இலக்கிய தீபம் – 13

-எஸ்.வையாபுரிப் பிள்ளை

13. காவிரிப்பூம் பட்டினம்

பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன
செழுநகர்

என்று நக்கீரர் அகநானூற்றில் (205) பாடுகிறார். சங்கப் பாட்டுக்களில் பட்டினப்பாலையைத் தவிர, இது ஒன்றே காவிரிப்பூம் பட்டினத்தை அப் பெயரால் நேர்படக் குறிப்பது. இப்பட்டினத்திற்குரிய பிறிதொரு பெயர் புகார் என்பது. இப்பெயரை

மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற்
செய்யுள் நாரை யொய்யு மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை யயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகார்ச் செல்வ

எனப் பதிற்றுப்பத்தில் (73) அரிசில் கிழாரும்

பூவிரி யகன்றுறைக் கணைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேரியாற்று அயிர்கொண் டீண்டி......
ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய.....மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான்தோய் புரிசைச்
சிகரந் தோன்றார் சேணுயிர் நல்லிற்
புகாஅர்

என அகநானூற்றில் (181) பரணரும்

கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடுஞ்சூன் தருகுவென் நினக்கே

என அகநானூற்றில் (110) போந்தைப் பசலையாரும் குறித்துள்ளார்கள்.

காவிரிப் பேராறு கடலிலே புகுகின்ற இடத்திற்குப் புகாஅர் என்று பெயர். இவ்விரண்டு பெயர்கள் மட்டும்தான் சங்க இலக்கியத்திற் பயின்று வருவன. 8-ம் நூற்றாண்டின் இறுதியிலே காகந்தி என்ற பெயரொன்றும் இதற்கு உளதாயிற்று. இப் பெயர் வரலாற்றைக் குறித்து,

மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதுஒளி நீயெனக்
கன்னி யேவலிற் காந்த மன்னவன்
இந்நகர் காப்போர் யாரென நினைஇ......
காறை கணிகை தனக்காம் காதலன்
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன்
ககந்த னாமெனக் காதலிற் கூஉய்
அரசா ளுரிமை நின்பா லின்மையிற்
பரசு ராமன்நின் பால்வந் தணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தலின் காகந்தி யென்றே
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு

என மணிமேகலை (22,25-38) விளக்குகின்றது. ககந்தன் என்பவனால் காக்கப்பட்டமையால் காகந்தி எனத் தத்திதப் பெயர் வழங்கிற்றாம். இவன் தந்தையாகிய காந்த மன்னவனைக் குறித்தேனும், இக் ககந்தனைக் குறித்தேனும், இவ்வரலாறு குறித்தேனும் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தும் வாராமையால் இது பிற்பட்டெழுந்த ஒரு பௌராணிக வரலாறு என்பது தெளிவு. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகட்குப் போலும் இக்கதை தெரிந்துள்ள தெனற்குச் சான்று இல்லை. ஆனால் கி.பி. 10-ம் நூற்றாண்டளவில் தோன்றிய திவாகரத்தில், இப்பெயர் புகுந்து விட்டது.

காகந்தி புகார் காவிரிப்பூம்பட்டினம்
என்பது திவாகரம் (5,111).

இது போன்றதொரு கதை காவிரியாற்றுக்கும் கற்பிக்கப்பட்டுள்ளது. கவேரர் என்ற ரிஷி பிரம தேவரைக் குறித்து அரிய தவஞ்செய்து, அவரருளால் விஷ்ணு மாயையைத் தம் புத்திரியாக அடைந்து முக்தி பெற்றனர். பின்பு அக் கன்னி பிரமதேவர் கட்டளையின்படி நதி வடிவு கொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி யென்றும் பெயர் பெற்றதாம். இது காவேரி மாஹாத்மியத்தின் 23-ம் அத்தியாயத்தால் தெரிகிறதென்பர்.

மணிமேகலையும்

கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக்கனி மூதூர் (9,52-53)

எனக் காவிரிப்பூம் பட்டினத்தைக் குறித்துள்ளது. காவிரியென்ற பழம்பெயரை ‘சாபெரிஸ்’ என டாலமி என்ற யவன ஆசிரியர் குறித்தனர். இப்பெயரையே திரித்துக் காவேரியென மக்கள் வழங்கினர். இங்ஙனம் திரிந்த பெயரைச் சிலப்பதிகாரமும்

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லது ஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி! காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி! காவேரி!

என இனிதாக அமைத்துப் பாடிற்று. பின்னர் இப்பெயரைத் தத்திதமாகக்கொண்டு, நதிகளை மகளிராகவும் தாயராகவும் கூறும் வழக்குப்பற்றிக் காவேரியை ஒரு புத்திரியாக்கி, அவளுக்குத் தந்தையாகக் கவேரர் என்ற மகரிஷியைப் பௌராணிகர்கள் சிருஷ்டித்துவிட்டனர். காவிரி நதிக்குப் பொன்னி என்ற பெயரொன்றும் உளது. இது

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே

என கலிங்கத்துப் பரணியிலும் (581),

பொன்னிப் புகார்முத்தி னம்மனையும் தென்னாகை
      நன்னித் திலத்தின் நகைக்கழங்கும்

என விக்கிரம சோழனுலாவிலும் (118),

பொன்னி நாட்டுவமை வைப்பைப்
      புலங்கொள நோக்கிப்போனார்

எனக் கம்ப ராமாயணத்திலும் வருதல் காணலாம். இப்பெயரும் சங்க இலக்கியங்களிற் காணப்படாத தொன்றாம். நாவுக்கரசர் (6,62,6)

திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
      திருவானைக் காவிலுறை தேவே வானோர்
அரையா உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
      அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே

என அருளிச் செய்துள்ளார். இவர் காலமாகிய கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கு முன் இப்பெயர் வழங்கியதற்குச் சான்றில்லை. இப் பெயர்,

மலைத்தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும் (பட்டினப்.6-7)

என்ற காரணத்தால் பிறநதது போலும்.

