சத்திய சோதனை 2(11-15)

-மகாத்மா காந்தி

இரண்டாம் பாகம்

11. கிறிஸ்தவர்களுடன் தொடர்பு

     மறுநாள் ஒரு மணிக்கு ஸ்ரீ பேக்கரின் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே கன்னி ஹாரிஸ், கன்னி காப், ஸ்ரீ கோட்ஸ் முதலானவர்களுக்கு அவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். பிரார்த்தனை செய்வதற்காக எல்லோரும் முழந்தாள் இட்டனர். நானும் அவ்வாறே செய்தேன். ஒவ்வொருவரின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு, பல காரியங்களை முடித்தருள வேண்டுமென்று கடவுளைத் துதிப்பதே பிரார்த்தனை. அன்றைய தினம் அமைதியாகக் கழிய வேண்டும் என்பதும் உள்ளத்தின் கதவுகளை ஆண்டவன் திறக்க வேண்டும் என்பதும் சாதாரணமான பிரார்த்தனைகள். என்னுடைய க்ஷேமத்திற்கென்று பின்வருமாறு ஒரு பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது: “ஆண்டவனே எங்கள் மத்தியில் வந்திருக்கும் புதிய சகோதரருக்கு வழிகாட்டி அருளும். ஆண்டவனே! எங்களுக்கு நீர் அளித்திருக்கும் சாந்தியை அவருக்கும் அளியும். எங்களைக் காப்பாற்றியிருக்கும் ஏசுநாதர் அவரையும் காப்பாராக. ஏசுவின் பெயராலேயே இவ்வளவும் வேண்டுகிறோம்.” இந்தக் கூட்டங்களில் பிரார்த்தனைக் கீதங்கள் பாடுவதோ, வேறுவிதச் சங்கீதமோ இல்லை. ஒவ்வொரு நாளும் விசேஷமாக ஏதாவது ஒன்றைக் கோரிப் பிரார்த்திப்போம். பிறகு கலைந்துவிடுவோம். அது மத்தியானச் சாப்பாட்டு வேளையாகையால் அவரவர்கள் சாப்பிடப் போய்விடுவார்கள். பிரார்த்தனை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.

ஹாரிஸ், காப் ஆகிய இருவரும் வயது முதிர்ந்த கன்னிப் பெண்கள். ஸ்ரீ கோட்ஸ், குவேக்கர் என்னும் கிறிஸ்தவ கோஷ்டியைச் சேர்ந்தவர். முதற்கூறிய இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் வசித்து வந்தனர். இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4 மணிக்குத் தங்கள் வீட்டுக்குத் தேநீர் சாப்பிட வந்துவிடுவிமாறு எனக்கு நிரந்தர அழைப்பு விடுத்தனர்.

     ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் சந்திக்கும் போது, அந்த வாரத்தில், சமய ஆராய்ச்சி சம்பந்தமாக நான் தெரிந்து கொண்டவைகளை ஸ்ரீ கோட்ஸிடம் கூறுவேன். நான் படித்த புத்தகங்களையும், அதனால் எனக்கு ஏற்பட்ட கருத்துக்களையும் பற்றி அவருடன் விவாதிப்பேன். அந்தப் பெண்களோ, தங்களுக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவங்களைப் பற்றிக் கூறுவார்கள். தாங்கள் கண்ட சாந்தியைக் குறித்தும் பேசுவார்கள்.

     ஸ்ரீ கோட்ஸ் கபடமற்ற, உறுதியுள்ள இளைஞர். நாங்கள் இருவரும் சேர்ந்து உலாவப் போவது உண்டு. மற்ற கிறிஸ்தவ நண்பர்களிடம் அவர் என்னை அழைத்துச் சென்றார்.

     நாங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழக ஆரம்பித்து விடவே, தமக்குப் பிடித்தமான புத்தகங்கள் எனக்குக் கிடைக்கும்படி அவர் செய்தார். இவ்விதம் என்னிடம் நிறையப் புத்தகங்கள் சேர்ந்து விட்டன. என் மீது புத்தகச் சுமையை ஏற்றினார் என்றே கூற வேண்டும். உண்மையாகவே அவற்றைப் படிப்பதாக நான் ஒப்புக் கொண்டேன். நான் படிக்கப் படிக்கப் படித்தவைகளைக் குறித்து விவாதித்தும் வந்தோம்.

     அத்தகைய புத்தகங்கள் பலவற்றை நான் 1893 இல் படித்தேன். அவை எல்லாவற்றின் பெயர்களும் எனக்கு நினைவில்லை. நான் படித்தவைகளில் சில, ஸிட்டி டெம்பிளைச் சேர்ந்த டாக்டர் பார்க்கர் எழுதிய வியாக்கியானம், ஸ்ரீ பியர்ஸன் எழுதிய நிச்சயமான பல ருசுக்கள், ஸ்ரீ பட்லர் எழுதிய உபமானங்கள் முதலியன, இவற்றில் சில பகுதிகள் எனக்கு விளங்கவே இல்லை, சில விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன, மற்றவை எனக்குப் பிடிக்கவில்லை. நிச்சயமான பல ருசுக்கள் என்ற புத்தகம், பைபிளின் மதத்திற்கு ஆதரவாக, அதன் ஆசிரியர் அறிந்துகொண்ட பலவகை ருசுக்களைக் கொண்டது. இப்புத்தகம் என் மனதைக் கவரவில்லை. பார்க்கரின் வியாக்கியானம், ஒழுக்கத்தைத் தூண்டுவதாக இருந்தது. ஆனால் நடைமுறையில் இருக்கும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந் நூல் எவ்வகையிலும் பயன்படாது. பட்லரின் உபமானங்கள் ஆழ்ந்த கருத்துக்கள நிறைந்த கஷ்டமான நூலாக எனக்குத் தோன்றிற்று. அதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நான்கு ஐந்து முறை படிக்க வேண்டும். நாஸ்திகர்களை ஆஸ்திகர்களாகத் திருப்பிவிடும் நோக்கத்துடன் அந்நூல் எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதற்காக இப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வாதங்கள் எனக்கு அவசியம் இல்லாதவை. ஏனெனில் சந்தேகிக்கும் அந்தக் கட்டத்தை நான் முன்பே கடந்து விட்டேன். ஆனால், கடவுளின் ஒரே அவதாரம் ஏசுவே, கடவுளிடம் மனிதரைச் சேர்ப்பிக்க வல்லவரும் அவர் ஒருவரே என்பதை நிரூபிப்பதற்காகக் கூறப்பட்டிருந்த வாதங்கள் என் மனத்தைக் கவர்ந்து விடவில்லை.

 எனினும் ஸ்ரீ கோட்ஸ் அவ்வளவு சுலபத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடக் கூடியவர் அன்று. என் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. வைஷ்ணவத்திற்கு அடையாளமான துளசி மணி மாலை, என் கழுத்தில் இருப்பதை அவர் பார்த்தார். அது மூட நம்பிக்கை என்று எண்ணி, அதற்காக மனம் வருந்தினார். “இந்த மூடநம்பிக்கை உங்களுக்கு ஆகாது, வாருங்கள் அந்த மாலையை நான் அறுத்து எறிந்து விடுகிறேன்” என்றார்.

     “இல்லை. நீங்கள் அப்படிச் செய்துவிடக் கூடாது. இம் மாலை, என் அன்னை எனக்கு அளித்த தெய்வீக வெகுமதி” என்றேன்.

     “ஆனால், இதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டார்.

     “இம்மாலையிலிருக்கும் தெய்வீக ரகசியம் இன்னது என்பது எனக்குத் தெரியாது. இதை நான் அணியாவிட்டால் எனக்குத் தீமை உண்டாகிவிடும் என்று நான் நினைக்கவும் இல்லை. அன்பினாலும் இது என்னுடைய சுகத்திற்கு உதவியாக இருக்கும் என்ற திட நம்பிக்கையுடனும் என் தாயார் இதை என் கழுத்தில் அணிவித்தார். ஆகையால் தக்க காரணமின்றி இதை நான் எறிந்துவிட முடியாது. அறுந்துவிடுமானால் புதிதாக ஒன்றைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்காது. ஆனால், இந்த மாலையை அறுத்துவிட முடியாது” என்றேன்.

     என் மத விஷயத்தில் ஸ்ரீ கோட்ஸூக்கு மதிப்பு இல்லாதால் என் வாதத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அஞ்ஞானப் படுகுழியிலிருந்து என்னைக் கரையேற்றிவிட வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். மற்ற மதங்களில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. கிறிஸ்தவத்தை நான் ஒப்புக் கொண்டாலன்றி எனக்கு விமோசனமே இல்லை என்பதை நான் உணர்ந்துவிடச் செய்ய அவர் விரும்பினார். எனக்காக ஏசுநாதர் ஆண்டவனிடம் பரிந்து பேசினாலன்றிப் பாவங்களிலிருந்து நான் மன்னிப்புப் பெற இயலாது என்றும், செய்யும் நற்காரியங்களெல்லாம் பயனற்றுப் போய்விடும் என்றும் நான் உணரச் செய்ய அவர் முயன்றார்.

