-வி.ராஜேஸ்வரி

உலகத்தில் எங்குமே காண முடியாத, முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பொன் ஏர் கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நாட்டு நடவுத் திருவிழாவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் விவசாயக்குடிகளான மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் ஆகியோர் இவ்விழாவில் பேருவகையுடன் பங்கேற்கின்றனர்.
கரிகால் சோழன் காலத்தில் (பொ. யு. முதல் நூற்றாண்டு) பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவாலயங்களுள் முதன்மையானது. ‘மேலைச் சிதம்பரம்’ என்று அழைக்கப்படும் இக்கோயிலின் நடராஜர் மண்டபத்தில் உள்ள கலைநயம் மிக்க தூண்கள் நாயக்க மன்னர் காலத்தியவை.
இக்கோயில் சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் ஆகியோரால் பாடல் பெற்றது. இங்கு சிவபெருமான், பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் மூலவர் லிங்கம் சுயம்பு லிங்கமாகும். பேரூரில் உள்ள பிறவாப் புளியும் இறவாப் பனையும் காண வேண்டியவை.

நாற்று நடவுத் திருவிழா
இக்கோயிலில் ‘நாற்று நடவுத் திருவிழா’ எனப்படும் நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் கிருத்திகையில் தொடங்கி, பூராடம் வரை நடைபெறுகிறது. இதற்காக பொன்னேர் பூட்டும் சடங்கு நடைபெறுவது வழக்கம்.
இந்த பொன் ஏர் என்பது விவசாயம் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படும் கருவிகள், காளை மாடுகளுக்கு மரியாதை செய்வது மட்டுமின்றி, இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் ஆகும்.
தமிழக உழவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பாரம்பரியமாக நடத்திக் கொண்டிருக்கும் சடங்குகளில் ஒன்று இந்த நாற்று நடவுத் திருவிழா. பழமையான இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகும். காஞ்சி மாநதி எனப்படும் நொய்யல் நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா நடைபெறுகிறது.
முன்னரே பண்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.

வேளாளர் பெண்கள் அவர்களது கோயில் மண்டபத்தில் முளைப்பாலிகை வைத்திருப்பார்கள். இந்த முளைப்பாலிகைகளுக்கு தினந்தோறும் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன் உடன் சென்று தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெறும். மாலை பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ரிஷப வாகனத்தில் நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குப் புறப்படும்போது நந்தியிடம் “நாற்று நடும் நிகழ்ச்சிக்குச் செல்கிறோம். சுந்தரமூர்த்தி கேட்டால் தகவல் கூறக் கூடாது” எனக் கூறும் வேடிக்கையான நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து சுவாமிகள் ரதத்தில் மண்டபத்திற்குச் செல்வர்.
கோயில் வாயிலில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, ஏர்க் கலப்பைக்கு பொன்னேர் பூஜை நடைபெறும். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார், நந்தியிடம் சென்று “சிவபெருமான் எங்கு சென்று உள்ளார்?” என கேட்டதற்கு நந்தி பதில் கூறாமல், தலையை தெற்குப் புறமாக சாய்த்து, நாற்று நடவு மண்டபத்தில் சுவாமிகள் உள்ளதை மறைமுகமாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.
தொடர்ந்து பட்டத்து யானை முன்னே செல்ல தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பட்டீஸ்வரர் மண் வெட்டியுடன், பச்சை நாயகி அம்மன் நாற்றுகள் எடுத்துக்கொண்டு நாற்று நடவு மண்டபத்தில் எழுந்தருளுவர். இறைவனே உழவனாகவும் அவனது மனைவி உடன் நாற்று நடவு செய்பவளாகவும் இந்த வழிபாட்டுச் சடங்கில் உணர்த்தப்படுகிறார்கள். எவ்வளவு மேன்மையான சிந்தனை!
முன்னதாக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கலப்பையால் உழவு செய்யப்படும். வேளாளர் தம்பதியினர் வேடத்தில் சுவாமிகள் வயலில் இறங்கி, சுவாமி மண் வெட்டியால் வெட்ட, அம்மன் நாற்றுகளை நடும்போது பெண்கள் குலவைச் சத்தம் எழுப்பியபடி, போட்டியிட்டுக்கொண்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாற்று நடுவார்கள்.

அப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி பட்டீஸ்வரரைச் சந்தித்து, திருப்பணிக்கு பொன், பொருள்கள் கேட்டு பாடல்கள் பாடுவார். அதற்கு சுவாமிகள் “இங்கு முக்தி கிடைக்கும்” எனக் கூறி பொன் பொருளுக்கு சேரமானைச் சந்திக்க ஓலை கொடுக்கும் நிகழ்ச்சி நிகழும்.
சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சுந்தரர் பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். இதற்காகவே, சிவபெருமான் மள்ளராகவும் உமாதேவி மள்ளத்தியாகவும் நாற்று நடவு செய்கின்றனர் என்பது பேரூர்ப் புராணம். “மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ” என்று துவங்கும் தேவாரப் பதிகத்தை சிதம்பரத்தில் பாடிய சுந்தரர் அதன் இறுதிப் பாடலில் பேரூர் ஈசனைப் பாடி (பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே
பெற்றா மன்றே) மகிழ்கிறார்.
தொடர்ந்து சுவாதி திருவீதி உலா. சுந்தரமூர்த்தியிடம் சைகையால் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டும் நிகழ்ச்சியும் மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெறும். இந்தக் கோயிலில் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது. புராணமும் கலையும் இங்கு சங்கமிக்கிறது.
இச்சடங்கில், கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். சுமார் மூவாயிரம் ஆண்டுகாலமாகத் தொடரும், தமிழர்தம் விவசாயத் தொல் சடங்கு இது; விவசாயக் குடி மக்கள் மள்ளர்கள் என்பதைக் காட்டும் சடங்கும்கூட.
இறைவனே நாற்று நட மனைவியுடன் சேற்றில் இறங்கும் இந்த விழா, நமது பண்பாட்டின் அருமையையும், சமயச் செறிவையும் வெளிப்படுத்துகிறது எனில் மிகையில்லை.
.
குறிப்பு:

செல்வி. வி.ராஜேஸ்வரி, சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்; கோவையில் வசிக்கிறார். யோகக் கலை பயிற்றுநர்; யோகா மூலமாக சிகிச்சை அளிப்பவர்; ஸ்வதந்திரா யோகா பள்ளியின் நிறுவனர்; அமோக் ஃபுட்ஸ் என்ற உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ‘குட்டி ஸ்வர்க்கங்கள்’ என்ற மழலையர்க்கான வகுப்புகளை கானொலி முறையில் நடத்துகிறார்.
$$$