-மகாகவி பாரதி

உலகத்தில் உள்ள பெரிய கட்டிடங்களுக்கெல்லாம் “இடிவிழுங்கி” என்ற பாதுகாப்பு விசேஷம் வைப்பதுண்டு. அதாவது அந்தக் கட்டிடங்களின் சிகரங்களின் மேல் ஒரு முழ நீளம் கூர்மையாயுள்ல தாமிர (செம்பு)க் கம்பியொன்று வைத்து, அதை அங்கிருந்து கொண்டுபோய்த் தரையிலாவது, கிணற்றிலாவது அதன் ஒரு நுனியை விட்டு வைப்பது வழக்கம்.
உன்னதக் கட்டிடங்கள் மேக மண்டலத்துக்கு சமீபமாயிருப்பதால் அவற்றின் மேல் மின்னல் (இடி) பாய்ந்து கட்டிடங்களை சேதப்படுத்தி விடும். அதற்கு இந்த இடிவிழுங்கி வைத்துவிட்டால், கட்டிட சிகரத்தைக்காட்டிலும் உன்னதத்தி லிருப்பதால் முதலில் அதன்பேரில் எவ்வளவு பலமாக மின்னல் (இடி) பாய்ந்த போதிலும் இந்த (இடிவிழுங்கி) செப்புக்கம்பி வழியாய் பூமியில் ஓடி விடுகிறது. கட்டிடத்திற் கொன்றும் அபாயமே யில்லை.
இந்தச் சித்திரத்தில் அபிநவ பாரத ஸ்வராஜ்யக் கட்சி எனும் கட்டிடத்தின் நுனியில் ஸ்ரீமான் அரவிந்த கோஷ் “ஓர் இடிவிழுங்கி”யாய் விளங்குகிறார். இந்தியாவில் பிரிடிஷ் தன்னரசின் பட்சம் எனும் மேகத்திலிருந்து பற்பல விதமாய் அந்தக் கட்டிடத்தின் பேரில் ராஜ விச்வாஸ மிதவாதிகள், போலீஸ் புலிகள், பிரிடிஷ் அதிகாரிகள், ஆனி பீஜாண்ட்பாய் (பெஸாண்ட்), ஆங்கிலோ-இந்திய பத்ரிகைகள் முதலான இடிகள் வீழ்ந்து அந்த ஸ்வராஜ்யக் கட்சியை நாசமாக்கப் பார்க்கின்றன.
தெய்வீகத் தலைவரான ஸ்ரீமான் அரவிந்த கோஷ் அவற்றை யெல்லாம் விழுங்கி ஜாதீய முயற்சியைக் கைக்கொண்டிருக்கும் பாரத ஸ்வராஜ்யக் கட்சியாரைக் காத்து மஹா தேஜஸ்வியாய் விளங்கி வருகிறார். மற்றவை வெளிப்படை.
-இந்தியா (04.12.1909)
$$$