டுகளை அதிகமாக்கியது; நான் பற்பல நோய்களுக்கு உள்ளாகாதவாறும் என்னைக் காப்பாற்றியது என்பதே என் அபிப்பிராயம்.
$$$
8. லட்சுமணன் பாலம்
ஹரித்துவாரத்திலிருந்து மகாத்மா முன்ஷிராம்ஜியின் குரு குலத்திற்குச் சென்று ஆஜானுபாகுவான அவரைச் சந்தித்ததில் எனக்கு மன ஆறுதல் ஏற்பட்டது. குருகுலத்திலிருந்த அமைதிக்கும் ஹரித்துவாரத்திலிருந்த இரைச்சலுக்கும் இடையே இருந்த அற்புதமான வித்தியாசத்தை அங்கே சென்றதுமே உணர்ந்தேன்.
மகாத்மா தமது அன்பினால் என்னை ஆட்கொண்டும் விட்டார். பிரம்மச்சாரிகள், எனக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தார்கள். இங்கேதான் முதன் முதலில் ஆச்சாரிய ராமதேவ்ஜியைச் சந்தித்தேன். அவரிடம் எவ்வளவு அபாரமான சக்தி இருந்தது என்பதை உடனேயே கண்டுகொண்டேன். பல விஷயங்களிலும் நாங்கள் மாறுபட்ட கருத்துடையவர்கள். என்றாலும், எங்கள் பழக்கம், சீக்கிரத்திலேயே நட்பாகக் கனிந்தது. குருகுலத்தில் கைத்தொழில் பயிற்சியை ஆரம்பிப்பதன் அவசியத்தைக் குறித்து ஆச்சாரிய ராமதேவ்ஜியுடனும் மற்ற பண்டிதர்களுடனும் நீண்ட நேரம் விவாதித்தேன். அங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டிய நேரம் வந்தபோது பிரிவது மனத்திற்கு அதிக வருத்தமாகவே இருந்தது.
லட்சுமண ஜூலாவைப் (கங்கைமீது போடப்பட்டிருந்த தொங்கும் பாலம்) பற்றிப் பலர் புகழ்ந்து பேச நான் கேட்டிருந்தேன். இது ரிஷீகேசத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. அந்தப் பாலத்தைப் போய்ப் பார்க்காமல் ஹரித்துவாரத்திலிருந்து திரும்பி விடவேண்டாம் என்று பல நண்பர்கள் என்னிடம் வற்புறுத்திச் சொன்னார்கள். நடந்துபோயே இந்த யாத்திரையை முடிக்க விரும்பினேன். ஆகையால், மத்தியில் ஓர் இடத்தில் தங்கி அங்கேபோய்ச் சேர்ந்தேன்.
ரிஷீகேசத்தில் சந்நியாசிகள் பலர் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் அதிக அபிமானம் கொண்டிருந்தார். போனிக்ஸ் கோஷ்டியினர் அங்கே இருந்தனர். அவர்களைக் குறித்து அந்த சுவாமி என்னைப் பல கேள்விகள் கேட்டார். சமய சம்பந்தமாக நாங்கள் விவாதித்தோம். அதில் இருந்து சமய சம்பந்தமான சிரத்தை எனக்கு அதிகம் உண்டு என்பதைத் தெரிந்துகொண்டார். கங்கையில் நீராடிவிட்டு உடம்பில் சட்டையில்லாமல், தலையில் தொப்பியில்லாமல் நான் வந்து கொண்டிருந்தபோது அவர் என்னைப் பார்த்தார். தலையில் உச்சிக்குடுமியும், உடம்பில் பூணூலும் இல்லாமல் நான் இருந்ததைக் கண்டு அவருக்கு மனவேதனையாகி விட்டது. “ஹிந்து தருமத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள், பூணூல் அணியாமலும் உச்சியில் குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப் படுகிறது. இவை இரண்டும் ஹிந்து தருமத்தின் புறச் சின்னங்கள். ஒவ்வொரு ஹிந்துவுக்கும் அவை இருந்தாக வேண்டும்” என்றார்.