     பல புத்தகங்களை அவர் அறிமுகம் செய்து வைத்ததைப் போலவே, தீவிர மதப்பற்றுள்ள கிறிஸ்தவர்கள் என்று அவர் கருதிய நண்பர்கள் பலரையும் அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்விதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் பிளிமத் சகோதரர்களில் ஒருவர், என்னிடம் ஒரு வாதத்தை எடுத்துக் கூறத் தொடங்கினார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் கூறியதாவது:

     “எங்கள் மதத்தின் மேன்மையை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் செய்துவிட்ட தவறுகளைக் குறித்தே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நினைத்து வருந்திக் கொண்டும், எப்பொழுதும் அவைகளைத் திருத்திக் கொண்டு அவற்றிற்காகப் பிராயச்சித்தம் செய்து கொண்டும் நீங்கள் இருப்பதாகச் சொல்வதில் இருந்தே அது தெரிகிறது. இந்த இடையறாத வினைச் சுழல் உங்களுக்கு எவ்விதம் விமோசனம் அளிக்க முடியும்? உங்களுக்கு மனச்சாந்தியே இராது. நாம் எல்லோரும் பாவிகளே என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள். எங்கள் நம்பிக்கை எவ்வளவு பரிபூரணமானது என்பதை இப்பொழுது பாருங்கள். சீர்திருந்துவதற்கும், பிராயச்சித்தம் பெறுவதற்கும் நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் வீணானவை என்றாலும் நமக்கு கதி மோட்சம் ஏற்பட வேண்டும். பாவத்தின் சுமையை நாம் எவ்விதம் தாங்க முடியும்? அப் பளுவை நாம் ஏசுநாதர் மீது போட்டு விடத்தான் முடியும். அவர் ஒருவரே பாவமற்ற திருக்குமாரர். ‘என்னை நம்புகிறவர் யாரோ அவரே நித்தியமான வாழ்வை அடைவார்’ என்பது அவருடைய திருவாக்கு. கடவுளின் எல்லையற்ற கருணை இதில்தான் இருக்கிறது. நமது பாவங்களுக்கு ஏசுநாதர் பிராயச்சித்தத்தைத் தேடுகிறார் என்பதை நாம் நம்புவதால், நமது பாவங்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை. நாம் பாவஞ் செய்யாதிருக்க முடியாது. பாவமே செய்யாமல் இவ்வுலகில் உயிர் வாழ்வது இயலாது. ஆகையால் நமது பாவங்களுக்காக ஏசுநாதர் துன்பங்களை அனுபவித்தார், மனித வர்க்கத்தின் எல்லாப் பாவங்களுக்கும் அவரே பிராயச்சித்தம் தேடினார். அவர் வழங்கும் இந்த மகத்தான விமோசனத்தை ஒப்புக் கொள்கிறவர்கள் மாத்திரமே நிரந்தரமான மனச் சாந்தியைப் பெற முடியும். உங்களுடைய வாழ்வு எவ்வளவு அமைதியற்றதாக இருக்கிறது என்பதையும் எங்களுக்கு அமைதி எவ்வளவு நிச்சயமாக இருக்கிறது என்பதையும் சிந்த்தித்துப் பாருங்கள்.”

     இந்த வாதம் எனக்குக் கொஞ்சமும் திருப்தியளிப்பதாக இல்லை. எனவே பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்: “எல்லாக் கிறிஸ்தவர்களும் அங்கீகரிக்கும் கிறிஸ்தவம் இதுவேயாயின், இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன். அந்த லட்சியத்தை நான் அடையப்பெறும் வரையில் அமைதியின்றி இருப்பதில் திருப்தியடைவேன்.”

நான் இவ்வாறு கூறியதற்குப் பிளிமத் சகோதரர், “உங்கள் முயற்சி பயனற்றது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நான் கூறியதைக் குறித்து, நீங்கள் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்” என்றார்.

     அந்தச் சகோதரர் சொன்னதற்கு ஏற்பவே அவருடைய செயலும் இருந்தது. அறிந்தே அவர் தவறுகளைச் செய்தார். அத்தவறுகளைப் பற்றி எண்ணம் தம்மைக் கவலைக்கு உள்ளாக்கி விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டி விட்டார்.

     ஆனால், தவறுகளைப் பற்றிய இத்தகைய சித்தாந்தத்தை எல்லாக் கிறிஸ்தவர்களுமே நம்பிவிடவில்லை என்பதை இந்த நண்பர்களைச் சந்திப்பதற்கு முன்பே நான் அறிவேன். ஸ்ரீ கோட்ஸ், தம்மைப் பொறுத்த வரையில் கடவுளுக்குப் பயந்தே நடந்து வந்தார். அவருடைய உள்ளம் தூய்மையானது. நமக்கு நாமே தூய்மை அடைவது சாத்தியம் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு. ஹாரிஸ், காப் என்ற அவ்விரு பெண்களுக்கும் இதே நம்பிக்கை இருந்தது. நான் படித்த புத்தகங்களில் சில பக்தி ரசம் மிகுந்தவை. ஆகவே எனக்கு ஏற்பட்ட கடைசி அனுபவத்தைக் கொண்டு ஸ்ரீ கோட்ஸ் அதிகக் கவலை அடைந்து விட்டார். என்றாலும், பிளிமத் சகோதரர் கொண்ட தவறான நம்பிக்கையினால் கிறிஸ்தவத்தைக் குறித்து எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாது என்று நான் ஸ்ரீ கோட்ஸூக்கு கூறியதோடு அவருக்கு உறுதியளிக்கவும் என்னால் முடிந்தது.

     எனக்கு கஷ்டங்களெல்லாம் வேறு இடத்திலேயே ஏற்பட்டன. பைபிளையும், பொதுவாக அதற்கு, ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வியாக்கியானத்தையும் பற்றியவையே அவை.

$$$

12. இந்தியருடன் தொடர்பை நாடினேன்

     கிறிஸ்தவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தைக் குறித்து மேற்கொண்டும் எழுதுவதற்கு முன்னால், அதே சமயத்தில் எனக்கு உண்டான மற்ற அனுபவங்களையும் நான் குறிப்பிட வேண்டும்.

நேட்டாலில் தாதா அப்துல்லாவுக்கு என்ன அந்தஸ்து இருந்ததோ அதே அந்தஸ்து, சேத் தயாப் ஹாஜி முகமதுக்கும் பிரிட்டோரியாவில் இருந்தது. அவர் இல்லாமல் பொதுஜன காரியம் எதுவும் அங்கே நடவாது. முதல் வாரத்திலேயே நான் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். பிரிட்டோரியாவில் இருக்கும் ஒவ்வோர் இந்தியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள நான் விரும்பியதைக் குறித்து அவரிடம் கூறினேன். அங்கே இந்தியரின் நிலைமையைத் தெரிந்துகொள்ள நான் ஆசைப்படுவதாகவும் அவருக்குத் தெரிவித்தேன். இந்த முயற்சியில் எனக்கு அவருடைய உதவி வேண்டும் என்றும் கோரினேன். உதவியளிக்க அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்.

     பிரிட்டோரியாவில் இருக்கும் எல்லா இந்தியரையும் கூட்டி வைத்து, டிரான்ஸ்வாலில் அவர்களுக்கு இருந்த நிலையை எடுத்து கூறுவது என்பது எனது முதல் வேலை. இக்கூட்டம், சேத் ஹாஜி முகமது ஜூஸப் வீட்டில் நடந்தது. அவருக்கு என்னை அறிமுகப்படுத்தும் கடிதம் ஒன்றும் என்னிடம் இருந்தது. இக்கூட்டத்திற்கு மிகச் சில ஹிந்துக்களும் வந்திருந்தனரெனினும் பிரதானமாக மேமன் வர்த்தகர்களே வந்திருந்தார்கள். உண்மையில் பிரிட்டோரியாவில் இந்துக்கள் மிகச் சிலரே இருந்தனர்.

