பாரதியின் தேசிய இயக்கப் பாடல்கள்

-மகாகவி பாரதி

மகாகவி பாரதி எழுத்தாளர் மட்டுமல்ல; தீவிர அரசியல் செயற்பாட்டாளரும் கூட. பாலகங்காதர திலகர் தலைமையிலான காங்கிரஸ் தீவிரவாதிகள் பிரிவில் மிகத் தீவிரமாக இயங்கியவர்; அதற்காக, மிதவாதிகளை (நிதானக் கட்சியார் என்று பாரதி சுட்டுவார்) கடுமையாக விமர்சித்தவர்.

தமிழகத்தில் வ.உ.சி.யுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியவர் பாரதி. தமது அரசியல் இயக்கத்துக்காக, அவர் இயற்றிய பாடல்கள் ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் ‘தேசிய கீதங்கள்’ பிரிவில் இடம்பெற்றுள்ள இக்கவிதைகளின் எண்ணிக்கை 9. இவை அவரது தேசபக்திக் கனலை வெளிப்படுத்தும் தூய கவிதைகளாக விளங்குகின்றன.

1. சத்ரபதி சிவாஜி

(தன் சைனியத்திற்குக் கூறியது)

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! 5

அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்!
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர்.
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் 10

செற்றிடுந் திறனுடைத் தீர ரத்தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததிவ் வரும்புகழ் நாடு! 15

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும் 20

நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! 25

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் 30

தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு! 35

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? 40

நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்,
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் 45

இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! 50

சாத்திரத் தொகுதியைத் தாழ்த்துவைக் கின்றார்!
கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார்!
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
கண்ணியம் மறுத்தனர்; ஆண்மையுங் கடிந்தனர்;
பொருளினைச் சிதைத்தனர்; மருளினை விதைத்தனர்; 55

திண்மையை யழித்துப் பெண்மையிங் கழித்தனர்,
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர். 60

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை 65

மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? 70

பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்.
புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் 75

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்! 80

சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க!
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் 85

பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரிதென உண்ணுவோன் செல்க!
ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன். 90

ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்! 95

மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
சோர நெஞ்சிலாத் தூயவர் இருமின்! 100

தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! 105

நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் 110

வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர்; வானக நாடுறும்!
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் 115

செற்றினி மிலேச்சரைத் தீர்த்திட வம்மீன்!
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் 120

உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்
(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ
ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும் 125

வானுறு தேவர் மணியுல கடைவோம்;
வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்!
பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ? 130

ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே;
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்.
வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை! 135

தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை!
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று 140

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
”ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன். 145

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்;
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது;
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
ஓய்வுறுங் கால்கள்; உலைந்தது சிரமமும்,
வெற்றியை விரும்பேன்; மேன்மையை விரும்பேன்; 150

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்;
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்;
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?”
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து 155

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
”புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச் 160

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய்; உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் – இன்னோர் 165

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய! நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும் 170

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக!”
என்று மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் 175

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் 180

இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம் 185

பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார். 187

(முழுமை பெறவில்லை)

$$$

2. கோக்கலே சாமியார் பாடல்

(இராமலிங்க சுவாமிகள் ‘களக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம்’ என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது)

களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
      கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
      வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ?
      மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ?
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்
      தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லரிய தாமோ?

$$$

3. தொண்டு செய்யும் அடிமை

(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது)

(நந்தனார் சரித்திரத்திலுள்ள “மாடு தின்னும் புலையா! உனக்கு
மார்கழித் திருநாளா?” என்ற பாட்டின் வர்ணமெட்டு)

தொண்டு செய்யும் அடிமை! – உனக்கு
சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ ? – அதற்கு
பாத்திர மாவாயோ? (தொண்டு)

ஜாதிச் சண்டை போச்சோ? – உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்! – கண்முன்
நிற்கொ ணாது போடா! (தொண்டு)

அச்சம் நீங்கி னாயோ? – அடிமை
ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும் – ஆசை
பேணு தலொழித் தாயோ? (தொண்டு)

கப்ப லேறு வாயோ? – அடிமை
கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே – அடிமை
கொற்றத் தவிசு முண்டோ ? (தொண்டு)

ஒற்றுமை பயின் றாயோ? – அடிமை
உடம்பில் வலிமை யுண்டோ ?
வெற்று ரைபே சாதே! அடிமை!
வீரியம் அறி வாயோ? (தொண்டு)

சேர்ந்து வாழு வீரோ? – உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ – உங்கள்
சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு)

வெள்ளை நிறத்தைக் கண்டால் – பதறி
வெருவலை ஒழித் தாயோ?
உள்ளது சொல்வேன் கேள் – சுதந்திரம்
உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு)

நாடு காப்ப தற்கே – உனக்கு
ஞானம் சிறிது முண்டோ ?
வீடு காக்கப் போடா! – அடிமை
வேலை செய்யப் போடா! (தொண்டு)

சேனை நடத்து வாயோ? – தொழும்புகள்
செய்திட விரும்பு வாயோ?
ஈன மான தொழிலே – உங்களுக்கு
இசைவ தாகும் போடா! (தொண்டு)

$$$

4. நம்ம ஜாதிக் கடுக்குமோ

(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்)

(“ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
நியாயந் தானோ? நீர் சொல்லும்?” என்ற வர்ணமெட்டு)

பல்லவி

ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியோ, சொல்லும்.

