-சுவாமி அபிராமானந்தர்

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியான அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்த மகராஜ் அவர்களின் மூன்றாவது ‘விவேகானந்தம்’ கட்டுரை இது….
சுவாமி விவேகானந்தர் மகத்தானதொரு வாழ்க்கையினை இவ்வுலகில் வாழ்ந்து நிரந்தரமான ஒரு சுவட்டினை ஏற்படுத்திச் சென்றுள்ளார்.
‘நீ இவ்வுலகிற்கு வந்துள்ளாய். அதற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல். இல்லையென்றால் உனக்கும் இந்த மரங்களுக்கும் கற்களுக்கும் என்ன வித்தியாசம்? அவைகளும் பிறக்கின்றன, இறக்கின்றன’ என்று சுவாமிஜி கூறுகிறார்.
அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களில் நாம் கற்க வேண்டியவை ஏராளம். அவற்றுள் ஒரு சிலவற்றை இப்போது காண்போம்.
1. பாலகனாக…
ஒரு தாய் தன் குழந்தையை வளர்க்கும் விதத்தைப் பொறுத்தே அந்த குழந்தையின் எதிர்காலமானது பெருமளவில் நிர்ணயிக்கப்படுகிறது. சிறு வயதில் நரேன் தாயிடமிருந்து கற்றவை ஏராளம். ‘வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் நான் என் தாய்க்கு கடமைப்பட்டுள்ளேன்’ என்று பின்னாளில் சுவாமிஜி கூறுவதுண்டு.
முனிவர்கள், தேவ தேவியர், தியாகச் செம்மல்களின் வரலாறு, காவிய இதிகாச நாயகர்கள் மற்றும் இந்திய கலாச்சாரம் பற்றி பல்வேறு பாடங்களை தாயிடமிருந்து பெற்றார் நரேன். ராமாயண, மகாபாரதக் கதைகள் அவர் மனதில் நீங்காத இடம் பெற்றன.
சிறு வயதிலேயே ஒரு சுவையான சம்பவம்:
எல்லா தெய்வங்களிலும் நரேனுக்கு மிகவும் பிடித்திருந்தது சிவபெருமானைத் தான். அனைத்தையும் துறந்து தியாகத்தின் வடிவமாக அவர் வீற்றிருந்தது அவர் மனத்தை மிகவும் கவர்ந்தது. சில வேளைகளில் அவர் துணிகளையெல்லாம் எறிந்துவிட்டு கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு திரிவார். இதைக் கண்ட அவனது தாய், ‘எங்கே இவன் துறவியாகிவிடுவானோ’ என்று கவலைப்படுவார்.
ஒரு நாள் அவர், ‘நரேன் இது என்ன கோலம்’ என்று கேட்டுவிட்டார். உடனே ‘பார், நான் சிவனாகிவிட்டேன், நான் சிவனாகிவிட்டேன், நானே சிவன்’ என்றார் அவர். யோகிகள் உச்சரிக்கும் ‘நானே சிவன்’ (சிவோஹம்) என்ற மந்திரத்தை உணர்ந்தோ உணராமலோ, ஆனால் குழந்தைப் பருவத்திலேயே அவர் அந்த மந்திரத்தின் தாத்பரியத்தை அனுபவித்து வந்தார்.
பாலக வயதில் அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு தியானமே. வெகுவிரைவில் அவர் தியானத்தின் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை அவர் தனது நண்பர்களுடன் தியானம் செய்துகொண்டிருந்தபோது அங்கு ஒரு கருநாகம் வந்துவிட்டது. எல்லோரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர், நரேனைத் தவிர. அவர் மட்டும் ஆடாமல் அசையாமல் தியானத்தில் மூழ்கியிருந்தார். பாம்பும் போய்விட்டது. ‘பாம்பு வந்தவுடன் ஏன் நீ ஓடவில்லை’ என்று அவரிடம் கேட்டதற்கு, ‘நான் பாம்பைப் பார்க்கவில்லை, அது வந்ததும் தெரியாது, ஆனால் ஒரு அற்புதமான ஆனந்தத்தை என் மனத்தில் அனுபவித்துக் கொண்டிருந்தேன்’ என்று பதிலளித்தார்.
ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை அவரது தாயிடமிருந்து கேட்டதால் சமஸ்கிருதத்தில் இயல்பாகவே அவருக்கு நாட்டம் இருந்தது. சிறு வயதிலேயே சமஸ்கிருதத்தில் அபாரத் தேர்ச்சி பெற்றார்.
ஒருநாள் புவனேஸ்வரி நரேனிடம், ‘அப்பா, என்றும் தூயவனாக இரு. சுயமதிப்புடன் நடந்துகொள். அதேவேளையில் பிறரது சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழக் கற்றுக்கொள். மென்மையானவனாக, சமநிலை குலையாதவனாக இரு. ஆனால் தேவைப்படும்போது உன் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளவும் தயங்காதே’ என்று கூறினார். இது நரேனின் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் பாடமாக இருந்தது.
மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நரேன் அப்படி எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அது உண்மை என்று தான் உணர்ந்த பிறகு தான் ஏற்றுக்கொள்வார்.
அவர் சிறுவர்களுடன் மரத்தின் மீது ஏறி விளையாடியதும், ஒரு வயதானவர் அந்த மரத்தில் பேய் ஒன்று இருப்பதைச் சொல்லியதும், அதற்கு நரேன் நடந்துகொண்ட விதமும் அனைவரும் அறிந்ததுதான். சிறு வயதில் நரேன் தன் உயிரையும் பணயம் வைத்து மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிய சம்பவங்கள் பல உண்டு.
நரேன் ஒரு தெய்வப் பிறவி என்பதைக் காட்டும் ஒரு நிகழ்ச்சி இது:
சிறு வயதிலேயே அவருக்கு நிறைய தெய்வீகக் காட்சிகள் கிடைக்கும். அவர் இரவில் படுத்து கண்களை மூடியதும் அவரது புருவங்களின் மத்தியில் ஒரு ஒளித் தோன்றும். அது பல வண்ணங்களை இரைத்தபடி படிப்படியாக பெரிதாகும். பிறகு அது வெடித்து அவரது உடம்பை முழுக்காட்டும். சில நேரங்களில் அந்த ஒளி அவரை நோக்கி வந்தவுடன் அதில் ஒன்றிவிடுவார். சில வேளைகளில் அதில் கரைந்தும்விடுவார்.
இது எல்லோருடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சி என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் இது எல்லோருக்கும் நடப்பதல்ல என்று பின்பு உணர்ந்த அவர் இதைப்பற்றி யாரிடமும் பேசவில்லை.