இந்த இரண்டையும் நான் எவ்வாறு விட்டுவிட்டேன் என்பதே ஒரு தனிச்சரித்திரமாகும். நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்த போது பிராமணச் சிறுவர்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலில் சாவிக் கொத்துக்களைக் கோர்த்து தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பொறாமைப்படுவது உண்டு. நானும் அப்படிச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கத்தியவாரிலிருக்கும் வைசியக் குடும்பத்தினர் அக்காலத்தில் சாதாரணமாகப் பூணூல் அணிந்து கொள்ளுவதில்லை. ஆனால், முதல் மூன்று வருணத்தினரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தும் இயக்கம் ஒன்று அப்பொழுதுதான் ஆரம்பமாகியிருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த பலர் பூணூல் போட்டுக் கொண்டனர். எங்களில் இரண்டு மூன்று சிறுவர்களுக்கு ராம ரட்சை போதித்துவந்த பிராமணர், எங்களுக்கும் பூணூல் போட்டு விட்டார். நான் சாவிக்கொத்து வைத்துக்கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படாவிட்டாலும், ஒரு சாவிக் கொத்தைச் சம்பாதித்து என் பூணூலில் மாட்டிக்கொண்டேன். பிறகு பூணூல் அறுந்து போய்விட்டது. அது போய்விட்டதே என்று அப்பொழுது நான் வருத்தப்பட்டேனா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் புதிதாகப் பூணூலைத் தேடி நான் போட்டுக் கொள்ளவில்லை என்பதை அறிவேன்.
நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு, இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக்கொள்ளும்படி செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மாத்திரம் அதைப் போட்டுக்கொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக்கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால், அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்த வரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதை அணிய வேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.
வைஷ்ணவன் என்ற முறையில் என் கழுத்தில் துளசி மாலை அணிந்திருந்தேன். குடுமி வைத்திருப்பது அவசியம் என்று வீட்டில் பெரியவர்கள் கருதி வந்தார்கள். ஆயினும், நான் இங்கிலாந்துக்கு புறப்படவிருந்த தருணத்தில் உச்சிக் குடுமியை எடுத்துவிட்டேன். எடுக்காமல் இருந்தால், தலையில் தொப்பியில்லாத போது அதை யாராவது பார்த்துவிட்டால் பரிகாசம் செய்வார்கள் என்றும், நான் ஒரு காட்டுமிராண்டி என்று ஆங்கிலேயருக்குத் தோன்றும் என்றும் அப்பொழுது நான் எண்ணினேன். இந்தக் கோழைத்தன உணர்ச்சியின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் மதநம்பிக்கையுடன் குடுமி வைத்திருந்த என் சகோதரரின் மகனான மகன்லால் காந்தியையும் அதை எடுத்துவிடும்படி செய்தேன். அவருடைய பொதுஜன சேவைக்கு அக்குடுமி இடையூறாக இருக்கும் என்று அஞ்சினேன். ஆகையால், அவர் மனத்துக்குக் கஷ்டமாக இருக்குமே என்பதைக் கூடக் கவனிக்காமல், அவர் அக்குடுமியை எடுத்துவிடும்படி செய்தேன்.
எனவே, எல்லா விவரங்களையும் சுவாமிக்கு எடுத்துக்கூறி விட்டு நான் மேலும் கூறியதாவது: “கணக்கற்ற ஹிந்துக்கள் பூணூல் அணியாமலேயே ஹிந்துக்களாக இருந்துவர முடிகிறது. பூணூல் போட்டுக்கொண்டாக வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் இருப்பதாக நான் காணவில்லை. ஆகையால், அதை நான் போட்டுக்கொள்ளப் போவதில்லை. மேலும், பூணூல் ஆன்மிகப் புனர்வாழ்வுக்குச் சின்னமாக இருக்க வேண்டும். அதை அணிகிறவர், உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு முயல்பவராகவும் இருக்க வேண்டுவது அவசியம். ஆனால், ஹிந்து சமயமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில், அத்தகைய பொருளோடு கூடிய ஒரு சின்னத்தை அணிந்துகொள்ளத் தங்களுக்கு உரிமை உண்டென்று ஹிந்துக்கள் காட்ட முடியுமா என்பதைச் சந்தேகிக்கிறேன். ஹிந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு, தாழ்வு என்ற பேதங்களெல்லாம் போய், அதில் இப்பொழுது மலிந்து கிடக்கும் பலவிதமான தீமைகளும் வேஷங்களும் நீங்கிய பிறகே ஹிந்துக்களுக்கு அந்த உரிமை ஏற்படமுடியும். ஆகையால், பூணூல் போட்டுக்கொள்ளுவது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது. ஆனால், குடுமியைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை சிந்திக்கத் தக்கதே. ஒரு சமயம் குடுமி வைத்திருந்து, வெட்கம் என்று தவறான எண்ணத்தால் அதை எடுத்துவிட்டேன். ஆகவே, திரும்பவும் அதை வளர்த்து விட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர்களுடன் இதைக் குறித்து விவாதிக்கிறேன்.”
