-மகாகவி பாரதி
மகாகவி பாரதி தனது தேசபக்திக் கவிதைகளை தொகுத்து ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற பெயரில் 1908இல் நூலாக வெளியிட்டார். அதன் இரண்டாம் பாகம் 1909இல் வெளியானது. அந்த நூல்களில் பாரதி எழுதிய முன்னுரைகளே இவை. இவ்விரண்டு பாகங்களும் பாரதியின் சத்குருநாதர் சகோதரி நிவேதிதைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை யாயினும், இரண்டாவது பாகத்தில் ”எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் மகாகவி பாரதி. நூலின் முகவுரையில் மகாகவியின் தன்னடக்கம் கண்டு உள்ளம் நெகிழ்கிறோம்...

1. ஸ்வதேச கீதங்கள் – முன்னுரை
‘ஸ்வதேச கீதங்கள்’ என்னும் நூல் 1908ல் முதன்முதலாக வெளியாயிற்று. இது பின்வரும் சமர்ப்பணத்தோடும் முகவுரையோடும் கூடியது.
சமர்ப்பணம்
ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்குப் பாரததேவியின் சம்பூர்ண ரூபத்தை காட்டி, ஸ்வதேச பக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறுநூலை சமர்ப்பிக்கின்றேன்.
ஆசிரியன்
முகவுரை
ஒருமையும் யெளவனத் தன்மையும் பெற்று விளங்கும் பாரத தேவியின் சரணங்களிலே யான் பின்வரும் மலர்கள் கொண்டு சூட்டத் துணிந்தது எனக்குப் பிழையென்று தோன்றவில்லை. யான் சூட்டியிருக்கும் மலர்கள் மணமற்றவை என்பதனை நன்கறிவேன். தேவலோகத்துப் பாரிஜாத மலர்கள் சூடத் தகுதிகொண்ட திருவடிகளுக்கு எனது மணமற்ற முருக்கம் பூக்கள் அணிக் குறைவை விளைக்கும் என்பதையும் யான் தெரிந்துள்ளேன். ஆயினும் உள்ளன்பு மிகுதியால் இச் செய்கையிலே துணிவு கொண்டுவிட்டேன். சாக்கியன் எறிந்த கற்களையும் சிவபிரான் மலர்களாகக் கருதி அங்கீகரிக்க வில்லையா? அதனை யொப்ப, எனது குணமற்ற பூக்களையும் பாரத மாதா கருணையுடன் ஏற்றருளுக!
-சி.சுப்பிரமணிய பாரதி
குறிப்பு: இந்தப் பாடல்களைப் பிரசுரிக்குமாறு என்னைத் தூண்டி, இவை வெளிப்படுவதில் மிகுந்த ஆவல் காட்டி உதவிகளியற்றிய மித்திரர்களிடம் மிக்க நன்றிபாராட்டுகின்றேன்.
மயிலாப்பூர்,
1908 ஜனவரி 10
$$$
2. ஸ்வதேச கீதங்கள் – இரண்டாம் பாகம்
1909இல் ஜன்மபூமி (ஸ்வதேச கீதங்கள் – இரண்டாம் பாகம்) வெளியிடப்பட்டது. அதிலுள்ள சமர்ப்பணமும் முகவுரையும் வருமாறு:
சமர்ப்பணம்
எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்.
-சி.சுப்பிரமணிய பாரதி
முகவுரை
இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்கமன கோசரமாகிய செளந்தர்யத்தைப் பெற்றிருக்க்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும்ம் தன்னையறியாது குதூகலமடைகின்றது. சூரியன் உதித்தவுடனே சேதன பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை யொப்பவே, நாட்டில் ஒரு புதிய ஆதர்சம் – ஓர் கிளர்ச்சி – ஓர் மார்க்கம் – தோன்றுவதுமேயானால் மேன்மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரிய காந்த மலர்போல் அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய ‘தேசபக்தி‘ என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தை யெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறையுடை வனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதை மலர் புனைந்து மாதாவின் திருவடிக்கு புனைந்தேன்.
நான் எதிர்பார்த்திராத வண்ணமாக மெய்த் தொண்டர்கள் பலர் “இம்மலர்கள் மிக நல்லன” என்று பாராட்டில் மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றேனாகி, மறுபடியும் தாயின் பதமலர்களுக்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக்கிறேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சி யளிக்குமென்றே நினைக்கின்றேன்.
“குழலினிது யாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளா தவர்”
-என்பது வேதமாதலின்.
இங்ஙனம்
சி.சுப்பிரமணிய பாரதி
$$$