இவ்விதம் பாலக வயதில் நரேனுக்கு தாயிடம் நிறைந்த பக்தி, அவர் சொல்வதை மனத்தில் வைத்து நடத்தல், இறை பக்தி, மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு, ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை போன்றவை இயல்பாகவே அமைந்திருந்ததைக் காணலாம்.
2. சத்திய நாட்டமுடைய இளைஞன்
பொதுவாக வாலிப வயதில் அனைவரும் புற இன்பங்களை நாடி அலைவர். ஆனால் நரேனோ அக சம்பந்தமான நாட்டத்தையே கொண்டிருந்தார்.
1880 ஜனவரியில் தமது 17-ஆம் வயதில் நரேந்திரர் பிரசிடென்ஸி கல்லூரியில் முதற்கலைப் பிரிவில் சேர்ந்தார். கல்லூரியில் படித்துகொண்டிருந்தபோதே தமக்குரிய பாடங்களைத் தவிர்த்து, நியாயம், தத்துவம், இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெறுவதற்காக அவர் தீவிர முயற்சிகள் எடுத்துக்கொண்டு, அதில் மகத்தானதொரு வெற்றியையும் அடைந்தார். பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்துகொண்டிருந்தபோது சட்டத்துறையில் அவர் சேர்ந்தார். அறிவு தாகம் தீவிரமாக இருந்தது.
எப்.ஏ. பாடங்களை படிக்கும்போதே பி.ஏ.க்கான பாடங்களைப் படித்து முடித்திருப்பார். இதைத் தவிர்த்து மற்ற மேலைநாட்டு அறிஞர்களின் நூல்களை படிப்பதிலும் ஆர்வம் செலுத்தினார்.
இலக்கியத்தில் குறிப்பாக சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள காவியங்களைப் படித்தார். இதைத் தவிர இசையில் ஆர்வம் கொண்டு அதில் ஒரு மேதையாகவே திகழ்ந்தார். இத்துடன் மற்றவர்களுக்கு உதவுகின்ற உள்ளத்தை இவர் பெற்றிருந்தார். தன்னுடைய சக்தியையும் மீறி தமது நண்பர்களுக்கு அவர் உதவுவார்.
அக்காலக்கட்டத்தில் இந்து சமுதாயம் பின்தங்கியிருந்தது. பல மூட நம்பிக்கைகளின் கூடாரமாகவும் இருந்தது. தமது மதத்தைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலான இந்துக்களுக்குக் கிடைக்கவில்லை. இதனை சாதகமாக்கிக்கொண்டு கிறிஸ்தவ மிஷனரிகள் தங்களால் இயன்ற அளவிற்கு இந்துக்களையும் அவர்களின் பண்பாட்டையும் குறைகூறி பெருமளவில் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முழு ஆற்றலையும் செலவிட்டனர்.
இந்து சமுதாயம் இவ்வாறு இருக்கும்போது அன்றைய கல்கத்தாவில் பிரம்ம சமாஜம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உருவக் கடவுளை மறுத்து உருவமற்ற குணங்களுடன் கூடிய கடவுளின் கொள்கைகளை இது ஆதரித்தது. பல சமூக சீர்திருத்தங்களையும் கொண்டுவர முற்பட்டது.
அப்போது பிரம்ம சமாஜத்தின் தலைவராக கேசவ சந்திரர் இருந்தார். அவர் மிகச் சிறந்த சொற்பொழிவாளர். அவரது பேச்சால் அன்றைய இளைஞர்கள் மிகவும் கவரப்பட்டனர். நரேந்திரனும் அதில் ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் பிரம்ம சமாஜத்தில் தீவிரமாக இவர் இருந்தாலும் அவற்றையும் தாண்டி உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவல் இவரிடம் கொழுந்துவிட்டு எரிந்தது.
இறைவனாகிய சத்தியப் பொருளை அடைய வேண்டுமானால் தவம், ஸ்வாத்யாயம், இறைவனிடத்தில் சரண்புகுதல் ஆகிய மூன்றும் தேவை. இம்மூன்றும் நரேந்திரரிடம் இயல்பாகவே இருந்தது. பிரம்மச்சரியத்தில் அவர் பூரணமாக நிலைபெற்றிருந்தார். வாலிப வயதில் தம்மிடம் ஈர்க்கப்பட்டு வந்த ஒரு இளம் மங்கையை தாயாக பாவித்து அவளது மனத்தை தூயதாக்கி அவளைத் திருப்பி அனுப்பினார்.
‘என்னிடம் நீ மரியாதையையும் விசுவாசத்தையும் எப்படிக் காட்ட வேண்டும் தெரியுமா? உன் தூய வாழ்க்கையின் மூலம்தான்’ என்று அவரது அன்னை புவனேஸ்வரி தேவி கூறியிருந்ததிற்கேற்ப அவர் வாழ்ந்து காட்டினார்.
அவருடைய புனிதம் வாலிபத்திலேயே வெளிப்பட்டது. ஒருமுறை நாடகம் நடைபெற்ற இடத்தில் ஓரிரு பாடல்களை பிரபல நாடக ஆசிரியரான கிரீஷ் கேட்டுக்கொண்டதற்கேற்ப பக்தியுடன் பாடினார். பக்கத்தில் அறையிலிருந்து நடிகைகள் இதைக் கேட்டதும் ஒருவித பக்தியும் பயவுணர்வும் அவர்களிடம் தோன்றின. அவர் அங்கிருந்து சென்ற பிறகு கிரீஷிடம், ‘அவரைப் போன்றவர்களை இங்கே ஏன் அழைத்துவர வேண்டும்?’ என்று கடிந்துகொண்டனர்.
வாலிப வயதில் அவர்முன் இரண்டு லட்சியங்கள் தோன்றும். ஒன்று, இல்லற வாழ்விலிருந்தபடி ஒரு ராஜ்யத்திற்கு அரசனாக இருப்பது போன்ற தோற்றம். மற்றொன்று, கையில் எதுவுமின்றி இறைவனையே சார்ந்தபடி பிட்சை ஏற்று வாழும் ஒரு துறவி வாழ்க்கை. இதைப் பற்றி அவர் சிந்திக்க சிந்திக்க முதலாவது சித்திரம் அவர் கண்முன் மறைந்து இரண்டாவது மட்டுமே அவரது மனத்தை ஆக்கிரமிக்கும். எனவே அவர் துறவறத்தையே நாடினார்.
இச்சமயத்தில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? என்ற கேள்வி அவர் முன் தோன்றியது. அதற்கான விடையைத் தேடி பல இடங்களில் அலைந்தார். திருப்தியான பதில் அவருக்குக் கிடைக்கவில்லை.