பூணூலைக் குறித்து என்னுடைய நிலையைச் சுவாமியார் ஒப்புக்கொள்ளவில்லை. அதை அணிய வேண்டியதில்லை என்பதற்கு எனக்கு எவை நியாயங்களாகத் தோன்றியனவோ அவையே அணிய வேண்டும் என்பதற்குக் காரணங்களாக அவருக்குத் தோன்றின. இவ்விஷயத்தில் ரிஷீகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ அதுவே இன்றும் என் கருத்தாகும். சமயங்கள் பல இருந்துவரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தைவிடத் தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுத்தப்படுமாயின், அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும். ஹிந்து சமயத்தை மேன்மைப்படுத்துவதற்கான சாதனமாகப் பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால், அதில் எனக்குச் சிரத்தையும் இல்லை.
குடுமியைப் பற்றியவரையில் அதை நான் எடுத்துவிட்டதற்குக் கோழைத்தனமே காரணமாக இருந்ததால், நண்பர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு திரும்பவும் குடுமி வளர்க்க முடிவு செய்தேன்.
இப்பொழுது லட்சுமண ஜூலாவைக் குறித்துக் கவனிப்போம். ரிஷீகேசம், லட்சுமண ஜூலா ஆகியவற்றின் இயற்கைக் காட்சிகள் என் மனத்தைக் கவர்ந்தன. இயற்கை அழகை அனுபவிக்கும் நமது மூதாதையர்களின் உணர்ச்சிக்குத் தலை வணங்கினேன். ஏனெனில், இயற்கையின் அழகிய தோற்றங்களுக்கு அவர்கள் முன்யோசனையின் பேரில் சமய பூர்வமான முக்கியத்துவம் அளித்திருந்தார்கள்.
ஆனால், இயற்கைக்காட்சிகள் மிகுந்த இந்த இடங்களை மனிதர் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. ஹரித்துவாரத்தைப் போல ரிஷீகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும் அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சதூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல் பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனையடைந்தது.
லட்சுமண ஜூலா என்பது கங்கைமீது போடப்பட்டிருந்த தொங்கும் இரும்புப் பாலமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதைக் கண்டேன். முன்பு அந்த இடத்தில் சிறந்த கயிற்றுப் பாலம் ஒன்று இருந்ததாம். ஆனால், தரும சிந்தனையுள்ள ஒரு மார்வாரியின் மூளையில், அக் கயிற்றுப் பாலத்தை நாசப்படுத்தி விட்டு அதற்குப் பதிலாக ஓர் இரும்புப் பாலத்தைப் போடும் யோசனை எப்படியோ பிறந்துவிட்டது. ஏராளமான செலவில் அப்பாலத்தைப் போட்டு, அதன் சாவியை அவர் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். கயிற்றுப் பாலத்தை நான் பார்த்ததில்லை. ஆகையால், அதைக் குறித்து நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. ஆனால், இரும்புப் பாலமோ அங்கிருக்கும் சூழ்நிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாததாவதோடு அங்கிருக்கும் அழகையும் அது கெடுத்து விடுகிறது. யாத்திரிகர்கள் செல்வதற்கு என்றுள்ள அப்பாலத்தின் சாவியை அரசாங்கத்தினிடம் கொடுத்து விட்டதை, எனக்கு அதிக ராஜவிசுவாசம் இருந்த அந்த நாளில் கூட, என்னால் பொறுக்க முடியவில்லை.
பாலத்தைக் கடந்தால் சுவர்க்காசிரமம் போகலாம். சுவர்க்காசிரமம் என்பது மிகவும் மோசமான இடம். இரும்புத் தகட்டுக் கூரை போட்ட சில ஆபாசமான கொட்டகைகளைத் தவிர அங்கே வேறு எதுவுமே இல்லை. அவை சாதகர்களுக்கு என்று கட்டப்பட்டனவாம். அச்சமயம் அங்கே சாதகர்கள் யாருமே இல்லை. அங்கிருந்த முக்கியமான கட்டிடத்தில் இருந்தவர்களோ, பார்ப்போருக்கு நல்ல அபிப்பிராயம் உண்டாகும்படி செய்யக் கூடியவர்களாகவும் இல்லை.
