-எஸ்.எஸ்.மகாதேவன்

6. பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்…
ஒரு கல்யாண வீடு என்றால், மணப்பெண்ணின் தோழிகள் மணப்பெண்ணை மணமகனின் பெயரைச் சொல்ல வைத்து மகிழ்ச்சியால் கைகொட்டி ஆரவாரம் செய்வார்கள். ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தில் கூட இப்படி ஒரு காட்சி வந்தது என்பதாக ஞாபகம். மடசாமி, மடசாமி என வேண்டுமென்றே மணமகனின் பெயரை தோழிகள் தவறாக உச்சரிப்பார்கள்; பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் மணப்பெண், “மா ட சா மி!” என்று உரத்த குரலில் சரியாக உச்சரித்துக் காட்டி மாட்டிக் கொள்வார்! 1950களில் சினிமா கொட்டகையே சிரிப்பால் அதிரும்.
கல்யாண வீட்டில் தான் என்றில்லை; கணவன் பெயர் சொல்லாத விரதம் அன்றாட வாழ்க்கையில் அழகான காட்சிகளை அரங்கேற்றுவது உண்டு. என் கேள்வி ஞானம் இது:
திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதையில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் என்று அடுத்தடுத்து மூன்று ரயில் நிலையங்கள். 1940களில் ஒரு நடுத்தர வயது ஊரகப் பெண்மணி “சீவண்டத்துக்கும் நாயரத்துக்கும் ஊடால உள்ள கெடிக்கு (ஸ்டேஷனுக்கு) ஒரு துண்டு குடுங்க ” என்று பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுப்பவரிடம் கேட்டார் என்றால், அவர் ஆழ்வார்திருநகரிக்கு போக டிக்கெட் கேட்கிறார் என்று அர்த்தம். கணவர் பெயர் ஆழ்வார் என்பதால் அந்தப் பெயரை உச்சரிக்க மாட்டார். முகத்தில் இளநகை தவழ ரயில்வே அலுவலர் டிக்கெட் கொடுத்தார்.
ஆர அமர டிக்கெட் எடுத்து ரயில் பயணத்தைத் திட்டமிடுகிற போதுதான் என்றில்லை… அவசர அடியான சம்பவத்திலும் விரதம் தவறுவதில்லை. முந்தைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறை அம்மா, “காளை மாடு ஓடியாருது… தலயால முட்டிடப் போவுது, சாக்கிரதை…!” என்று பிள்ளைகளை வேகவேகமாக உஷார்படுத்துகிறார் என்றால் அவரது கணவர் பெயர் கொம்பையா என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்வில் தனக்கு உரியவர் மீது இதுபோல மரியாதை காட்டுவது காலநடையில் அவருடைய அருமையை உணரச் செய்கிறது என்பதுதான் இதில் சூட்சுமம் போலிருக்கிறது. சித்த மருத்துவத்தில் ‘வசம்பு’ என்ற மூலிகை வேரை பெயர் குறிப்பிட்டு சொல்வதில்லை. பெயர் சொல்லாதது என்றே அதை அழைப்பார்கள். அவ்வளவு அருமையான மருந்துச் சரக்கு அது. தாம்பூலத்தில் கூட வெற்றிலை, பாக்கு என்று பட்டியலிடுகிறவர்கள் மூன்றாவது என்று சுண்ணாம்பைக் குறிப்பிடுவார்கள். இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் ஒருவேளை சுவாரசியமான தகவல் கிடைக்கலாம். அது இருக்கட்டும்.
நாடாளுமன்றத்திலோ சட்டப் பேரவையிலோ தொடர்ந்து விதிமீறல் செய்யும் உறுப்பினரை எச்சரிக்கை செய்ய பெயர் குறிப்பிட்டு விடுவேன் (ஐ வில் ஹாவ் டு நேம் யூ) என்று சபாநாயகர் சொல்லிக் கண்டிப்பது உண்டு. இங்கே பெயர் குறிப்பிடுவது உறுப்பினரின் நற்பெயருக்கு களங்கம் என்று ஆகிறது. இதுவும் இருக்கட்டும்.
பார்த்துப் பார்த்து பிள்ளைகளுக்கு பெற்றோர் பெயர் சூட்டுகிறார்கள். தாத்தாவின் பெயர் தாங்குகிற பேரனுக்குப் பெயரன் என்பதே சரியான பெயராம். மரியாதையால் தாத்தா பெயர் சொல்வதைத் தவிர்த்து, பெயர் சொல்லி அழைப்பதற்காகவே குழந்தைகளுக்கு செல்லப் பெயர் சூட்டுகிறார்கள். மக்கள் பெயர் வைப்பதில் வீட்டு அளவு காரணம் மட்டுமல்ல, நாட்டு அளவு காரணமும் பெரும் பங்கு வகிக்கிறது. பெருமதிப்புக்குரிய டாக்டர் மன்மோகன் வைத்ய நாடு நெடுகச் சுற்றி வரும்போது குடும்பங்களில் பெயர் சூட்டல்கள் சொல்லும் சேதியைப் பட்டியலிடுகிறார்:
# ஒரு கர்நாடகா குடும்பம் குஜராத்தில் வசித்து வந்தது. குடும்பத் தலைவருக்கு இரு புதல்விகள். புதல்விகளின் பெயர்கள் சிந்து, சரயு. சரயு நதி கர்நாடகா மாநிலத்தில் இல்லை. அதேபோல, சிந்து நதி இன்றைய பாரதத்தில் இல்லை; பாகிஸ்தானில் உள்ளது. (பாரதத்திற்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதால் பாகிஸ்தானில் ஓடும் நதியை நீங்கள் உங்கள் குழந்தைக்கு வைக்க முடியாது என்று அவரை யாரவது மிரட்ட முடியுமா?)