இப் பெயர் எந்தக் காலத்ததாயிருப்பினும், உண்மையான காரணம்பற்றி எழுந்ததென்பதில் ஐயமில்லை. காவிரி பரந்தோடிய பிரதேச முழுவதும் செல்வமும் அழகும் நிரம்பி இன்பத்தின் விளைநிலனாய் அமைந்துவிட்டது. இது முற்காட்டிய நக்கீரர் முதலினோரது செய்யுட்களால் விளங்கும். இன்பத் துறையிலே மக்கள் வழுவி விடாமற் பாதுகாத்தற்குத் தெய்வமொன்றும் நின்று எச்சரித்து விளங்குவதாயிற்று (அகம். 110). இப் பேராற்றினால் விளைந்த செல்வத்திற்கு ஓர் அளவுகோலாய்ப் பண்டைக் காலத்தில் நிலவியது காவிரிப்பூம் பட்டினம். அக் காலத்தில் பட்டினம் என்று சொன்னாலே காவிரிப்பூம் பட்டினத்தைத் தான் குறித்தது. இதனாலே பட்டினப்பாலை என அடைமொழியின்றியே வழங்கினர். தற்காலத்தில் பட்டணம் என்றால், சென்னையைக் குறிக்கிறதல்லவா? இதுபோல.

இப் பட்டினம் கடலோடு காவிரி சங்கமமாகுமிடத்தில் இருந்தது. சீகாழிக்குத் தென் கிழக்காகச் சுமார் பத்துமைல் தூரத்திலுள்ள ஓர் மணல் மேடு, இப்பட்டினம் இருந்த இடமாகலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இப்பொழுது அது முற்றும் மறைந்து விட்டது. மறைந்த காரணம் பற்றி மணிமேகலையில் (25, 178- 200) ஒரு வரலாறு கூறப்படுகிறது.

நாக நாட்டு அரசனது மகள் பீலிவளை என்பவள் நெடுமுடிக் கிள்ளியைக் காந்தர்வத்திற் கலந்துகூடிப் பின்பு பிரிந்து போயினள். அவள் கருவுற்றுப் பெற்றெடுத்த மகனோடு ஒரு நாள் மணிபல்லவத்தில் புத்த பீடிகையை வலஞ்செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு கம்பளச் செட்டியின் மரக்கலம் வந்து தங்கியது. அச்செட்டியின் வசம் தனது மகனை ஒப்புவித்து நெடுமுடிக்கிள்ளியிடம் கொண்டு செல்லச்செய்தாள். அரசனது புதல்வனை அழைத்துவரும் வழியில் மரக்கலம் உடைந்து போய் விட்டது; புதல்வனும் கடலில் அமிழ்ந்து விட்டான். இச் செய்தியை நெடுமுடிக்கிள்ளிக்கு அறிவிக்க, கிள்ளியும் ஆறாத்துயரம் அடைந்து கானலிலும் கடலிலும் கரையிலும் தன் புதல்வனைத் தேடிக் கொண்டிருந்தான். இம்முயற்சியில் இந்திரவிழா நிகழ்த்த மறந்துவிட்டனன். மணிமேகலா தெய்வம் இதனைப் பொறாது, சாபமிட்டனள். இச்சாபத்தின்படி காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதாம். *1

இந்நகர் இருந்த இடத்தைக் கண்டுபிடிப்பதில் பல இடையூறுகள் உள்ளன. அவற்றுள் அதி முக்கியமானது காலாந்தரத்தில் காவிரியாற்றின் கதியானது மாறிவிட்டமை. கடலோடு சங்கமமாகுமிடத்தில் இப்பொழுது இந்நதி மரக்கலம் வந்து செல்லும்படியாக அகன்று காணப்படவில்லை. அணை கட்டியதன் விளைவாக, கொள்ளிடம் என்ற கிளை நதியொன்று பிரிந்து விட்டது. பிரிவுக்கு முன்னிருந்த பேராற்றின் நீர் இப்பொழுது வாய்க்காலளவாக மிகச் சுருங்கிக் கடலிற் பாய்கின்றது. இதனால் பட்டினம் இருந்த இடம் தெரிவது அரிதாயுள்ளது. தொன்மை ஆராய்ச்சியாளர் இப் பிரதேசத்தில் அகழ் பரிசோதனையொன்று நிகழ்த்தினாலன்றி உண்மையறிய வேறு வழியில்லை.

நகரின் வைப்பிடம் நம்மால் அறியமுடியவில்லை யென்றாலும், அங்கே நிகழ்ந்த வாழ்க்கை நெறி முதலியவை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த ஒரு சான்று அகப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நாம் அதிருஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். பட்டினப்பாலை என்ற சங்கப்பாட்டு முன்னரே குறிப்பிடப்பட்டது. இது பத்துப் பாட்டினுள் ஒன்பதாவதாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. 301 அடிகளையுடையது. பொருள் ஈட்டுதற் பொருட்டு வேற்று நாட்டிற்குச் செல்லத் தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கி, தலைவியைப் பிரிந்து, ‘முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரேன்’ எனச் செலவழுங்கிக் கூறுவதாக, சோழன் கரிகாற் பெருவளத்தானை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. பிரிவைப் பற்றிக் குறிக்கும் 5 அடிகள் ஒழிய ஏனை 296 அடிகளும் காவிரியின் பெருமையையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும் கரிகாலனது வெற்றித் திறத்தையும் விரித்துக் கூறுகின்றன.