ஆனால், ஹரித்துவார அனுபவங்கள் எனக்கு மதிப்பதற்கரிய பயன்களை அளித்தன. நான் எங்கே வசிப்பது, நான் செய்ய வேண்டியது என்ன என்பவைகளில் முடிவுக்கு வருவதற்கு அந்த அனுபவங்கள் அதிக அளவில் எனக்கு உதவியாக இருந்தன.
$$$
9. ஆசிரமத்தின் ஆரம்பம்
கும்பமேளாவிற்காக ஹரித்துவாரத்திற்கு யாத்திரை செய்தது, நான் அந்த இடத்திற்குச் சென்ற இரண்டாவது தடவையாகும். சத்தியாக்கிரக ஆசிரமம் 1915 மே 15-ஆம் தேதி ஆரம்பமாயிற்று. ஹரித்துவாரத்திலேயே நான் தங்கி விட வேண்டும் என்று சிரத்தானந்தஜி விரும்பினார். வைத்தியநாத தாமில் தங்கிவிடலாம் என்று சில கல்கத்தா நண்பர்கள் யோசனை கூறினர். மற்றவர்களோ, ராஜ்கோட்டே சரியான இடம் என்று என்னிடம் வற்புறுத்திக் கூறினர். ஆனால் நான் அகமதாபாத் வழியாகச் சென்றபோது அங்கேயே குடியேறி விடுமாறு பல நண்பர்கள் வற்புறுத்தினர். ஆசிரமத்தின் செலவுக்கு வேண்டியதற்கும், நாங்கள் வசிப்பதற்கு வீட்டுக்கும் ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் கூறினர்.
மற்ற இடங்களையெல்லாம்விட அகமதாபாத் என் மனத்திற்குப் பிடித்திருந்தது. நான் குஜராத்தியானதால் குஜராத்தி மொழியின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு சேவை செய்ய முடியுமென்று எண்ணினேன். மேலும் அகமதாபாத், கைத்தறி நெசவுக்குப் புராதனப் பெயர் பெற்ற இடமாகையால், கையினால் நூற்கும் குடிசைத் தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பதற்கு அது வசதியான இடமாக இருக்கும் என்றும் தோன்றியது. குஜராத்திற்கு அந்நகரம் தலைநகரமாகையால், மற்ற இடங்களை எல்லாம்விட அங்குள்ள பணக்காரர்கள் அதிகப் பண உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
அகமதாபாத் நண்பர்களுடன் பல விஷயங்களையும் குறித்து விவாதித்தேன். இயற்கையாகவே தீண்டாமை விஷயத்தைப் பற்றியும் அப்பொழுது விவாதித்தேன். ஒரு தீண்டாதவர் மற்ற வகைகளில் தகுதியுடையவராக இருப்பாராயின் முதல் சந்தர்ப்பத்திலேயே அவரையும் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நான் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினேன்.
“உங்களுடைய நிபந்தனைகளையெல்லாம் திருப்தி செய்யக் கூடிய தீண்டாதார் ஒருவர் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கப் போகிறார்?” என்று ஒரு வைஷ்ணவ நண்பர் கேட்டார். அப்படி ஒருவர் கிடைக்க மாட்டார் என்பது அவருடைய நம்பிக்கை.
ஆசிரமத்தை அகமதாபாத்தில் ஆரம்பிப்பது என்று கடைசியாக முடிவு செய்தேன்.
ஆசிரமத்தை அமைப்பதற்கு இடத்தைப் பொறுத்த வரையில் எனக்கு முக்கியமாக உதவி செய்தவர் அகமதாபாத் பாரிஸ்டரான ஸ்ரீ ஜூவன்லால் தேசாய். தமது கோச்ராப் பங்களாவை வாடகைக்கு விட அவர் முன்வந்தார். நாங்களும் வாடகைக்கு அமர்த்திக்கொள்ளத் தீர்மானித்தோம்.
