-மகாகவி பாரதி

யமபயமே அச்சங்களில் முதன்மையானது. அதனையே எள்ளி நகையாடும் கவிதை இது. மரண அச்சம் அற்றவர்களுக்கே விடுதலை சித்தியாகிறது. எனவேதான் நாட்டின் விடுதலையை நாடிய பாரதி காலனை இக்கவிதையில் மிரட்டுகிறார்…
ஞானப் பாடல்கள்
7. காலனுக்கு உரைத்தல்
ராகம் – சக்கரவாகம்; தாளம்-ஆதி
பல்லவி
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட
(காலா)
சரணங்கள்
1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்; என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட, மூடனே?அட
(காலா)
2. ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனைவிதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட
(காலா)
$$$