இப் பாட்டிற்குப் பரிசிலாக, 16 கோடிப் பொன் அளிக்கப் பெற்றதெனக் கலிங்கத்துப் பரணி தெரிவிக்கின்றது.

ததடு நீர்வரால் குருமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொ டாறுநூ றாயிரம் *2 பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும் (185)

என்பது அந் நூலில்வரும் தாழிசை. வேறோர் அரிய செய்யுள் பட்டினப்பாலையைக் குறிக்கின்றது.

வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும் 
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப் 
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று 
நெறியால் விடுந்தூண் பதினாறுமே அங்கு நின்றனவே.

இது திருவெள்ளாறையில் ஒரு சாசனத்தில் காணப்படுகின்றது; பட்டினப்பாலையை அரங்கேற்றுதற்குப் பதினாறு கால் மண்டபமொன்று அமைக்கப் பட்டிருந்ததென்றும், அதன்கண் உள்ள பதினாறு தூண்களொழிய மற்றை அரண்மனைத் தூண்களனைத்தையும் செயமாறன் என்ற பாண்டியன் ஒரு படையெடுப்பில் அழித்து விட்டனன் என்றும் இச்செய்யுள் புலப்படுத்துகிறது. பட்டினப்பாலைக்கும் பதினாறு என்ற எண்ணிற்கும் ஒரு தொடர்பு கற்பிக்கப் பட்டிருந்ததென்பது மேல் இரண்டு செய்யுட்களாலும் விளங்கும் [*3]. இந் நூலைப் பாடிய புலவர் உருத்திரன் என்பவரது புதல்வரென்பதும் கண்ணன் என்ற இயற் பெயரினரென்பதும் தந்தையின் பெயரொடு மகன் பெயரைச் சார்த்திச் சொல்லும் முற்கால வழக்கினாலும் சாசனச் செய்யுளாலும் அறியக் கிடக்கின்றன. குறுந்தொகையில் 274ம் செய்யுளைப் பாடியவர் இந்த உருத்திரனார் என்று கருதலாம் இப்புலவர்களது காலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் என்று கொள்ளலாம்.

உருத்திரங்கண்ணனாரது பாடலின்படி, காவிரிப்பூம் பட்டினத்தையும் அதில் கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த வாழ்க்கையையும் நாம் சித்திரிக்க முயலுவோம்.

காவிரியாறு, கிரகங்கள் நிலைதிரிந்து வானம் வறண்டு மழை பெய்யாது பொய்த்து விட்டாலும், தான் பொய்யாது என்றும் நீரோடிக் கொண்டிருக்கும். இந் நதியால் வளம் மிகுந்து செழிப்புற்று விளங்கும் சோணாட்டிலே சிறிய பல ஊர்கள் ஆற்றின் கரையில் எங்கும் நிரந்து காணப்படும். இவ்வூர்களில் அகன்ற கழனியிலே நீர் வளத்தால், பொன் கொழித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும்படி நெற்பயிர் ஒருநாளும் குன்றாது விளைந்து கொண்டிருக்கும். இங்கே கரும்பும் மிகுதியாகப் பயிர் செய்யப்படுகிறது. கரும்பு ஆலைகளிலிருந்து எழும் தீயின் வெப்பத்தால் நீர் நிலைகளிலுள்ள ஆம்பல் முதலிய பூக்கள் வாடி நிற்கும். வயலும் குளமும் உள்ள இந்த விளை நிலத்திலே, எருமைக் கன்றுகள் நெற்கதிரைத் தின்று வயிறு புடைத்துத் தளர்ந்து நிழலிடங் கண்டு உறங்கிக் கொண்டிருக்கும். நிழலின் பொருட்டு வெகுதூரம் செல்ல வேண்டுவதுமில்லை. அடுத்துத் தானே காய்கள் காய்த்துக் குலைகுலையாய்த் தொங்கும் தென்னையும், குலை வாழையும், காய்கள் நிரம்பிய கமுகும், நறிய மணம் வீசும் மஞ்சளும், மாமரங்களும், பனைமரங்களும், சேம்பு முதலிய செடிகளும் நிழல் தந்து நிற்கின்றன. கழனிகளினின்று சிறிதகன்று மக்கள் வாழும் ஊர்ப்பகுதி யுள்ளது. இங்குள்ள முற்றத்திலே உலர்வதற்கு நெல் பரப்பி யிருக்கும். அதனைக் கவர்ந்துண்ண வரும் கோழிகளை வெருட்ட, பெண்கள் தங்கள் மகரக்குழைப் பூணினை எறிவார்கள். சிறுவர்கள் அங்கே உருட்டிக் கொண்டிருக்கும் விளையாட்டு-வண்டிகளை இப்பூண்கள் வழிவிலக்கித் தடுக்கும்.