ஆசிரமத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதை முதலில் முடிவுசெய்ய வேண்டி இருந்தது. ‘சேவாசிரமம்’, ‘தபோவனம்’ முதலிய பெயர்களை வைக்கலாம் என்று கூறினர். ‘சேவாசிரமம்’ என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்ததெனினும் சேவையின் முறை இன்னதென்பதைப் பற்றிய விளக்கம் அதில் இல்லை. ‘தபோவனம்’ என்பது மிகைப்படுத்திக் கூறும் பெயர் என்று தோன்றியது. ஏனெனில், தவம் எங்களுக்குப் பிரியமானது தான் என்றாலும் நாங்கள் தபஸ்விகள் என்று எண்ணிக்கொண்டு விட முடியாது. சத்தியத்தில் பற்றுடன் இருப்பதே எங்கள் கோட்பாடு. சத்தியத்தை நாடி, சத்தியத்தையே கட்டாயமாக அனுசரிப்பது எங்கள் வேலை. தென்னாப்பிரிக்காவில் நான் கையாண்ட முறையை இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்த நான் விரும்பினேன். அம் முறையை அனுசரிப்பது இந்தியாவில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதைச் சோதிக்கவும் ஆசைப்பட்டேன். ஆகையால் எங்கள் லட்சியத்தையும், எங்களுடைய சேவையின் முறையையும் காட்டுவதான ‘சத்தியாக்கிரக ஆசிரமம்’ என்ற பெயரையே நானும் என் சகாக்களும் தேர்ந்தெடுத்தோம்.
ஆசிரமத்தை நடத்துவதற்கு விதிகளையும், ஒழுக்க முறைகளையும் வகுக்க வேண்டியது அவசியமாயிற்று. இதற்கு ஒரு நகலைத் தயாரித்தோம். அதன் மீது நண்பர்களின் அபிப்பிராயத்தையும் கேட்டறிந்தோம். எங்களுக்குக் கிடைத்த அபிப்பிராயங்களில் ஸர் குருதாஸ் பானர்ஜி அனுப்பியிருந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. நாங்கள் தயாரித்த விதிகள் அவருக்குப் பிடித்திருந்தன. ஆனால், இளம் சந்ததியாரிடம் வருந்தத்தக்க வகையில் அடக்கம் என்பது இல்லாமல் இருப்பதால் ஒழுக்க முறைகளில் அதையும் ஒன்றாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் யோசனை கூறியிருந்தார். இக்குறைபாட்டை நானும் கவனித்து வந்திருக்கிறேன். ஆயினும், அடக்கம் என்பது விரதமாகக் கொள்ள வேண்டிய விஷயமாகிவிடும் என்று அஞ்சினேன். ‘நான்’ என்ற அகந்தையைப் போக்கிக்கொண்டு விடுவதுதான், அடக்கம் என்பதற்குரிய உண்மையான பொருள். ‘நான்’ என்பது அற்றுப் போவதே மோட்சம். இது அதனளவில் ஓர் ஒழுக்க முறையாக இருக்க முடியாதெனினும் இதை அடைவதற்கு மற்ற ஒழுக்க முறைகளை அனுசரிப்பது அவசியமாகும். மோட்சத்தை அடைய விரும்புகிறவரின், அல்லது ஒரு தொண்டரின் நடவடிக்கைகளில் அடக்கமோ, அகந்தையின்மையோ இல்லையென்றால், மோட்சத்திலோ அல்லது தொண்டிலோ அவருக்கு ஆர்வம் இல்லை என்றே ஆகும். அடக்கமில்லாத சேவை, சுயநலமும் அகம்பாவமுமே அன்றி வேறல்ல.
அச்சமயத்தில் எங்கள் கோஷ்டியில் பதின்மூன்று தமிழர்கள் இருந்தார்கள். ஐந்து தமிழ் இளைஞர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து என்னுடன் வந்தவர்கள். மற்றவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து சேர்ந்தனர். நாங்கள் மொத்தம் ஆண்களும் பெண்களுமாக இருபத்தைந்து பேர்.
