-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
18. அளவில்லாக் கருணையாளன்
.
த்வமேகோ லோகானாம் பரமபலதோ திவ்யபதவீம்
வஹந்தஸ் த்வன்மூலாம் புனரபி பஜந்தே ஹரிமுகா://
கியத்வா தாக்ஷிண்யம் தவ சிவ மதாசா’ ச கியதி
கதா வா மத்ரக்ஷாம் வஹஸி கருணாபூரித த்ருசா’//
.
நீரொருவர் மட்டுமே நிறைபயன் தரவல்லர்
நினைவேண்டி அரிமுதலார் தொடரேற்றம் பெறுகின்றார்
அண்டியவர்க் கருள்கின்ற நின்கருணை அளவிலது
என்னவாவும் அளவிலது நின்பார்வை காப்பென்றே?
.
வேண்டிக் கொள்பவர்களுக்கு நிறைவான பலனைத் தரவல்லவர் சிவபெருமான் ஒருவர் மட்டுமே என்கிறார் ஆதிசங்கரர். மற்ற தெய்வ வடிவங்கள் தரும் வரங்களில் எல்லாம் விட்ட குறை, தொட்ட குறை இருக்கத்தான் செய்யும். ஆனால், நிறைவான இறைவடிவான சிவபெருமானின் அருளும் நிறைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட மகேஸ்வரனிடம் பெற்ற வரங்கள் மூலம் உயர்ந்த தெய்வீகப் பதவிகளைப் பெற்ற விஷ்ணு போன்றவர்கள், மேலும் மேலும் தாங்கள் உயர்வு பெறவும் சிவபெருமானையை அண்டி வரம் கேட்கிறார்கள். ஏனெனில், சிவபெருமானின் கருணை அளவில்லாதது. அதே அளவுக்கு எளிய பக்தனாகிய எனது ஆசைகளும் அளவில்லாதவையே. இவற்றைத் தீர்த்து என்னைத் தடுத்தாட்கொள்ள இறைவா, உனது பார்வைக் காப்பை (ரட்சணையை) எனக்கு எப்போது தரப்போகிறாய்? என்று கேட்கிறார் ஆதிசங்கர பகவத்பாதர்.
விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ கிருஷ்ணர், தமது ருத்ர பக்தியால்தான் உலகை வியாபித்திருக்கிறார் (ருத்ரபக்த்யா து க்ருஷ்ணேன ஜகத்வ்யாப்தம் மஹாத்மனா) என்றும், பத்ரிகாசிரமத்தில் கிருஷ்ணர், பொன்போன்ற கண்களையுடைய சிவபெருமானை தமது தவத்தால் மகிழ்வித்து, அவரிடமிருந்து எல்லா உலகங்களுக்கும் எல்லா விஷயங்களைக் காட்டிலும் அதிகப் பிரியமாயிருக்கும் தன்மையைப் பெற்றுள்ளார் என்றும் பிதாமகர் பீஷ்மர், மகாபாரதம் அனுசாசன பர்வத்தில் இடம்பெற்றுள்ள சிவ சஹஸ்ரநாமத்தில் எடுத்துரைத்துள்ளார். ‘சிவனே, உன்னை வணங்கித்தான் ஹரி முதலானவர்கள் தொடர்ந்து உயர்வடைந்துள்ளனர்’ என்று ஸ்ரீ ஆதிசங்கரர் கூறியிருப்பதை இதனோடு ஒப்புநோக்க வேண்டும்.
$$$