நாட்டின் அகத்துள்ள ஊர்கள் இங்ஙனமாக, இவற்றின் இயல்புக்கு முற்றும் வேறுபட்டதொரு காட்சியைக் கடற்கரையிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் நமக்கு அளிக்கின்றது. முதன்முதலில் நமது கண்ணிற் படுவது அங்குள்ள கழியில் (தற்காலத்தார் காயல் என்பார்) வரிசையாகப் படகுகள் கட்டிவிட்டிருப்பது. இவை தாமணியில் நிறுத்திய குதிரைப் பந்திபோல இருக்கின்றன. உப்பையேற்றிச் சென்று விற்று, நெல்லை வாங்கிக்கொண்டு இவை வருவன. சிறிது உள்ளாக, மனவெழுச்சி தரும்படியான புதுப் புது விளைவுகளைத் தரும் தோப்புக்களும் பூஞ்சோலைகளும் உள்ளன. அடுத்து உள்ளாகக் காணுவன பொய்கையும் ஏரியும். பொய்கையும் கரையும் பார்த்தால், மேகம் நீங்கிய பெரிய வானில் முறையே சந்திரனும் மக நட்சத்திரமும் போலத் தோன்றுகின்றன. புலவர் ஆகாயக் காட்சிகளை அனுபவித்த திறம் இதில் தெரிகிறது.

அன்றியும் இப் பொய்கை பல நிறமுள்ள வாசனைப் பூக்களால் ஒளியுடன் விளங்குகிறது. ஏரிகளோ என்றால் இவை இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தரக்கூடியன என்று மக்கள் கருதினார்கள். இப் பொய்கை முதலியவற்றை அடுத்துப் பின்பாக லக்ஷ்மீகரம் பொருந்திய மதில் போர்க் கதவோடு நிற்கின்றது. இக்கதவிலே, சோழர்க்குரிய புலியடையாளம் அமைந்துள்ளது. மதிலைக் கடந்து உட்புகுந்ததும் புகழும் அறமும் ஒருங்கே நிலைபெறும் அன்ன சத்திரம் எதிரே நிற்கின்றது. இங்கே சோற்றை வடித்த வடிகஞ்சி ஆறுபோல் பரந்தொழுகுகிறது; காளைகள் ஒன்றோடொன்று முட்டிச் சண்டையிடுதலால், அக் கஞ்சியாறு சேறுபடுகிறது; இச்சேறும், ஊர்திகள் அடிக்கடி அங்கும் இங்கும் ஓடுதலினாலே, காய்ந்து தூளாகி, அடுத்துக் காணும் மாளிகையின் சித்திரம் எழுதிய சுவர்களின்மீது படிந்து, அம்மாளிகை புழுதியாடிய யானையை ஒக்கும்படி செய்கிறது.

அடுத்து எருத்துச் சாலைகள் உள்ளன. இச் சாலைகளின் முற்றத்தில் சிறிய குளங்கள் காணப்படுகின்றன. அடுத்து உள்ளாக, சமணர்களும் பௌத்தர்களும் தவம் செய்யும் தவப்பள்ளிகள் இருக்கின்றன. அன்றியும் முனிவர்கள் வேள்வி யியற்றும் இளஞ் சோலைகளும் இடம் பெறுகின்றன. அங்குள்ள குயில்கள் வேள்விப் புகையை வெறுத்து, பெடையோடு பறந்து சென்று, வாசலிற் பூதங்கள் காத்து நிற்கும் காளி கோயிலை அணுகி அங்கே ஆண்டில் முதிர்ந்த முது மரங்களிலே புறாக்களோடு ஒட்டுக்குடி யிருக்கும். இம் முதுமரங்கள் நின்ற இடங்கள் போர்பயிலும் இடமாகவும் பயன்பட்டன. அகன்ற மணல் மேட்டிலே பெருங்கிளையினராகிய சுற்றத்தாரோடு பரதவப் பிள்ளைகள் இறாமீனின் சுட்ட ஊனைத் தின்றும் வேக வைத்த ஆமை இறைச்சியை உண்டும் அரும்பு மலரைத் தலையில் வேய்ந்து ஆம்பற் பூவைச் சூடியும் மகிழ்வர். பின்னர் இப்பிள்ளைகள் பொது வெளியிடங்களிலே, நீல ஆகாயத்தில், நட்சத்திரங்களோடு தொன்றும் கிரகங்களைப் போல, பலராகக் கூடி மற்போரும் படைக்கலப் போரும் புரிவர். ஒருவருக்கொருவர் பின்னிடையாது பின்னும் போரில் மனம் வலியராய், பனைகளும் பன்றிக் குட்டிகளும் கோழிகளும் உறைக்கிணறுகளுமுள்ள புறச்சேரியிலே ஆட்டுக்கிடாய்ப் போரும் சிவற்போரும் நிகழ்த்தி விளையாடுவர். இப்புறச் சேரியிலுள்ள குடிசைகளின் தாழ்ந்த கூரைகளோடு தூண்டிற் கொம்புகளைச் சார்த்தி வைத்திருக்கும். இது நடுகல்லைச் சுற்றிக் கிடுகு நிரைத்து வேலை ஊன்றி வைப்பது போன்றுள்ளது. இக் குடிசைகளின் நடுவிலே, மணற் பரப்பின்மீது, நிலவு நடுவிற்சேர்ந்த இருள்போல வலையைவிரித்து உலர்த்தியிருப்பர். இம்மணல் முற்றத்திலே, தாழையின் கீழுள்ள வெண்டாளி மலரின் மாலையை யுடையராய், சுறவுக் கொம்பு நட்டு வீட்டோடு சேர்த்திய தெய்வத்தின் பொருட்டு, பௌர்ணமியன்று தாழைப்பூவை அணிந்தும், பனங்கள்ளை யுண்டும் பரதவர்கள் கடலில் மீன் வேட்டத்திற்குச் செல்லாது பெண்களோடு உண்டாடி மகிழ்வர்.