இவ்வாறே ஆசிரமம் ஆரம்பமாயிற்று. எல்லோருக்கும் பொதுவான ஒரே சமையலுடன் ஒரே குடும்பமாக வாழ முயன்று வந்தோம்.
$$$
10. ஆரம்பக் கஷ்டங்கள்
ஆசிரமம் ஆரம்பமாகிச் சில மாதங்களே ஆயிற்று. அதற்குள் நான் எதிர்பார்த்தே இராத வகையில் நாங்கள் சோதனைக்கு ஆளானோம். அமிர்தலால் தக்கரிடமிருந்து பின்வருமாறு ஒரு கடிதம் வந்தது: “அடக்கமும் நேர்மையும் உள்ள ஒரு தீண்டாதாரின் குடும்பம் உங்கள் ஆசிரமத்தில் சேர்ந்துகொள்ள விரும்புகிறது. அவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” நான் கலக்கமடைந்தேன். தீண்டாதாரின் குடும்பம் ஒன்று, தக்கர் பாபா போன்ற ஒரு முக்கியமானவரிடமிருந்து அறிமுகக் கடிதத்துடன் எங்கள் ஆசிரமத்தில் சேர மனுச் செய்துகொள்ளும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அக்கடிதத்தை என் சகாக்களுக்குக் காட்டினேன். அவர்கள் அதை வரவேற்றார்கள்.
அமிர்தலால் தக்கருக்குப் பதில் எழுதினேன்.அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே ஆசிரமத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கச் சம்மதிப்பதாக இருந்தால் அக் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அவருக்குத் தெரிவித்தேன்.
தூதாபாய், அவருடைய மனைவி தானிபென், அப்பொழுது தவழும் குழந்தையாக இருந்த அவர்கள் பெண் லட்சுமி ஆகியவர்களைக் கொண்டது அக்குடும்பம். தூதாபாய் பம்பாயில் உபாத்தியாயராக இருந்தார். விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். நாங்களும் அவர்களை ஏற்றுக் கொண்டோம்.
ஆனால், அவர்களைச் சேர்த்துக்கொண்டது, ஆசிரமத்திற்கு உதவி செய்து வந்த நண்பர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டது. கிணற்றை உபயோகிப்பது சம்பந்தமாக முதலில் கஷ்டம் ஏற்பட்டது. அந்தக் கிணற்றை அந்தப் பங்களாவின் சொந்தக்காரரும் உபயோகித்து வந்தார். அதிலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தவர், எங்கள் வாளியிலிருந்து தண்ணீர்த் துளிகள் விழுவதால் தமக்குத் தீட்டு பட்டுப்போகும் என்று கூறி ஆட்சேபித்தார். ஆகவே, எங்களைத் திட்டினார்; தூதாபாயைத் தொந்தரவும் செய்தார். அவர் திட்டுவதையெல்லாம் சகித்துக் கொண்டு, என்ன வந்தாலும் சரி என்று கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும்படி எல்லோரிடமும் கூறினேன். தாம் திட்டினாலும் நாங்கள் திருப்பித் திட்டுவதில்லை என்பதைக் கண்டதும் அவருக்கே வெட்கமாகப் போய் விட்டது. எங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதை விட்டு விட்டார்.
என்றாலும், எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த உதவியெல்லாம் நின்றுவிட்டன. ஆசிரம விதிகளையெல்லாம் அனுசரிக்கக் கூடிய ஒரு தீண்டாதார் கிடைப்பாரா என்று கேள்வி கேட்ட நண்பர், அப்படிப்பட்ட ஒரு தீண்டாதார் ஆசிரமத்தில் சேர முன்வருவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.
பண உதவியெல்லாம் நிறுத்திவிட்டதோடு எங்களை சமூக பகிஷ்காரம் செய்வதற்கும் யோசிக்கிறார்கள் என்றும் வதந்திகள் கிளம்பின. இவைகளினால் நாங்கள் கலக்கமடைந்தோம். நாம் பகிஷ்காரம் செய்யப்பட்டுச் சாதாரண வசதிகளெல்லாம் மறுக்கப் பட்டாலும் அகமதாபாத்தைவிட்டு நாம் போய்விடக் கூடாது என்று என் சகாக்களுக்குக் கூறினேன். வெளியேறி விடுவதைவிடத் தீண்டாதாரின் இடத்திலேயே போய் வசித்து, உடலை வருத்தி வேலை செய்வதால் கிடைப்பதைக்கொண்டு வாழ்வதே மேல் என்றும் கூறினேன்.
