-எஸ்.வையாபுரிப் பிள்ளை

11. அதியமான் அஞ்சி
அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஔவையாருக்குச் சாதல் நீங்கும்படியாக நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரமானுடைய உறவினன் என்றும், மழவர் என்னும் வீரர் வகையினருக்குத் தலைவன் என்றும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றான். இவனைப் ‘போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி’ எனப் புற நானூறு (91) கூறும். ஆகவே, இவன் பண்டைக்காலத்து வாழ்ந்த சிறந்த போர் வீரர்களுள் ஒருவன் என்பது நன்றாகப் புலப்படும். இவனுடைய வீரச்செயல்கள் புறநானூற்றில் (87-95; 97-101; 103-104; 206, 208, 231-232, 235, 310, 315, 390) விரித்து உணர்த்தப்படுகின்றன. இவனுடைய முன்னோர்களில் ஒருவன்,
அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்
அரும்பெறல் மரபிற் கரும்பிவண் தந்தும் (புறம் -99)
புகழ் பெற்றவன். கரும்பு கொணர்ந்த செய்தி புறம்-392-லும் காணப்படுகிறது. இவனது மூதாதையர்களுக்கு வரங்கொடுக்கும் பொருட்டு தேவர்கள் வந்து தங்கிய ஒரு சோலை இவனது ஊரில் இருந்ததெனவும் இப் புறநானூற்றுச் செய்யுளின் உரையில் காண்கின்றது.
இவனைக் குறித்து “எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம், வழுவின்று எய்தியும் அமையாய்” (99) என்கிறது முற்காட்டிய செய்யுள். இதற்குப் பழைய உரைகாரர்
ஏழு இலாஞ்சனையும் நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரச உரிமையைத் தப்பின்றாகப் பெற்றும் அமையாயாய்
-என்று பொருள் எழுதினார், புறநானூற்றின் பதிப்பாசிரியராகிய டாக்டர் சாமிநாதையர் அவர்கள், “எழுபொறி-ஏழு இலாஞ்சனை; இவை ஏழரசர்க்கு உரியன; இது, ‘கேழல்மேழிகலை யாழி வீணைசிலை கெண்டை என்றினைய பல்கொடி’ (கலிங். கடவுள்.18) என்பதனாலும் ஒருவாறு விளங்குகின்றது’ என்று அடிக்குறிப்பு எழுதியுள்ளார்கள். அன்றியும் பாடப்பட்டோர் வரலாற்றில் ‘சேரன், சோழன், திதியன், எருமையூரன் இருங்கோ வேண்மான், பாண்டியன், பொருநன் என்னும் அரசர் எழுவர்க்குரிய ஏழு இலாஞ்சனையும் நாடும் அரச உரிமையும் உடையோன்’ என்றும் *1 எழுதினார்கள். இங்குக் கொடுத்துள்ள விவரத்திற்கு ஆதாரம் இருப்பதாகப் புலப்படவில்லை. எழுபொறி நாட்டத்துத் தாயம் அடைந்ததன் பின், ‘ஏழு அரசர்களோடு முரணிச் சென்று வெற்றி கொண்டு தன் வலியைத் தோற்றுவித்தான்’ என்று செய்யுள் கூறுகின்றது. ஆதலால், இவ்வேழு அரசர்களுக்கும் எழுபொறி நாட்டத் தாயத்திற்கும் நெருங்கிய அல்லது நேரடியான தொடர்பு இருப்பதாகக் கருதக் கூடவில்லை.
இங்ஙனமாயின், ஏழிலாஞ்சனை என்பதன் கருத்து விளக்க மெய்தாது நிற்கின்றது என்றுதான் நாம் கொள்ளுதல் வேண்டும். உரைகாரர் “எழுபொறியையும் நாட்டத்தையும் நீங்காத அரச உரிமையை” என்று ஒரு பக்ஷாந்தரம் கூறி, “ஏழரசர் நாடும் கூடி ஒரு நாடாய் அவ்வேழரசர் பொறியுங் கூடிய பொறியோடு கூடி நின்று நன்மையும் தீமையும் ஆராய்தல் எனினும் அமையும்” என்றும் எழுதி யுள்ளனர். இப்பொருளும் ஆராய்ச்சிக்கு உரியதே.
