சிவகளிப் பேரலை – 51

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

51. வண்டும் ஆடவல்லானும் (சிலேடை)

.

ப்ருங்கீச்சா நடனோத்கட: கரிமதக்ராஹீ ஸ்புரன்மாவா

ஹ்லாதோ நாயுதோ மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்ருத:/

ஸத்பக்ஷஸ் ஸுமனோவனேஷு ஸ புன: ஸாக்ஷான்மதீயே மனோ

ராஜீவே ப்ரமராதிபோ விஹரதாம் ஸ்ரீசை’லவாஸீ விபு://

.

பிரிங்கிக்கு நடித்து கரிமதம் குடித்து

அரிமாற்றம் மகிழ்ந்து நாதமோங்கி நிறமிகுந்து

மதனமூட்டி பூவமர விரும்பி மலைவாசியே

மனத்தாமரை ஆடிடுவாய் மாதுவண்டு நாதனே!

.

     இந்த ஸ்லோகத்தில் வண்டுக்கும் சிவபெருமானுக்கும் பொருந்தி வருமாறு சிலேடையாகப் பாடியிருக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். முதலில் வண்டு குறித்துப் பார்ப்போம்:

.ப்ருங்கி என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் பெண் வண்டு என்றும் ஒரு பொருள் உண்டு. ஆண் வண்டானது அந்தப் பெண் வண்டுக்காக – பிரிங்கிக்காக ஆடியும் ரீங்கரித்தும் அதன் மனத்தைக் கவர நடிக்கிறது. சில வண்டுகள் யானையின் மத்தகத்தில் அமர்ந்து, அங்கே சுரக்கின்ற யானையின் மதநீரை உறிஞ்சிக் குடிப்பதுண்டு. மரங்களில் உள்ள இலைகள் உதிரத் தொடங்கும் வசந்த காலத்தில்தான் பூக்கள் மலரத் தொடங்கும். ஆகையால், இலைகள் அரியப்படுவதால் (வெட்டியதைப்போல உதிர்வதால்) ஏற்படும் மாற்றத்தைக் கண்டு, தமக்கு வேண்டிய தேனைத் தருகின்ற பூக்கள் மலரும் என்பதை நினைத்து வண்டுகள் மகிழுமாம்.  வண்டுகள் ரீங்கரிப்பதால் இனிய நாதம் மேலோங்குகிறது. வண்டின் மேனி மிகுந்த கருப்பு நிறம் கொண்டது. காதல் சுவையைக் கூட்டுவதற்கு பூவைச் சுற்றும் வண்டு உதாரணமாகக் காட்டப்படுகிறது. ஆகையால் அது மதனத்தை ஊட்டுகிறது. பூக்களிலே அமர்வதற்கு வண்டு மிகுந்த விருப்பமுடையது. அழகிய மாலையிலே வண்டு தங்கியிருக்கிறது. பெண் வண்டின் காதலனாகிய அந்த ஆண் வண்டு, எப்போதும் எனது மனதாகிய தாமரையிலே வந்து ஆடி விளையாடட்டும்.

     இப்போது, சிவபெருமானை இதே ஸ்லோகம் எப்படித் துதிக்கிறது என்பதைப் பார்ப்போம்: பிருங்கி என்ற முனிவரின் விருப்பத்திற்காக நடனமாடி நடித்தவர் சிவபெருமான். யானைமுக அசுரனாகிய கஜாசுரனின் மதத்தை (வெறியை) அடக்கியவர். அரி (ஹரி) எனப்படும் விஷ்ணு பகவான், மோகினி அவதாரம் என்ற பெண் வடிவத்திற்கு மாறியதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவர் பரமசிவன். (சிவபெருமானுக்கும் மோகினிக்கும் பிறந்தவர்தான் சாஸ்தா எனப்படும் ஐயப்பன் என்பது புராணக்கதை. அதனால்தான் சாஸ்தா, ஹரிஹர புத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.) பிரணவ நாதத்துடன் ஓங்கி நிற்பவர் சிவபெருமான்.  அவரது மேனி மிகுந்த சிவப்பு அல்லது மிகுந்த வெண்மை நிறம் கொண்டது. மதனன் எனப்படும் காமதேவனை பார்வையாலேயே நெருப்பு மூட்டி அழித்தவர் சர்வேஸ்வரன். அவர், பூப்போன்ற மனத்தையுடைய தேவர்களை மிகவும் விரும்புபவர். ஸ்ரீசைலம் போன்ற மலைப் பிரதேசங்களிலே கோவில் கொண்டிருப்பவர். அப்பேர்ப்பட்ட பெருமை வாய்ந்த, பெண் வண்டாகிய பிரமராம்பிகையின் நாதனாகிய சிவபெருமான் எப்போதும் எனது மனதாகிய தாமரையிலே உவந்து வந்து ஆடி விளையாடட்டும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s