-எஸ்.வையாபுரிப் பிள்ளை

9. ‘எருமணம்’
(குறுந்தொகைச் செய்யுளொன்றின் பொருள்)
குறுந்தொகை என்பது சங்க இலக்கியம் என வழங்கப்படும் தொகை நூல்களுள் ஒன்று. இதன் செய்யுட் சிறப்பை நோக்கி, ‘நல்ல குறுந்தொகை’ என ஒரு பழம் பாடல் இதனைக் குறிக்கிறது. பண்டைத் தமிழ் நூல்களூக்கு உரையெழுதிய உரைகாரர்கள் பலரும் இந்நூலினை மிகவும் பாராட்டி அங்கங்கே இதனின்றும் மேற்கோள் காட்டியிருகிறார்கள்.
இந்நூலின் 380 செய்யுட்களுக்குப் பேராசிரியர் உரையெழுதினர் என்றும், அவர் எழுதாதுவிட்ட இருபது செய்யுட்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார் என்றும் தெரிகிறது. இவ்வுரை இதுகாறும் அகப்படவில்லை. இதனையிழந்தது நம்மவர்களுடைய துர்ப்பாக்கியம் என்றே சொல்லவேண்டும்.
குறுந்தொகையை முதன்முதலாக வெளியிட்ட தமிழறிஞர் செளரிப் பெருமாளரங்கன் என்பவர். இவர் இப் பழையவுரை யில்லாக் குறையைக் கருதி, புதிய உரையொன்று இயற்றினர். இதன் பின்பு திரு. இராமரத்ந ஐயர் கலாநிலையத்தில் ஓர் உரையெழுதி வெளியிட்டனர். இவ் இரண்டு உரைகளும் செவ்விய உரைகள் எனக் கூற இயலாது. இவ்வுரைகள் மேற்கொண்டுள்ள பாடங்களும் திருத்தமான பாடங்களல்ல.
பல சுவடிகளை ஒப்புநோக்கித் திருத்தமான பாடங்களைக் கண்டு, நூதனமாக ஓர் உரையெழுதி 1937-ல் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பதிப்பே இதுவரை வெளிவந்துள்ள குறுந்தொகைப் பதிப்புக்கள் அனைத்திலும் சிறந்ததாகும். இதுவே இப்போது பலராலும் கற்கப்பட்டு வருவது. ஸ்ரீ ஐயரவர்கள் வெளியிட்ட இப்பதிப்பிலும் திருந்த வேண்டிய பகுதிகள் சில உள்ளன. அவற்றுள் ஒன்றைக் குறித்து இங்கே கூற விரும்புகிறேன்.
இந்நூலில் 113-ம் செய்யுள் ‘மாதீர்த்தன் என்ற ஒருவர் இயற்றியது. இப்பெயரை மாதிரத்தன் முதலாகப் பல படியாக வாசிக்க இயலும். உதாரணமாக, ‘மாதீரத்தார்’ என்று ஸ்ரீ இராமரத்ந ஐயர் எழுதியிருக்கிறார். டாக்டர் ஐயரவர்கள் ‘மாதிரத்தன்’ எனப் பெயரைக்கொண்டு, மாதீரத்தன்’, ‘மாதீர்த்தன்’ என்ற பாடபேதங்களும் காட்டியுள்ளார்கள். ஆனால், செய்யுளிலே பொய்கை, யாறு என்பனவற்றைச் சிறப்பித்துச் சொல்வதனை நோக்கினால், மாதீர்த்தன் என்பதுவே உண்மைப் பெயராதல் வேண்டும் என்பது விளங்கும். இப் பெயரையே யான் பதிப்பித்த சங்க இலக்கியத்தில் ஆண்டுள்ளேன். செய்யுளில் வரும் தொடர் முதலியவற்றைவைத்து ஆசிரியரைக் குறிப்பித்தல் பண்டைக்காலத்தில் ஒரு வழக்காறாயிருந்தது. தொகை நூல்களில் இவ்வழக்காற்றிற்குப் பல உதாரணங்கள் காட்டல் கூடும். கங்குல் வெள்ளத்தார், கல்பொரு சிறுநுரையார், பதடி வைகலார் என்பனவற்றைக் காண்க.
இப்புலவர் செய்துள்ளதாகத் தொகை நூல்களில் காணப்படுவது குறுந்தொகையில் வந்துள்ள இந்த ஒரு செய்யுளேயாகும். அது வருமாறு:
ஊர்க்கும் அணித்தே பொய்கை: பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே;
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல் போகின்றாற் பொழிலே; யாம்எம்
கூழைக் கெருமணங் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.
இது பகற்குறி நேர்ந்த தலைமகனுக்கு குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.
ஊர்க்கு அருகில் பொய்கையுள்ளது; இப்பொய்கைக்குத் தூரத்திலன்றிச் சமீபத்திலேயே சிறு காட்டாறு ஓடுகிறது; அங்கே உள்ளது ஒரு பொழில். அப்பொழிலில் இரை தேர்தற்பொருட்டு வரும் நாரையல்லது வேறு ஒன்றும் வருவதில்லை. அங்கே கூந்தலுக்கு எரு மணம் கொண்டுவருவதற்காகச் செல்லுவோம். எங்கள் தலைவியாகிய பேதை அங்கே வருவாள்: இதுவே இச் செய்யுளின் பொருள்.
