-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
55. ஆட்டுவிக்கும் ஆடலரசன்
.
ஆத்யாயாமித தேஜஸே ஸ்ருதிபதைர்-வேத்யாய ஸாத்யாய தே
வித்யானந்த மயாத்மனே த்ரிஜகதஸ்- ஸம்ரக்ஷணோத்யோகினே/
த்யேயாயாகில யோகிபிஸ்- ஸுரகணைர் கேயாய மாயாவினே
ஸம்யக்தாண்டவ ஸம்ப்ரமாய ஜடினே ஸேயம் நதிச்’ச’ம்பவே//
.
முந்தியோன் பெருவொளியோன் மறைவிரியோன் உருதரிப்போன்
வித்தைக்களி வடிவுடையோன் மூவுலகம் காத்திடுவோன்
யோகிகள் தியானிக்கும் தேவர்கள் துதித்திருக்கும்
மாயாவி தாண்டவனை சடைசாம்பனை வணங்கினனே!
.
சிவபெருமானின் நடனம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது மகான்களின் வாக்கு. அவன்தான் தானும் ஆடி, நம்மையும் ஆட்டுவிக்கிறான். அவனது ஆடல் மகிமையை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது.
.இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இருப்பவர் சிவபெருமான். அவரிடமிருந்துதான் இந்த உலகமே தோன்றுகிறது. அளவுகடந்த பெரு ஒளியாக, ஜோதி ரூபமாக அவர் இருக்கிறார். நான்மறை என்று போற்றப்படும் வேதங்களிலே விரித்துப் பொருள் கூறப்படுவர் அந்த மேலான மோனப் பரம்பொருளாகிய பரமசிவமே. அருவமாக விளங்கினாலும் மகான்களாலும் பக்தர்களாலும் மூர்த்தியாக (சிலை வடிவாக) பல்வேறு உருவங்களில் அவர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்.
.எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கக் கூடிய அறிவாகவும், ஆனந்தமயமாகவும் அவர் விளங்குகிறார். மூவுலகங்களையும் காப்பாற்றுபவர் சிவபெருமானே. யோகிகள், முனிவர்கள், சித்தர்களால் அவர் எப்போதும் தியானிக்கப்படுகிறார். தேவர்கள் அவரையே எப்போதும் துதித்து பூஜிக்கின்றனர்.
.உலகில் காணப்படுகின்ற அனைத்தும் இறைவனின் பிரதிபலிப்பே என்பதை உணராமல், ஜீவாத்மாக்கள் தம்மை வேறுபடுத்தி நினைப்பதற்கு பிரகிருதியாகிய மாயையே காரணம். இந்த மாயையை அடக்கி ஆள்பவர் அந்தச் சிவபெருமான்தான். ஆகையால் அவர் மாயாவி என்று போற்றப்படுகிறார். உலகின் பல்வேறு அசைவுகள், இயக்கங்களாகிய நடனமாடுவதில் விருப்பம் கொண்ட தாண்டவன் அவர். சடை முடி கொண்ட, மங்கள ரூபியாகிய அந்த சாம்பனை (சம்புவை) நான் பணிந்து வணங்குகிறேன்.
$$$