இறுதியில் தட்சிணேசுவரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற ஒரு மகான் இருக்கிறார். அவரால் தான் பதில் அளிக்க முடியும் என்று உணர்ந்து அவரை நாடிச் சென்றார். அது ஜனவரி 1882.
நரேனை அப்போது கண்ட குருதேவர் சத்வகுணம் கொண்ட இத்தகைய இளைஞன் கல்கத்தாவில் வாழ்கிறானா என்று ஆச்சரியப்பட்டார். பிறகு குருதேவர் சில பாடல்களைப் பாடும்படி நரேனைக் கேட்டுக்கொண்டார். பாடலைக் கேட்டு அவர் பரவசநிலை அடைந்தார். பிறகு ‘நரேனுக்கு சரஸ்வதி அருள் இருக்கிறது’ என்று கூறினார்.
பிறகு ‘நீ உறங்குவதற்கு முன்பு ஒளியைக் காண்கிறாயா?’ என்றும் கேட்டார். ‘ஆம்’ என்று கூறிய பிறகு நரேனை தனி இடத்திற்கு அழைத்துச் சென்று, ‘நீ பண்டைய ரிஷியான நர-நாராயணனின் அவதாரம்’ என்றெல்லாம் கூறினார். குருதேவர் இவ்விதம் நடந்துகொண்டது, பேசியது எல்லாம் நரேனுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் அளித்தது.
பிறகு அவர், ‘ஐயா, நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ என்று இதுநாள் வரை தம்மை அலைக்கழித்த அந்த சந்தேகத்தை குருதேவரிடம் கேட்டார். ‘ஆம் கண்டிருக்கிறேன். உன்னைப் பார்ப்பதுபோல் தெளிவாக, இன்னும் தெளிவாக’ என்று பதிலளித்தார். இதன் பிறகு அடிக்கடி நரேந்திரர் குருதேவரைச் சந்திக்க ஆரம்பித்தார்.
புதியதொரு குரு – சீடன் அத்தியாயம் எழுப்பப்பட்டது. சீடர் உடனே எல்லாவற்றையும் துறந்து குருவிடம் சென்று வாழவில்லை. குரு சொன்னதெல்லாம் உண்மை என்று உடனே சீடர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அவற்றை நன்கு ஆராய்ந்து அது உண்மை என்று அறிந்த பிறகே அதனை ஏற்பார்.
வேடிக்கை, வினோதங்களும் அங்கே இருக்கும்; அதே நேரத்தில் உயர்ந்த சமாதிநிலை நிகழ்ச்சிகளும் நடக்கும். குருதேவர் தமது சீடர்களிடம் மிகவும் கண்டிப்போடு நடந்ததில்லை. இயல்பாகவே பழகினார். சீடர்களோ தமது குருவின் மகத்துவத்தை ஆரம்பத்தில் பெரிய அளவில் உணரவில்லை என்றாலும், அவர்பால் ஈர்க்கப்பட்டு பணிவிடைகள் செய்து வந்தனர். சீடர்களில் நரேந்திரரே முதலிடம் பெற்றார்.
இவ்விதம் காலங்கள் உருண்டோடின. நரேனின் தந்தை மறைந்தபிறகு அவரது குடும்பத்தில் பல கஷ்டங்கள் ஏற்பட்டன. இருந்தாலும் அவர் தமது ஆன்மிக லட்சியத்தை விடவில்லை. விரைவில் குருதேவரின் வழிகாட்டுதலின் பேரில் ஆன்மிக நிறைநிலையை அடைந்தார். குருதேவர் தாம் மறைவதற்கு முன்பு தமது ஆன்மிக சக்திகளை நரேந்திரருக்கு அளித்தார்.
குருவின் மறைவிற்குப் பிறகு நரேந்திரர் அவரது மற்ற சீடர்களுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர்கள் அனைவரும் வராகநகரில் மடத்தை ஏற்படுத்தி கடும் தவ வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த ஈடுபாடு அனைத்திற்கும் ஊற்றுக் கண்ணாக இருந்தது நரேந்திரரே. சில காலம் கழித்து அனைவரும் சம்பிரதாய முறைப்படி சன்யாச விரதம் ஏற்றுக்கொண்டனர்.
இவ்விதம் வாலிப வயதில் நரேந்திரர் கல்வியில் சிறப்புற்றிருந்த அதேவேளையில் ஆன்மிகத்திற்கே அகத்தில் இடம் கொடுத்து வந்தார். மனத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்திய தீரர். ஆன்மிக லட்சியத்தை அடைய தக்க குருவினை அடைந்து அவர் மாபெரும் மகான் என்பதைப் புரிந்துகொண்டபிறகு படிப்படியாக அவரிடம் சரணடைந்தார். ஆன்மிகத்தில் நிறைநிலை பெற்ற பிறகு தமது குரு அவதார வரிஷ்டரே என்பதை உணர்ந்தார். பிறகு குருவின் கட்டளைக்காக தம்மையே அர்ப்பணம் செய்தார்.
3. பரிவ்ராஜக துறவி
1888-இல் அவர் வராகநகர் மடத்தைவிட்டு தீர்த்த யாத்திரை சென்றார். காசியில் இருந்தபோது ஒருமுறை அவரை ஒரு குரங்குக் கூட்டம் துரத்திய நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பெரியதொரு பாடத்தை தாம் கற்றுக் கொண்டதாக பிற்காலத்தில் அவர் சொற்பொழிவு ஆற்றுகையில் தெரிவித்தார்.
‘துன்பங்களையும் கஷ்டங்களையும் கண்டு நாம் பயந்து ஓடக் கூடாது. அவற்றை எதிர்க்கொண்டு வெற்றி அடைய வேண்டும்’ என்பதே அவர் கற்றுக்கொண்ட பாடம்.
நம்முடைய வாழ்க்கையிலும் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் அவை புகட்டும் பாடங்களை நாமும் கற்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பரிவ்ராஜகராக இந்தியாவில் பல இடங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தார். எத்தனையோ துறவிகள் பரிவ்ராஜகராக அப்போது வாழ்ந்து வந்தனர். ஆனால் இவரது வாழ்க்கையில் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவினைப் பற்றி ஒரு கேள்விக்குறி எழுந்தது.
அன்றைய காலகட்டத்தில் பாமர மக்கள் மிகவும் நசுக்கப்பட்டனர். தீண்டாமை தலைவிரித்தாடியது. அப்போது குறுநில மன்னர்கள் சுகபோகத்தின் உச்சக் கட்டத்தில் இருந்தார்கள். அவர்களிடத்தில் தேசபக்தியோ மக்கள் நலனோ காணப்படவில்லை.