     இக்கூட்டத்தில் நான் ஆற்றிய சொற்பெருக்கே என் வாழ்க்கையில் நான் செய்த முதல் பிரசங்கம் எனலாம். அங்கே பேசுவதற்குச் சுமாராக விஷயத்தைத் தயார் செய்து கொண்டே போனேன். நான் பேசிய விஷயம் வியாபாரத்தில் உண்மையைக் கடைப்பிடித்தலைப் பற்றியது. வியாபாரத்தில் உண்மையாக நடந்து கொள்ளுவதென்பது சாத்தியமானதே அல்ல என்று வர்த்தகர்கள் கூறிவருவதை நான் எப்பொழுதும் கேட்டு வந்திருக்கிறேன். அப்படிச் சாத்தியமில்லை என்று நான் அப்பொழுது நினைத்ததில்லை, இப்பொழுதும் நினைக்கவில்லை. வியாபாரமும் உண்மையும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை என்று சொல்லும் வர்த்தக நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள். வியாபாரம், முற்றும் உலக விவகாரம் என்றும், சத்தியமோ மதத்தைப் பற்றியது என்றும் சொல்லுகிறார்கள். உலக விவகாரத்திற்கு மத விஷயம் முற்றும் வேறானது என்றும் வாதிக்கின்றனர். வியாபாரத்தில் சுத்தமான உண்மைக்கே இடமில்லை. உசிதமான அளவுக்குத்தான் அதில் உண்மை பேச முடியும் என்கின்றனர். அவர்களுடைய அந்தக் கொள்கையை நான் என்னுடைய சொற்பொழிவில் பலமாக எதிர்த்தேன். வர்த்தகர்களுக்கு அவர்களுடைய கடமை உணர்ச்சியை எழுப்பினேன். அக்கடமை இரு வகையானது. அங்குள்ள சில இந்தியரின் நடத்தையே அவர்களுடைய தாய்நாட்டின் கோடிக்கணக்கான சகோதர மக்களின் தன்மையை இந்நாட்டார் அறிவதற்கு அளவுகோல் ஆகிறது. ஆகையால், ஓர் அந்நிய நாட்டில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கு மேலும் அதிகமாகிறது.

சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் மக்களின் பழக்கங்கள், சுகாதாரக் குறைவாக இருந்ததைக் கவனித்திருந்தேன். ஆகையால் அதை அங்கே கூடியிருந்தவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், குஜராத்திகள், மதராஸிகள், பஞ்சாபிகள், சிந்திகள், கச்சிக்காரர்கள், சூரத்காரர்கள் என்றெல்லாம் இருக்கும் பாகுபாடுகளையெல்லாம் மறந்துவிட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தினேன். முடிவாக, மற்றொரு யோசனையும் கூறினேன். குடியேறியிருக்கும் இந்தியரின் கஷ்டங்களைக் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டுக் கொள்ளுவதற்கு ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றேன். அச்சங்கத்திற்குச் சாத்தியமான அளவுக்கு என் நேரத்தையும் சேவையையும் அளிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் அறிவித்தேன்.

     என்னுடைய சொற்பொழிவு அங்கே கூடியிருந்தவர்களின் மனத்தை நன்கு கவர்ந்தது என்பதைக் கண்டேன்.

     என் பேச்சைத் தொடர்ந்து விவாதம் நடந்தது. எனக்கு வேண்டிய விவரங்களையும் சேகரித்துக் கொடுப்பதாகச் சிலர் முன்வந்தனர். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. என் சொற்பொழிவைக் கேட்டவர்களில் மிகச் சிலருக்கே ஆங்கிலம் தெரியும் என்பதையும் அறிந்தேன். அந்நாட்டில் ஆங்கிலம் தெரிந்திருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதியதால் அவகாசம் இருப்பவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுமாறு யோசனை கூறினேன். அதிக வயதாகிவிட்ட பிறகும்கூட ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு விடுவது சாத்தியமே என்று நான் அவர்களுக்குச் சொன்னதோடு, அப்படிக் கற்றுக்கொண்ட சிலரைப் பற்றியும் உதாரணமாக எடுத்துக் கூறினேன். அதைச் சொல்லிக் கொடுப்பதற்கென்று ஒரு வகுப்பை ஆரம்பித்தால் அதில் வந்து போதிக்கிறேன் என்றேன். விரும்பினால் நானே அவர்கள் வீட்டுக்குப் போய்ச் சொல்லிக் கொடுக்க தயார் என்றும் கூறினேன்.

     இம்மொழியைப் போதிக்க வகுப்பு எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், தங்களுக்கு இருக்கும் வசதியைப் பொறுத்துக் கற்றுக்கொள்ளத் தாங்கள் தயாராய் இருப்பதாக மூன்று இளைஞர்கள் அறிவித்தனர். இதற்கு அவர்கள் விதித்த நிபந்தனை, அவர்களுடைய இடத்திற்கு நான் போய்ச் போதிக்க வேண்டும் என்பது. அவர்களில் இருவர் முஸ்லிம்கள் – ஒருவர் நாவிதர் மற்றொருவர் குமாஸ்தா, – மூன்றாமவர் ஹிந்து. இவர் ஒரு சில்லைரைக் கடைக்காரர். அவர்களுடைய சௌகரியப்படி போய்ச் சொல்லிக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். சொல்லிக் கொடுப்பதில் எனக்குள்ள தகுதியைப் பற்றி எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. என் மாணவர்கள் சளைத்துப் போனாலும் போகலாமே ஒழிய, நான் சளைக்க மாட்டேன். சில சமயங்களில் நான் அவர்கள் இருக்கும் இடத்திற்குப் போகும்போது அவர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். என்றாலும் பொறுமையை இழந்து விடுவதில்லை. ஆங்கிலத்தில் புலமை பெறும் வகையில் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இம்மூவரில் எவருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், இவர்களில் இருவர் சுமார் எட்டு மாத காலத்தில் நல்ல அபிவிருத்தியை அடைந்தனர் என்று சொல்லலாம். இருவர், கணக்கு எழுதவும், வியாபார சம்பந்தமான சாதாரணக் கடிதங்களை எழுதவும் போதுமான அளவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டார்கள். ஆனால், நாவிதருக்கோ இம்மொழியைக் கற்பதிலிருந்த ஆசை, தமது வாடிக்கைகாரர்களிடம் பேசக்கூடிய அளவிற்குத் தெரிந்தால் போதும் என்பதோடு நின்றது. இவ்விதம் படித்ததனால், இம்மாணவர்களில் இருவர், நல்ல வருமானம் பெறுவதற்கான தகுதியை அடைந்தனர்.

     முன்னால் கூறிய பொதுகூட்டத்தின் பலன் எனக்குத் திருப்தி அளித்தது. இத்தகைய பொதுக்கூட்டங்களை வாரத்திற்கு ஒரு முறை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது என்றே எனக்கு ஞாபகம். மாதம் ஒருமுறை கூட்டுவது என்றும் முடிவு செய்திருக்கக்கூடும். அநேகமாகத் தவறாமல் கூட்டங்கள் நடந்து வந்தன. அச்சமயங்களில் அவரவர்களின் அபிப்பிராயங்களைத் தாராளமாக எடுத்துக் கூறி வந்தனர். இதன் பலன் என்னவென்றால், பிரிட்டோரியாவில் எனக்குத் தெரியாத இந்தியர் எவருமே இல்லை என்று ஆகிவிட்டதுதான். அவர்களின் ஒவ்வொருவரின் நிலைமையையுங்கூட நான் அறிந்திருந்தேன். பிரிட்டோரியாவில் இருக்கும் பிரிட்டிஷ் ஏஜண்டு ஜேகோபஸ் டி வெட்டுடனும் பழக்கம் வைக்துக்கொள்ள வேண்டும் என்று இது என்னை ஊக்குவித்தது. இந்தியரிடம் அவருக்கு அனுதாபம் உண்டு. ஆனால் அவருக்கு இருந்த செல்வாக்கோ மிகச் சொற்பம். என்றாலும் தம்மால் இயன்றவரை உதவி செய்வதாக அவர் ஒப்புக் கொண்டார். நான் விரும்பும் போது தம்மை வந்த பார்க்கும்படியும் என்னை அழைத்தார்.

     பிறகு ரெயில்வே அதிகாரிகளுக்கு எழுதினேன். ரெயில்வே பிரயாணம் செய்வது சம்பந்தமாக இந்தியருக்கு இருந்து வரும் கஷ்டங்கள், ரெயில்வேக்களின் விதிகளின் படியும் நியாயமற்றவை என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். ரெயில்வே அதிகாரிகளிடமிருந்து எனக்குப் பதில் வந்தது. தக்க உடையுடன் இருக்கும் இந்தியருக்கு, முதல் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அந்தப் பதிலில் கூறியிருந்தார்கள். சரியானபடி ஒருவர் உடையணிந்திருக்கிறார் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் ஸ்டேஷன் மாஸ்டரிடமே இருப்பதால் அந்தப் பதில் இந்தியருக்குப் போதுமான கஷ்ட நிவாரணம் அளிப்பதாக இல்லை.

இந்தியர் சம்பந்தமான சில தஸ்தாவேஜுகளை பிரிட்டிஷ் ஏஜண்டு எனக்குக் காட்டினார். இதே போன்ற தஸ்தாவேஜுகளைத் தயாப் சேத்தும் எனக்குக் கொடுத்தார். ஆரஞ்ச் பிரீ ஸ்டேட்டிலிருந்து இந்தியர் எவ்வளவு கொடூரமாக விரட்டியடிக்கப் படுகிறார்கள் என்பதை அவைகளைக் கொண்டு அறிந்துகொண்டேன்.

