-எஸ்.எஸ்.மகாதேவன்

10. (பேட்டி) கண்டதையெல்லாம் சொல்கிறேன்!
இந்த அனுபவப் பதிவுகள் வரிசையில், வாகீச கலாநிதி கி. வா. ஜெகந்நாதன் அவர்களையும் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்களையும் ஒரு சில நிமிட நேரம் சந்திக்கும் பாக்கியம் ‘தியாக பூமி’ வார இதழ் ஆசிரியராக நான் பணிபுரிந்த காலத்தில் எனக்கு வாய்த்தது என்று எழுதியிருந்தேன்.
குன்றக்குடி அடிகளார் என்று எழுபதுகளில் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய ஆதீனகர்த்தர் அவர்களை சென்னையில் அவரது மயிலை திருமடத்தில் நான் பேட்டி கண்டேன். அதனால் அவருடைய பின்வரும் வாக்கியத்தை1970களில் தியாகபூமி இதழில் பதிவு செய்ய முடிந்தது: “நான் மதத்தால் ஹிந்து, மொழியால் தமிழன், தேசத்தால் இந்தியன்”. சாதாரணமாகத் தோன்றுகிறது அல்லவா? சில ஆண்டுகளுக்கு முன் அடிகளார் பற்றி கார்த்திகைசெல்வன் தயாரிப்பில் புதிய தலைமுறை டிவியின் வீடியோ ஒன்று, பெரியாரிய மார்க்சிய கருத்தியல் சாய்வு மட்டுமே கொண்டவர் என்று அடிகளார் பற்றி ஒற்றை அபிப்பிராயம் பரப்பியது. சிதம்பரத்தில் இளம்பருவத்தில் ராமகிருஷ்ண மடத்தின் துறவிப் பெருந்தகை விபுலானந்த அடிகளார், சிறுவன் ரங்கநாதன் (குன்றக்குடி அடிகளாருக்கு அவர்தம் பெற்றோர் சூட்டிய பெயர்) விரல் பற்றி அழைத்துச்சென்று சமுதாய தரிசன தீட்சை செய்து வைத்ததன் தாக்கம், மறைக்கக் கூடிய விஷயமா? தன் பேச்சையும் செயலையும் அடித்தட்டு மக்கள் பெயரால் அவர் நிகழ்த்தியது தற்செயல் என்பீர்களா?
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரத்தின் முக்கியத்துவம் வெகுவாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள காலகட்டம் இது. தொழில் வளர்ச்சியை சாக்கிட்டு, சகட்டுமேனிக்கு மரங்களை வெட்டிச் சாய்த்து ஊர் ஊராய் நடந்த நாசவேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இமயமலைச் சாரல் காடுகளில் சிப்கோ இயக்கம் (மரம் வெட்ட வருபவர்களை எதிர்த்து மரத்தைக் கட்டிப் பிடிக்கும் போராட்டம்) நடத்தி வந்த சுந்தர்லால் பகுகுணா, 1980களில் ஒருமுறை சென்னை வந்திருந்தார்; ‘த ஹிந்து’ நாளிதழில் விவசாயக் கட்டுரைகள் எழுதிவந்த செய்தியாளர் கிருஷ்ணன் இல்லத்தில் தங்கினார். அங்கு அவரைச் சந்தித்து ‘விஜயபாரதம்’ வார இதழுக்காக ஒரு நேர்காணல் எடுத்தேன். அப்போதுதான் தமிழகத்தில் சுற்றுப்பயணம் முடித்து வந்திருந்த பகுகுணா, தான் தமிழகத்தில் பரவலாகக் கண்ட காட்சியால் திடுக்கிட்டுப் போய் இருப்பதாகச் சொன்னார்.
காடு வளர்ப்பு என்ற பெயரில் யூகலிப்டஸ் போன்ற நிலத்தடி நீரை உறிஞ்சும் பணப் பயிரான மரங்களை எங்கு பார்த்தாலும் நடவு செய்திருப்பது அக்கிரமம் என்றார் அவர். நார்த்தன்மை மிகுந்த பைப்ரஸ் (fibrous) மரங்களை வளர்ப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். நேர்காணல் என்றாலே பிரதான விஷயத்தைக் கடந்து சுவாரசியமான தகவல்களும் கிடைக்கும். அப்படி ஒரு துணுக்கும் கிடைத்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன் ஸ்வீடனுக்கு அழைப்பின் பேரில் சென்று வந்திருந்தார் பகுகுணா. அந்த தேசத்தின் நாடாளுமன்றத்தில் பேச அழைத்திருந்தார்கள். இவர் பேசுவதற்கு எழுந்தார்; மூன்று முறை ‘ஓம்’ என்று பிரம்ம நாதம் எழுப்பினார். அமர்ந்திருந்த அத்தனை எம்.பி.க்களும் இரண்டாவது முறை ஓம்காரம் தொடங்குவதற்கு முன்பே எழுந்து நின்று கொண்டார்கள். இவரைப்போலவே கைகூப்பி அசைவில்லாமல் நின்றார்கள். வனவள மீட்பு போலவே மனவள மீட்பு உபதேசமும் மனிதகுலத்திற்கு பாரதம் வழங்க வேண்டும் என்பதற்கான அறிகுறி அது என்று முடித்தார் பகுகுணா.
