-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
5. அவையடக்கம் .
ஸ்ம்ருதௌ சா’ஸ்த்ரே வைத்யே ச’குன-கவிதா கான-பணிதௌ
புராணே மந்த்ரே வா ஸ்துதி-நடன ஹாஸ்யேஷ்-வசதுர:/
கதம் ராஜ்ஞாம் ப்ரீதிர்பவதி மயி கோsஹம் பசு’பதே
பசு’ம் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதித க்ருபயா பாலய விபோ//
.
சாத்திரம் வைத்தியம் சகுனங்கவி சங்கீதம்
சாற்றும் புராணம் மந்திரம் அபிநயம்
ஏதுமறியேன் எதில்சேர்வேன்? கோநோக்கார், உயிர்க்கோவே
யாதுமறி புகழ்நிறையே நின்கருணை காத்திடவே.
.
மிகப் பெரும் ஞானியாகிய ஸ்ரீ ஆதிசங்கரர், அவையடக்கமாய் தம்மை ஏதுமறியாதவர்போலக் காட்டிக்கொண்டு, சிவபெருமானிடத்தே கருணையை இறைஞ்சுகிறார். அவரது அவையடக்கம், பாமர பக்தர்களாகிய நம்மை நினைத்துத்தான். நமக்காக, நம்பொருட்டு, நாம் வேண்டுவதற்காகவே, தம்மை பாமரனாக உருவகித்துக்கொண்டு இந்தப் பாடலை அருளியிருக்கிறார் ஜகத்குரு.
ஸ்மிருதி எனப்படும் தர்ம சாஸ்திரங்கள், இலக்கணம் (வியாகரணம்), ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு கலைகளைக் கூறும் சாத்திரங்கள், மருத்துவ நூல்கள் ஆகியவற்றைப் பயின்ற அறிவோ, சகுனம் பார்த்தல், கவிதை இயற்றுதல், இனிமையாகப் பாடுதல் ஆகியவற்றால் பிறரைக் கவரும் ஆற்றலோ என்னிடத்தில் இல்லை. புராணக் கதைகளை மற்றவர் மனத்தில் பதியும்படி எடுத்துரைக்கும் வல்லமையோ, மந்திரப் பிரயோகங்கள் செய்யும் ஆற்றலோ, நடிப்பு, நடனம், விகடம் போன்றவற்றால் பிறருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் திறமையோ இல்லாதவன்.
இப்படி எந்தத் திறமையும் இல்லாத நான் எதில் சேர்த்தி? நிலத்தின் தலைவர்களாகிய அரசர்கள் (கோ) என்னை நோக்க மாட்டார்கள். ஆகையால் உயிர்களின் தலைவனாகிய பசுபதியே, யாதும் அறிந்தவரே (சர்வக்ஞர்), புகழ் படைத்தவரே (ப்ரதிதர்), எங்கும் நிறைந்தவரே (விபோ), ஏதுமறியாத இந்தப் பிறவியை நின் கருணையால் காப்பாற்றுங்கள் என்று நமக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
(அலைகள் தொடரும்)
$$$