பரதவர்கள் இவ்வாறாக, பட்டினத்திற் செல்வக் குடியிலுள்ள பெண்கள்,

மாமலை யணைந்த கொண்மூப் போலவும்
தாய்முலை தழுவிய குழவி போலவும் (95-96)

காவிரியாறு கடலோடு கலக்கும் சங்கமத் துறையிலே தமது கணவர்களோடு, தீவினை நீங்க நீராடியும், பின் உவர்ப்பு நீங்க நன்னீரில் மூழ்கியும், நண்டினைப் பிடித்து வருத்தியும், அலைநீரைக் காலால் உழக்கியும், பொம்மையமைத்தும், இந்திரிய நுகர்ச்சிக் குரியவற்றில் ஈடுபட்டு மயங்கி நின்றும் நீங்காத காதலோடு பகலில் விளையாடுவர். இரவுப் பொழுதிலே மாடத்திலே கணவரோடு கூடி யின்புற்ற மங்கையர் தாம் முன்பு உடுத்திருந்த பட்டினை நீக்கி மெல்லிய துகிலை யுடுத்தும், கள்ளினை நீக்கி இனிய மதுவினை யுண்டும், தமது மாலையைக் கணவரும் கணவர் கண்ணியைத் தாமும் மயங்கி யணிந்தும், ஆடல் பாடல்களிற் களித்தும், நிலவுப் பயனை நுகர்ந்தும் நெடுநேரம் போக்கி, கடை யாமத்திலே கண்துயில்வர். இக்கடையாமத்தில் மாடங்களில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை இரவின் முற்பொழுதில் படகில் ஏறிக் கடல் மீது சென்ற பரதவர்கள் வினோதார்த்தமாக எண்ணி நோக்குவர். அன்றியும் இக் கடையாமத்திலே காவிரியின் வெள்ளிய மணல் மேட்டிலே துயிலால் கண்ணயர்ந்து கிடந்து, பின் கடலருகுள்ள பெரிய பரதவர் தெருவில் அரசனுக்குரிய பொருளைக் காக்கும் பழம் புகழுடைய காவலாளர்கள், சூரியனது குதிரைகள் போல ஒரு நாளும் தளர்வின்றிச் சுங்கங் கொள்ளுவார்கள். இவ்வாறு சுங்கங் கொள்ளுவதனால், வணிகப் பண்டம் குறைபடுவதில்லை.

வான்முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர்கடற் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல (126-128)

நீரினின்று வந்த பொருள்களை நிலத்திற் பண்டகசாலையில் ஏற்றவும், நிலத்தில் பண்டகசாலையிலுள்ள பொருள்களை நீரிற் போக்கவும், அளந்து முடியாத பல்வேறு பண்டங்களும் வரம்பு தெரிய முடியாதபடி ஒன்றொடொன்று கலந்து வந்து குவிந்துள்ளன. இவற்றின் பொதி மூடைகளை மதிப்பிட்டு, சுங்கக் காவலர் புலிப்பொறி யிடுவித்து முற்றப் பரப்பிலே போர் போல அடுக்கிவைப்பர். இப் பொதி மூடைகளின் மீது நாயும் ஆட்டுக் கிடாயும் ஏறிக் குதித்து விளையாடும். முற்றப்பரப்பினை அடுத்து, படிகள் நெருங்கி நெடிதாய் அமைந்த ஏணிகள் சார்த்தின சுற்றுத் திண்ணையும் பல கட்டுக்களும் திட்டிவாசலும் பெரிய வாசலும், பெரிய இடைகழியுமுள்ள வானளாவி உயர்ந்த மாடங்கள் தோன்றுவன. நீர் உட்புகாதபடி உயர்ந்த தளத்தோடு கட்டிய மாடங்கள் ஆதலினால், சுற்றுத் திண்ணையும் ஏறிச்செல்வதற்கு நெடிய ஏணியும் அவசியமாயின.