கண்ணிகள்

  1. முன்னறி யாப் புது வழக்கம் நீர்
    மூட்டி விட்ட திந்தப் பழக்கம் – இப்போது
    எந்நகரிலு மிது முழக்கம் – மிக
    இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே)

2. சுதந்திரம் என்கிற பேச்சு – எங்கள்
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு – இது
மதம்பிடித் ததுபோலாச்சு – எங்கள்
மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே)

3. வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் – அன்றி
வேறெ வர்க்குமது தியாஜ்யம் – சிறு
பிள்ளைக ளுக்கே உபதேசம் – நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே)

$$$

5. நாம் என்ன செய்வோம்.

(“நாம் என்ன செய்வோம்! புலையரே! – இந்தப்
பூமியி லில்லாத புதுமையைக் கண்டோம்” என்ற வர்ண மெட்டு)

ராகம்- புன்னாகவராளி

தாளம்- ரூபகம்

பல்லவி

நாம் என்ன செய்வோம்! துணைவரே! – இந்தப்
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோ ம். (நாம்)

சரணங்கள்

1 திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு;
பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்)

2 தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார்;
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்,
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்)

3 பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை
பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை
சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்)

4 சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார்
சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
தாமெத் தையோ ’வந்தே’ யென்று துதிக்கிறார்
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்)

$$$

6. பாரத தேவியின் அடிமை

(நந்தன் சரித்திரத்திலுள்ள ”ஆண்டைக் கடிமைக்காரன் அல்லவே” என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதியது)

பல்லவி

அன்னியர் தமக்கடிமை யல்லவே – நான்
அன்னியர் தமக்கடிமை யல்லவே.

சரணங்கள்

1 மன்னிய புகழ் பாரத தேவி
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)

2 இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்)

3 வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்
ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்)

4 காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்
பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்)

5 காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம்
பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)

$$$

7. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று

ராகம்- தாண்டகம்

தாளம்- ஆதி

1 நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் – கனல் – மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் – வலி -காட்டுவேன். (நாட்டி)

2 கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய், – எமை – தூஷித்தாய்,
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய் – பொருள் – ஈட்டினாய் (நாட்டி)

3 கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய் – சட்டம் – மீறினாய்,
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய் – வீரம் – பேசினாய் (நாட்டி)

4 அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் – புன்மை – போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய் – ஆசை – ஊட்டினாய் (நாட்டி)

5 தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய் – புகழ் – வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய் – சோர்வை – ஓட்டினாய் (நாட்டி)

6 எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் – விதை – தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ – நீங்கள் – உய்யவோ? (நாட்டி)

7 சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் – குத்திக் – கொல்லுவேன்
தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன் – பழி – கொள்ளுவேன். (நாட்டி)

$$$

8. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் – இனி – அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? – தெய்வம் – பார்க்குமோ? 1

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் – முடி – தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? – அவ – மானமோ? 2

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ? – நாங்கள் – சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? – உயிர் – வெல்லமோ? 3

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? – பன்றிச் – சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? – இத்
நீதமோ – பிடி – வாதமோ? 4

பார தத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ – மனஸ் – தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ – இதில் – செற்றமோ? 5

ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம் – நன்கு – தேர்ந்திட்டோ ம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
மலைவு றோம் – சித்தம் – கலைவுறோம். 6

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ – ஜீவன் – ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ – நெஞ்சம் – வேகுமோ? 7

$$$

9. நடிப்பு சுதேசிகள்
(பழித்தறிவுறுத்தல்)

கிளிக்கண்ணிகள்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி. 1

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! – கிளியே!
நாளில் மறப்பா ரடீ! 2

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? – கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ? 3

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! – கிளியே!
பேசிப் பயனென் னடீ! 4

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் – கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ! 5

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! – கிளியே!
செய்வ தறியா ரடீ! 6

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் – கிளியே!
நம்புத லற்றா ரடீ! 7

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் – கிளியே
பேணி யிருந்தா ரடீ! 8

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் – கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ! 9

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ – கிளியே
ஊமைச் சனங்க ளடீ! 10

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் – கிளியே
வாழத் தகுதி யுண்டோ? 11

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? 12

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! – கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்! 13

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! – கிளியே!
பாமர ரேதறி வார்? 14

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
சிறுமை யடைவா ரடீ! 15

சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!
செம்மை மறந்தா ரடீ! 16

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ! 17

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா – கிளியே!
வந்தே மாதர மென்பார்! 18

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s