சிவகளிப் பேரலை- 17

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

17. பாதமே கதி

.

பலாத்வா புண்யானாம் மயி கருணாயா வா த்வயி விபோ

ப்ரஸன்னேsபி ஸ்வாமின் வதமல பாதாப்ஜ யுளம்/

ம் பச்’யேயம் மாம் ஸ்தயதி நமஸ்ஸம்ப்ரம ஜுஷாம்

நிலிம்பானாம் ச்’ரேணிர்நிஜ கனக மாணிக்ய மகுடை://

.

புண்ணியத்தின் பலனாலோ பெருங்கருணைப் பேறாலோ

என்னெதிரே நீவரினும் திருவடியைக் காண்பேனோ?

உன்னிடத்து வரம்வேண்டி உறுதேவர் கூட்டத்தின்

பொன்மணி மகுடங்கள் பெருந்தடை ஆகினவே.

.

     இறைவனது திருவடி தரிசனம், எல்லாவித பாவங்களையும் போக்கி நம்மை உய்விக்க வல்லது. இதைத்தான் திருவள்ளுவர்,  “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது”  என்கிறார். எங்கும் நிறைந்திருக்கக்கூடிய இறைவனின் திருவடி தரிசனம், புண்ணியத்தின் பலன் காரணமாகவோ அல்லது, இறைவனது பெருங்கருணையாகிய பேறு காரணமாகவோ, பக்தனுக்குக் கிடைக்கப் பெறுகிறது. அவ்விதம் சிவபெருமானே, எனக்கு நீ தரிசனம் கொடுத்தாலும்கூட, எனது பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் தோணி போன்ற உனது திருவடிகளை என்னால் காண இயலுமா?

      ஏனெனில், எப்போதும் உன்னிடத்தே, பல்வேறு தேவர்களும் ஏதாவது வரத்தை வேண்டியபடி, உன்னைச் சுற்றி கூட்டமாக அல்லவா மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்? உமது பாதார விந்தங்களை அந்தத் தேவர்கள், நெடுஞ்சாண் கிடையாக எப்போதும் விழுந்து வணங்கிக் கொண்டிருக்கிறார்களே? அத்தகு காரணத்தால், சிவபெருமானே, எளிய பக்தனாகிய எனது கண்களில், நினது திருவடிகள் தென்படுவதற்கு அந்தத் தேவர்களின் வணங்கிய தலைகளில் விளங்குகின்ற மணிமகுடங்கள் தடையாக இருக்கின்றனவே? என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ஆயினும் “சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று நந்திப் பெருமானுக்கே கட்டளையிட்டு விலகச் செய்து, நந்தனாருக்கு திருக்காட்சி காட்டியவர் அல்லவா நம்பெருமான்? ஆகையால், அவரது பாதமே கதி என்று துதிப்போம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s