இம் மாடங்களிலே அழகு மிக்க செல்வ மகளிர்கள் பலகணி வாயிலாகக் கைகூப்பி நிற்கின்றனர். மாடஙகளின் மீதிருந்து கூப்பிய கைகள் உயர்ந்தோங்கிய மலைமீது காந்தள் மலர் குவிந்திருப்பது போன்றுள்ளன. எதனை நோக்கிக் கை கூப்புகின்றனர்? அடுத்துச் செல்லும் அங்காடி வீதியிலே வெறியாடும் மகளிரிடத்து ஆவேசித்து நிற்கும் முருகக் கடவுளை நோக்கியே யாகும். இன்னும் அவ் வீதியிலே குழலிசைக்கின்றது; யாழ் ஒலிக்கின்றது; முழவு அதிர்கின்றது; முரசு முழங்குகின்றது; திருவிழா நிகழ்ந்த வண்ணமா யிருக்கின்றது. அன்றியும் இல்லுறை தெய்வங்களுக்கு எடுத்த கொடிகள் ஒருபால்; ஒருபால், கான்யாற்றுக் கரை மணலிலே கரும்பின் பூக்கள் மேலோங்கி நிற்பதுபோல, நெற்குவித்து வைத்த களஞ்சியத்தின் மீதும் தாழிட்டுக் காத்துவைக்கும் வேறு பல பண்டங்களின் களஞ்சியத்தின் மீதும் அரிசிப்பலி சிதறி, சாணத்தால் மெழுக்கிட்டு, கொம்புகள் நட்டுக் கவித்த கிடுகின் மேலாகவுள்ள துகிற் கொடிகள்; பல கேள்வித் துறைகளிலும் முழுதும் வல்ல நல்லாசிரியர்கள் வாது செய்யக் கருதி யெடுத்த கொடிகள் ஒருபால்; கட்டுத் தறிகளை இளக்க முயலும் யானைகளைப் போல, புகாரின் முன்றுறையிலே அசைந்து நிற்கும் கப்பலின் பாய்மரத்து மேலாக அமைத்த கொடிகள் ஒரு பால்; ஒரு பால் மீனை அறுத்துப் பின் இறைச்சியையும் அறுத்து, அவ்விரண்டினையும் பொரிக்கும் ஓசையினையுடைய முற்றமும் மணலைக் குவித்து மலர் சிதறித் தெய்வத்திற்குக் கொடுக்கும் பலியினையுடைய வாசலும், அருகாக, சிறப்புடைக் கள் விற்கும் இடங்களும், இவற்றில் அடையாளமாகக் கட்டிய கொடிகள். இங்ஙனம் பலவகைக் கொடிகளும் விரவி, பல நிறங்களுடைய பெருங் கொடிகளின் நிழலிலே சூரியன் கதிர் நுழையாதவாறு பட்டினத்தின் எல்லையிடம் உள்ளது.

இந்த எல்லைப்புறத்து, தேவர்களது பாதுகாவலோடு விளங்கும் அகன்ற மறுகுகளிலே

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துஉ ணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி (185-192)

செல்வம் தலை தெரியாது கலந்து கிடக்கும். குதிரைகள் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டன. மிளகு பொதிகள் படகுகளிலே காற்றாற் செலுத்தப்பட்டு வந்தன. வடதிசையினின்று மணியும் பொன்னும், மேல்திசையினின்று சந்தனமும் அகிலும், தெற்கிலிருந்து முத்தும் கீழ்த் திசையினின்று பவளமும் வந்து குவிந்தன. கங்கையிலிருந்தும் காவிரியின் முற்பகுதியிலிருந்தும் சிங்களத்திலிருந்தும் பலவகைப் பொருள்களும் வந்து நெருங்கின. இவற்றால் கடல் வழியாகவும் நில வழியாகவும் வாணிகம் மிகுதியாய் நடைபெற்று வந்தமை அறியலாம்.

இவ் வாணிக மக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்தினர்? கருமமே கண்ணாகக் கொண்டவர்; துன்பத்தைச் சிறிதும் பொருட்படுத்தியவர்களல்லர். கடல்மீது கப்பலிலும் நிலத்தில் சென்ற சென்ற இடங்களிலும் க்ஷேம உணர்ச்சியோடு இனிதாகத் துயின்று கழிப்பர். கொலையை முற்றும் நீக்கியவர்கள்; ஆதலால் மீன்கள் வலைஞர் முற்றத்திலும், மிருகங்கள் இறைச்சி விற்பார் மனையிடத்தும், பகை யுண்டென்பதையே கருதாது இனம் பெருகி வாழ்ந்தன. இங்ஙனமே களவையும் முற்றும் நீக்கியவர்கள். தெய்வ பக்தியும் ஆன்றோர் ஆசாரமும் மிக உடையவர்கள; எனவே தேவர்களைப் பூசித்தும், வேள்வியில் ஆகுதி கொடுத்தும், பசுக்களையும் எருதுகளையும் பேணி வளர்த்தும், அந்தணர்க்கு உண்டாம் புகழை நிலைநிறுத்தியும் வந்தனர். அன்றியும் தரும சிந்தை நிரம்பியவர்கள்; ஆதலால் அரிசியும் கறியும் யாவர்க்கும் உதவி வந்தனர். இவர்கள் புண்ணியம் புரிவதில் எந்நாளும் தவறியதில்லை; அருளுடனே இல்லறத்தில் வாழ்ந்தனர். மேலும் நீதியிலும் நடுவு நிலையிலும் பற்றுள்ளவர்கள். இவர்களது நடுவு நிலைமைக்கு ஒப்பாக உழவர்களுடைய நுகத்தடியின் பகலாணியைத்தான் சொல்லுதல் வேண்டும். இன்னும் உண்மையைக் கடைப் பிடித்தவர்கள். ஆதலால் பழிக்கு அஞ்சி உண்மையையே பேசுவார்கள். தமது வாணிகத் துறையிலும் நன்னெறியையே மேற்கொண்டவர்கள்; ஆதலால் தம்முடையவும் பிறவுமாகிய பலசரக்குகளை விலையொப்பத் தெரிந்து தாம் கொள்ளும் சரக்கைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகையாகக் கொள்ளாது, கொடுக்கும் சரக்கைத் தாம் வாங்கும் பொருளுக்குக் குறையாகக் கொடாமல், இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லி வாணிகஞ் செய்து பொருள் ஈட்டுவர். இத்தகையவர்கள் [*4] குடியிருக்கும் மனைகள் நெருங்கியமைந்த நிலையாய் வாழும் இவ் வணிகர்களே யன்றி, இப்பதியில் பல்வேறு மொழிகளைப் பேசும் யவனர், சீனர் முதலிய பல அன்னிய இனத்தவர்கள் பலவேறு தேசங்களிலிருந்து வாணிகத்தின் பொருட்டுத் திரளாக வந்து இங்கே கலந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது உறைவிடம் பல பல சாதிகளாய் உயர்ந்த அறிவு வாய்ந்த சுற்றத்தினையுடைய விழா எடுக்கும் மூதூரார் இங்கே வந்து குடியேறியது போல உள்ளது.