     சுருங்கச் சொன்னால், டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டிலும் இருக்கும் இந்தியரின் சமூக, பொருளாதார, ராஜீய நிலையைக் குறித்து நன்றாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுவதற்கு நான் பிரிட்டோரியாவில் இருந்தது வசதியளித்தது எனலாம். இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் எனக்கு மதிப்பதற்கரிய உதவியாக இருக்கப் போகிறது என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. ஆண்டு முடிவிலோ, ஆண்டு முடிவதற்கு முன்னாலேயோ, வழக்கு முடிந்துவிட்டால் அதற்கும் முன்பே, நான் இந்தியாவுக்குத் திரும்பி விடலாம் என்றே நினைத்து வந்தேன். ஆனால், கடவுளின் சித்தமோ வேறுவிதமாக இருந்துவிட்டது.

$$$

13. கூலியாக இருப்பதன் துன்பம்

     டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டிலும் இருந்த இந்தியரின் நிலைமையைக் குறித்து விபரமாகக் கூறுவதற்கு இது இடமன்று. அதைக் குறித்து விபரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நான் எழுதியிருக்கும் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின் சரித்திரம் என்ற நூலில் பார்க்குமாற யோசனை கூறுகின்றேன். என்றாலும் அதைக் குறித்து இங்கே சுருக்கமாகக் கூற வேண்டியது அவசியம்.

ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டில், 1858-ல் செய்யப்பட்ட விசேஷ சட்டத்தின் படி, இந்தியருக்கு முன்னால் இருந்த உரிமைகள் எல்லாமே பறிக்கப்பட்டு விட்டன. அங்கே இந்தியர் இருக்க விரும்பினால் ஹோட்டல்களில் வேலைக்காரர்களாக மாத்திரமே இருந்து வர முடியும். இல்லாவிடில் இதுபோன்ற கீழத்தரமான ஊழியம் செய்துகொண்டிருக்க வேண்டும். சொற்ப நஷ்ட ஈடு கொடுத்து, வியாபாரிகள் விரட்டப்பட்டு விட்டனர். விண்ணப்பங்களும் மகஜர்களும் அனுப்பினார்கள், ஒன்றும் பயனில்லை.

     டிரான்ஸ்வாலில் 1885-ல் கடுமையான சட்டம் ஒன்றை இயற்றினர். 1886-ல் இச்சட்டத்தில் சிறுமாறுதல்களைச் செய்தார்கள். திருத்தப்பட்ட அச்சட்டத்தின்படி இந்தியர் எல்லோரும் டிரான்ஸ்வாலுக்குள் போவதற்குக் கட்டணமாக ஆளுக்கு 3 பவுன் தலைவரி செலுத்த வேண்டும். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் பகுதிகளில் அல்லாமல் அவர்கள் வேறு எங்குமே சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், அனுபவத்தில் அந்த ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் நிலம் அவர்களுக்குச் சொந்தமாவதில்லை. இந்தியருக்கு வாக்குரிமை இல்லை. இவை யாவும் ஆசியாக்காரர்களுக்கு என்று செய்யப்பட்ட விசேஷச் சட்டத்தினால் நடந்தன. கறுப்பர்களுக்கு என்று இயற்றப்பட்ட சட்டங்களும் அவர்கள் விஷயத்தில் அமுல் செய்யப்பட்டன. பின்னால் கூறிய இச்சட்டங்களின் படி, இந்தியர் பொது நடைபாதைகளில் நடக்கக் கூடாது அனுமதிச்சீட்டு இல்லாமல் இரவு 9 மணிக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவும் கூடாது. இந்தக் கடைசி விதி, இந்தியரைப் பொறுத்தவரையில், சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் உபயோகிக்கப்பட்டு வந்தது. தங்களை, அரபுக்கள் என்று சொல்லிக் கொண்டவர்களுக்குச் சலுகை காட்டுவதற்காக இந்த விதியிலிருந்து அவர்களுக்கு விலக்களித்தார்கள். இவ்விதம் அளிக்கப்பட்ட விதி விலக்கும் இயற்கையாகவே போலீஸாரின் இஷ்டத்தைப் பொறுத்ததாகத்தான் இருந்து வந்தது.

     அவ்விரு சட்டங்களினாலும் ஏற்பட்ட கஷ்டங்களை நான் அனுபவிக்க நேர்ந்தது. நான் அடிக்கடி இரவில் ஸ்ரீ கோட்ஸூடன் உலாவ வெளியே போவேன். இரவு 10 மணிக்கு முன்னால் வீடு திரும்புவதில்லை. போலீஸார் என்னைக் கைது செய்துவிட்டால் என்ன செய்வது? இவ்விஷயத்தில் என்னை விட ஸ்ரீ கோட்ஸூக்குத் தான் அதிகக் கவலை. தம்முடைய நீக்ரோ வேலைக்காரர்களுக்கு அவர் அனுமதிச்சீட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்கும் அவர் எப்படிச் சீட்டுக் கொடுப்பது? வேலைக்காரனுக்குத் தான் எஜமான் இத்தகையச் சீட்டுக் கொடுக்கலாம். எனக்கும் ஒரு சீட்டு வேண்டும் என்று கேட்டிருந்தால், அப்படிச் சீட்டுக் கொடுக்க ஸ்ரீ கோட்ஸ் தயாராக இருந்தாலும், அவரால் கொடுக்க முடியாது. ஏனெனில் அவ்விதம் கொடுப்பது மோசடியாகக் கருதப்பட்டிருக்கும்.

ஆகவே, ஸ்ரீ கோட்ஸோ, அவருடைய நண்பர் ஒருவரோ, என்னை அரசாங்க அட்டர்னியான டாக்டர் கிராஸே என்பவரிடம் அழைத்துச் சென்றனர். நாங்கள் இருவருமே ஒரே இடத்தில் பாரிஸ்டரானவர்கள் என்பது தெரியவந்தது. இரவு 9 மணிக்குப் பிறகு வீட்டிற்கு வெளியே இருப்பதற்கு எனக்கு அனுமதிச்சீட்டு வேண்டியிருக்கிறது என்ற விஷயம் அவருக்கு அதிக வருத்தத்தை அளித்தது. எனக்கு அவர் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார். எனக்கு அனுமதிச் சீட்டுக் கொடுப்பதற்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக, எந்த நேரத்திலும் போஸீஸாரின் குறுக்கீடு இல்லாமல் நான் வெளியில் நடமாடுவதற்கு எனக்கு உரிமை அளித்து, ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்தார். நான் வெளியில் செல்லும் போதெல்லாம் அக்கடிதத்தை எப்பொழுதும் என்னிடம் வைத்திருந்தேன். உண்மையில் அக்கடிதத்தை உபயோகித்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பமே எனக்கு ஏற்பட வில்லையென்றால், அது தற்செயலேயன்றி வேறில்லை.

     டாக்டர் கிராஸே என்னைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நாங்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று சொல்லலாம். நான் எப்பொழுதாவது அவர் வீட்டிற்குப் போவேன். ஜோகன்னஸ்பர்க்கில் பப்ளிக் பிராசிக்யூடராக இருந்த அவருடைய பிரபலமான சகோதரர், அவர்மூலம் எனக்கு அறிமுகமானார். போயர் யுத்தத்தின் போது, ஓர் ஆங்கில அதிகாரியைக் கொல்ல அவர் சதி செய்தார் என்று ராணுவக் கோர்ட்டில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் ஏழு வருடச் சிறைத் தண்டனையை அடைந்தார். அவர் வக்கீல் தொழில் செய்யக் கூடாது என்று நீதிபதிகளும் அவரைத் தடுத்து விட்டனர். ஆனால் யுத்தம் முடிந்ததும் அவரை விடுதலை செய்து விட்டனர். டிரான்ஸ்வாலில் வக்கீலாக இருக்க அவரை கௌரவமாக அனுமதித்து விடவே, வக்கீல் தொழிலை நடத்தி வரலானார்.

     இந்தத் தொடர்புகள் பின்னால் என்னுடைய ராஜீய வாழ்க்கைக்கு உதவியாக இருந்ததோடு, என் பெரும் பகுதி வேலைகளையும் சுலபமாக்கி விட்டன.

     நடைபாதையில் நடப்பது சம்பந்தமாக இருந்த சட்ட விதிகள் எனக்கு இன்னும் அதிகக் கஷ்டத்தைக் கொடுத்தன. நான் எப்பொழுதுமே உலாவுவதற்குப் பிரஸிடெண்டு தெரு வழியாக ஒரு மைதானத்திற்குப் போவேன். பிரஸிடெண்டு (ஜனாதிபதி) குரூகரின் வீடு அந்தத் தெருவில்தான் இருந்தது. அது மிகவும் அடக்கமான ஆடம்பரமில்லாத கட்டிடம். அதன் முன்னால் தோட்டமும் இல்லை. பக்கத்தில் இருந்த மற்ற வீடுகளுக்கும் அதற்கும் வித்தியாசமே இல்லை. பிரிட்டோரியாவின் லட்சாதிபதிகள் பலருடைய வீடுகள் அவர் வீட்டைப் போல் அல்லாமல் அதிக ஆடம்பரமாக இருந்தன. அவற்றைச் சுற்றித் தோட்டங்களும் இருந்தன. ஜனாதிபதி குரூகரின் எளிய வாழ்வு, மிகப் பிரசித்தமானதாகும். அவர் வீட்டுக்கு முன்னாலிருந்த போலீஸ் காவலைக் கொண்டே அது ஒரு முக்கியமான அதிகாரியின் வீடு என்பது தெரியும். நான் எப்பொழுதும் அவ்வீட்டிற்கு எதிரிலுள்ள நடைபாதை வழியாக அங்கிருந்த போலீஸ் பாராக்காரனைக் கடந்து செல்வது வழக்கம். எந்த விதமான தடையோ, தகராறோ ஏற்பட்டதே இல்லை.