இந்து மதத்தைக் கற்றவர்கள் அதன் உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. இதனால் இந்துக்களுக்கு தங்களுடைய இந்து தர்மத்தைப்பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. பஞ்சமும் ஏழ்மையும் பல இடங்களில் தலைவிரித்தாடியது.
சமாதியில் மூழ்குவதே தனது இயல்பும் நாட்டமுமாக இருந்தாலும், இந்திய நலனைப் பற்றி சுவாமிஜி ஆழ்ந்து சிந்தித்து வந்தார். மக்களின் நிலையை மாற்ற செல்வந்தகளிடமும் குறுநில மன்னர்களிடமும் தமது திட்டங்களைத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அந்தத் திட்டங்களையும் இவ்விதம் சிந்திக்கும் சுவாமிஜியையும் போற்றினார்களே தவிர, அவற்றிற்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரவில்லை.
இறுதியில் குமரிக்குச் சென்ற சுவாமிஜி தென்கோடியில் இருக்கும் கடல் நடுவில் உள்ள பாறையில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். மூன்று நாட்கள் சென்றன. பழங்கால பாரதத்தின் மகிமையும், தற்கால பாரதத்தின் அவலநிலையும், வருங்கால பாரதத்தின் மேன்மையும் அவருக்குப் புலப்பட்டதன. அதற்கு தம்மால் ஆற்ற வேண்டிய பணி என்ன என்பதும் அதற்கான வழியும் அவருக்குப் புலனாயிற்று.
இந்த பரிவ்ராஜகராக அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவர் நடந்த காலடிச் சுவடுகளளை நாம் அறிய முற்பட்டால், நமக்கு சிந்தனையில் தெளிவும் மற்றவர்களது துன்ப நிலையைக் கண்டு உதவி செய்யும் மனப்பாங்கும் கிட்டும்.
4. இந்து மதத்தை பறைசசாற்றும் துறவி
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்தடைந்த அவர் அக்காலத்தில் துடிப்பு மிக்க சென்னை இளைஞர்களை காந்தம் போலக் கவர்ந்திழுத்தார். அந்த இளைஞர்களும் இந்தியாவின் அப்போதைய நிலையும் இந்துக்களிடையே காணப்படும் அவல நிலையும் கண்டு என்ன செய்வது என்பதை அறியாமல் திகைத்து இருந்தனர்.
சுவாமிஜியின் துறவு, தேசப் பற்று, ஆழ்ந்த முற்போக்கான சிந்தனைகள், சிறந்த செயல்திட்டம் போன்றவற்றைக் கண்டு அதிசயித்து அப்போது அமெரிக்காவில் நடைபெறவிருந்த சர்வமத சபையின் பிரதிநிதியாக இவரை அனுப்புவதே சாலச் சிறந்தது என்று முடிவெடுத்து அவரை அங்கு அனுப்புவதற்கான பெரும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றனர்.
1893 ஜூலை மாத நடுவில் சுவாமிஜி அமெரிக்கா சென்றடைந்தார். ஆனால் அங்கு சென்ற பிறகு தான் சர்வமத மகாசபை தொடங்குவற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன என்று தெரிந்தது. இந்து மதத்தைப் பற்றி அவர் பேசுவதற்கு ஒரு குழு அல்லது பிரிவிடமிருந்து பரிந்துரைக் கடிதம் எதுவும் இல்லாமல் இருப்பதால் அவர் சர்வமத மகாசபையில் கலந்துகொள்ள இயலாது என்ற நிலையை அறிந்து அவர் மிகவும் கவலைப்பட்டார். அத்துடன் கையிலுள்ள பணமும் கரைந்துகொண்டேயிருந்தது.
மிஸ் சேன்பார்ன் என்பவரது வீட்டில் விருந்தினராக அக்காலகட்டத்தில் சுவாமிஜி தங்கினார். இறுதியாக திருமதி. ஜார்ஜ் டபிள்யூ. ஹேல் என்பவரின் உதவியால் சுவாமிஜி சர்வமத மகாசபையில் பங்கேற்க முடிந்தது.
‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே. …’ என்று தொடங்கிய அவரது சொற்பொழிவின் தாக்கம் என்ன என்பதை வரலாறு பதிவு செய்துகொண்டே போகிறது. இந்தத் தாக்கத்திற்குக் காரணம் அவரது தூய ஆன்மிக வாழ்க்கையே. தமது ஆன்மிக ஆற்றலாலேயே சுவாமிஜி அனைவரையும் கவர்ந்தார்.
அவரது சொற்பொழிவைப் பற்றி சகோதரி நிவேதிதை, ‘இந்துக்களின் மதக் கோட்பாடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தார் அவர். அவர் முடித்தபோது இந்து மதம் உருவாக்கப்பட்டிருந்தது’ என்று எழுதுகிறார்.
இந்து மதத்தின் ஆன்மிகத் தத்துவங்கள் அனைத்தையும் மேலைநாட்டில் எல்லாத் தரப்பு மக்களுக்கும் வேறுபாடு இன்றி போதித்தார். பொதுவாக இந்தியாவில் இந்து மதத்தில் ஆன்மிக உபதேசங்கள் பற்றிக் கூறுவது என்றால், கேட்பவருக்கு தகுதி உள்ளதா என்று ஆராய்வர். ஆனால் சுவாமிஜியோ அவற்றையெல்லாம் கடந்து ஆன்மிகத்தை அளித்தார்.
‘உண்மையை துணிவுடன் எடுத்துச் சொல். தகுதி குறைந்தவர்களை அது குழப்பும் என்ற பயம் வேண்டாம். … உண்மையைக் கைவிடுவதற்குக் காரணமான சூழ்நிலைகள் இருந்தாலும் அவற்றை வென்று உண்மையையே பின்பற்றும் உறுதி மட்டும் உங்களிடம் இருக்குமானால், உங்களிடம் தானாகவே தெய்வீக ஆற்றல் ஒன்று தோன்றிவிடும். அப்போது நீங்கள் உண்மை என்று நம்பாதவற்றை பற்றி உங்கள் முன்னிலையில் பேசவே பிறர் நடுங்குவார்கள். சிறிதும் பிறழாமல் 14 ஆண்டுகள் உண்மையைக் கடைபிடிக்க உங்களால் முடியுமானால், நீங்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்வாறு நீங்கள் மக்களுக்கு மிகப் பெரிய நன்மையைச் செய்கிறீர்கள். அவர்களின் தளைகளை உடைக்கிறீர்கள். மக்கள் சமூகம் முழுவதையுமே உயர்த்துகிறீர்கள்’
– என்று சுவாமிஜி ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.
