கோபந்நா

-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் சமூக உணர்வு, அவரை பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஊசலாடச் செய்தது. பாரம்பரியத்தில் ஊறிய பாரதிக்கு நாட்டு மக்களின் ஏழ்மையும் தேக்கமும் மிகுந்த வேதனை அளித்தன. அது அவரது கதை, கவிதை, கட்டுரைகளில் வெளிப்பட்டுக் கொண்டெ இருந்தது. அதற்கு இக்கதையும் ஒரு உதாரணம்...

காலை ஒன்பது நாழிகை யிருக்கும். இளவெயில் காய்கிறது. வீதியில் வரிசையாக நிற்கும் தென்னை மரங்களில் கிளிகள் இணையிணையாகப் பறந்து விளையாடுகின்றன. வானொளியாகிய வெள்ளத்தில் புறாக் கூட்டங்களும், கொக்கு சபைகளும், தனி ராஜப் பருந்துகளும் நீந்திக் களிக்கின்றன. சிறு குருவிகள் ஊசலாடுகின்றன. காக்கைகள் ஓடிப் பறந்து திரிந்து ஜீவன உத்யோகத்தை மிகவும் சிரத்தையுடன் நடத்தி வருகின்றன. வான முழுதிலும் பணிகளின் ஒலி நிரம்பிக் கிடந்தது.

அந்த ஸமயத்தில் தெருவிலே ஒரு தென்னை மரத்தில் ஒரு வண்ணான் இரண்டு கழுதைகளைக் கொண்டு கட்டினான். தென்னை மரத்தின் மேலிருந்து மைநா பக்ஷி ஆச்சரியமாகக் கூவிக் கொண்டிருந்தது. இதைக் கேட்ட கழுதைகள் தாமும் ஊளையிடத் தொடங்கின. இதைக் கேட்டு வீதி வழியே போய்க் கொண்டிருந்த பாலர் இருவர் மேற்படி கழுதைகளின் ஒலியை அனுசாரணம் பண்ணித் தாமும் ஊளை யிடலாயினர்.

இதைக் கேட்ட கழுதைகளில் ஒன்றுக்கு மிகவும் ஸந்தோஷமுண்டாய், ஸாதாரணக் கழுதைகள்போல் “வாள்!” “வாள்!” என்று கத்தாமல் ஹ, ஹ, ஹு என்று வெற்றிச் சங்கூதுவதுபோலே கோஷிக்கலாயிற்று.

இந்த வேடிக்கையை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது அஸாதாரண அப்ராக்ருத ஒலியொன்று காதில் விழுந்தது.

ஒரு குருடன் பிச்சைக்கு வந்தான். அவனை ஐந்து வயதுள்ள ஆண் குழந்தை யொன்று கோலைப்பற்றி அழைத்துக் கொண்டு வந்தது. அவனுடன் ஒரு ஸ்த்ரீயும் வந்தாள்.

அந்தக் குருடனுக்குக் கண் தெரியுமோ, அதாவது அவன் மெய்க் குருடில்லையோ, வேஷக் குருடுதானோ என்று எனக்கொரு சந்தேகம். அவனுடைய கண்ணைத் திறந்து கொண்டு தானிருந்தான். அதாவது, விழி கண் குருடு என்ற வகுப்பைச் சேர்ந்தவன் போலே யிருந்தான். அந்தக் கண்களை நான் பார்த்தேன். அவற்றில் புத்திக் குறிப்பு தக தகவென்று ஜ்வலித்துக் கொண்டிருந்தது.

ஐம்பத்தைந்து வயதுள்ள கிழவன். சுக்குப்போலே, பனங்கிழங்கு போலே, ஒற்றை நாடியான, மிகவும் உறுதி கொண்ட உடம்பு, இடுப்புக்கு மேலே ஒட்டகத்தில் பாதிப் பங்கு கோணல் காணப்பட்டது. ஆனால், இயற்கையிலேயே கோணலோ அல்லது அந்த மனிதன் வேண்டுமென்று தன்னுடம்பைக் கோணலாகச் செய்து கொண்டானோ, என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. செம்பட்டை மயிர். நெற்றியிலே பட்டை நாமம்.