இங்கே கொண்டுள்ள ‘எருமணம்’ என்ற பாடம் பிரதிகளில் காணப்படுவது. ஐயரவர்களும் பிரதிபேதங்கள் கொடுத்துள்ள பகுதியில் ‘ஏரு மணம்’ என்ற பாடபேதத்தைக் காட்டியுள்ளார்கள் (பக். 120).
நூலின்கண்ணே ‘எருமண்’ என அவர்கள் பாடங் கொண்டார்கள். இதற்கு, ‘கூந்தலிலுள்ள எண்ணெய்ப் பசை, சிக்கு முதலியன போகும் பொருட்டுக் களிமண்ணைத் தேய்த்துக்கொண்டு மகளிர் நீராடுதல் வழக்கு’ என்று கூறி, இக்களிமண்ணையே எருமண் என்று புலவர் வழங்கியதாக விசேடவுரையில் எழுதியிருக்கின்றார்கள். தலைவியரும் தோழியரும் மயிர்ச்சிக்கு முதலியன நீக்குதற் பொருட்டுக் களிமண் கொண்டுவரப் போவார் என்று குறிப்பிடுதல் தலைவி முதலாயினார்க்குச் சிறிதும் தகுதியற்றதாம் என்பது சொல்ல வேண்டா.
தங்கள் கருத்தை ஆதரிப்பனவாக இரண்டு பிரயோகங்கள் காட்டியுள்ளார்கள். ஒன்று குறுந்தொகையிலேயே 372-ம் செய்யுளில் வருவது. அங்கே ‘கூழைபெய் எக்கர்’ என்று காணப்படுகிறது. கூழை என்பது கடைப்பகுதி என்ற பொருளில் வந்துள்ளது; எக்கர் என்பது நுண் மணலாகும். இங்கே கூந்தலும் மண்ணும் என்ற பொருள்கள் பொருந்தாமை செய்யுள் நோக்கி அறிந்து கொள்ளலாம். பிறிதோரிடம் பெருங்கதையினின்றும் காட்டப்பட்டுள்ளது. அங்கே ‘கூந்தனறுமண்,’ (பெருங். 3,40,28) என வந்துள்ளது. நறுமண் என்ற தொடர் நறுமணமுள்ளதாக இயற்றப்பட்ட ஒருவகைக் கலவையேயாகும். கூந்தலைத் தேய்த்துக் கழுவுவதற்குக் கொள்ளும் களிமண் ஆகாது. எனவே, ஐயரவர்கள் கொண்டுள்ள பாடமும் பொருளும் இயையாமை காணலாம்.
திரு. இராமரத்ந ஐயர் ‘ஏர்மணம்’ என்று பாடங்கொண்டு மணம் என்பதனை ஆகுபெயராக்கி, மணமுள்ள மலர்கள் என்று பொருள் கொண்டனர். கூந்தலுக்கு மலர் முடித்தல் இயற்கை என்பது ஒன்றனைமட்டும் கருதி இவ்வாறு பொருள்கொண்டனர் போலும். இது வலிந்து கொள்ளப்பட்ட ஒருபொருள் என்பது எளிதிற்புலப்படும்.
நான் கொண்டுள்ள பாடம் ‘எருமணம்’ என்பது. இதற்குச் செங்கழுநீர் என்ற பொருள் உண்டென்பது பிங்கலந்தையால் அறியலாம்.
அரத்த முற்பலம் செங்குவளை யெருமணம்
கல்லாரமுஞ் செங்கழுநீரும் அதன் பெயர்
இது மரப்பெயர்த் தொகுதியில் கண்ட சூத்திரம். அச்சுப்பதிப்பில் இச்சூத்திரம் வேறுபட்டுக் காணப்படினும், ‘எருமணம்’ என்ற பெயர் அதன் கண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கூந்தலில் பெய்து’ முடித்தற்குச் செங்கழுநீர் மலர்கொண்டு வரத் தோழியருடன் தலைவி பொழிலுக்குச் செல்வதாகக் கூறிக் குறியிடம் உணர்த்தியமை தெளிவாம். இதுவே, பொருந்திய பொருள் ‘எருமணம்’ என்பதே பாடம் என்பது மேற் கூறியனவற்றால் விளங்கும்.
இச் சொல்லின் முற்பகுதி யாகிய ‘எரு’ கன்னடத்திலும் தெலுங்கிலும் உள்ள ‘எர’ என்ற சொல்லோடு தொடர்புடையதெனத் தோன்றுகிறது. இம்மொழிகளில் இது ‘சிவப்பு’ என்று பொருள்படும்.
இக் குறுந்தொகைச் செய்யுளின் பொருள்,
நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற் கெஃகம்.
தந்தீ வரன்புலி யூரனையாய் தடங்கண் கடந்த.
இந்தீ வரமிவை காண்நின் இருள்சேர் சூழற்கெழில்சேர்.
சந்தீ வரமுறியும் வெறிவீயும் தருகுவனே. (163).
என்று வரும் திருக்கோவையார்ச் செய்யுளில் ஒருவாறு அமைந்துள்ளமை காணலாம்.
$$$