அமெரிக்காவில் சுவாமிஜி இந்து மதத்தின் பல நெறிகளைச் சுருக்கி நான்கு யோகங்களாக ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம், கர்மயோகம் என்று அவற்றைப் போதித்தார். இத்துடன் இல்லாமல் இந்தியாவின் பெருமைகளும் வேதாந்தத்தைப் பற்றிய சொற்பொழிவுகளும் இந்திய மகான்களைப் பற்றிய சொற்பொழிவுகளும் செய்தார். அவருடைய சொற்பொழிவுகள் கேட்பவரின் உள்ளத்தில் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தன.
இந்த பாதிப்பைச் சந்தேகித்த ஒரு பெண்மணி சுவாமிஜியிடமே, ‘நீங்கள் உங்கள் சொற்பொழிவு கேட்பவர்களை மனவசியத்திற்கு உள்ளாக்குகிறீர்களா?’ என்று கேட்டாள். அதற்கு சுவாமிஜி, ‘இல்லை மேடம், நான் அவர்களிடம் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் மனவசியத்தைத் தான் நீக்குகிறேன்’ என்றார்.
ஏறக்குறைய மக்கள் எல்லோருமே ‘நான் உடல்’ என்ற மன மயக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அதனால் ஆண், பெண், இந்த உலகம் என்று பலவிதங்களில் பந்தங்களில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் அதனை உணரவோ, அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான ஆற்றலோ அவர்களிடம் இல்லை. மேலும் ஒவ்வொரு ஜீவனும் தெய்வீகத் தன்மை வாய்ந்த ஆன்மா என்ற உண்மை பெரும்பாலும் யாராலுமே அறியப்படாத ஒன்றாக இருக்கிறது.
இந்த உண்மையை எல்லாத் தரப்பினரும் அறிய வேண்டும். அவர்கள் அதனை உணர வேண்டும். தங்களது தெய்வீக இயல்பில் நிலைபெற வேண்டும் என்று உலகம் முழுவதும் சத்தியத்தை, ஆன்மீகத்தை பறைசாற்றிய ஜகத்குரு உண்மையில் சுவாமி விவேகானந்தரே.
மேலைநாட்டில் அப்போது கீழை அதாவது இந்தியா போன்ற நாடுகளின் மதம் என்றாலே மாய மந்திரம், நோய் தீர்த்தல் இது போன்ற சித்து வேலைகளுடன் கூடியது, மூட நம்பிக்கைகளின் கூடாரம், அறிவு என்பது கீழை நாட்டு மக்களிடம் இல்லை என்ற பொதுவான கருத்தே நிலவியது. இந்தக் கருத்துக்களுக்கு தூபமிட்டு வளர்த்தவர்கள் அக்காலத்து கிறிஸ்தவ மிஷனரிகள்.
ஆனால் சுவாமிஜி அளித்த செய்தியின் தாக்கம் மேலைநாட்டு மக்கள் கீழை நாட்டு மக்களின் மதத்தைப் பற்றி கொண்டிருந்த தவறான கருத்துக்களின் அஸ்திவாரத்தையே தகர்த்தது. சுவாமிஜியின் அளப்பெரும் ஆற்றலினை தாக்குப்பிடிக்க முடியாமல் கிறிஸ்தவ மிஷனரிகள் அவரைப் பற்றி பொய்யான பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டார்கள்.
சுவாமிஜியின் வெற்றியில் பொறாமை கொண்ட மஜும்தார் மற்றும் ரமாபாய் வட்டாரங்கள் மிஷனரிகளின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்தார்கள். அதனால் சுவாமிஜியின் பிரசாரத்திற்கு சற்று மகிமைக் குறைந்தது. அதனால் சுவாமிஜி சற்று கலங்கியிருந்ததையும் அவர் தமது சீடர் அளசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து அறிகிறோம்.
சுவாமிஜி தமது கடிதங்களில் இந்தியாவில் சர்வமத மகாசபைக்கு தாம் அளித்த பங்களிப்பை இந்துக்கள் கூட்டம் கூடி ஏற்று அந்தத் தீர்மானத்தை தமக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். சுவாமிஜி தங்களது பிரதிநிதியே, அவர் போதிக்கும் கருத்துக்கள் யாவும் சனாதன தர்மத்தை சார்ந்தது என்பதான கருத்துக்கள் அடங்கிய தீர்மானங்கள் சுவாமிஜியிடம் வந்து சேர்ந்த பிறகு, அதனை அவர் அம்மக்களிடம் காட்டிய பிறகு சுவாமிஜியின் மகிமை மேலும் கூடியது.
கிறிஸ்தவப் பாதிரிமார்கள் அவரைக் கொல்வதற்குக் கூட துணிந்தார்கள். இறைவனின் திருவருளால் அவர் அனைத்துத் தடைகளையும் கடந்து சென்றார்.
சுவாமிஜி தடைகளை கடந்து செல்வதற்கு இறைவனின் திருவருள் காரணம் என்றாலும் மற்றொரு முக்கியக் காரணமும் இருந்தது. அது அவரிடமிருந்த ஆன்மிக அடித்தளத்தினால் வடிக்கப்பட்ட குணநலனே.
இதைப்பற்றி, ‘பெயரோ, புகழோ, பணமோ எதையும் சாதித்து விடாது. ஆனால் மாறாத குணநலன் ஒன்றே கடினமான சுவர்களையும் பிளந்து செல்லக் கூடியது’ என்று சுவாமிஜியே ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
மேலை நாட்டு மக்களிடையே அவர்கள் இந்தியாவைப்பற்றி கொண்டிருந்த தவறானக் கருத்துக்களை போக்கியும் ஆன்மீகத்தையும் பறைசாற்றினாலும், ”இந்தியாவில் நிலவும் இழிநிலைகளை வன்மையாகக் கண்டித்து அவற்றை நீக்குவதற்கு தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து, அந்த நிலையை அகற்றுவதற்கான செயல் களத்தில் குதியுங்கள்” என்று சுவாமிஜி தமது கடிதங்களில் கல்கத்தாவிலுள்ள தமது சகோதர சீடர்களுக்கும், சென்னையிலுள்ள தமது சீடர்கள் மற்றும் அன்பர்களுக்கும் பல கடிதங்கள் எழுதி வலியுறுத்தினார்.
மேலும் அவரது ஊக்கத்தினாலேயே சென்னையில் ‘பிரம்மவாதின்’, ‘பிரபுத்த பாரதம்’ என்ற இரண்டு ஆங்கில மாத இதழ்கள் தோன்றின.
