-எஸ்.எஸ்.மகாதேவன்

22. இதழியல் தவம் என்றால் மல்லையாஜி முனிவரே!
பத்திரிகைப் பணி நிமித்தமாக வாழ்நாள் நெடுக பல விதமானவர்களைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. சில சமயம் எனக்காக; சில சமயம் நண்பர்களுக்காக. இரண்டாவது வகையில் நான் சந்தித்த நபர் தான் பிலிப் ஸ்ப்ராட்.
தியாகபூமி /விஜயபாரதம் போல கலாச்சார தேசியம் பரப்பும் கன்னட மொழி வார இதழ் ‘விக்ரமா’வின் நெடுங்கால ஆசிரியர் பி.எஸ்.என்.மல்லையா. பழுத்த ஸ்வயம்சேவகர். 1970-இல் ஒரு நாள் பெங்களூரில் இருந்து சென்னை வந்த அவர் சேத்துப்பட்டில் கல்கி தோட்டத்தில் தங்கியிருக்கும் பிலிப் ஸ்ப்ராட் என்பவரை பேட்டி காண வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது சிந்தாதிரிப்பேட்டை, சுவாமி நாயக்கன் தெருவில் இருந்த தியாகபூமி அலுவலகத்தில் இருந்து அவரை கல்கி கார்டனுக்கு அழைத்துச் சென்றேன். பேட்டி தொடங்கியதும் திரும்பி விட்டேன்.

பின்னர் ‘விக்ரமா’வில் பேட்டி வெளியானது. அதன் உள்ளடக்கத்தை விட பிலிப் ஸ்ப்ராட் பற்றிய தகவல்கள்தான் அன்று எனக்கு சுவாரசியம். சரியாக 120 ஆண்டுகளுக்கு முன் 1902 செப்டம்பர் 26 அன்று லண்டனில் பிறந்தவர் பிலிப் ஸ்ப்ராட். பட்டப்படிப்பு முடித்தபின் அந்த நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தால் பாரத நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க 1926-இல் அனுப்பப்பட்டவர். ஒரு பத்திரிகையாளராக வலம் வந்தார். காலப்போக்கில் கம்யூனிசத்திற்கு நேரெதிரான முதலாளித்துவம் அவருக்குப் பிடித்துப் போயிற்று. 1964 முதல் சென்னையில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி பத்திரிகையான ‘ஸ்வராஜ்யா’ ஆசிரியராகச் செயல்பட்டார். சென்னையிலேயே 1971-இல் காலமானார்.
பிலிப் ஸ்ப்ராட் பற்றி நான் இங்கே அகழ்வாராய்ச்சி செய்வது போல இரண்டு ஆண்டுகளுக்கு முன் முற்போக்குப் பாசறையின் மூத்த பிரமுகர் ராமச்சந்திர குஹாவும் செய்தார் போலிருக்கிறது! இந்தியர்களைப் பிரித்து மோதவிடும் நோக்கத்துடன் (அதுவும் தேசம் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது!) 1939-இல் கம்யூனிஸ்ட் பிலிப் ஸ்ப்ராட், “கலாச்சாரத்தில் குஜராத் மட்டம், வங்காளம் ஒசத்தி” என்று எழுதியதை தூசி தட்டி டுவிட்டரில் பதிவு செய்தார்; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்! கம்யூனிஸ்ட்களாலும் முற்போக்குகளாலும் நாட்டுக்கு அவ்வளவுதான் பிரயோஜனம்.
என் மதிப்புக்குரிய நண்பர் பி.எஸ்.என்.மல்லையா பற்றிப் பார்ப்போம். வங்கி அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் மல்லையா. சங்கப் பெரியவர்கள் சொல்லியதன் பேரில் 1948-இல் தொடங்கிய ‘விக்ரமா’ வார இதழின் ஆசிரியராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டார். இவரை காங்கிரஸ் கட்சி வளைத்துப் போட்டுக்கொள்ள குறி பார்த்தது. இவருடைய பணிக்காலம் நெடுக கர்நாடகாவின் நாலைந்து காங்கிரஸ் முதலமைச்சர்கள் உள்பட அனைவருடனும் நெருங்கிப் பழகியவர். ஆனால் காங்கிரசின் அழைப்புக்கு ஒரு ‘நமஸ்தே’ போட்டுவிட்டு தொடர்ந்து ஹிந்துத்துவ இதழியலில் காலுறைத்து நின்றார்.
இப்போதெல்லாம் பத்திரிகைகளில் ஆசிரியர் துறையில் பணிபுரிபவர்கள் பற்றி வர்ணிக்க வேண்டுமென்றால் என்னென்ன பத்திரிகைகளில் இதுவரை இவர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள் என்று சொல்லிக் காட்ட வேண்டியிருக்கும். இந்த ரகத்தில் என்னையும் சேர்த்துக் கொள்கிறேன். ஆனால் மல்லையா நடத்தியது லட்சிய வாழ்வு. அதனால் ’விக்ரமா’வுக்கு மட்டுமல்லாமல் எத்தனையோ இளைஞர்களுக்கும் ஊக்கம் கிடைத்தது. ஓர் உதாரணம்:

1955-இல் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். பக்கத்து இருக்கையில் ஒரு வளரிளம் பருவ மாணவன். பேச்சுவாக்கில் “தமிழ் அப்படி ஒன்றும் சிறந்த மொழி அல்ல” என்று சொன்னான். உடனே மல்லையா, “தமிழ் மொழியை எந்த அளவுக்குப் படித்திருக்கிறாய்?” என்று வினவினார். “தமிழ் அவ்வளவாகத் தெரியாது” என்று அந்த மாணவன் சொல்ல வேண்டியிருந்தது. பின்னாளில் பாரத கலாச்சாரம் உலக அரங்கில் கொடிகட்டிப் பறக்கும் வரலாற்றை எழுதிய எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற நூலாசிரியராக உயர்ந்த அந்த மாணவன் மல்லையாவின் அந்த ஒரு கேள்வியில், தனது எடுத்தேன் கவிழ்த்தேன் போக்கு அடியோடு நிரந்தரமாக மாறியது என்று பதிவு செய்திருக்கிறார்.
தேசிய ஒருமைப்பாடு என்ற விஷயத்தில் ஒரு கம்யூனிஸ்டின் பார்வை எப்படி இருந்தது, ஒரு ஆர்.எஸ்.எஸ். அன்பரின் பார்வை எப்படி இருந்தது என்பதை அழுத்தமாக வேறுபடுத்தி எடுத்துக்காட்ட இது போதும் என்று கருதுகிறேன்.
‘விக்ரமா’ வார இதழ் 1972இல் வெள்ளி விழா கொண்டாடியது. நானும் சென்று கலந்து கொண்டேன். அப்போது மல்லையா அவர்களை மறுபடியும் சந்தித்தேன். நிகழ்ச்சியில் டி.டி.சர்மா என்ற புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்று வீதம் 25 ஆண்டுகளில் ‘விக்ரமா’ எழுதிய 5 தலையங்கங்களை எடுத்துக்கொண்டு அலசினார். பாரதம் ஒரே நாடு; தொன்றுதொட்டு ஒரே நாடு; ஒரே நாடாக விளங்குவதற்கு காரணம் அதன் கலாச்சாரம் – என்ற இந்தக் கருத்து அந்த ஐந்து தலையங்கங்களிலும் ஆதார சுருதியாக விளங்குவதை அவர் சுட்டிக்காட்டினார். மல்லையா போன்றோரின் லட்சிய வாழ்வு அர்த்தம் உள்ளது என்று எனக்கு அப்போது புரிந்தது.
$$$