தெலுங்க மஹா சபை

-மகாகவி பாரதி

சுதேசமித்திரன்

9 ஜூன், 1917

     சென்ற வெள்ளிக்கிழமையன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் ஸ்ரீ வேங்கடப்பய்ய பந்தலு செய்த உபந்நியாஸம் கவனிக்கத்தக்கது. ராஜநீதி சாஸ்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்…

மேற்படி கொள்கைக்கு நல்ல திருஷ்டாந்தமாக, இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவிர புத்தி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் நமக்குள் ஜாதிபேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை, உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது. இந்தியாவில் கொஞ்சம் தீவிரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது. இப்போது பூமி முழுவதிலும் நடந்துவரும் மஹா ப்ரளயத்தில் இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாகப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும். இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள். தெலுங்கர் ஜனாபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்துகிறார்கள். சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்குகூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை. சென்ற வெள்ளிக்கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிமிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன்பு, கடலூரில் கூடிய மாஹாண சபையில் “வந்தே மாதரம்” பாட்டுக் கூடப் பாடவில்லையென்று கேள்விப்பட்டேன். தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது. இது நிற்க.

மேற்படி சபையில் வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தைகளின் ஸாரம் பின்வருமாறு:-

தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.

இந்தியாவுக்கு தன்னாட்சி கொடுக்க வேண்டும்.

இயன்றவரை, இந்தியா முழுவதையும், பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்க வேண்டும். அதாவது மதறாஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றித் தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மராட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்க நாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்க வேண்டும்.

ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும். ராஜ்ய காரியங்களும் இயன்றவரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.

மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி; இரண்டாவது மற்றொரு பகுதி. இரண்டாவது தாய்ப் பகுதி; மற்றவை கிளைப் பகுதிகளாகும்.

என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம், நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும், இந்த ஸமயத்தில் ஆந்திரரைத் தனிப் பிரிவாக ருஜுப்படுத்துவதைக் காட்டிலும், ஆஸேது ஹிமாசல பர்யந்தம் உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒன்று என்ற மூல மந்திரத்தை நிலைநாட்டுவதே அவசியமென்று என் புத்திக்குத் தோன்றுகிறது. ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் ஜாதிபேதம் குலபேதம் பாஷைபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று.

ஹிந்துக்கள் உயர்ந்த நிலைமைக்கு வர வேண்டுமென்றால் ஐக்யநெறியை உடனே அனுசரிக்க வேண்டும். போன வருஷம் கீழ்க்கடலோரத்தில் பெரிய புயற்காற்றடித்தது. ஒன்றுகூடியிருந்த வீடுகள் பிழைத்தன. தனிக் குடில்களெல்லாம் காற்றிலே பறந்துபோயின. உலகத்தில் புதிய ஞானம், புதிய வாழ்க்கை, புதிய அறம், புதிய நெறி தோன்றக்கூடிய காலம் பிறந்துவிட்டதென்று மேதாவிகளெல்லாம் ஒருங்கே சொல்லுகிறார்கள். இங்ஙனம் புதிய ஞானம் பிறக்க வேண்டுமானால் அதற்கு ஹிந்து மதமே முக்ய ஸாதனமென்று நாம் சொல்லுகிறோம். ஸ்வாமி விவேகாநந்தர், ரவீந்திரநாத டாகுர், ஜகதீச சந்திர வஸு முதலிய பெரியோர்களும் அங்ஙனமே சொல்லுகிறார்கள். இந்த ஸமயத்தில் ஹிந்துக்கள் பிரிவு பேசலாமோ? ஹிந்துக்கள் பிரிந்துகிடந்தால், ஹிந்து தர்மத்தின் மஹிமையை உலகத்தார் காண்பதெப்படி?

ஹிந்து தர்மம் பெருமாள் கோயிலைப்போலே; நிற்பது எங்கே நின்றாலும் அத்தனை பேருக்கும் ப்ரஸாதமுண்டு. பகவத் ஸந்நிதியில் ஜாதிபேதமில்லை. அத்தனை பேரும் கலந்து நிற்கலாம். ஹிந்து தர்மம் சிதம்பரத்தைப் போலே. அதனுள்ளே, பறையரும் ஒளியில் கலந்துவிடலாம். 

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s