ஒரு அமைப்புடன் கூடி வேலையாற்றும் செயல்திறன் மேலைநாட்டு மக்களிடம் இருப்பது கண்டு சுவாமிஜி வியந்தார். இதைப் போன்ற அமைப்புகள் இந்தியாவில் நிறுவப்பட வேண்டும் என்ற உறுதியும் எடுத்தார். ‘இங்கிலாந்து எங்களுக்கு ஒரு நாட்டை ஆள்வதற்கு கற்றுத் தரட்டும். ஏனெனில் அந்தக் கலையில் அனைத்து நாடுகளுக்கும் தலைமை இடத்தில் இங்கிலாந்தே திகழ்கிறது. விவசாயம், விஞ்ஞானம் மற்றும் எதையும் நேர்த்தியாக செய்கின்ற திறம் ஆகியவற்றை அமெரிக்கா எங்களுக்கு கற்றுத் தரட்டும். நாங்கள் உங்கள் காலடியில் உட்கார்ந்து கற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு ஆன்மிகத்தை கற்றுத் தரலாம் என்று எந்த நாடும் நினைக்க வேண்டாம். ஆன்மிகத்தை இந்தியாவே உலகிற்கு போதிக்கும்’ என்று சுவாமிஜி மேலை நாடுகளில் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் தமது ஆன்மிகக் காலடித் தடங்களை நிறுவிய சுவாமிஜி இங்கிலாந்திலும் ஆன்மிகத்தை மடைதிறந்த வெள்ளம்போலப் போதித்தார். சுவாமிஜி இங்கிலாந்தில் இருந்தபோது அவரது ஆன்மிகத் தாக்கத்தில் ஈடுபட்டவர்கள் பலர். பேராசிரியர் மாக்ஸ்முல்லர், மிஸ். மார்கரெட் நோபில் (பின்னாளில் இவரே சகோதரி நிவேதிதை), சேவியர் தம்பதியினர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பிற்காலத்தில் மார்கரெட் இந்தியாவிற்கு வந்து சுவாமிஜியின் பணிக்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதேபோன்று சேவியர் தம்பதியினரும் இந்தியாவில் இமயமலைப் பகுதியில் மாயாவதியில் ஆசிரமம் நிறுவி ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து மறைந்தனர்.
5. மக்களிடமுள்ள துயிலை நீக்கும் கனல்
மேலைநாட்டில் பல ஆண்டுகள் ஆன்மிகத்திற்கு செலவிட்ட சுவாமிஜி 1897-ல் தாயகம் திரும்பினார். இதுவரை எந்த ஒரு தேசியத் தலைவருக்கும் ஆன்மிகத் தலைவருக்கும் அளிக்காத வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான வரவேற்புகளை கொழும்பிலும் இந்தியாவிலும் சுவாமிஜிக்கு மக்கள் அளித்தனர்.
பொதுவாக மக்கள் பெரியதாக ஒருவரைப் போற்றினால் அந்தப் புகழ்ச்சியின் போதையில் அந்த மனிதர் மயங்கிவிடுவார். ஆனால் சுவாமிஜியோ அவர்களது வரவேற்புகளையும், புகழ்மொழிகளையும் ஏற்ற வண்ணம் இந்திய மக்களிடம் நிலவும் குறைப்பாடுகளை சாட்டையடி போல் சாடி அவற்றை களைவதற்கான வழிகளையும் இந்தியா மற்றும் அதன் பெருமைகளை சொற்பொழிவுகள் மற்றும் தம்மை சந்தித்த பெரியோரிடமும் போதித்தார்.
இவரது வரலாற்றுச் சிறப்பு மிக்க, வேதங்களைப் போன்று மக்களிடம் உண்மையை உணர்த்தி அவர்களை விழிப்படையச் செய்யும் சொற்பொழிவுகளே ‘கொழும்பு முதல் அல்மோரா வரை‘ என்ற நூலாக தற்போது அமைந்துள்ளது.
கொழும்புவிலிருந்து அல்மோரா வரை சென்ற இடங்களில் எல்லாம் சுவாமிஜி அளித்த செய்தியின் சுருக்கம்:
‘பாரதம் போற்றத்தக்க பாரம்பரியம் உள்ள நாடு. பாரதத்தின் கடந்த காலம் மிகவும் போற்றத்தக்கது. இந்தியர்கள், உலக நாகரிகங்களுக்கு இணையான ஒரு நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் என்பதை எண்ணி இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும். முன்மாதிரிக்கு வெளிநாடுகளை அவர்கள் ஏன் நாட வேண்டும்? அவர்கள் தங்கள் பெருமைமிகு கடந்த காலத்தைக் கண்டு உணர்ந்து, புதியதொரு, முன்னிலும் சிறந்த பாரதத்தைப் படைக்க வேண்டும். நமது பாரம்பரியம் மத அடிப்படையிலானது. எனவே புதிய பாரதம் மதத்தை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும். ‘மக்களுக்குத் தேவை வலிமை! உடல் வலிமை, மன வலிமை, இவற்றுடன் வலிமையான ஆளுமை. இளைஞர்கள் நல்ல விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடல் தசைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் துணிச்சல், வலிமை மற்றும் சுய மரியாதை உடையவர்களாகத் திகழ வேண்டும். நமது தேசிய லட்சியங்களான உண்மை, தியாகம், சேவை ஆகியவற்றை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் வருங்காலம் அதனுடைய மக்களைப் பொறுத்தே இருக்கிறது. இந்திய மக்கள் வலிமை உடையவர்களாக இருந்தால் அவர்களால் சிறந்த, வலிமையான பாரதத்தை உருவாக்க முடியும். இதை நிறைவேற்ற சிறந்த வழி கல்வியே. அனைத்து இந்தியரும் நல்ல கல்வி பெற்றால் அவர்கள் வலிமை கொண்டவர்களாக விளங்குவார்கள், வலிமை மிக்கதாகத் தம் நாட்டையும் உருவாக்குவார்கள்.’
சுவாமிஜியின் செய்தியைப் பலர் கேட்டனர்; எழுச்சி பெற்றனர்; இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெற்றனர்; ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் சேவை புரிய ஆரம்பித்தனர்; தாய்நாட்டுச் சேவையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இந்திய வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை ஆனது.
‘இதோ, புதிய நாளின் விடியல் தோன்றி விட்டது. இந்தியா இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சுதந்திர நாடாக மலரும்’ என்று சுவாமிஜி முழங்கினார். (சுவாமிஜி இதைக் கூறியது 1897-இல். 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அவரது தீர்க்கதரிசனத்தைப் பாருங்கள்!)
