-பேரா. மகரந்த்.ஆர்.பராஞ்சபே

மகரிஷி அரவிந்தரின் 150வது ஆண்டை ஒட்டி, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியான பேராசிரியர் மகரந்த். ஆர். பராஞ்சபே அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் மீள்பதிவாகிறது.
அரவிந்தர் மேற்கத்திய, பூர்ஷ்வா பெருமகனல்ல. சாமுராய் * என்று சொல்லலாம். அல்லது நம்முடைய பண்பாட்டுக்கு ஏற்ற வகையில் சொல்ல வேண்டும் என்றால், பலருக்கும் உத்வேகம் அளிக்கும் யோகி, தபஸ்வி என்று சொல்லலாம். நம் தேசத்தை மாற்ற, இந்தியாவை மீண்டும் மகத்தானதாக்க வந்தவர். ஆனால் அது நிகழ வேண்டுமானால், தேசத்தின் ஆன்மா விழிப்புற வேண்டும்.
இதுதான் ஸ்ரீ அரவிந்தரின் செய்தி. விடுதலையின் அமுதப் பெருவிழாவோடு அவரது நூற்றி ஐம்பதாவது பிறந்த ஆண்டையும் சேர்த்தே கொண்டாடி வருகிறோம்.
கொல்கத்தாவில் 48, கிரே தெருவில் குடியிருந்த அரவிந்தரை ஆயுதம் தாங்கிய ஆய்வாளர்களும் காவல்துறையினரும், 1908 மே 2-ஆம் தேதி சூழ்ந்து கொண்டு கைது செய்தனர். அது பின்னாளில் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு என்று பிரபலமானது. அவர் மீது ‘சதி செய்தது’ , ‘அரசருக்கு எதிராகப் போரிட்டது’ என்று குற்றங்கள் சாட்டப்பட்டன. இந்த குற்றப் பிரிவுகளுக்கு தண்டனை தூக்கிலிடுவது.
அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட விஷயங்களில், ‘வந்தே மாதரம்’ பத்திரிகையில் வெளியிட அவர் எழுதி வைத்திருந்த, ஆனால் வெளிவராத ஐந்து கட்டுரைகளும் இருந்தன. அதில் ‘புதிய தேசியம்’ என்ற தலைப்பிட்ட கட்டுரை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் சான்றாவணமாக தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கட்டுரை பின்னர் ஸ்ரீ அரவிந்தரின் முழுமையான தொகுப்பில் (பாகம் 6- 1997, பாகம் 7- 2002) வெளிவந்துள்ளது.
அந்த அசாதாரணமான கட்டுரை இன்று இந்தியாவில் நடக்கும் பண்பாட்டு யுத்தத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இன்று நடக்கும் சண்டை, அன்று சுதந்திரப் போராட்டக் காலத்தில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையிலான போராட்டம் அல்லது ‘சூடான சாப்பாட்டிற்கும் பழைய சோற்றுக்கும்’ இடையேயான வேறுபாட்டைப் போன்றே உள்ளது. முன்னவர்களின் நிலையை ஸ்ரீ அரவிந்தரைப் போல தெளிவாகவும் வலுவாகவும் முன்வைத்தவர் எவரும் இல்லை. தீவிரவாதிகள் சட்டத்தை மதிப்பதில்லை என்பதை அவர் மறுத்தார். அமைதி வழிக்கு மாறாக வன்முறைப் பாதையில் அவர்கள் பயணிக்கிறார்கள் என்பதை அவர் உறுதியாக நிராகரித்தார். அவர்களை தேசியவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும் தீவிரவாதிகள் என்று அழைப்பது தவறு என்றும் வலியுறுத்தினார்.
ஸ்ரீ அரவிந்தர் கூறும் அந்த ‘புதிய தேசியவாதிகள்’ யார்? ‘தீவிரவாதிகள்’ என்று புறந்தள்ளப்பட்ட, ஆனால் அதற்கு மாறான நிலையைக் கொண்ட அவர்கள் யார்?
ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுப்படி, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் பழைய பூர்ஷ்வா கொள்கைகளை மறுப்பவர்கள். ‘இந்தியா முழுவதும் அலை வீசிக் கொண்டிருந்த அந்த புதிய தேசியத்தைத்தான் மகாத்மா காந்தி தன்னுடைய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலின் (1909) தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். அவர்களின் நோக்கம் ‘பூர்ஷ்வாத்தனத்தை மாற்றி சாமுராய் தன்மையைக் கொண்டு வருவதும்’ அந்த ‘சாமுராய்த் தனத்தை ஒட்டுமொத்த தேசம் முழுக்கவும் ஏற்படுத்துவதாகும்.’
