-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
56. தாண்டவக்கோன்
.
நித்யாய த்ரிகுணாத்மனே புரஜிதே காத்யாயனீ- ச்’ரேயஸே
ஸத்யாயாதி-குடும்பினே முனிமன: ப்ரத்யக்ஷ சின்மூர்த்தயே/
மாயாஸ்ருஷ்ட ஜகத்-த்ரயாய ஸகலாம்னாயாந்த ஸஞ்சாரிணே
ஸாயம் தாண்டவ ஸம்ப்ரமாய ஜடினே ஸேயம் நதிச்’ச’ம்பவே://
.
என்றுமுளோன் முக்குணத்தோன் முப்புரம்வெல் மலையோள்தவன்
உண்மையோன் தலைக்குடும்பன் முனிமனத்து அறிவுருவோன்
மாயையால் உலகாக்கி மாமுடிவின் நடமாடி
மாலையில் நடனமாடி சடைசாம்பனை, வணங்கினனே!
. .
ஆடலரசனாகிய நடராஜனின், சிவபெருமானின் பெருமையை இந்த ஸ்லோகமும் எடுத்தியம்புகிறது.
.சிவபெருமான் என்றும் உள்ளவன் (நித்யன்). சத்வம், ரஜஸ், தமோ என்று சொல்லப்படுகின்ற முக்குணங்களையும் தமது உடலாகக் கொண்டவர். முப்புரங்களை (திரிபுரத்தை) வென்றவர். (காமம், குரோதம், லோபம் ஆகிய மூன்று மலங்களையும் வென்றவர்.) மலையில் பிறந்தவளாகிய பார்வதியின் உயர் தவப்பயனாகிய வடிவெடுத்தவர். எப்போதும் நிலைத்திருக்கக் கூடிய உண்மையே வடிவானவர் (சத்யன்).
.இந்த உலகில் முதன்முதலாகத் தோன்றிய ஆதி குடும்பத்தை உடையவர். (மனிதர்கள் நல்வாழ்வை அமைத்துக் கொள்வதற்காக, கணவன், மனைவி, குழந்தைகள் என தாமே ஒரு குடும்பியாகத் தோன்றியவர். சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகியோர் கொண்ட குடும்பமே ஆதி குடும்பம் என்று துதிக்கப்படுகிறது.)
.தவம் நிறைந்த முனிவர்களின் மனங்களிலே அறிவே (ஞானமே) உருவாக காட்சி தருகிறார் சிவபெருமான். தமது மாயா சக்தியினால் உலகத்தை அவர் உருவாக்குகிறார். உலகின் முடிவாகிய பிரளய காலத்திலும் அவர் அழிவின்றி நடமாடுகிறார். ஒவ்வொரு மாலைப் பொழுதிலும் (பிரதோஷ காலத்திலும்) அவர் நடனமாடுகிறார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த, சடைமுடி தாங்கிய, மங்கள வடிவம் கொண்ட சிவபெருமானை நான் வணங்குகிறேன்.
$$$