ஆனால்,வடமொழி நூல்களிலே காணப்படும் ஒரு மரபு இங்கே ஒரு விளக்கம் தருகின்றது. இம் மரபு “மானஸாரம்” என்ற சிற்ப நூலில் (அத். 42) காணப்படுகின்றது. சக்கரவர்த்தி, மகாராஜா, நரேந்திரன், பார்ஷிணிகன், பட்டதரன், மண்டலேசன், பட்டபாஜ், பிராகாரகன். அஸ்திர கிராகன் என ஒன்பது வகையினராக அரசர்கள் வகுக்கப்படுகிறார்கள். இவர்களுள் சக்கரவர்த்தியாவோன் ஆற்றல் மிக்கவன்; நாற் பெருங்கடலெல்லை வரையும் தனது நாடு பரந்து கிடக்கும்படி ஆணைபுரிவோன்; இதற்கு அறிகுறியாகத் தனது அரண்மனை வாயிலில் வெற்றிமணியுடையவன்; நன்மையுந் தீமையும் ஆராய்ந்து நடுநிலை சிறிதும் குன்றாது முறை செய்பவன்; பெரும் புகழ் வாய்ந்தவன்; செல்வத்தில் சிறந்தவன்; குடிகளை அன்பு கொண்டு ஆள்பவன்; அரசர் அனைவர்களாலும் நன்கு மதிக்கப்படுபவன்; பேரரசன். மகாராஜன் அல்லது அதிராஜன் எனப்படுவான் தனது மூவகை ஆற்றலால் ஏழரசர் நாட்டுத் தலைமை கொண்டவன்; அறுவகைக் குணங்களுடையவன்; அறுவகை உறுப்புக்களுடையவன்; நீதி நூல்களிலும் ஒழுக்க நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவன்; சூரியன் அல்லது சந்திர வம்சத்தைச் சார்ந்தவன்.
நரேந்திரன் எனப்படுவான் தனது மூவகை ஆற்றலால் தன்னின் மெலிந்த பகைவரிடமிருந்து வென்று கொண்ட மூன்று அரசர் நாடுகளுக்குத் தலைவன்; பார்ஷிணிகர், பட்டதரர் முதலிய மன்னர்களால் வணங்கப்படுபவன்; ராஜ்ய தந்திர நோக்குடையவன்; பகை மன்னரைப் பணிவிப்பவன்; நற்செயலாளன்; விழா எடுத்து மகிழ்வதில் ஈடுபடுபவன்.
பார்ஷிணிகன் எனப்படுவான் ஓர் அரசுக்குத் தலைவன்; ஒரு கோட்டை யுடையவன் *2; ஆறு உறுப்புக்களை யுடையவன்; அறிவு மிக்கவன்; காலத்தின் உசிதத்தை அறிபவன்; மூவகைத் தொழிலுடையவன் *3; தன்கீழடங்கிய சிற்றரசர்களால் தங்கள் தலைவன் என ஏற்றுக்கொள்ளப் பட்டவன்.
இங்ஙனமே ஏனைய ஐவகை அரசர்களுடைய இயல்புகளும் விளங்கக் கூறப்பட்டுள்ளன.
அதிராஜனது பிற இயல்புகளையும் மானஸாரத்தில் விளங்கக் காணலாம். இவன் முடி தரித்தற்கு உரியவன்; முகடமைந்த சிம்மாசனம் இவனுக்கு உண்டு. கற்பக விருக்ஷமுந் தோரணமும் இவன் உடையவன்; கவரி, வெண்கொற்றக் குடை, மாலை இம்மூன்றும் இவனது அரசச் சின்னங்கள்; இவனது சிம்மாசனத்திற்கு ஆறு கால்கள் உண்டு; முத்து மாலையை அணிபவன்; இரண்டு தலைநகரங்கள் உடையவன்; ஆறிலொன்று இறைகொள்பவன். அதிராஜனுடைய இயல்புகளுள் ஒன்றாக ஏழரசர் நாட்டுத் தலைமை குறிக்கப்பட்டமை கவனிக்கற்பாலது. இதனையே,
பூவார் காவில் புனிற்றுப்புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
என்ற அடிகள் குறிப்பனவாகக் கொள்ளலாம். இவனுக்கு மானஸாரத்திற் கூறிய கற்பகக் காவுரிமை உண்டென்பது இவ்வடிகளிலே ‘பூவார் காவின்’ என்பதனால் விளங்கும். உரைகாரர் கூறிய விளக்கக் குறிப்பும் இதனையே ஆதரிக்கிறது.