# குஜராத் மாநிலம், கர்ணாவதி நகரில் இஸ்ரோ அமைப்பில் பணி புரியும் ஒரு அதிகாரியின் மகள் பெயர் காவேரி. அவரோ உத்தரப் பிரதேசம், அயோத்தியைச் சேர்ந்தவர்.
# குஜராத்தில் பாவ்நகரின் ஒரு குடும்பத்தார் தங்கள் மகளுக்கு சூட்டிய பெயர்: ஜீலம்! (பஞ்சாபில் ஓடும் நதியின் பெயரே தான்).
# விதர்ப வட்டாரக் குடும்பத்தில் ஒரு தம்பதி தங்கள் மகளுக்கு ‘ராவி’ (பஞ்ச நதியில் மற்றொன்று) என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த விஷயங்கள் அனைத்தும் மிகவும் சகஜமாகவும் மகிழ்ச்சியுடனும் நடந்து கொண்டிருக்கின்றன, இதன் பின்னணியில் உள்ளது கலாச்சார தேசியம் என்று முத்தாய்ப்பு வைக்கிறார் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத இணை பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் மன்மோகன் வைத்ய.
தமிழ் மண்ணில், நதிகள் மக்களால் புனிதமாகப் போற்றப்படுவது ஒருபுறம் என்றால் சென்னை மக்களுக்கு பாலாற்றுத் தண்ணீரை எடுத்துச் செல்ல விட மாட்டேன் என்று பேசிய ஒரு திமுக வியாபாரியும், சிறுவாணித் தண்ணீரை பிற மாவட்டங்களுக்கு அனுப்ப மறுத்த அதிமுக வியாபாரியும் நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். என்றாலும்…
நம்மால் மறக்க முடியுமா? சென்ற ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்த, ஆனால் நம் நினைவை விட்டு அகலாத இராம.கோபாலன், “குழந்தைகளுக்கு சிந்து என்று பெயரிட்டு அழையுங்கள்” என்று தமிழ்க் குடும்பங்களுக்கு எடுத்துச் சொல்வதை பல பத்தாண்டுகளாக ஒரு இயக்கமாகவே நடத்தி வந்தார் (புகழ்பெற்று வரும் ஆன்மிகச் சொற்பொழிவாளரும் இசைக் கலைஞருமான சிந்துஜா சந்திரமௌலிக்கு அவர் சூட்டிய பெயர்தான் பெயர் பெற்று வருகிறது). ஏன் சிந்து?
காரணம் உண்டு. “1947ல் நடைபெற்ற தேசப் பிரிவினை செயற்கையானது. என்ன ஆனாலும் சரி, அது ஒழிக்கப்பட வேண்டும், ஒழிந்தே தீரும்!” என்று மகரிஷி அரவிந்தர் ஆணித்தரமாக சொன்னார் அல்லவா, அப்படி அகண்ட பாரதம் அமையும்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிற பகுதியில் பாய்ந்து கொண்டிருக்கிற சிந்து நதி ஹிந்துஸ்தானத்தில் பாயும் என்ற காட்சி அனைவர் மனதிலும் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும் என்பது இராம.கோபாலன் கருத்து.
ஒருமைப்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் நதி வலைப்பின்னல் போல நம் கலாச்சார தேசியம் நிலவியல் ரீதியிலும் பரந்து விரிந்து திகழ்கிறது. பாருங்களேன்:
52 சக்தி பீடங்களில் ஒன்றான ஹிங்லாஜ் மாதா அம்மன் கோயில், நான்கானா சாஹிப் குருத்வாரா இன்றைய பாகிஸ்தானில்; 52 சக்தி பீடங்களில் பிறிதொன்றான டாகேஸ்வரி அம்மன் கோயில் இன்றைய பங்களாதேஷில்; பசுபதிநாத் கோயில், சீதா மாதாவின் பிறப்பிடமான ஜனக்புரி ஆகியவை இன்றைய நேபாளத்தில்! ராமாயணம் தொடர்பான எத்தனையோ இடங்கள் இன்று இலங்கையில். அதேபோல, பிரம்மதேசம் (மியான்மர்), இலங்கை, திபெத், பூடான் போன்ற பகுதிகளில் வாழும் பௌத்தர்களின் புனிதத் தலங்கள் பாரதம் நெடுக உள்ளன.
பாரதியர்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக (இன்று சீனப் பகுதியான) கைலாஸ்-மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டு வருவது சமய மரபு மட்டுமல்ல, அது தேசிய ஒருமைப்பாட்டுக்கான காலாவதி ஆக முடியாத கம்பீரமான ஆவணம்.
(நினைவுகள் தொடரும்)
$$$