     அங்கே காவலுக்கு இருந்த போலீஸ்காரனை அடிக்கடி மாற்றி வந்தார்கள். ஒரு நாள் அவ்விதம் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் எனக்குக் கொஞ்சமேனும் எச்சரிக்கை செய்யாமலும், நடைபாதையை விட்டுப் போய்விடும்படி சொல்லாமலும் என்னை உதைத்துத் தெருவில் தள்ளிவிட்டார். நான் திகைத்துப் போனேன். அவர் இவ்விதம் நடந்து கொண்டதைக் குறித்து அவரிடம் நான் கேட்க முற்படுவதற்கு முன்னால் ஸ்ரீ கோட்ஸ் சப்தம் போட்டு என்னைக் கூப்பிட்டார். அவர் அச்சமயம் அந்த வழியாகக் குதிரைமீது வந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்து “ஸ்ரீ காந்தி நடந்ததையெல்லாம் நான் பார்த்தேன். அந்த ஆள்மீது நீங்கள் வழக்குத் தொடருவீர்களானால், கோர்ட்டில் உங்களுக்காக நான் மகிழ்ச்சியுடன் சாட்சி சொல்வேன். இவ்வளவு முரட்டுத்தனமாக நீங்கள் தாக்கப்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்றார்.

     அதற்கு நான், “நீங்கள் வருந்த வேண்டாம். பாவம், அவருக்கு என்ன தெரியும்? கறுப்பு மனிதர்கள் எல்லோரும் அவருக்கு ஒரே மாதிரிதான். என்னை இப்பொழுது நடத்தியதைப் போல அவர் நீக்கிரோக்களையும் நடத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய சொந்தக் குறை எதற்காகவும் கோர்ட்டுக்குப் போவதில்லை என்பதை நான் ஒரு விதியாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், அவர் மீது வழக்குத் தொடரும் உத்தேசமில்லை” என்றேன்.

     உடனே, ஸ்ரீ கோட்ஸ், “உங்கள் உயரிய குணத்திற்கு அது சரி. ஆனால், அதைக் குறித்து மறுபடியும் சிந்தியுங்கள். இப்படிப்பட்டவனுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்” என்றார். பின்னர் அந்தப் போலீஸ்காரரிடம் பேசினார். அவரைக் கண்டித்தார். போலீஸ்காரர் போயர் ஆனபடியால் இருவரும் டச்சு மொழியில் பேசினர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால், அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அப்படிக் கேட்பதற்கு அவசியமே இல்லை. ஏனெனில், அவரை முன்பே நான் மன்னித்து விட்டேன்.

     ஆனால் திரும்பவும் அத்தெரு வழியாக நான் போகவே இல்லை. அந்த ஆள் இருந்த இடத்தில் வேறு ஆள் வந்திருக்கக் கூடும். இந்தச் சம்பவத்தை அறியாமல் புதிதாக இருக்கும் ஆளும் இதேபோல நடந்து கொண்டுவிடக் கூடும். அனாவசியமாக நான் ஏன் இன்னும் ஓர் உதையை வலிய வாங்க வேண்டும்? எனவே நான் வேறு வழியில் போகத் தொடங்கினேன்.

குடியேறியிருக்கும் இந்தியரிடம் எனக்குள்ள அனுதாபத்தை இச்சம்பவம் அதிகமாக்கி விட்டது. இத்தகைய சட்ட விதிகள் சம்பந்தமாக முதலில் பிரிட்டிஷ் ஏஜண்டைப் பார்ப்பது, பிறகு அவசியம் என்று தெரிந்தால் பரீட்சார்த்தமாக ஒரு வழக்கைப் போட்டுப் பார்ப்பது என்பதைக் குறித்து இந்தியர்களுடன் விவாதித்தேன்.

     இவ்விதம் அங்கே இந்தியருக்கு இருந்து வந்த மிகக் கஷ்டமான நிலையை, அதைப்பற்றிப் படிப்பதனாலும் கேள்விப்படுவதனாலும் மாத்திரம் அன்றி, என் சொந்த அனுபவங்களினாலும் மிக நன்றாக அறிந்துகொண்டேன். தென்னாப்பிரிக்கா, சுயமரியாதையுள்ள இந்தியனுக்கு உகந்த நாடன்று என்பதைக் கண்டேன். இத்தகைய நிலைமையில் மாறுதல் ஏற்படும்படி செய்வது எப்படி என்ற கேள்வியே என் மனத்தில் மேலும் மேலும் எழுந்தவண்ணம் இருந்தது. ஆனால், அப்பொழுது என்னுடைய முதன்மையான கடமை தாதா அப்துல்லாவின் வழக்கைக் கவனிப்பதே.

$$$

14. வழக்குக்கான தயாரிப்பு

     பிரிட்டோரியாவில் நான் இருந்த அந்த ஓராண்டு, என் வாழ்க்கையிலேயே மிக மதிப்பு வாய்ந்த அனுபவத்தை எனக்கு அளித்தது. பொதுஜனப் பணியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு இங்கேதான் கிடைத்தது. இங்கே அச்சேவைக்கான ஓரளவு ஆற்றலையும் பெற்றேன். என்னுள் சமய உணர்ச்சி ஜீவ சக்தியுள்ளதாக ஆனதும் இங்கேதான். மேலும், வக்கீல் தொழில் சம்பந்தமான உண்மையான ஞானத்தையும் இங்கேதான் அடைந்தேன். தொழிலுக்குப் புதிதாக வரும் பாரிஸ்டர், அனுபவமுள்ள ஒரு பாரிஸ்டரிடம் அறிந்து கொள்ளும் விஷயங்களை இங்கே அறிந்து கொண்டேன். வக்கீல் தொழிலை என்னால் நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இங்கேதான் ஏற்பட்டது. அதேபோல ஒரு வக்கீலின் வெற்றிக்கான ரகசியங்களையும் இங்கேதான் அறிந்தேன்.

தாதா அப்துல்லாவின் வழக்கு, சிறிய வழக்கே அல்ல. 40,000 பவுன் கிடைக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. வியாபாரத்தின் கொடுக்கல் வாங்கலில் இவ்வழக்கு ஏற்பட்டதால் கணக்குச் சம்பந்தமான நுணுக்கங்கள் இதில் அதிகம் இருந்தன. வழக்கிடப்பட்ட தொகையில் ஒரு பகுதி பிராமிசரி நோட்டுக்காகவும் பிராமிசரி நோட்டுகள் தருவதாகக் கூறியதற்கும் வரவேண்டிய தொகை. பிராமிசரி நோட்டுகள் மோசடியாக வாங்கப்பட்டவை. அவற்றிற்குப் போதுமான நியாயம் இல்லை என்பது பிரதிவாதி தரப்பு வாதம். இந்தச் சிக்கலான வழக்கில் உண்மையையும் சட்டத்தையும் பற்றிய விஷயங்கள் ஏராளமாக அடங்கியிருந்தன.

     இரு தரப்பாரும் பெரிய அட்டர்னிகளையும் வக்கீல்களையும் அமர்த்தியிருந்தனர். ஆகவே, அவர்கள் வேலை செய்யும் விதத்தைத் தெரிந்து கொள்ளுவதற்கு எனக்குச் சிறந்த வாய்ப்புக் கிடைத்தது. வாதியின் கட்சியை அட்டர்னிக்கு எடுத்துக் கூறுவதும், வழக்குச் சம்பந்தமான ஆதாரங்களைச் சேகரிப்பதுமான வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றில் அட்டர்னி எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுகிறார், நான் தயாரித்துக் கொடுப்பதில் எதை அவர் நிராகரித்து விடுகிறார் என்பதைக் கவனித்து வருவதே ஒரு போதனையாயிற்று. அதோடு அட்டர்னி தயாரித்துக் கொடுக்கும் விவரங்களில் எவ்வளவை வக்கீல் உபயோகித்துக் கொள்ளுகிறார் என்பதையும் நான் அறிய முடிந்தது. சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்ளுவதற்கும், சாட்சியங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் எனக்குள்ள திறமையை அளந்து அறிவதற்குச் சாத்தியமானதாக இந்த வழக்குத் தயாரிப்பு வேலை உதவுவதையும் கண்டேன்.

