-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
47. இதயமாகிய பூந்தோட்டம்
.
சம்புத்யான வசந்த ஸங்கினி ஹ்ருதாராமேsகஜீர்ணச்சதா:
ஸ்ரஸ்தா பக்திலதாச்சடா விலஸிதா: புண்யப்ரவால- ச்ரிதா:/
தீப்யந்தே குணகோரகா ஜபவச: புஷ்பாணி ஸத்வாஸனா
ஜ்னானானந்த ஸுதாமரந்த லஹரீ ஸம்வித்பலாsப்யுந்நதி://
.
சிவத்யான வசந்தத்தே இதயமாம் பூந்தோப்பில்
பாவமாம் இலையுதிரும் பக்தியாம் கொடிவளரும்
புண்ணியங்கள் துளிர்விடும் நற்குணங்கள் அரும்பிடும்
ஜபமலரில் தேன்சுரக்கும் ஞானப்பழம் ஒளிருமே!
.
வசந்த காலத்தில்தான் மரங்களில் இருந்து இலைகள் உதிரும், பூக்கள் பூத்துக் குலுங்கும். காய் காய்த்து, பழுப்பதற்கான பருவமும் வாய்க்கப்பெறும். சிவபெருமானைப் பற்றிய தியானம் அந்த வசந்த காலத்தைப் போல பலன் தரத்தக்கது. பழம் பழுப்பதற்கு முன்பாக, இலையுதிர்ந்து, பூ அரும்பி, காய் காய்க்க வேண்டும். அதனைப் போல ஞானமாகிய பழம் பழுப்பதற்கு, பாவங்கள் உதிர்ந்து, நற்பண்புகள் மலர வேண்டும். ஓர் அரசன் ஓரிடத்தில் தங்குவதற்கு முன்பாக, அவனது பரிவாரங்களும், அரசனது பணிவிடைகளுக்கு வேண்டிய பொருட்களும் முன்கூட்டியே வந்து சேருமோ, அதுபோல இறைவனாகிய சிவபெருமான் பக்தனின் மனத்திற்குள் குடிபுகுவதற்கு முன்பாகவே, அவனது பாவங்கள் அழிந்து, நற்குணங்கள் அரும்பிவிடும் என்பதை மிக அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
சிவத்தியானமாகிய வசந்த காலம் வந்ததுமே, பக்தனின் இதயமாகிய பூந்தோட்டத்திலே உள்ள பாவங்களாகிய வேண்டாத இலைகள் உதிர்ந்துவிடும். பக்தியாகிய கொடி பாராயணம், கீர்த்தனம், அர்ச்சனை ஆகியவற்றோடு வளர ஆரம்பித்துவிடும். புண்ணியங்கள் ஒவ்வொன்றாகத் துளிர்விடத் தொடங்கும். நற்குணங்கள் அரும்பிடும். சிவாயநம என்னும் மந்திரத்தை (ஜபத்தை) உச்சரிக்கும் நற்சிந்தனையாகிய மலர் பூக்கும். அந்த மலரில் இருந்து நல்ல மணத்தையும், மகிழ்ச்சியையும், இனிமையையும் தருகின்ற தேன் சுரக்கும். இதன் தொடர்ச்சியாக, ஞானமாகிய கனியும் பழுத்துப் பிரகாசிக்கும்.
$$$