ஆஹா! அவன் முகத்தின் அழகை – அதாவது குழிகள் விழுந்த, மேடு பள்ளமான, வெயிலில் மழையில் காற்றில் அடிபட்டு முதிர்ந்து, சதைப்பற்றுக் கொஞ்சமேனும் இல்லாமல், ஆனாலும் சக்திக் களஞ்சியமாக விளங்கிய அவன் முகத்தின் அழகை – நான் எப்படி வர்ணிப்பேன்? நான் சித்திரமெழுதிப் பழகாதது பற்றி மிகவும் வருத்தப்படுகிறேன். ஹா! ஹிந்துஸ்தானத்து ஏழை, பரதேசி, பண்டாரம், யோகி, பிச்சைக்கார வகுப்புக்களில் சில அற்புதமான முகங்கள் – எத்தனையோ அற்புதமான முகங்கள் நாள்தோறும் என் கண்ணில் படுகின்றன. அளவிறந்த துயரத்தாலோ, கஷ்டங்களாலோ, தவத்தாலோ, யோக சித்திகளாலோ – இவர்களிலே பல்லோர் அழுக்குப் படிந்த தேவ விக்ரகங்களின் முகங்களை யுடையோராக விளங்குகின்றனர். அதையெல்லாம் பார்த்தெழுதி வைக்க எனக்குச் சித்திரத் திறமை யில்லை. புகைப்படம் பிடித்து வைக்கலாமா என்று யோசனை பண்ணுகிறேன். இது நிற்க.

மேற்படி குருடன் போட்ட சத்தத்தைத்தான் மேலே அப்ராக்ருத மென்றும், அஸாதாரண மென்றும் சொன்னேன். இந்த ஸம்ஸ்கிருத பதங்களின் பொருள் என்ன வென்றால், அந்த மாதிரிச் சத்தம் நான் இதற்கு முன்பு கேட்டதே கிடையாது. ஆனால், அந்தக் குரல் எந்த ஜாதி யென்பதைக் கூற முடியும், கல்லுளி மங்கான், தெருப் புழுதியிலே உருண்டுருண்டு ஏழு மலையானென்று கூவிக் கையில் உண்டியல் செம்பு கொண்டு பணம் சேர்க்கும் ஏழுமலையாண்டி முதலியவர்களின் குரலைப் போன்றது. ஆனால், ஒரு மூன்று மாஸத்துப் பச்சைக் குழந்தையின் சத்தத்தைக் காட்டிலும், முப்பது வருஷத்துத் தேர்ச்சி கொண்ட கல்லுளி மங்கானுடைய சத்தம் எத்தனை மடங்கு கடினமாக இருக்குமோ, அத்தனை மடங்கு அந்தக் கல்லுளி மங்கானுடைய சத்தத்தைக் காட்டிலும் நமது கதாநாயகனாகிய சந்தேகக் குருடனுடைய குரல் கடினமானது.

எனவே, முப்பத்திரண்டு மூங்கிற் கழிகளைச் சேர்ந்தபடியால் அறுக்கும் சத்தத்தைப்போலே, மேற்படி குருடனுடைய சத்தம் உன்னுடைய காதைத் தொளைத்து விடவில்லையோ என்று என்னிடம் கேட்பீர்களானால், அப்படித் தொளைக்கவில்லை. அதாவது அவனுடைய சத்தம் கர்ண கடூரமில்லை. சிங்கத்தின் ஒலி கடினமாக இருந்தாலும், பயங்கரமாக இருந்தாலும் கல்லுளி மங்கானுடைய சத்தத்தைப்போல் அருவருப்புக் கிடமாகாது. நெஞ்சிலே மூச்சுபலம் இருந்தால் எவ்வளவு கடினமான சத்தமும் காதுக்குச் சுகமாகவே கேட்கும்.