     இந்த வழக்கில் மிக அதிகமான சிரத்தை எடுத்துக் கொண்டேன். அதில் நான் முற்றும் மூழ்கியிருந்தேன் என்றே சொல்ல வேண்டும். பற்று வரவு சம்பந்தமான எல்லா தஸ்தாவேஜுகளையும் படித்தேன். என் கட்சிக்கார் அதிகத் திறமைசாலி. என்னிடம் முழு நம்பிக்கையும் கொண்டிருந்தார். இதனால் என் வேலை எளிதாயிற்று. கணக்கு வைக்கும் முறையைக் குறித்தும் ஓரளவுக்குப் படித்துத் தெரிந்து கொண்டிருந்தேன். கடிதப் போக்குவரத்துக்களெல்லாம் பெரும்பாலும் குஜராத்தியிலேயே இருந்ததால் அவற்றை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியதாயிற்று. இதனால் மொழிபெயர்க்கும் ஆற்றலும் எனக்கு அதிகமாயிற்று.

     நான் முன்னால் கூறியிருப்பதைப்போல், சமய சம்பந்தமான விஷயங்களிலும், பொது வேலைகளிலும் நான் அதிக சிரத்தை கொண்டிருந்தபோதிலும் என் நேரத்தில் கொஞ்சத்தை அவற்றிற்குச் செலவிட்டு வந்தாலும், அப்பொழுது எனக்கு அதிக முக்கியமானவையாக இருந்தவை அவை அல்ல. எனக்கு இருந்த முக்கியமான சிரத்தையெல்லாம் வழக்குச் சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பதே. சட்டத்தைப் படிப்பது, அவசியமாகும் போது அச்சட்ட சம்பந்தமான வழக்குகளைத் தேடியெடுப்பது ஆகியவைகளில் ஈடுபட்டு, மிஞ்சிய நேரங்களில்தான் மற்ற வேலைகளைக் கவனிப்பேன். இதன் பலனாக, வழக்கின் இரு தரப்பினரின் தஸ்தாவேஜுகளெல்லாம் என்னிடம் இருந்ததால் கட்சிக்காரர்களையும்விட நன்றாக வழக்கைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தன.

காலஞ்சென்ற ஸ்ரீ பின்கட், ‘விவரங்களே சட்டத்தில் முக்கால் பாகம்’ என்று புத்திமதி கூறியிருந்தார். அதை நான் நினைவுபடுத்திக் கொண்டேன். தென்னாப்பிரிக்காவின் பிரபல பாரிஸ்டரான காலஞ்சென்ற ஸ்ரீ லியோனார்டும் இந்த உண்மையைப் பின்னால் உறுதிப்படுத்தினார். என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் என் கட்சிக்காரர் பக்கம் நியாயம் இருந்தாலும், சட்டம் அவருக்கு விரோதமாக இருப்பதாகத் தோன்றியதைக் கண்டேன். என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்ரீ லியோனார்டின் உதவியை நாடினேன். அவ்வழக்கின் விவரங்கள் அதிக அனுகூலமாக இருக்கின்றன என்று அவர் கருதினார். அவர் பின்வருமாறு கூறினார். ‘ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டிருக்கிறேன். வழக்கைப் பற்றிய விவரங்களில் மாத்திரம் நாம் ஜாக்கிரதையாக இருந்தால், சட்டம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும். ஆகையால் இந்த வழக்கின் விவரங்களை நாம் இன்னும் ஆழ்ந்து கவனிப்போம்.’ அவர் என்னிடம் இவ்விதம் கூறி, வழக்கைப் பற்றி மேலும் ஆராய்ந்து கொண்டு, மீண்டும் தம்மை வந்து பார்க்கும்படிக் கூறினார். விவரங்களை நான் திரும்ப ஆராய்ந்தபோது அதே விவரங்கள் எனக்குப் புதியவிதமாகத் தென்பட்டன. இதற்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஒரு பழைய தென்னாப்பிரிக்க வழக்கும் எனக்கு அகப்பட்டது. அதிக ஆனந்தம் அடைந்தேன். ஸ்ரீ லியோனார்டிடம் சென்று எல்லாவற்றையும் சொன்னேன். “சரி, வழக்கில் வெற்றி பெற்றுவிடுவோம். ஆனால், எந்த நீதிபதி இதை விசாரிக்கப் போகிறார் என்பதை மாத்திரம் நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்” என்றார்.

     தாதா அப்துல்லாவின் வழக்குக்கு வேண்டிய காரியங்களை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு வழக்கில் விவரங்களே அதிக முக்கியமானவை என்பதை நான் முற்றும் உணர்ந்து கொள்ளவில்லை. விவரங்கள் என்பவை, உண்மையாக நடந்த செயல்களாகும். நாம் உண்மையை அனுசரித்துப் போனால் இயற்கையாகவே சட்டம் நம் உதவிக்கு வருகிறது. தாதா அப்துல்லாவின் வழக்கில், விவரங்கள் மிகவும் அனுகூலமானவைகளாக இருந்ததால் சட்டமும் நிச்சயமாக அவருக்கு அனுகூலமாகவே இருக்கும் என்பதைக் கண்டேன். வாதியும் பிரதிவாதியும் உறவினர்கள். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் ஆனால், விவகாரம் தொடர்ந்து நடத்தப்படுமானால் இரு தரப்பினருமே அழிந்து விடுவார்கள் என்பதையும் கண்டு கொண்டேன். வழக்கு எவ்வளவு காலத்திற்கு நடந்துகொண்டு போகும் என்பது யாருக்கும் தெரியாது. கோர்ட்டில் வழக்காடி ஒரு முடிவுக்கு வந்தே தீருவது என்று, வழக்கைத் தொடர்ந்து நடக்க விட்டுவிட்டால் காலவரையறையின்றி அது நடந்து கொண்டே போகும். இதனால் இரு தரப்பாருக்கும் நன்மை இல்லை. ஆகையால், வழக்கு உடனேயே தீர்ந்துவிடுவது நல்லது என்று இரு தரப்பாரும் விரும்பினார்கள்.

     தயாப் சேத்திடம் போய், வழக்கை மத்தியஸ்தத்திற்கு விட்டுத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு யோசனையும் கூறினேன். அவர் வக்கீலிடமும் அதைக் குறித்து யோசிக்கும்படியும் கூறினேன். இரு தரப்பினருக்கும் நம்பிக்கை வாய்ந்த ஒருவரை மத்தியஸ்தராக நியமித்து விட்டால் வழக்கு சீக்கிரத்தில் தீர்ந்துவிடும் என்றும் யோசனை கூறினேன். கட்சிக்காரர்கள் இருவரும் பெரிய வியாபாரிகள். என்றாலும், அவர்களுடைய வசதிகள் எல்லாவற்றையுமே விழுங்கிவிடும் அளவுக்கு, வக்கீல் கட்டணங்கள் பெருகிக்கொண்டே போயின. அவர்கள் இருவரின் கவனம் முழுவதும் இந்த வழக்கிலேயே ஈடுபட்டிருந்ததால் மற்ற வேலைகளைக் கவனிப்பதற்கு அவர்களுக்கு நேரமே இல்லை. இதற்கிடையே ஒருவருக்கொருவர் விரோதமும் வளர்ந்து கொண்டு போயிற்று. இத் தொழிலில் எனக்கு வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. இரு தரப்பு வக்கீல்களும் அவர்கள் வக்கீல்கள் என்ற முறையில் அவரவர்கள் தரப்புக்குச் சாதகமான சட்ட நுட்பங்களைக் கிளப்பிக்கொண்டே இருக்க வேண்டியது அவர்களுடைய கடமையாயிற்று. வெற்றி பெறும் கட்சிக்காரர், தாம் செலவழித்த தொகை முழுவதையும் செலவுத் தொகையாக எதிர்த் தரப்பிலிருந்து பெற்று விடுவதில்லை என்பதையும் முதன்முதலாக அப்பொழுதுதான் நான் கண்டேன். கோர்ட்டு  கட்டணச் சட்டத்தின் படி வாதி, பிரதிவாதிகளுக்கு இவ்வளவுதான் செலவுத் தொகையாக அனுமதிக்கலாம் என்று விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அட்டர்னிக்குக் கட்சிக்காரர் உண்மையில் கொடுக்கும் தொகையோ, அந்த விதிகளில் கண்டதற்கு மிக அதிகமாக இருந்தது. இதையெல்லாம் என்னால் சகிக்க முடியவில்லை. இரு தரப்பினரிடமும் நட்புக் கொண்டு, இருவரையும் சமரசம் செய்து வைத்துவிடுவதுதான் எனது கடமை என்பதை உணர்ந்தேன். சமரசம் செய்து வைத்துவிட என்னாலான முயற்சிகளையெல்லாம் செய்தேன். கடைசியாக தயாப் சேத் சம்மதித்தார். ஒரு மத்தியஸ்தரும் நியமிக்கப்பட்டார். அவர் முன்னிலையில் வழக்கு விவாதிக்கப்பட்டு, தாதா அப்துல்லா வெற்றி பெற்றார்.