இச்செல்வம் நிரம்பிய பட்டினத்தை ஆட்சி புரிந்தவன் யாவன்? சோழன் திருமாவளவன். இவன் கரிகாற் பெருவளத்தானென்று உரைகாரர் குறிப்பிடுவர்.

இப்பேரரசனை இளமையில் பகைவர்கள் சிறைப்படுத்தி விட்டனர். சிறைச்சாலையில் புலிக்குட்டி கூட்டில் வளர்ந்ததுபோல இவனது பெருமை வயிரம் பாய்ந்து முற்றியது. குழியில் அகப்பட்ட ஆண் யானை சும்மா நிற்குமா? கரையைக் குத்திக் குழியை மேடிட்டு நிரப்பி வெளியேறித் தனது பிடியானையை அடையுமல்லவா? அதுபோல, நுட்பமாக ஆராய்ந்து உபாயத்தைத் தெரிந்து, பகைவர்களுடைய திண்ணிய காவலைக் கடந்து வாட்போர் புரிந்து, பரம்பரையாய் வந்த அரசுரிமையை இவன் எய்தினன். இதனோடு மகிழ்ந்து இவன் அமைந்துவிடவில்லை. யானையும் புரவியும் விரர்களும் மடிந்து வீழவும், பருந்துகள் ஆகாயத்தில் பறந்து உடன் செல்லவும், முரசு முழங்கவும், பூளையோடு உழிஞைப் பூவைச் சூடிப் போர்விரும்பிச் சென்றனன். உழிஞைப் பூ முதலியவற்றை இவன் சூடியது நெருங்கிக் கிடக்கும் குன்றின் மீது புதர் பூத்து நிற்பது போல இருந்தது என்று ஆசிரியர் நகைச்சுவைபடக் கூறுகிறார். இங்ஙனம் சென்று பகைப் புலன்களை அழித்து பகைவரது தூசிப் படையையும் தொலைத்து மேலும் மிகச் சென்று மருத நிலத்துக் குடிகளை யோட்டினன். அன்றியும் முதலைகள் செருக்குற்றுத் திரிந்த பொய்கையில் குவளையும் நெய்தலும் நெருங்கிக் கிடந்தன. அயலிடத்திலே கரும்பும் செந்நெற் பயிரும் முன் ஓங்கி வளர்ந்திருந்தன. இப்பொழுது செருந்தி முதலியன மிக வளர்ந்து நீரற்று வயலும் வாவியும் ஒன்றுபோலாகி, கலை மானும் பிணைமானும் குதித்து வாழ்ந்தன.

முன்பு பகை அரசர்கள் சிறைப்பிடித்து வந்த மகளிர்கள் நீராடி அந்திப் பொழுதில் நந்தா விளக்கேற்றி மெழுகி மலர் தூவிய தறிகள் அமைந்த ஊரம்பலத்திலே ஊர்க்குப் புதியராய் வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். இப்பொழுது தூண்கள் சாயும்படி உராய்ந்துகொண்டு ஆண் யானையும் பெண் யானையும் கூடிவாழ்ந்தன. முன்பு மக்கள் வாசனைப் பூக்களைத் தூவி, தெருவிலே கூத்தரது முழவோடு கூடிய யாழிசைகேட்டு அனுபவிக்கும் பெரு விழா நிகழ்ந்தது. இப்பொழுது அங்கு விழா நீங்கி அச்சம் பொருந்திய வெற்றிடமாகி விட்டது. யாழோசைக்கு மாறாக, நரியின் முழக்கமும் கூகையின் அழுகுரலும் ஆண்டலைப் புள்ளின் கூப்பிடு குரலுமே கேட்கலாயின. எங்கும் நெருஞ்சியும் அறுகம்புல்லும் பரவியிருந்தன. ஆண் பேய்களோடு பிணந்தின்னும் பெண் பேய்கள் தலைமயிரைத் தாழ்த்திவிட்டு நெருங்கிருந்தன. முன்பு மாடத்தின் நெடுங்கடை வாசலிலே நெருங்கியிருந்து விருந்தினர் உண்டொழியாத அட்டிலிடத்தே வெள்ளிய சுவர்களையுடைய வீட்டுத் திண்ணையிலிருந்து பைங்கிளி இனிதாகச் சொற் குழறிக் கொண்டிருக்கும். இப்பொழுது பல்வளம் மிகுந்த இச்செழு நகரிலே வளைந்த வில்லையுடைய செருப்புத் தரித்த வேடர்கள், உடுகின் ஓசைமிக, கூடிக் கொள்ளையிட்டபின் வெறுங் கூடாய்க் கிடக்கும் நெற் களஞ்சியத்தினுள் கூகை நடுப்பகலிற் கூவிக்கொண்டிருக்கின்றன. இவ்வகை ஊர்களின் அழகு தொலையும்படி அவற்றைப் பாழ்படுத்தினான். இவ்வாறு செய்ததனோடு அமையாது இவன் மலைகளை யெல்லாம் வேரோடு பிடுங்கி விடுவானோ, கடல்களைத் தூர்த்து விடுவானோ, வானுலகைக் கீழே வீழ்த்தி விடுவானோ, காற்றை உலவாமற் செய்துவிடுவானோ என்று மக்களெல்லாம் அஞ்சினர்.

