ஹிந்து தர்மம்

-மகாகவி பாரதி

 சுதேசமித்திரன்

29 நவம்பர் 1917

     வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஹிந்து தர்மத்தைப் பரவும்படி செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா! ஸ்வாமி விவேகாநந்தரைப் போலே பத்துப் பேர் இப்போதிருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம். அந்தக் கண்டங்கள் யுத்தமாகிய சுழற் காற்றுக்குள்ளே அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கையிலே, ஹிந்து தர்மத்தை எவன் கவனிப்பான் என்று கூறிச் சிலர் ஆக்ஷேபிக்கலாம். அந்த ஆக்ஷேபம் சரியன்று. சண்டைக் காலந்தான் நமக்கு நல்லது. இந்த ஸமயத்திலேதான் மனுஷ்ய அஹங்காரத்தின் சிறுமையும் தெய்வத்தினுடைய மஹிமையும் மனுஷ்யனுடைய புத்திக்கு நன்றாக விளங்கும்.

இவ்வுலக இன்பங்களை தர்மத்தினாலே பெற்றாலொழிய அவை இன்பங்கள்போலே தோன்றினாலும் துக்கமாகவே முடியும். அவரவர் கர்மத்தின் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான். நாம் இன்று நூறு ஸப்மரீன் வைத்துக்கொண்டு பிறருடைய கப்பல்களைத் தகர்த்தால் நாளை மற்றொரு ஜாதியார் ஆயிரம் ஸப்மரீன் கட்டி நம்முடைய கப்பல்களை நொறுக்கிப் போடுவார்கள். பாம்பைக் கொல்ல ஒரு கீரிப் பிள்ளையுண்டு; பகை பகையை வளர்க்கும். நாம் மற்றவரை அடிமைப்படுத்தினால் நம்மை அடிமைப்படுத்த வேறு யாரேனும் முளைப்பார்கள்.

இவ்வுலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொரு செய்கையும், ஸ்வப்ரயோஜனத்தைக் கருதாமல், லோகோபகாரத்தை முன்னிட்டுக் கொண்டு செய்ய வேண்டும். தீராத ஆவலும், அவஸரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். யந்திரப் பீரங்கிகளும் ஸப்மரீன்களும் நாகரிகத்துக்கு அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங்களும் ஆகாச வெடிகுண்டுகளும் அபிவிருத்திக்கு லக்ஷணமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, துணையல்ல; அவை மனிதனுக்குப் பகை. மனுஷ்யனையும் அவனுடைய நாகரிகத்தையும் அழிக்கும் குணமுடையன.

கர்வத்தினாலே மரணம் உண்டாகும். அடக்கம் பொறுமை ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்ய ஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக் கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்த ஸமயத்தில் மனுஷ்ய ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூமண்டல முழுதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வதுண்மை யென்பது தானே விளங்கும். இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக் கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும் ஜமீன்தார்களையும் செட்டியார்களையும் மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s