ஆனால் அதோடு நான் திருப்தி அடைந்து விடவில்லை. தீர்ப்பான தொகையை என் கட்சிக்காரர் உடனே வசூலிக்க நடவடிக்கை எடுப்பதென்றால், தீர்ப்புத் தொகை முழுவதையும் உடனே கட்டி விடுவதென்பது தயாப் சேத்தினால் முடியாத காரியம். மேலும், தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த போர்பந்தர் மேமன்களிடம் உறுதியான கொள்கை ஒன்று இருந்தது. பட்ட கடனைச் செலுத்த முடியாமல், இன்ஸால்வென்ட்டாகி விடுவதை விடச் செத்துவிடுவது மேல் என்பது அவர்கள் கொள்கை. மொத்தத் தொகையான 37,000 பவுனையும், செலவுத் தொகையும் உடனே செலுத்திவிடுவது என்பது தயாப் சேத்தினால் முடியாது. ஒரு தம்படியும் குறையாமல் முழுத் தொகையையும் செலுத்திவிடவே அவர் விரும்பினார்.

     இன்ஸால்வென்ட்டாகி விடவும் அவர் விரும்பவில்லை. இதற்கு ஒரே வழிதான் உண்டு. நியாயமான தவணைகளில் அத்தொகையைப் பெற தாதா அப்துல்லா ஒப்புக்கொள்ள வேண்டும். அவரும் இணங்கினார். நீண்டகாலத் தவணையில் தயாப் சேத் பணம் கட்டுவதை அனுமதிக்க ஒப்புக்கொண்டார். வழக்கை, மத்தியஸ்தத்திற்கு விடுவதற்கு இரு தரப்பினரும் சம்மதிக்கும்படி செய்வதைவிட  தொகையைத் தவணையில் செலுத்துவது என்ற சலுகையைப் பெறுவதில்தான் எனக்கு அதிகச் சிரமம் இருந்தது. ஆனால் ஏற்பட்ட முடிவைக் குறித்து, இரு தரப்பாரும் மகிழ்ச்சி அடைந்தனர். பொது ஜனங்களிடையே அவர்களுடைய மதிப்பும் உயர்ந்தது. எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. உண்மையான வக்கீல் தொழிலை நான் கற்றுக் கொண்டேன். பிளவுபட்டிருக்கும் கட்சிக்காரர்களை ஒன்றாக்குவதே வக்கீலின் உண்மையான வேலை என்பதை உணர்ந்து கொண்டேன். இந்தப் பாடம் என்னுள் அழிக்க முடியாதபடி நன்றாகப் பதிந்துவிட்டது. ஆகையால் நான் வக்கீலாகத் தொழில் நடத்திய இருபது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வழக்குகளில், தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்துவிடுவதிலேயே என் காலத்தின் பெரும் பகுதி கழிந்தது. இதனால் எனக்கு நஷ்டம் எதுவுமே இல்லை. பண நஷ்டமும் இல்லை; நிச்சயமாக ஆன்ம நஷ்டம் இல்லவே இல்லை.

$$$

15. சமய எண்ணத்தின் எழுச்சி

     கிறிஸ்தவ நண்பர்களிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் குறித்துத் திரும்பவும் சொல்ல வேண்டிய சமயம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

எனது வருங்காலத்தைப் பற்றிய கவலை ஸ்ரீ பேக்கருக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. வெல்லிங்டனில் நடந்த மகாசபைக்கு அவர் என்னைப் அழைத்துச் சென்றார். சமயத் தெளிவைப் பெறுவதற்கு அதாவது வேறுவிதமாகச் சொன்னால் சுயத் தூய்மையைப் பெறும் பொருட்டு என்று புராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள், இத்தகைய மகாசபைகளைச் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டுவது வழக்கம். சமயத்தைச் சீராக்குவது அல்லது சமய புனருத்தாரணம் என்று இதைச் சொல்லலாம். வெல்லிங்டன் மகாசபையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். அந்த மகாசபைக்குத் தலைமை தாங்கியவர் அப் பகுதியில் பிரசித்தமாயிருந்த பாதிரியாரான பூஜ்ய ஆண்ட்ரு மர்ரே என்பவர். அந்த மகா சபையில் இருக்கும் பக்திப் பரவசச் சூழ்நிலையும், அதற்கு வந்திருப்பவர்களின் உற்சாகமும் சிரத்தையும் என்னைக் கட்டாயம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவும்படி செய்தே தீரும் என்று ஸ்ரீ பேக்கர் நம்பியிருந்தார்.

     அவருடைய முடிவான நம்பிக்கையெல்லாம் பிரார்த்தனையின் சக்தியிலேயே இருந்தது. பிரார்த்தனையில் அவர் திடமான நம்பிக்கை வைத்திருந்தார். மனப்பூர்வமான பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்க்காமல் இருந்து விடமாட்டார் என்றும் அவர் திடமாக நம்பினார். இதற்கு பிரிஸ்டலின் ஜார்ஜ் முல்லர் போன்றவர்களின் உதாரணத்தையும் அவர் எடுத்துக் கூறுவார். அவர், தமது அன்றாடத் தேவைகளுக்குக் கூடக் கடவுளைப் பிரார்த்தித்துவிட்டு, அவரையே நம்பி இருந்துவிடுவாராம். பிரார்த்தனையின் சக்தியைக் குறித்து அவர் கூறுவதை யெல்லாம் எவ்விதத் துவேசமும் இல்லாத கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘என் மனச் சாட்சி மாத்திரம் ஆக்ஞாபித்து விடுமாயின் நான் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி விடுவேன். இவ்விதம் நான் செய்வதை எதுவும் தடுத்து விட முடியாது’ என்று அவரிடம் உறுதி கூறினேன். அந்தராத்மா காட்டும் வழயில் நடக்க நான் நீண்ட காலமாகவே கற்றுக் கொண்டிருந்ததால், எந்தவிதத் தயக்கமும் இன்றி அவருக்கு இந்த வாக்குறுதியை நான் அளித்தேன். அதற்கு விரோதமாக நடப்பதென்றால் முடியாது என்பதோடு, அது எனக்கு வேதனையாகவும் இருக்கும்.

     எனவே, நாங்கள் வெல்லிங்டனுக்குச் சென்றோம். என்னைப் போன்ற, ‘கறுப்பு மனிதனை’ அழைத்துப் போய் அங்கே சமாளிப்பது ஸ்ரீ பேக்கருக்குக் கஷ்டமாகிவிட்டது. முற்றும் என்னாலேயே பல சமயங்களிலும் அசௌகரியங்களை அவர் அனுபவிக்க வேண்டியதாயிற்று. பிரயாணத்தின் நடுவில் ஞாயிற்றுக்கிழமை குறுக்கிட்டது. ஸ்ரீ பேக்கரும் அவருடைய சகாக்களும் புண்ணிய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பிரயாணம் செய்ய மாட்டார்கள். ஆகவே இடையில் ஒரு நாள் பிரயாணத்தை நிறுத்த வேண்டி வந்தது. ஸ்டேஷன் ஹோட்டல் மானேஜர் எவ்வளவோ விவாதத்திற்குப் பிறகு என்னை ஹோட்டலில் வைத்துக்கொள்ளச் சம்மதித்த போதிலும் சாப்பாட்டு அறையில் என்னை அனுமதிக்க மாத்திரம் மறுத்துவிட்டார். எளிதில் விட்டுக் கொடுக்கிறவர் அல்ல, ஸ்ரீ பேக்கர். ஹோட்டலில் வந்து தங்குகிறவர்களின் உரிமையைக் குறித்து அவர் எவ்வளவோ வாதாடினார். என்றாலும், அவருக்கு இருந்த கஷ்டத்தை நான் அறிய முடிந்தது. வெல்லிங்டனிலும் நான் ஸ்ரீ பேக்கருடனேயே தங்கினேன். என்னால் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை மறைக்க அவர் என்னதான் முயன்ற போதிலும், அவற்றை நான் அறியாமல் இல்லை.

இந்த மகாசபை, பக்தியுள்ள கிறிஸ்தவர்களைக் கொண்டது. அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். பூஜ்யர் மர்ரேயையும் சந்தித்தேன். பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்ததையும் கண்டேன். அவர்களுடைய சில தோத்திர கீதங்கள் எனக்குப் பிடித்திருந்தன. அவை இனிமையாகவும் இருந்தன.

     மகாசபை மூன்று நாட்கள் நடந்தது. அதற்கு வந்திருந்தவர்களின் பக்தியை நான் அறியவும் பாராட்டவும் முடிந்தது. ஆனால் என் நம்பிக்கையை – என் மதத்தை – மாற்றிக் கொள்ளுவதற்கு எந்தவிதமான காரணத்தையும் நான் அங்கே காணவில்லை. கிறிஸ்தவனாக ஆகிவிடுவதனால் மாத்திரமே நான் சுவர்க்கத்திற்குப் போகமுடியும், முக்தியை அடைய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நல்லவர்களான கிறிஸ்தவ நண்பர்கள் சிலரிடம் இவ்விதம் நான் மனம் விட்டுச் சொன்னபோது அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். ஆனால், நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை.