இங்ஙனம் தான் நினைத்த போர்த் துறைகளெல்லாம் செய்து முடித்தனன். இதன் விளைவாக, ஒளி நாட்டார் ஒடுங்கிப் பணிந்தனர். அருவாள நாட்டரசர் இவன் ஏவிய தொழிலைச் செய்தனர். வட நாட்டிலுள்ள அரசர்கள் மெலிவுற்றனர். குட நாட்டிலுள்ளவர்கள் மனங்குன்றினர். பாண்டியனது வீரங் குன்றச் சிறீனான். இடைக் குலத்தரசர்கள் கிளை கெடவும் ஐம்பெரும்வேளிர் குலம் அழியவும், பகைவரது மதிலைத் தாக்கும் பெரு முயற்சியுடைய பெருஞ் சேனையின் வீரத்தோடும் வலிமையோடும் கண் சிவந்து கோபித்து நோக்கினான்.

மேற் கூறியவாறு பகையழிக்குந் தொழிலோடு நின்றுவிடவில்லை. தனது நாடு பல வகையிலும் சிறந் தோங்குதற்கு வேண்டும் செயல்களையும் புரிந்தனன். காடுகளை அழித்து மக்களைக் குடியேற்றி நாடாக்கினான்.குளங்கள் தோண்டி வளஞ் செழிக்கச் செய்தான். மாடங்களை யுடைய உறையூரை அளவில் விரிவுறச் செய்தான். கோயில்களோடு பழைய குடிகளையும் நிலைநிறுத்தினான். பெரு வாசலையும் திட்டி வாசலையும் அமைத்து அவற்றின் தலையில் எய்து மறையும் சூட்டுத்தோறும் அம்புக் கட்டுக்களையும் கட்டி வைத்தான். திருவீற்றிருக்கும் இவனது மதிலின் மின்னொளியினால் பகை வேந்தரது ஒளி மழுங்கி விட்டது. இவர்கள் இவனோடு போர் புரிவோமென்று வஞ்சினம் கூறி வந்து தன்னந் தனியாய் உள்ளோம் என்று கருதிப் புறங்கொடாது தம் தலையிற் சூடிய பசிய மணிகள் இவனது பருத்த வலிமிக்க கழற் காலிற் பொருந்தின.

இங்ஙனம் வீரச் செயலில் மட்டும் ஈடுபட்டு நின்று விடவில்லை. இல்லற இன்பத்திலும் இவன் திளைத்து வந்தான். இவனது இளம் புதல்வர்கள் இவனது சந்தனம் பூசிய மார்பின் மீதிருந்து விளையாடினர். இவனது இளம் மனைவியர்கள் இவனைத் தம் மார்போடு இறுகத் தழுவி இன்புற்றனர். சிங்கம்போன்ற அச்சந் தரும் பேராற்றலுடையவன் இப் பேரரசன்.

இவன் பகைவர் மீது ஓச்சிய வேலைக் காட்டிலும் மிகுதியான வெம்மையுடையது நான் செல்ல வேண்டும் காட்டு வழி; இவனது செங்கோலைக் காட்டிலும் மிகுதியாகக் குளிர்ந்திருக்கும் எனது தலைவியின் அகன்ற மெல்லிய தோள்கள். அவள் இங்கே பிரிந்திருக்க, நெஞ்சே! நான் உன்னுடன் வாரேன்; நீ அங்கே போய் வாழ்வாயாக.

இது பட்டினப்பாலையின் சுருக்கம். இதிலே காணும் காவிரிப்பூம்பட்டினத்தின் பண்டைச் சிறப்புப் போற்றுதற் குரியதல்லவா?

.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இக் கடல்கோளைக் குறித்து மணிமேகலையொடு ஏறத்தாழ சமகாலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம் யாதும் கூறவில்லை. காவிரிப்பூம் பட்டினம் செல்வச் சிறப்புடன் அக்காலத்தில் விளங்கிற்று என்ற உணர்ச்சியையே இக்காவியம் நமக்குத் தருகின்றது. பெரும்பாலும் இக்கடல்கோள் சரித்திர நிகழ்ச்சியன்றெனத் தோன்றுகிறது. இது பௌத்த ஆசிரியர்களது கற்பனை போலும். சம்பந்தர் காலத்தில் இப்பட்டினம் கடல் கொள்ளப்படாது நன்னிலையிலிருந்த தென்பது அவர் இயற்றிய பதிகங்களால் (I.65; III. 112) விளங்குகிறது. மணல் மேடிட்டு, கப்பல் போக்குவரத்தின்றி, வாணிக மின்றிப் போய், குடிகள் நீங்கினமையால் பட்டினம் அழிந்தது எனக் கொள்ளுதல் உண்மையாகலாம்.

2. பத்துப்பாட்டு 3-ம் பதிப்பின் முன்னுரையில் பதினாறாயிரம் பொன் எனக் காணப்படுகிறது. முதற் பதிப்பிற் சரியாய்த் தரப்பட்டிருக்கிறது.

3. இது குறித்து, ‘பாலையின் அரங்கேற்று மண்டம்’ என்ற கட்டுரை பார்க்க

4.   இவர்களை வேத வாணிகர்கள் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றனர். சிந்தாமணியில் (1449) ‘மெய்ந் நிகரிலாதவன் வேத வணிகன்’ என வருகின்றது. வைதிக வொழுக்கங்களைப் பின்பற்றிய வணிகர்கள் இப் பெயரால் அழைக்கப்பட்டனர் போலும்

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s