அப்போதிருந்த ‘தீவிரவாதம்’ என்பதைப் பற்றிய தவறான புரிதலையும் ‘சொகுசும் பாதுகாப்பும் கொண்ட காங்கிரஸ் கட்சியின் அரசியலை’யும் ஸ்ரீ அரவிந்தர் கேலி செய்தார்.
சாதாரண காங்கிரஸ் அரசியல்வாதியின் கருத்துப்படி தேசியமென்றால் கமிட்டி கூட்டங்களில் அனல் பறக்க விவாதிப்பதும் பொதுக்கூட்டங்களில் கைகலப்பில் ஈடுபடுவதுமாக இருக்கிறது. வெற்றிகரமான பிரபல தேசியத் தலைவர்களை கேலி செய்வது, ராவல்பிண்டி மற்றும் கிழக்கு வங்காளக் கலவரங்கள், தேச சேவைக்கு முன்வரும் தன்னார்வலர்கள், சதி குற்றம் சாட்டப்பட்டவர்களை விமர்சிப்பது என்றிருக்கும் அவனுக்கு உண்மையான தேசியவாதிகள் ‘தீவிரவாதி’களாக தெரிகிறார்கள்.
புதிய தேசியவாதிகள், லட்சியம் அதை அடைவதற்கான வழிமுறை என்ன என்பதில் தங்களுக்குள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் ‘இந்தியாவின் மீது பற்று’ என்ற விஷயத்தில் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இது சராசரி காங்கிரஸ்காரர்களில் இருந்து நிச்சயம் வேறுபட்டதே. இதுதான் ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுப்படி ‘தேசியத்தின் இதயம்’.
புதிய தேசியம் என்பது, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ‘வலிமையான, மகத்தான, உன்னதமான ஆரியவர்த்தத்தின் தெய்வீகமான – அதுதான் தொன்மையான இந்தியாவின் – ஆன்மாவைத் தட்டி எழுப்பி அதன் அடிப்படையில் புதிய இந்திய தேசத்தை உருவாக்குவது. அதை ஊக்கப்படுத்தி, தொன்மையும் வரலாற்றில் அழிவற்றவர்களுமாக இருக்கும் மக்களின் மேன்மைக்கும் பொருளாதார உயர்வுக்கும் சுதந்திரத்துக்கும் நவீன வழிமுறைகளைக் கண்டடையச் செய்வதாகும்.
‘அர்த்தமற்ற வன்முறையையும் நியாயமற்ற வெறிச் செயல்களையும்’ புதிய தேசியம் முன்வைக்கவில்லை. சட்டமீறல்களையும் அது முன்னெடுக்கவில்லை. ஆனால் புதிய தேசியவாதிகள் ‘ஆதிக்க சக்திகள் அடிமைப்படுத்திய மக்களின் மீது திணித்த சட்டத்திற்கு கீப்ழ்படியாமல்’ மாறாக ‘நம் தேசத்தின் சட்டங்களுக்கு, உயிரோட்டமுள்ள நமது சமூகத்தினால் உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆட்சி முறையின் சட்டங்களுக்கு, அடிபணிய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினர்.
அப்படியானால், இந்த தேசத்தின் சட்டம் என்பது எது? அது ஆன்மிகம்தான் என்று ஸ்ரீ அரவிந்தர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறார்.
‘இந்தியாவின் புத்துயிர்ப்பு’ என்ற கட்டுரையின் துவக்கத்திலேயே அவர் எழுதுகிறார்: “ஆன்மிகம்தான் இந்திய மனங்களைத் திறப்பதற்கான திறவுகோல். அனந்தம் (எல்லையின்மை) என்பதை அது இயல்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. வாழ்க்கை என்பதை ஒற்றை ஒளியில் சரியாகப் பார்க்க முடியாது என்பதையும், புற சக்திகளின் தாக்கத்தால் மட்டுமே முழுமையாக உருவாக்கப்பட்டு வாழப்படுகிறது என்பதையும் ஏற்க மறுத்தே வந்துள்ளது. வாழ்க்கையைப் பற்றிய இந்த கண்ணோட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா – அது ஞானத்தின் உச்சத்தில் இருந்த போதும் சரி அறியாமை இருளில் தாழ்ந்து கிடந்த போதும் கூட- கைவிடவில்லை”.