மேற்படி குருடனுடைய அதாவது, ஸம்சயக் குருடனுடைய சத்தம் என் காதுக்குச் சுகமாகத்தானிருந்தது. காலம்சென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் முத்தையா பாகவதருடைய பாட்டைத் தமிழ் நாட்டிலே பலர் கேட்டிருக்க மாட்டார்கள். கொப்பூழிலிருந்து, ஹகார், ஹும் காரங்கள் கொண்டு வருவதில் அந்த பாகவதர் மஹா ஸமர்த்தர். ஆகாச வாணம் ஏறும்போது “ஹ்விஸ்” என்று கம்பீரமாக ஒரு சத்தம் உண்டாகிறதே, அந்தச் சத்தம் மேற்படி பாகவதர் பாட்டில் எப்போதுமே யிருக்கும்.

அவர் பெரிய குஸ்திக்காரரும்கூட. மூச்சை யடக்கி வேலை செய்வதில் பெரிய பெரிய ஹைதராபாது பஹல்வான்கள்கூட அவருக்கு சமானமாக மாட்டார்கள். அந்த பாகவதர் செத்த பிறகு, அந்த மாதிரிக் குரலிலே ஹகாரம் பேசுவது மேற்படி குருடனிடத்திலே தான் கண்டேன். ஆனால், இந்தக் குருடன் பாடவில்லை; கூவினான். அந்தக் கூவுதலுக்கும் சந்தமிருந்தது. இவனுடைய சத்தத்தின் கனமோ என்றால் மேற்படி பாகவதர் தொண்டையைவிடத் தொண்ணூறு மடங்கு வலிமை யுடையது. குழந்தைப் பிராயத்திலே இவன் சங்கீதப் பயிற்சி செய்யாமல் பிச்சைத் தொழிலைக் கைக்கொண்டானே என்றெண்ணி வருத்தப்பட்டேன்.

அந்தக் குருடன் கூவுகிறான்: “தீராத வினை தீர்த்து வைப்பேன், கோபந்நோ!”

அவனுடன் பிச்சைத் தகரப்போகணி யெடுத்துக் கொண்டு வந்த ஸ்திரீ எதிர்மொழி சொல்லுகிறாள்: “கோவிந்தா!”

அந்தக் குருடன் கூவுகிறான்: “ஆறாத புண்ணை ஆற்றி வைப்பேன், கோபந்நோ!”

ஸ்த்ரீ: “கோவிந்தா”

குருடன்: “சனிக்கிழமை, கோபந்நோ !”

ஸ்த்ரீ: “கோவிந்தா”

குருடன்: “நல்ல நாள் கோபந்நோ!

ஸ்த்ரீ: “கோவிந்தா”

குருடன்: “திருப்பதி வேங்கடாசலத்தைப் பார்த்து வந்தேன், கோபந்நோ!”

ஸ்த்ரீ: “கோவிந்தா!”

குருடன்: “ஏழுமலையான் தீர்த்து வைப்பான், கோபந்நோ !”

ஸ்த்ரீ: “கோவிந்தா!”

குருடன்: “ஹா! ஹா! மாறாத் தலைவலி மாற்றி வைப்பேன், கோபந்நோ!”

ஸ்த்ரீ: “கோவிந்தா!”

குருடன்: “ஹா! ஹோ! கண்ணில்லாதவருக்குக் கண் கொடுப்பேன், கோபந்நோ!”

ஸ்த்ரீ: “கோவிந்தா!”

கடைசி வாக்கியத்தைக் கேட்டவுடன் எனக்கு விநோதமாகத் தோன்றிற்று. கண்ணில்லாக் குருடன் பிறருக்குக் கண் கொடுப்பேன் என்று சொன்னால் யாருக்குமே வேடிக்கையாகப் புலப்படாதா?

அப்போது என்னுடன் குள்ளச்சாமி என்ற யோகீசுரர் இருந்தார். அவர் என் மன நிலைமையை நான் சொல்லாமலே தெரிந்துகொண்டு பின்வருமாறு சொல்லலாயினர்:

“இதோ, போகிறானே, இவன் போன ஜன்மத்தில் திரிதராஷ்ட்ர ராஜனாக இருந்தான். இவனுடன் போகிறாளே, அவள் காந்தாரியாக இருந்தவள்.

