பாரதியின் தனிப்பாடல்- 8

-மகாகவி பாரதி

ஹாலி என்ற வால் நட்சத்திரம் 1910இல் விண்ணில் தோன்றி மறைந்தபோது மகாகவி பாரதி எழுதிய கவிதை இது... 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தால் உலக அரசியலில் முக்கியமான தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. அதை இக்கவிதையில் சுட்டிக் காட்டி இருக்கிறார் பாரதி. எனினும் இந்த வால் மீனின் வருகையால் எண்ணிலாப் புதுமைகள் விளையும் என்ற நம்பிக்கையையும் விளைக்கிறார் கவிஞர். சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும் கூடும் என்ற கவிஞரின் நன்னம்பிக்கை அவரது தன்னம்பிக்கையையே பகர்கிறது...

8. சாதாரண வருஷத்துத் தூமகேது

தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே, வாராய்! 1

எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார். 2

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்; புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால். 3

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை. 4

வாராய், சுடரே! வார்த்தைசில கேட்பேன்;
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றார்; பொய்யோ, மெய்யோ? 5

ஆதித் தலைவி யாணையின் படிநீ
சலித்திடுந் தன்மையால், தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் அது மெய்யோ, பொய்யோ? 6

ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்; மெய்யோ, பொய்யோ? 7

சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும்
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ, மெய்யோ? 8

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s