ஆன்மிகம் என்றால் எது? ‘தெய்வீக வாழ்க்கை’யில் ஸ்ரீ அரவிந்தர் அதைத் தெளிவாகிறார். “லௌகீகத்தை, பொருளியலை மறுப்பதில்லை; துறவை, தியாகத்தை மறுப்பதும் அல்ல; உயர்ந்த அறிவுஜீவித்தனமும் அல்ல; லட்சிய வாதமும் அல்ல; ஒழுக்கத்தைப் பின்பற்றும் மனமும் அல்ல; தார்மிகத் தூய்மையும் அல்ல; மதம் சார்ந்ததும் அல்ல; உறுதியான உணர்வு நிலையோ, பாராட்டுக்குரிய உயர்ந்த உணர்வு நிலையோ அல்ல; இந்த உயர்ந்த விஷயங்களின் கலவையும் அல்ல; நம்பிக்கையும் அல்ல; சமயமும் அதன் உட்பிரிவின் நம்பிக்கையும் அல்ல; உணர்வுபூர்வமான நாட்டமோ மதம் அல்லது குழு சார்ந்த விதிகளைப் பின்பற்றுவதோ ஆன்மிக சாதனையாகவும் அனுபவமாகவும் ஆகாது”.
மாறாக, ஸ்ரீ அரவிந்தரின் கருத்துப்படி, ஆன்மிகத்தின் சாரம் என்பது விழிப்பு, சுயம், ஆன்மா என்றெல்லாம் சொல்லப்படும் நம்முடைய உள்ளார்ந்த தன்மை பற்றிய விழிப்புணர்வு கொள்வது. ஆன்மா என்பது நம்முடைய மனம் அல்ல, அதிலிருந்து வேறுபட்டது. உடம்பல்ல, வாழ்க்கை அல்ல. இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாகத் தழுவியும் அதற்கு அப்பாலும், நமக்குள்ளும் நம்மைச் சூழ்ந்தும் உள்ள அதைத் தெரிந்து கொள்வதும், உணர்ந்து கொள்வதும், அதனுடன் தொடர்பு கொள்வதும், அதனுடன் இணைவதும், அதை நோக்கி நம்மை திருப்பிக் கொள்வதும், அதற்காக மாறுவதும், நம் ஒட்டுமொத்த இருப்பையே முழுமையாக மாற்றம் அடைய செய்வதும், புதிதாக ஆவதும், புதிய இயல்பாக மாறுவதும் ஆகும்.
“இந்திய தேசியத்தின் ஆன்மா மூன்று உடல்களைக் கொண்டுள்ளது. வெளிப்படையாகத் தெரிந்த தூல நிலை, அதற்குள்ளே நுண்ணிய நிலை. அதற்கும் அப்பால் ஆழத்தில் புதைந்து கிடக்கும் மூன்றாவது நிலை. அதுதான் சக்தி. தேசத்தின் ஆன்மா. அதுதான் தேசத்தின் வாழ்விற்கும் வடிவத்திற்கும் மாறாத, வற்றாத ஊற்று”.
வாழும் நம்பிக்கையான அந்த மகத்தான சக்தியை ஆங்கில மயமாகிவிட்ட நாட்டு மக்களிடம் பார்க்க முடியாது. அவர்களை இந்தியர்களாகவே கருத முடியாது. மாறாக, தொன்மை என்னும் மேகங்களால் சூழப்பட்டு இந்தியர்கள் என்றே கருத முடியாமல், ஆனால் விதிவசத்தால் இன்றும் உள்ளவர்களிடம் காண முடியும்.
இந்த நாடு பங்கிம்சந்திரரின் ஆனந்த மடத்தில் துர்க்கை அன்னையாக வர்ணிக்கப்படும்; சிம்மமாக, பலம் மிக்கதாக, எதிர்காலத்தில் மணிமுடி சூடியதாக, ஒளி மிக்கதாக, நம்பிக்கை அளிப்பதாக, பிரகாசமான எதிர்பார்ப்புகளை வளர்ப்பதாக, வலிமையானதாக விரைவில் ஆக வேண்டும் என்பதே ஸ்ரீ அரவிந்தர் இந்த தேசம் குறித்துக் கொண்ட கனவு.
இந்தியப் புத்துயிர்ப்பு என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியதன் உண்மையான பொருளும் தெளிவான வெளிப்பாடும் இதுவே.
குறிப்பு: * சாமுராய் என்றால் ஜப்பான் படையில் இருந்த ஒரு வீரமிக்க இனம். இவர்களுக்கென்று தனித்துவமான வாழ்வியல் முறை இருந்தது. பேரா. மகரந்த்.ஆர்.பராஞ்சபே, புதுதில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கிறார். நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (10.10.2022). தமிழாக்கம்: திருநின்றவூர் ரவிகுமார்.
$$$