-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
40. பக்தி விளைச்சல்
.
தீயந்த்ரேண வசோகடேன கவிதா குல்யோப குல்யாக்ரமை-
ரானீதைச்’ச ஸதாசி’வஸ்ய சரிதாம்போராசி”- திவ்யாம்ருதை:/
ஹ்ருத்கேதாரயுதாச்’ச பக்திகலமா: ஸாபல்ய மாதன்வதே
துர்பிக்ஷான்மம ஸேவகஸ்ய பகவன் விச்’வேச’ பீதி: குத://
.
புத்தியாம் ஏற்றத்தால் வாக்கெனும் குடங்கொண்டு
கவியோடை பாய்ந்திட்ட சிவகதை அமுதத்தால்
இதயமாம் வயலினிலே பக்தியாம் பயிர்செழிக்க
இனியேன் பஞ்சமென்ற பயந்தான் எந்தனுக்கே?
.
மனத்தில் சிவபெருமான் அரசாட்சியால் ஞானப்பயிர் வளர்ந்து நற்பலன்கள் கொடுப்பதை முந்தைய ஸ்லோகத்தில் வர்ணித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தன் ஒருவன், தனது மனத்திலே பக்திப் பயிரை எவ்விதம் வளர்ப்பது என்பதை விவரிக்கிறார்.
.வயல்களிலே ஏற்றம் என்ற இயந்திரம், தண்ணீர் பாய்ச்சப் பயன்படுகிறது. அதுபோல புத்தி (இறை அறிவு) என்ற ஏற்றத்தைக் கொண்டு, வாக்கு என்னும் குடத்தைக் கொண்டு, கவிதையாகிய ஓடைகளில் (பக்தி இலக்கியங்களிலும், பனுவல்களிலும்) பாய்கின்ற சிவகதை என்னும் அமுத நீரை மொண்டு, உள்ளமாகிய வயலினிலே பாய்ச்ச வேண்டும்.
.இவ்வாறான அமுதத்தைத் தொடர்ந்து பாய்ச்சுவதன் மூலம், உள்ளத்தினிலே பக்தியாகிய பயிர் செழிக்கும். அதாவது பரமசிவனுடைய பெருமைகளைப் பேசும் புராணங்களையும், இலக்கியங்களையும் படித்துப் பாராயணம் செய்ய வேண்டும், அவற்றில் உள்ள விஷயங்களையே பேசிக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருக்க வேண்டும். இதன்மூலம் பக்தியாகிய பயிர் வாடாமல் செழித்து வளரும் என்கிறார்.
$$$