‘விஜயபாரதம்’ வார இதழுக்காக எடுத்த இன்னொரு பேட்டி – அதை பேட்டி என்று சொல்ல மாட்டேன்; ஒரு பெரியவரின் தரிசனம் என்று சொல்லலாம் – நினைவுக்கு வருகிறது. எண்பதுகளின் மத்தியில் சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் வந்திருந்தார் அந்தப் பெரியவர். அவர் யார் என்று புரிய வைக்க வேண்டும் என்றால் முதலில் உங்களுக்கு ஒரு தகவல் பரிமாற வேண்டும். இன்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் “தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும்” (முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி சொல்லியபடியே சொல்லப் போனால்!) பரவியுள்ள இயக்கம். அதை நிறுவியவர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். நிறுவிய விதம் அலாதி. பெயர்ப் பலகை மாட்டி, தலைவர்- செயலாளர் நியமித்து சங்கம் தொடங்கி, கிளை பரப்பிய கதை அல்ல அது. நாகபுரியில் ஹெட்கேவார் வழிகாட்டலில் ஹிந்து இளைஞர்கள் தொடர்ந்து ஒன்றுகூடி ’ஹிந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும், அதுதான் நாட்டுக்கு நல்லது, உலகுக்கு மிக நல்லது’ என்று யோசித்து வந்தார்கள். சங்கமாக இயங்கத் தீர்மானித்தார்கள். சங்கத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்தார்கள். பலரும் பல பெயர்களை முன்மொழிந்தார்கள். அவர்களில் ஒருவர் ’ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ என்ற பெயரை முன்மொழிந்திருந்தார். எல்லோருமாக ஒவ்வொரு பெயரையும் பற்றி கலந்துரையாடி ’ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ என்ற பெயரை ஏற்றார்கள். இப்போது அந்த பெரியவர் நமது கதைக்குள் வருகிறார்.
சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நான் தரிசித்த அந்தப் பெரியவர் தான், ’ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ என்ற பெயரை முன்மொழிந்தவர். அப்போது சென்னையில் ஏராளமான குடும்பங்களில் தொண்டு செய்யும் ஆர்வம் ஏற்படுத்தும் இயக்கங்களை ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் மூலமாக உருவாக்கி வந்த சங்க பிரசாரகர் சிவராம்ஜி தந்த தகவலின் பேரில்தான் அந்தப் பெரியவரைத் தரிசித்து சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். தான் முன்மொழிந்த பெயர் ஏற்கப்பட்டது குறித்து பெருமைப்பட்டுக் கொள்ள மறுத்த அந்த பெரியவர், “டாக்டர் ஹெட்கேவார் என்ற மாமனிதர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுதான் என் மனதில் பதிந்த பெருமிதம்” என்று சொன்னார்.
இதைப் படிக்கும் உங்கள் மனதில் எழும் கேள்விக்கு என்னிடம் இப்போது பதில் இல்லை. அந்தப் பெரியவரின் பெயர் என்ன என்பதுதான் அந்த கேள்வி. எனக்கு மறந்து போய்விட்டது. எப்போதாவது ‘விஜயபாரதம்’ அலுவலகத்தில் பழைய இதழ்களின் பைண்டுகளை துருவினால் கிடைக்கலாம். கிடைத்ததும் சொல்கிறேன். சங்கப் பணிக்கு, அதாவது தேச சேவைக்கு சமர்ப்பணம் ஆன அந்தப் பெரியவரின் வாழ்க்கை நமக்கு இப்படிக்கூட ஒரு பாடம் கற்பிக்கிறதோ? “என் பெயர் புகழ் முக்கியமல்ல, சங்கத்தின் பெயரும் புகழும் பணியும் தான் முக்கியம்.” அதனால் என்னுடைய ஞாபக மறதியை நான் மன்னித்து விட்டதாக அர்த்தமில்லை.
துக்ளக் ஆசிரியர் ’சோ’வை நான்- அல்ல நாங்கள் – 1971ல் சந்தித்த சம்பவத்தில் இரட்டை ருசிகரம். (நாங்கள்? அன்றைய சென்னை ஆர்எஸ்எஸ் பிரசாரகர் பத்மநாபனும் நானும்) அப்போது திராவிடர் கழகம் சேலத்தில் நடத்திய ஹிந்து விரோத ஆபாச ஊர்வலம் போல சென்னையிலும் நடத்த முயற்சி நடந்து கொண்டிருந்தது. அதைத் தடுக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தில் பல பிரமுகர்களின் கையெழுத்தைப் பெற ஹிந்து இயக்க ஆர்வலர்கள் பல குழுக்களாக பலரைச் சந்தித்து வந்தார்கள். அப்படித்தான் பத்மநாபன் சென்றபோது அவருடன் நானும் சென்றேன். ஒரு ருசிகரம்: சோ முன் இருந்த தட்டில் காணப்பட்ட மினி மசால்வடை. ஒரே கவளமாக இரண்டு வடையை உள்ளே தள்ளலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த சைஸில் மசால் வடையை நான் பார்த்ததில்லை. இரண்டாவது ருசிகரம், சோ தன் பதிலில் ’வேண்டுகோள் கடிதத்தில் நான் கையெழுத்துப் போடுவதற்கு பதிலாக துக்ளக்கின் தலையெழுத்தை மாற்றும் விதத்தில் ஏதாவது செய்கிறேன்’ என்று தன் பாணியில் கோடி காட்டினார். அதுபோலவே செய்து காட்டினார். சேலம் ஆபாச ஊர்வலப் புகைப்படங்களை அடுத்த இதழில் வெளியிட்டு, கருணாநிதி அரசின் பறிமுதல் நடவடிக்கைகளை தூண்டி, எல்லா பத்திரிகைகளும் அதை பரபரப்பாக்கி விடவே, அதுநாள் வரை அறிவுஜீவிகள் பெரிதும் படித்து வந்த துக்ளக் பெயர், பட்டிதொட்டி என்பார்களே அங்கெல்லாம் பரவியது. ஹிந்துக்களின் எழுச்சி என்று வரும்போது என்னென்ன காட்சிகள் எல்லாம் காணக் கிடைக்கிறது பாருங்கள்.
$$$