-மகாகவி பாரதி
மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே.
அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் தொடக்கம். இங்கு இந்தியா (27.04.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது…

20 வருஷ காலமாக நமது காங்கிரஸ் வெகு ஸமாதானமாகப் பிரதிவருஷமும் கூடி, ராஜாங்க நடத்தைகளைப் பற்றியும் மற்ற நன்மைகளைப் பற்றியும் ஆலோசித்துக் குறைகள் அனைத்தையும் எடுத்துக்காட்டி விண்ணப்பப் பத்திரிகைகள் ராஜாங்கத்தாருக்கு விடுத்து வந்தது.
இடைவழியில் சிலர் அவ்வகையான விண்ணப்பமெழுதும் முறைமை சிறிதும் பயன்படாததைச் சீக்கிரம் உணர்ந்து இனி அந்த வழியில் செல்லுதல் பயனில்லை என்று தீர்மானித்து ‘நமக்கு நாமே துணை’ என்னும் கோட்பாட்டைப் பற்றியொழுக ஆரம்பித்தனர். அவர்கள்தாம் புதுக் கட்சியார். அதன் தலைவர் திலகர், விபின பாலர் முதலியவரே.
பழங்கட்சியையே அனுஸரித்து வருபவர் கோகலே, மேத்தா முதலியவராவர்.
இப்போது வரைந்திருக்கும் சித்திரத்தில் இருக்கும் வண்டியானது காங்கிரஸை உணர்த்துகிறது. அதில் பூட்டியிருக்கும் இரண்டு காளைகளில் ஒன்று புதுக்கட்சியைச் சேர்ந்தவரையும், மறறொன்று விண்ணப்பமெழுதும் பழங்கட்சிக்காரரையும் உணர்த்துகின்றன.
அதாவது, ஒன்றைப் பாலகங்காதர திலகராகவும், மற்றொன்றை மேத்தாவாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவை இவ் வண்டியை ‘ஸ்வராஜ்யம்’ என்னும் இடத்தை நாடி இழுத்துச் செல்லுகின்றன.
திலகருடன் ஈடுகொடுக்க முடியாமல் தட்டுக் கெட்டுத் தடுமாறி இடைவெழியில் மேத்தா என்கிற காலை படுத்துக் கொண்டு நகர முடியாமல் கையில் பேனா எடுத்துக் கொண்டு விண்ணப்பம் எழுத ஆரம்பித்து விட்டது.
திலகரைக் குறிக்கும் காளையோ அதிக உற்சாகத்துடனும் இறுமாப்புடனும் தலைநிமிர்ந்து ஸ்வராஜ்யமாகிய இடத்தைக் கண்டு முக்காரம் போடுகிறது.
-இந்தியா (27.04.1907)
$$$