தமிழ் நாட்டோருக்கு இறுதி விண்ணப்பம்

-மகாகவி பாரதி

சகோதரர்களே, கதை நெருங்குகிறது. சமாதானமான நியாய வழிகளிலே உங்களுக்கு ஸ்வந்திர மார்க்கங் காட்டி வந்ததைக்கூட அதிகாரிகள் நிறுத்தக் கங்கணங் கட்டிவிட்டார்கள். உங்களுக்கோ மறதி அதிகம். ஒருவர் அருகேயிருந்து ஓயாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் தான் ஞாபகமிருக்கிறது. மூன்று மாதம் படிப்பதை நிறுத்திவைத்திருந்தால் கதை முழுவதையும் மறந்து போய் விடுகிறீர்கள். மறுபடியும் அடியைப் பிடித்துச் சொல்ல வேண்டி யிருக்கிறது.

நாம் கூறிவந்த மார்க்கம் ஜனங்களுக்கு ஹிதமானதுடன் ராஜாங்கத்தாருக்கும் அபாயமில்லாதது. ஆனால், ஆங்கிலேய அதிகாரிகள் அறிவை முழுவதும் இழந்துவிட்டார்கள். வெடிகுண்டெறிபவர்களுக்கஞ்சி நமது சுதேசிய முயற்சியைக் கழுத்தை நெரிக்கத் தொடங்குகிறார்கள்.

நமது முயற்சிக்கு வயிரக் கழுத்து – எழுபது கோடி மந்திரவாள் கொண்டு வெட்டினாலும் ஒடிக்க முடியாத கழுத்து – உண்டென்பதை அவர்களறியவில்லை. அவர்கள் எப்படியும் போகட்டும். அவர்களைப் பற்றி எனக்கு விசாரமில்லை. உங்களை நினைக்கும்போதுதான் என் நெஞ்சங் கொதிக்கிறது.

தீராத வறுமை கொண்ட ஜாதி. அழகிழந்துபோன ஜாதி. பார்ப்பதற்குக் கோரமான ஜாதி. கந்தைகளை உடுத்தித் திரியும் ஜாதி. சரீர பலமில்லாத ஜாதி. மனவலிமை யில்லாத ஜாதி. ஸ்வந்திர மில்லாத ஜாதி. கடமை யறியாத ஜாதி. நோய்பற்றிய ஜாதி. கல்வி யறிவில்லாத ஜாதி. சாஸ்திர மில்லாத ஜாதி. உலக இன்பங்க ளறியாத ஜாதி. சங்கீத மில்லாத ஜாதி. நெஞ்சு கொதிக்கிறதே – என்னுடைய இரத்தமல்லவா நீங்களெல்லோரும்? உங்களை இந்த நிலைமையில் பார்க்க என் மனம் எப்படிப் பொறுக்கும்? ஒரு நாளா, இரண்டு நாளா? ஒருவரா, இரண்டு பேரா?

சகோதரர்களே, நமது முன்னோர்களிருந்த நிலைமையை மறந்து விட்டீர்களோ? அடடா! இன்னமுஞ் சோம்பரா? இன்னமும் உள் விரோதங்களா? இன்னமும் அயர்வா? எப்படிப் பிழைக்கப் போகிறீர்கள்?

ஏழைகளே, நிராயுதபாணிகளே, அற்பாயுளுள்ள நோயாளிகளே – நீங்கள் ஹிந்துக்க ளென்று ஏன் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? கல்வியும் அறிவுமில்லாத நமக்கு ஆரிய ஜாதி என்ற கெளரவ மெதற்கு? தேஜஸ், வலிமை, பராக்கிரமம், ஸ்வதந்திரம் இவை யனைத்து மில்லாத நாமங்கள் புனைந்துகொண்டு ஏன் அந்த மஹாத்மாக்களின் பெயருக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும்?

சகோதரர்களே – ஒரு வார்த்தை மட்டுஞ் சொல்லுகிறேன். இன்னொரு முறை சொல்ல எனக்குச் சந்தர்பங் கிடைக்குமோ கிடையாதோ, அதுவே சந்தேகத்தி லிருக்கிறது. ஆகையால் தயவு செய்து இந்த ஒரு வார்த்தையை மனதில் பதிய வைக்கும்படி உங்கள் பாதங்களில் விழுந்து கேட்டுக் கொள்ளுகிறேன்.

அதாவது, எது வந்தாலும் அதைரியப்படாதேயுங்கள். மாதாவை மறந்துவிட வேண்டாம். நியாயத் தவறான செய்கைகள் செய்ய வேண்டாம். தைரியம், உறுதி இந்த இரண்டுமே நம்மைக் காக்கப் போகிறது.

தேசத்தை உத்தாரணஞ் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாஞ் செய்க. நாம் செய்யக்கூடியது சிறிதுதானேயென்று கருதி அதனைச் செய்யாதிருந்து விடலாகாது. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம். அநியாயமான சட்டங்களை யெடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டும். சுதேசிய விரதத்தை உயிருள்ள வரை கைவிடாமல் ஆதரித்து வரவேண்டும். மானத்தைப் பெரிதாக நினைக்க வேண்டும். ஸ்வதந்திரத்தை எப்போதுந் தியானஞ் செய்து வர வேண்டும். வந்தே மாதரம்.

-ஸி.சுப்பிரமணிய பாரதி

-சூரியோதயம் (13-2-1910)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s