“நம்மிடம் பணம் இல்லை. அடுத்த மாதச் செலவுக்கு நம்மிடம் ஒன்றும் கிடையாது” என்று ஒரு நாள் மகன்லால் காந்தி எனக்கு அறிவித்துவிட்டார். நிலைமை அத்தகைய நெருக்கடியான கட்டத்திற்கு வந்துவிட்டது. “அப்படியானால், தீண்டாதார் வசிக்கும் இடத்திற்கே நாம் போய்விடுவோம்” என்று நான் அமைதியோடு பதில் சொன்னேன்.
இதுபோன்ற சோதனை எனக்கு ஏற்பட்டது இது முதல் தடவை அல்ல. இத்தகைய நிலைமைகளிலெல்லாம் கடைசி நேரத்தில் கடவுளே எனக்கு உதவியை அனுப்பியிருக்கிறார். எங்களுக்கு ஏற்பட்டுவிட்ட பணக் கஷ்டத்தைக் குறித்து மகன்லால் எனக்கு எச்சரிக்கை செய்த பிறகு ஒரு நாள் காலை, குழந்தைகளில் ஒன்று ஓடி வந்து, ஒரு சேத் வெளியில் மோட்டாரில் இருக்கிறார் என்றும், என்னைப் பார்க்க விரும்புகிறார் என்றும் கூறியது. அவரைப் பார்க்க வெளியே போனேன். “ஆசிரமத்திற்குக் கொஞ்சம் உதவி செய்ய விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுவீர்களா?” என்று அவர் என்னைக் கேட்டார்.
“நிச்சயமாக ஏற்றுக்கொள்ளுவோம். எங்கள் கையில் இருந்ததெல்லாம் செலவழிந்து போய்விட்ட நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் உங்களிடம் கூறுகிறேன்” என்றேன்.
“நாளை இதே நேரத்தில் இங்கு வருகிறேன். நீங்கள் இருப்பீர்களல்லவா?” என்றார்.
“ஆம்” என்று நான் சொன்னதும் அவர் போய்விட்டார்.
அடுத்த நாள், சரியாக அந்த நேரத்தில் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் மோட்டார் வந்து நின்றது. வந்ததற்கு அறிகுறியாகச் சப்தம் கொடுக்கப்பட்டது. குழந்தைகளும் ஓடிவந்து சமாச்சாரத்தைச் சொன்னார்கள். சேத் உள்ளே வரவில்லை; நானே அவரைப் பார்க்க போனேன். அவர் என் கையில் ரூ.13,000-க்கு நோட்டுகளைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. எப்படிப்பட்ட புதிய வகையில் உதவி! அந்தக் கனவான் இதற்கு முன்னால் ஆசிரமத்திற்கு வந்ததே இல்லை. ஒரே ஒரு முறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன் என்று எனக்கு ஞாபகம். உள்ளே வரவும் இல்லை; விசாரிக்கவும் இல்லை! உதவியை மாத்திரம் செய்து விட்டுப் போய்விட்டார். எனக்கு இது ஒப்பற்றதோர் அனுபவம். தீண்டாதார் வசிக்கும் இடத்திற்குப் போய்விடுவதை இந்த உதவி தடுத்தது. இனி ஓர் ஆண்டுக்குக் கவலை இல்லை என்று இப்பொழுது உணர்ந்தோம்.
வெளியில் புயல் இருந்து வந்ததைப் போன்றே ஆசிரமத்திற்குள்ளும் புயல் இருந்து வந்தது. தீண்டாத வகுப்பைச் சேர்ந்த நண்பர்கள் தென்னாப்பிரிக்காவில் என் வீட்டிற்கு வந்து இருப்பதுடன் என்னுடன் சாப்பிடுவதும் வழக்கமாக இருந்தது. இருந்தும் இங்கே ஆசிரமத்தில் தீண்டாத நண்பர்களைச் சேர்த்துக் கொண்டது என் மனைவிக்கும் மற்ற பெண்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தானி பென்னிடம் அவர்கள் கொண்டிருந்த வெறுப்பை, அல்லது அசிரத்தையை என் காதுகளும் கண்களும் எளிதில் கண்டு கொண்டன. பணக் கஷ்டம்கூட எனக்கு அவ்வளவு கவலையை உண்டுபண்ணவில்லை. ஆனால், உள்ளுக்குள்ளேயே இருந்த இப்புயலை என்னால் சகிக்க முடியவில்லை. தானி பென் ஒரு சாதாரணப் பெண். தூதாபாய் கொஞ்சம் படிப்பு உள்ளவர்; அதோடு நல்ல அறிவும் உள்ளவர். அவருடைய பொறுமை எனக்குப் பிடித்திருந்தது. சில சமயங்களில் அவர் கோபமடைந்து விடுவதும் உண்டு. என்றாலும், மொத்தத்தில் அவருடைய சகிப்புத்தன்மை என் மனத்தைக் கவர்ந்தது. சில்லறை அவமதிப்புகளையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்று அவரைக் கேட்டுக்கொண்டேன். இதற்கு அவர் உடன்பட்டது மாத்திரம் அல்ல, அவர் மனைவியையும் அதேபோலப் பொறுமையுடன் இருக்கும்படி செய்தார்.