சுவாமிஜி ஆன்மிகத்தில் திளைத்த மாபெரும் மகானாக இருந்த அதே நேரத்தில் தேச பக்தியில் அவர் திளைத்திருந்த அளவிற்கு யாரும் இருந்திருக்கவே இல்லை. இந்தியாவின் பலவீனங்களை இந்திய மக்களிடம் சாடினார். இந்தியர்களிடம் இருந்த குறைப்பாட்டைக் கண்டித்து அவற்றைக் களையுங்கள் என்று போதித்தார்.
மதத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள், வீண் ஆடம்பரங்கள் தேவையற்றவை எனப் போதித்து ‘மக்களை மகேசனாகக் கண்டு அவர்களுக்குச் செய்யும் சேவைதான் உண்மையில் சிவ சேவை’ என்று போதித்தார்.
இவரது வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவுகளாலும் வாழ்வாலும் ஈர்க்கப்பட்டு தங்களது வாழ்க்கையை துறவறத்திற்கும் தேசத் தொண்டிற்கும் அர்ப்பணித்தவர்கள் ஏராளம்.
சுவாமிஜியால் இந்து மதம் மறுமலர்ச்சி பெற்றது. இந்திய மக்கள் தங்களது சோம்பலையும் தூக்கத்தையும் உதறி உழைப்பதற்கும் பாடுபடுபவதற்கும் தலைப்பட்டார்கள். நாட்டில் பல துறைகளில் முன்னேற்றத்திற்கான அஸ்திவாரம் சுவாமிஜியால் போடப்பட்டது..
6. துறவும் தொண்டும் இணைந்த ஆலயம்
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு அவரது துறவறச் சீடர்கள் வராகநகரில் மடத்தை அமைத்து தவ வாழக்கையில் ஈடுபட்டதை நாம் முன்னரே கண்டோம். சுவாமிஜி மேலைநாடுகளில் இருந்தபோது மடமானது ‘ஆலம்பஜார்’ என்ற இடத்தில் கங்கைக்கரையில் மாற்றப்பட்டது. சுவாமிஜி மேலை நாட்டிலிருந்து திரும்பியபோது இந்த இடத்தில் அருகில் உள்ள பேலூர் என்ற இடத்தில் நிலம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
அந்நிலத்தை வாங்கி அங்கு மடம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பமாயின. அதிக வேலைப்பளுவினால் அவரது உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. அவர் டார்ஜிலிங்கில் சிலகாலம் தங்கினார். அப்போது கொல்கத்தாவில் பிளேக் நோய் தீவிரமாகப் பரவியது. சுவாமிஜி உடனே கொல்கத்தா திரும்பி நிவாரணப் பணிகளை ஆரம்பித்தார்.
சுவாமிஜியின் ஊக்கத்தினால் அவரது சீடர்களும் தொண்டர்களும் களத்தில் இறங்கி நோய் பரவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு வேண்டிய சிகிச்சையையும் நல்கினார்கள்.
சில மாதங்கள் கழித்து சுவாமிஜி அமர்நாத் மற்றும் காஷ்மீரில் உள்ள க்ஷீர்பவானி போன்ற பல புனிதத் தலங்களுக்கு தம் சீடர்களோடு யாத்திரை சென்றார். இந்த இரண்டு இடங்களிலும் சுவாமிஜி உன்னத ஆன்மிக அனுவங்களில் திளைத்ததை நாம் காண்கிறோம். பிறகு பேலூர் மடம் திரும்பிய சுவாமிஜி பெண்களின் முன்னேற்றத்திற்கான வேலைகளில் ஈடுபட்டார்.
தமது மேலை நாட்டு சிஷ்யையான நிவேதிதை மூலம் அப்பணியை ஆரம்பித்தார். நிவேதிதை தொடங்கிய பெண்கள் பள்ளி தற்போது கொல்கத்தாவில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல சீரிய பணிகளை நிறைவேற்றி வருகிறது.
1898 மார்ச்சில் பேலூரில் மடத்திற்கான பூமி பூஜை செய்யப்பட்டது. கட்டட வேலைகளும் துவங்கின. ‘இந்த புதிய மடம் மிகச் சிறந்ததாக இருக்கும். இது அனைத்து சமயங்களுக்கும் மையமாக விளங்கும். பல்வேறு சமய ஆச்சாரியர்கள் அங்கு சிறப்பிக்கப்படுவர் என்றும் புதிய சிந்தனைகள் இங்கிருந்து பரவும், உலகத்தின் பல பாகங்களிலிருந்து மக்கள் இங்கு வருவார்கள்’ என்று சுவாமிஜி கூறினார்.
சுவாமிஜி மடத்தில் இருந்தபடி சகோதரச் சீடர்களுக்கும் புதிய இளம் சீடர்களுக்கும் வழிகாட்டினார். மடத்திற்கென விதிமுறைகள் அமைக்கப்பட்டன. துறவிகளும் பிரம்மச்சாரிகளும் பல்வேறு சிறப்புகளை கொண்டவர்களாக பயிற்றுவிக்கும் துறவறச் சாலையாக அது திகழ்ந்தது.
ஆன்மிகப் பயிற்சியும் சமூகத் தொண்டும் இணைந்த ஒரு லட்சியத்தைக் கொண்டதாக பேலூர் மடமானது இருக்க விரும்பினார். எனவே ‘ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச‘- சொந்த முக்தி மற்றும் உலக நன்மை என்ற குறிக்கோளை மடத்தின் தாரக மந்திரமாக அமைத்தார்.
பேலூர் மடத்தில் அவர் இருந்தபோது சரத் சந்திரர் என்ற அவரது சீடர் சுவாமிஜியை அடிக்கடி அங்கு சந்தித்து பல அற்புதமான கருத்துக்களைப் பெற்றார். இந்த உரையாடல்களே ‘எனது சிந்தனைகள்’ என்ற நூலாக வெளிவந்துள்ளது. அதில் மடத்தின் லட்சியம், பிற்காலத்தில் அதனுடைய மகத்துவம், இந்தியாவின் பெருமை, மேலை நாடுகளின் சிறப்பு, ஆன்மிக ஞானம், கலை போன்றவற்றின் சுவாமிஜியின் மகத்தான சிந்தனைகளின் வெளிப்பாடுகளை காணலாம்.
துறவு, பிரம்மச்சரியம், சேவை, முக்தி போன்ற லட்சியங்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சுவாமிஜி இளம் துறவிகளின் மனத்தில் பதியவைப்பார். இந்த லட்சியங்களின் ஒட்டுமொத்த உருவமாக சுவாமிஜி விளங்குவதையும் அந்த துறவிகள் காண்பர்.