“போன ஜன்மத்தில், தம்பி மக்களுடைய சொத்தைத் தன் பிள்ளைகள் சூதினால் அபஹரிக்கையிலே தான் ஒன்றும் தடுத்துச் சொல்லாமல் பிள்ளை துரியோதனன் பக்கம் சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்த குற்றத்துக்காக விதி இவனை இந்த ஜன்மத்தில் பிச்சைக்காரனாகவும், பிறவிக் குருடனாகவும் செய்தது. காந்தாரி பதிவிரதை யாகையாலே தானும் கூடவந்தாள். ஐந்து வயதுக் குழந்தை கோலைப் பிடித்துக்கொண்டு போகிறானே அவன்தான் விகர்ணன்” என்றார்.

அப்போது நான், “ஐயோ, திருதராஷ்ட்ரன் மஹாவித்வானாயிற்றே! அவனுக்கிந்த கதி வரலாமா?” என்று சொல்லி வருத்தப்பட்டேன்.

அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்: “போன ஜன்மத்தில் ராஜாவாகவும், பண்டிதனாகவும் இருந்தான். ஆனால், இந்த ஜன்மத்தில் ஏழையாகப் பிறந்து பலவிதங்களில் கஷ்டப்பட்டுப் பிறகு பூர்வ புண்ய சேஷத்தால், சதுரகிரியில் ஒரு மஹரிஷியிடம் பகவந்நாமத்தின் மஹிமையைத் தெரிந்து கொண்டு, உண்மையான பக்தி மார்க்கத்தில் சேர்ந்தபடியால் இவன் இப்போது ஜீவன் முக்தனாய் விட்டான்.

“அவனுடன் தகரப் போகணி தூக்கிக் கொண்டு போகிற காந்தாரி “கோவிந்தா”, “கோவிந்தா!” என்று கத்துகிறாளே அதன் பொருள் தெரியுமா?… சொல்லுகிறேன், கேள். தன்னுடைய கணவன் பரமபதத்தைக் கண்டு கோவிந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டா னென்பதை அவள் உலக மறிய முழங்குகிறாள். அவளுடைய பதிவ்ரத்ய மஹிமையினால் இவன் இந்தப் பதவி யடைந்தான்” என்று சொன்னார்.

நான் அப்போது குள்ளச்சாமியிடம், “ஜீவன் முக்தி பெற்றும் பிச்சைத் தொழில் ஏன் செய்கிறான்?” என்று தவறுதலாகக் கேட்டேன்.

அவர் அதற்கு நேரே மறுமொழி கூறாமல் தாம் முன்பு கூறி வந்ததற்குத் தொடர்ச்சி சொல்வது போலே, “ஆகையால், இவன் போன ஜன்மத்திலிருந்ததைக் காட்டிலும் இப்போது கோடி மடங்கு மேலான நிலைமையி லிருக்கிறான். இவனைக் குறித்து நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அப்போது நான் குள்ளச்சாமியை நோக்கி, “எனக்குப் பூர்வ ஜன்ம விஷயத்தில் இன்னும் நிச்சயமான நம்பிக்கை ஏற்படவில்லை ” என்றேன்.

இதைக் கேட்டவுடன், அந்த யோகீசுரர் எனக்கு மறுமொழி கொடுக்காமல், “அரே! ராம், ராம்” என்று சொல்லி நகைப்புக் காட்டி ஓடிப்போய் விட்டார்.

பின்பு, குருடன் போன திசையிலே திரும்பினேன்.

மறுபடி குருடன் கத்துகிறான்: “தென்னை மரத்திலே கிளி பறக்குது, கோபந்நோ !”

ஸ்த்ரீ: “கோவிந்தா”

குருடன்: “சிதம்பரத்திலே கொடி பறக்குது, கோபந்நோ !”

ஸ்த்ரீ: “கோவிந்தா!”

குருடன்: “தென்னை மரத்திலே கிளி பறக்குது, கோபந்நோ !”

ஸ்த்ரீ: “கோவிந்தா!”

குருடன்: “திருப்பதி மலையிலே கருடன் பறக்குது, கோபந்நோ !”

ஸ்த்ரீ: “கோவிந்தா!”

இங்ஙனம் உருவங்களும் ஒலியும் எனது புலனெல்லையைக் கடந்து சென்று விட்டன.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s