-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
61. கலைமகளை வேண்டுதல்
நொண்டிச் சிந்து
எங்ஙனம் சென்றிருந்தீர் – எனது
இன்னுயிரே! என்றன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன் – கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்,
கங்குலைப் பார்த்தவுடன் – இங்கு
காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்கு வீர் அமிழ்தெனவே – அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். 1
மாதமொர் நான்காநீர் – அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் – என்றன்
பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும் என்றன்
நாவினிலே பொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர் – அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்! 2
கண்மணி போன்றவரே! இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் – சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர் – என்றன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! – இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ! 3
தானெனும் பேய்கெடவே – பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே – நல
வாய்மையி லேமதி நிலைத்திடவே
தேனெனப் பொழிந்திடுவீர்! – அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! – நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்! 4
தீயினை நிறுத்திடுவீர் – நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே – உம்மை
மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் – பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; – இனி
மறக்கிலேன், எனை மறக்ககிலீர்! 5
$$$
62. வெள்ளைத் தாமரை
ராகம் – ஆனந்த பைரவி; தாளம் – சாப்பு
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்) 1
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்) 2
வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) 3
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்) 4
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) 5
வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்) 6
ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறு நாடு;
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்) 7
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்) 8
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்) 9
நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்) 10
$$$