-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
59. மனம் நாடும் மகேசன்
.
ஹம்ஸ: பத்மவனம் ஸமிச்சதி யதா நீலாம்புதம் சாதக:
கோக: கோகநதப்ரியம் ப்ரதிதினம் சந்த்ரம் சகோரஸ்ததா/
சேதோ வாஞ்சதி மாமகம் பசு’பதே சின்மார்க ம்ருக்யம் விபோ
கௌரீநாதபவத்பதாப்ஜ யுகளம் கைவல்ய ஸௌக்யப்ரதம்//
.
அன்னத்துக் கமலம் சாதகத்துக் கார்மேகம்
கோகத்துக் கதிரவன் சகோரத்துச் சந்திரன்
எவ்விதம் நாட்டமோ அவ்விதமே என்மனதும்
ஞானத்தின் கைவல்யம் நின்திருவடி நினைந்திடுதே!
.
இறைவனது திருக்காட்சி நன்கு புலப்பட, அவரைப் பற்றிய நினைப்பு நம் நெஞ்சில் நீங்காது இடம் பெற வேண்டும். அவர் மீதான நாட்டம் நம்மிடம் குறைவின்றி நீடிக்க வேண்டும். நாட்டமும், நம்பிக்கையும் இறைவன் தரிசனத்துக்கு அவசியம். இந்த நாட்டம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை இங்கே விளக்குகிறார் சங்கர பகவத்பாதர்.
அன்னப் பறவையானது தாமரைப்பூக்கள் நிறைந்த இடத்தையும், சாதகப் பறவையானது மழை பொழிகின்ற கார்மேகத்தையும், கோகம் எனப்படும் சக்ரவாகப் பறவையானது கதிரவனையும், சகோரப் பறவையானது சந்திரனையும் எப்போதும் நாடி நிற்கின்றன. இந்த நாட்டத்தில் இருந்து அவை எந்த வகையிலும் திசை திரும்புவதில்லை. அதுபோல, சிவபெருமானே, எனது மனதும் ஞானத்தால் தேடி அடையக்கூடியதும், எல்லாவற்றிற்கும் மேலான கைவல்யம் எனப்படும் மோனநிலை சுகத்தை அருளக்கூடியதுமான உமது திருவடித் தாமரைகளையே நினைத்திருக்கிறது. ஆகையால், விரைவில் என்னை ஆட்கொண்டுவிடு.
கைவல்யம் என்றால் அதற்கிணையாக வேறொன்றும் இல்லாதது என்று பொருள். இறைவனின் திருவடிகளே கைவல்யபதம், அதுவே கைவல்ய சுகத்தை அளிப்பது. கைவல்யம்= மோனப் பெருநிலை= ஒன்றுதல். வேறு நினைப்பு அறுந்துபோய் அதுமாத்திரமே இருத்தல்.
$$$