இந்தக் குடும்பத்தைச் சேர்த்துக் கொண்டது, ஆசிரமத்திற்கு சிறந்ததொரு படிப்பினையாயிற்று. ஆசிரமம் தீண்டாமையைப் பாராட்டாது என்பதை ஆரம்பத்திலேயே உலகிற்கு எடுத்துக் காட்டினோம். ஆசிரமத்திற்கு உதவ விரும்பியவர்களுக்கு இவ்விதம் எச்சரிக்கை செய்துவிட்டோம். இவ் வழியில் ஆசிரமத்தின் வேலைகள் அதிக அளவுக்குச் சுலபமாகி விட்டன. தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே போன ஆசிரமத்தின் செலவுகளுக்கு எல்லாம், உண்மையில் வைதிகர்களான ஹிந்துக்களே பணம் கொடுத்து வந்தார்கள், இந்த உண்மை, தீண்டாமையின் அடிப்படையே ஆட்டங்கண்டு விட்டது என்பதற்குத் தெளிவான அறிகுறியாகவும் இருக்கக் கூடும். உண்மையில் இதற்கு மற்றும் பல சான்றுகளும் உண்டு. என்றாலும், தீண்டாதாருடன் சேர்ந்து சாப்பிடும் அளவுக்குகூடப் போய்விடும் ஓர் ஆசிரமத்திற்கு உதவி செய்ய நல்ல ஹிந்துக்கள் தயங்குவதில்லை என்பது மிகச் சிறந்த சான்றாகும்.
இந்த விஷயத்தைப் பற்றிய அநேக சமாச்சாரங்களைக் கூறாமல் விட்டுவிட்டு மேலே போக வேண்டி இருப்பதற்காக வருந்துகிறேன். முக்கியமான இவ்விஷயத்தின் மீது எழுந்த கஷ்டமான பிரச்னைகளையெல்லாம் எப்படிச் சமாளித்தோம்? எதிர்பாராத சிலகஷ்டங்களை யெல்லாம் எவ்விதம் சமாளித்துச் சென்றோம் என்பன போன்ற பல விஷயங்களை, சத்திய சோதனையில் விவரிப்பதற்குப் பொறுத்தமானவைகளை, கூறாமல் விட்டுவிட்டே நான் மேலே போக வேண்டியிருக்கிறது. இனி வரும் அத்தியாயங்களிலும் இதேபோன்ற குறைகள் இருக்கும். முக்கியமான விவரங்களை நான் விட்டுவிடவே வேண்டியிருக்கும். ஏனெனில், இவ்வரலாற்றில் சம்பந்தமுடையவர்களில் அநேகர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் கூறும்போது, அவர்களுடைய அனுமதியைப் பெறாமல் அவர்கள் பெயரை உபயோகிப்பது சரியல்ல. அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதென்பதோ, சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை அப்போதைக்கப்போது அவர்களுக்குக் காட்டிச் சரிபார்த்து வெளியிடுவதோ, அனுபவ சாத்தியமானதும் அன்று. மேலும் அத்தகைய முறையை அனுசரிப்பது இந்தச் சுய சரிதையின் எல்லைக்குப் புறம்பான காரியமும் ஆகும். ஆகையால், மீதமிருக்கும் வரலாறு, சத்தியத்தை நாடுவோருக்கு மிக முக்கியமானது என்பதே என் கருத்தாயினும், தவிர்க்க முடியாத விலக்குகளுடனேயே அதைக் கூற வேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறேன். என்றாலும், கடவுள் அருள் இருந்தால், இவ்வரலாற்றை ஒத்துழையாமை நாட்கள் வரைக்கும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே என் ஆசையும் நம்பிக்கையுமாகும்.
$$$