     எனக்கு இருந்த கஷ்டங்கள் மேலும் ஆழமானவை. ‘ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரமான திருக்குமாரர். அவரிடம் நம்பிக்கை வைப்பவர்கள் மாத்திரமே நித்தியமான வாழ்வை அடைய முடியும்’ என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு குமாரர்கள் இருக்க முடியும் என்றால், நாம் எல்லோரும் அவருடைய குமாரர்களே. ஏசுநாதர் கடவுளைப் போன்றவர் அல்லது அவரே கடவுள் என்றால், எல்லா மனிதரும் கடவுளைப் போன்றவர்களே என்பதுடன் ஒவ்வொருவருமே கடவுளாகவும் முடியும். ஏசுநாதர் தமது மரணத்தினாலும், தாம் சிந்திய ரத்தத்தினாலும் உலகத்தைப் பாவங்களிலிருந்து ரட்சித்தார் என்பதை அப்படியே ஒப்புக்கொண்டுவிட என் பகுத்தறிவு தயாராக இல்லை. இதை உருவகமான கூற்றாகக் கொண்டால் இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதோடு, கிறிஸ்தவ தருமத்தின்படி மனிதருக்கு மாத்திரமே ஆன்மா உண்டேயன்றி மற்ற ஜீவன்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்குச் சாவு என்பது அடியோடு மறைந்துவிடுவது தான். நானோ, இதற்கு மாறுபட்ட நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏசுநாதர் லட்சியத்துக்காக உயிரைக் கொடுத்தவர், தியாகமூர்த்தி, தெய்வீகமான போதகர் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதுவரையில் தோன்றியவர்களிலெல்லாம் அவரே பரிபூரணர் என்பதையும் நான் ஒப்புக்கொள்வதற்கில்லை. சிலுவையில் அவர் மாண்டது, உலகிற்குப் பெரியதோர் உதாரணம். ஆனால், ‘அதில் பெரிய ரகசியம் அல்லது அற்புதத் தன்மை இருக்கிறது’ என்பதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற சமயங்களை பக்தியுடன் பின்பற்றுகிறவர்கள் எனக்கு அளிக்கத் தவறியது எதையும் கிறிஸ்தவர்களின் பக்தி வாழ்க்கை எனக்கு அளித்து விடவில்லை. கிறிஸ்தவர்களிடையே பலர் புண்ணிய சீலர்களாகத் திருந்தி இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையிலும் அதே மாறுதலை நான் கண்டிருக்கிறேன். தத்துவ ரீதியில் கிறிஸ்தவக் கொள்கையில் அசாதாரணமானது எதுவும் இல்லை. தியாகத்தைப் பொறுத்த வரையில் பார்த்தால், ஹிந்துக்கள் இதில் கிறிஸ்தவர்களையும் மிஞ்சியிருக்கின்றனர். கிறிஸ்தவமே பரிபூரணமான மதம் என்றோ, எல்லா மதங்களிலும் அதுவே தலைசிறந்தது என்றோ நம்ப என்னால் முடியவில்லை. என் மனத்தில் தோன்றிய இந்த எண்ணங்களையெல்லாம் சமயம் நேர்ந்தபோதெல்லாம் எனது கிறிஸ்தவ நண்பர்களிடம் கூறுவேன். ஆனால் இவற்றிற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. கிறிஸ்தவ மதமே பரிபூரணமான மதம் என்றோ, தலைசிறந்த மதம் என்றோ என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லையென்றால், ஹிந்து சமயம் பரிபூரணமானது, தலைசிறந்தது என்றும் அப்பொழுது எனக்கு நிச்சயமாகத் தோன்றிவிடவில்லை. தீண்டாமை, ஹிந்து சமயத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியுமாயின், அது அதன் அழுகிப் போன பகுதியாகவோ அல்லது சதைச் சுரப்பாகவோதான் இருக்க வேண்டும். ஏராளமான பிரிவுகளும் சாதிகளும் இருப்பதற்கான நியாயமும் எனக்கு விளங்கவில்லை. கடவுள் வாக்கே வேதங்கள் என்று சொல்லுவதன் பொருள் என்ன? அவை கடவுளால் கூறப்பட்டவையாக ஏன் இருக்கலாகாது? என்னை மதம் மாற்றுவதற்கு கிறிஸ்தவ நண்பர்கள் எவ்விதம் முயன்று வந்தனரோ அது போலவே முஸ்லிம் நண்பர்களும் முயன்றனர். இஸ்லாமிய நூல்களைப் படிக்குமாறு அப்துல்லா சேத், விடாமல் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார். எப்பொழுதும் அவர் இஸ்லாமின் சிறப்பைக் குறித்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு இருந்த கஷ்டங்களைக் குறித்து ராய்ச்சந்திர பாய்க்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தேன். சமயத் துறையில் வல்லுநராக இந்தியாவில் இருந்தவர்களுக்கும் எழுதினேன். அவர்களிடமிருந்தும் எனக்குப் பதில்கள் கிடைத்தன. ராய்ச்சந்திரரின் கடிதம் ஓரளவுக்கு எனக்கு மன நிம்மதியை அளித்தது. பொறுமையுடன் இருக்குமாறும், ஹிந்து தருமத்தைக் குறித்து இன்னும் ஆழ்ந்து படிக்குமாறும், அவர் எழுதியதில், ஒரு வாக்கியம் பின்வருமாறு: ‘இவ்விஷயத்தை விருப்பு வெறுப்பின்றிக் கவனித்ததில் ஒன்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. ஹிந்து மதத்தின் ஆழ்ந்த, அற்புதமான கருத்துக்களும், ஆன்ம ஞானமும், தயையும் வேறு எந்த மதத்திலும் இல்லை’ என்பதே அது.

     ஸேல்ஸ் என்பவரின் குரான் மொழிபெயர்ப்பு நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இஸ்லாமைப் பற்றிய வேறு சில நூல்களையும் வாங்கினேன். இங்கிலாந்திலிருந்த கிறிஸ்தவ நண்பர்களுக்கும் எழுதினேன். அவர்களில் ஒருவர், எட்வர்டு மெய்ட்லண்டுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவருடனும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டேன். ‘பரிபூரணமான வழி’ என்ற நூலை அவர் எனக்கு அனுப்பினார். அன்னா கிங்ஸ்போர்டுடன் சேர்ந்து அவர் இந்நூலை எழுதியிருந்தார். இப்பொழுது இருந்து வரும் கிறிஸ்தவ நம்பிக்கைகளை இந்நூல் மறுக்கிறது. ‘பைபிளுக்குப் புதிய வியாக்கியானம்’ என்ற மற்றொரு புத்தகத்தையும் அவர் எனக்கு அனுப்பினார். அவ்விரு புத்தகங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. அவை, ஹிந்து தருமத்தை ஆதரிப்பனவாகத் தோன்றின. ‘உன்னுள்ளேயே ஆண்டவன் ராஜ்யம்’ என்ற டால்ஸ்டாயின் நூல், என்னைப் பரவசப்படுத்தி விட்டது. அதில் கண்ட கருத்துக்கள் என் உள்ளத்தில் பலமாகப் பதிந்துவிட்டன. அந்நூல் கண்ட சுயேச்சையான சிந்தனை, மிகச் சிறந்த ஒழுக்கம், உண்மை ஆகியவற்றின் முன்பு ஸ்ரீ கோட்ஸ் எனக்குக் கொடுத்திருந்த புத்தகங்கள் எல்லாமே ஒளி இழந்து, அற்பமானவைகளாகத் தோன்றின. இவ்விதம் என்னுடைய ஆராய்ச்சி, கிறிஸ்தவ நண்பர்கள் எதிர்பாராத திக்குக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது. எட்வர்டு மெயிட்லண்டுடன் நீண்ட காலம் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தேன். ராய்ச்சந்திர பாய் இறக்கும் வரையில் அவருடனும் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தேன். அவர் அனுப்பிய சில புத்தகங்களையும் படித்தேன். பஞ்சீகரணம், மணிரத்தினமாலை, யோகவாசிஷ்டத்தின் முமுட்சுப்பிரகணம், ஹரிபத்ர சூரியின் சத் தரிசன சமுச்சயம் முதலியவைகளும் அவைகளில் சேர்ந்தவை.

என் கிறிஸ்தவ நண்பர்கள் எதிர்பாராத ஒரு வழியை நான் மேற்கொண்டேனாயினும், என்னுள் அவர்கள் எழுப்பிய சமய வேட்கைக்காக நான் அவர்களுக்கு என்றும் கட்டுப்பாடு உடையவனாக இருக்கிறேன். அவர்களுடன் பழகியதைப் பற்றிய நினைவை நான் என்றும் போற்றி வருவேன். இத்தகைய இனிமையான, புனிதமான தொடர்புகள், அதற்குப் பின்னாலும் எனக்கு திடமாக இருந்தனவே அன்றிக் குறையவில்லை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s