‘பிரம்மச்சரியம் என்பது நாடி நரம்புகளிலெல்லாம் கனலாக எரிய வேண்டும். சொந்த முக்தியும் பிறருக்கு சேவையும் என்பது தான் நமது லட்சியம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்’ என்று மீண்டும் மீண்டும் அவர்களிடம் எடுத்துக்கூறுவார். இவ்விதமாக இந்து மதத்தில் துறவும் தொண்டும் நிறைந்த, காலத்திற்கேற்ற புதியதொரு மடாலயம் சுவாமிஜியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1899 ஜூனில் சுவாமிஜி மீண்டும் மேலை நாடுகளுக்கு பயணம் செய்தார். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆன்மிகப் பிரசாரத்தை மேற்கொண்டார். ஆனால் அவரது உடல்நிலை விரைவாகச் சீர்குலைய ஆரம்பித்தது. 1900 டிசம்பரில் இந்தியா திரும்பினார் சுவாமிஜி. தமது கடைசிக் காலத்தை பேலூர் மடத்தில் கழித்தார்.
அவரது நேரடி வழிகாட்டதலின்படி இளம் சீடர்கள் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைந்தனர். வாரணாசியில் ஒரு சேவாஸ்ரமம் தொடங்க ஏற்பாடு செய்தார். பேலூர் மடத்தில் அவரது வாழ்க்கை மிக எளிமையானாக இருந்தது.
அவர் அங்கிருந்தபோது பல காங்கிரஸ் தலைவர்கள் பேலூர் மடத்திற்குச் சென்று சுவாமிஜியை தரிசித்து அவரது ஆசிகளை பெற்றுச் செல்வர். பாலகங்காதர திலகர் சுவாமிஜியை சந்தித்து ஊக்கம் பெற்றார். இறைநாட்டம் கொண்ட சிலர் சுவாமிஜியை தரிசித்து, அவரிடம் ஆன்மிக வழிகாட்டுதலையும் பெற்றனர்.
இவ்விதம் தமது வரவால் உலகிற்கு ஒரு வழிகாட்டுதலை அளித்த சுவாமிஜி 1902 ஜூலை 4 அன்று மகாசமாதி அடைந்தார்.
7. படிப்போம், சிந்திப்போம், நடப்போம்!
சுவாமிஜி மகாசமாதி அடைந்திருந்தாலும் அவரது வாழ்க்கைமுறை மற்றும் உபதேசங்களின் வாயிலாக இன்றும் நம்மிடையே இருக்கிறார். அவரது வாழ்க்கையும் நூல்களையும் படிப்பவர்கள் உள்ளத்தில் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். ஏனெனில் உடல் அளவில் அவர் மறைந்திருந்தாலும் அவரது ஆன்மா இன்றும் எல்லோருக்காகவும் பணி செய்தபடியே இருக்கிறது.
இதைப்பற்றி அவரே ஒருமுறை, ‘கிழிந்த ஆடையை வீசியெறிவதைப் போல் என் உடம்பைக் களைந்துவிடுவது நல்லதென்று ஒரு நாள் எனக்குத் தோன்றலாம். ஆனாலும் நான் வேலை செய்வதை நிறுத்த மாட்டேன். உலகம் முழுவதுமுள்ள மனிதர்களை தூண்டிக்கொண்டே இருப்பேன். அவர்கள் அத்தனைப் பேரும் தாங்கள் இறைவனுடன் ஒன்று பட்டிருப்பதை உணரும்வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.
அவர் ஏன் மனிதர்களை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும்? அதற்கான காரணம் அவரது மொழிகளிலேயே நாம் காணலாம்:
‘எனது லட்சியத்தை ஒரு சில வார்த்தைகளில் கூறிவிடலாம். அது இதுதான்: ‘மனித இனத்திற்கு அவர்களின் தெய்வீகத் தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அந்தத் தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதைச் சொல்வதும்தான்.’
மனிதனின் தெய்வீகத்தைப்பற்றி சுவாமிஜி போதித்ததுபோல் வேறு யாரும் இதுவரை போதிக்கவில்லை. அவற்றின் ஒரு துளியை இப்போது காண்போம்:
‘நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும் தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்துகொள்ளவும் வேண்டியிருக்கிறது. ஜாதி- குலம், பலம்- பலவீனம் போன்ற எவ்விதப் பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்: வலிமையானவர், வலிமையற்றவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று ஒவ்வொருவரின் உள்ளேயும் அந்த எல்லையற்ற ஆன்மா உள்ளது; மகத்தானவர்களாக, மேலோர்களாக ஒவ்வொருவரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். ‘உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத’ எழுந்திருங்கள், விழித்திருங்கள், லட்சியத்தை அடையும் வரை நில்லாமல் செல்லுங்கள்” என்று ஒவ்வொருவரிடமும் முழங்குவோம். எழுந்திருங்கள், விழித்திருங்கள்! பலவீனமாகிய இந்த மனவசியத்திலிருந்து (Hypnotism) விடுபட்டெழுங்கள். உண்மையில் யாரும் பலவீனர் இல்லை. ஆன்மா எல்லையற்றது, எல்லா ஆற்றல்களும் உடையது, எல்லாம் அறிந்தது. எழுந்து நில்லுங்கள், உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள், அவரை மறுக்காதீர்கள்.’
– இவ்விதம் சுவாமிஜியின் மொழிகளை நாம் படிப்பதுடன் நிற்காமல் அதனை நம் உள்ளத்திலும் அறிவிலும் நன்கு பதித்து நம்முடைய சுபாவத்தையே மாற்றியமைக்க வேண்டும். அவ்விதம் நமது சுபாவம் மாறினால் நமது வாழ்க்கையே தெய்வீகம் நிறைந்ததாக ஆகிவிடும். நம்முள் தெய்வீகத்தை உணர்ந்தால் நம்மை சுற்றியுள்ள இந்த உலகமும் தெய்வீகமாக மாறும்.
இறைவன் ஏதோ ஒரு லோகத்தில் இருக்கிறார். புண்ணியங்கள் பல செய்து இறந்த பிறகே அங்கு அவருடன் இருக்க முடியும் என்பது மாறி, இங்கேயே, இப்போதே, உலகத்தில் இறைவனை அதாவது மனித மற்றும் ஜீவராசிகளாகவும் உலகமாகவும் விளங்கும் அவரைக் கண்டு ஆனந்த வாழ்வை வாழ முடியும்.
இதைத்தான் சத்திய யுகம் என்பர். இந்த யுகத்தை உருவாக்கவே சுவாமிஜி வந்தார். சுவாமிஜியின் வழியில் ஒவ்வொருவரும் அதற்காக முயற்சித்தால் அவருடைய 150-ம் வருடமாகிய இவ்வாண்டிலிருந்து விரைவிலேயே படைக்கப்படும் என்பது நிச்சயம்.
$$$