இனி, சங்க இலக்கியமாகிய புறநானூற்றில் இங்குக் காட்டிய வடநூற் கருத்து உளதெனக்கூறுதல் பொருந்துமோ எனச் சிலர் ஐயுறலாம். கி.பி. 8-ம் நூற்றாண்டில் தோன்றிய வேள்விக்குடி சாஸனத்தில் சுமார் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த களப்பிரன் என்பானைக் குறித்து,
அளப்பரிய அதிராஜரை அகலநீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலியரைசன் கைக்கொண்டதனை இறக்கியபின்
என வருகின்றது, எனவே, கி.பி. 5-ம் நூற்றாண்டிற்கு முன்பே அதிராஜர்கள் பலர் இருந்தமை புலப்படுகிறது. எனவே, அதிராஜர் என்பதன்கண் அடங்கிய கருத்து தமிழ்நாட்டில் மிகப் பண்டைக்காலந் தொட்டே மேற்கொள்ளப்பட்டு வந்தது என்று ஊகிக்கலாம். மானஸாரத்திற்கு *4 முன்புள்ள பல நூல்களிலும் அரசர் கூறுபாடுகளும் இயல்புகளும் கூறப்பட்டிருந்தன என்று கருதுதற்கும் இடமுண்டு. ஏனெனின், அதன்கண் வரும் இவ்வரசர் இயல்புகள் ‘வேதபுராண சாஸ்திரங்களினின்று தொகுக்கப்பட்டுள்ளன’ என்று ஒரு வாக்கியம் காணப்படுகிறது (42, 79-80). ஆனால், மானஸாரத்திற்கு முந்திய நூல்களுள் எதன்கண் இப்பாகுபாடு முதலியன உள்ளன என்பது ஆராய்ந்து தெளியப்படுதல் வேண்டும். தெளிந்தால், சங்க காலத்தில் தானே இவ்வடமொழிக் கருத்துக்கள் தமிழ் நாட்டில் நிலவின என்பது உறுதிபெறும்.
தமிழ் மக்களுடைய நாகரிகத்திற்கும் வடமொழியாளர்களுடைய நாகரிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பின் தன்மை தெளிவுபெற இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை. ஆராய்ச்சி பெருகப் பெருக, இரண்டு இனத்தவர்களும் ஆதியில் ஒரே குடும்பத்தினர் என்பதுதான் உண்மையாய் முடியுமெனத் தோன்றுகிறது. சிற்சில தன்மை வேறுபாடுகள் உளவெனின், அவை தென்னாட்டிலும் அயற் பிரதேசத்திலும் வாழ்ந்து வந்த முண்டர்கள் முதலிய பூர்வ குடிகளின் கலப்பினால் ஏற்பட்டன போலும். இவ்வகை ஆராய்ச்சியில் முதல் முதலில் நாம் செய்ய வேண்டுவது ஒற்றுமைக் கருத்துக்களை யெல்லாம் ஒருங்கு திரட்டுவதாகும். இம்முறையில் அதியமானைப் பற்றிய இக் குறிப்பும் கொள்ளத்தக்கது.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. இது பிற்பதிப்புக்களில் மாற்றப்பட்டுள்ளது.
2. ‘ஓ ரெயில் மன்னன்’ என்ற சங்கநூல் வழக்கு (புறம் 338) இங்கே அறியத்தக்கது.
3. படை திரட்டல், படை வகுத்தல், படை மேற் செல்லல் என்பன.
4. இந்நூலின் காலம் கி.பி. 500-க்கும் 700-க்கும் இடைப்பட்டதாகலாம் என்பர் (P.K.Acharya: Dictionary of Hindu Architecture and Indian Architecture).
$$$