-மகாகவி பாரதி
நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயரும் மகாகவி பாரதியும் சமகால அரசியலாளர்களாக இருந்தபோதும் கொள்கையில் இரு துருவங்கள். அவரை மகாகவி பாரதி கடுமையாக விமர்சித்தது, இருவரிடையிலான நட்பைக் குலைக்கவில்லை. இதோ, நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயர் குறித்து இந்தியா (08.06.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம். உடன் உள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் சரித்திர விளக்கக் கட்டுரையும் கூடுதலாகப் பயன்படும்...

டாக்கா நவாப் ஸாலிமுல்லாவையும் மைலாப்பூர் நவாப் வி.கிருஷ்ணஸாமி முல்லாவையும் எதிரெதிராக உட்காரச் செய்து அவர்களி கையிலே ராஜபக்தி என்ற ‘ஹூக்கா’ கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த ராஜபக்தி கூட உண்மையான தன்று. நடிப்பு ராஜபக்தி.
மிஸ்டர் வி.கிருஷ்ணஸாமி கோடைக்கானலிலே ஸ்ரீமான் திலகர் முதலிய புதிய கட்சியாரைப் பற்றிப் பேசினது பற்றியா, அவருக்கு இந்த நவாப் பட்டம் கொடுத்திருக்கிறோம்.
கீழ் பெங்காளத்திலே தேசாபிமானக் கட்சியாரை நவாப் ஸாலிமுல்லா எதிர்த்து நிற்பது போலவே இவர் இந்தப் பிரதேசத்திலே தேசபக்திக் கட்சியை அடக்கிவிட முயற்சி புரிகின்றார். நவாப் ஸாலிமுல்லா கீழ் பெங்காளத்து அதிகாரிகள் மூலமாக ஸர்க்காரிலிருந்து பணம் வாங்கி மானம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கமுடையவரென்று அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.
மைலாப்பூர் நவாப் கிருஷ்ணஸாமி முல்லா என்ன கைமாற்றை எதிர்பார்க்கிறாரோ அறியோம். இவரை நவாப் ஸாலிமுல்லா மெச்சிப் பாராட்டுவது ஸஹஜமே யன்றோ?
இந்தியா (08.06.1907), பக். 2
$$$
ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயரும் மகாகவி பாரதியும்
-சேக்கிழான்
ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயரும் மகாகவி பாரதியும் சமகால அரசியலாளர்கள். இருவருமே தேசபக்தர்கள். ஆனால், முதலாமவர் மிதவாதி; இரண்டாமவர் தீவிரவாதி. இந்த இருதுருவ வேறுபாடே இவர்கள் இருவரிடையிலான மோதலாக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. மகாகவி பாரதி கிருஷ்ணசாமி ஐயரை அரசியல்ரீதியாக கடுமையாகச் சாடி வந்தபோதும், ஐயர், பாரதியின் மேதமையை மதித்து உதவி இருக்கிறார். ஆயினும், பாரதி தயவு தாட்சண்யமின்றி அவரை மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார். இங்கு மேலே காணும் சித்திர விளக்கம் (இந்தியா- 08.06.1907) பாரதியின் கருணையற்ற எழுத்தாவேசத்துக்கு உதாரணம்.
சென்னையின் முன்னணி வழக்கறிஞரான வி.கிருஷ்ணசாமி ஐயர் (ஜூன் 15, 1863 – டிசம்பர் 28, 1911) காங்கிரஸ் மிதவாதப் பிரிவின் தலைவராக இருந்தவர். பின்னாளில் (1909-1910) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனவர். உள்நாட்டில் தேசிய வங்கி உருவாக வேண்டும் என்ற நோக்கில் இந்தியன் வங்கியை 1907-இல் நிறுவியவர் இவரே.

சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்; 1893-இல் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சிகாகோ பயணத்திற்கான பணம் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தவர். சென்னை, மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடம் உருவாக முன்முயற்சி எடுத்தவர். சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தவர் இவரே.
இந்திய தேசிய காங்கிரஸ் டிசம்பர் 1885-இல் உருவானதுமே சென்னையில் அதில் இணைந்தவர்களில் வி.கிருஷ்ணசாமி ஐயரும் ஒருவர். கோபாலகிருஷ்ண கோகலே தலைமையிலான காங்கிரஸ் மிதவாதப் பிரிவில் இருந்ததால், திலகர் தலைமையிலான தீவிரவாதப் பிரிவினரின் அதிருப்திக்கு ஆளானவர். இவரை மகாகவி பாரதி தான் நடத்தி வந்த ‘இந்தியா, விஜயா’ பத்திரிகைகளில் கடுமையாக கண்டித்து பல செய்திகளை எழுதி இருக்கிறார்.
1907-இல் மகாகவி பாரதியை அவரது நண்பர் ஜி.ஏ.நடேசன் (இவரும் மிதவாதி. இவரைக் கண்டித்தும் பாரதி எழுதி இருக்கிறார்). வி.கிருஷ்ணசாமி ஐயரிடம் அழைத்துவந்தார். வி.கிருஷ்ணசாமி ஐயரை ‘இந்தியா’ பத்திரிகையில் பாரதி கடுமையாகத் தாக்கிவந்த காலம் அது. ஆயினும் பாரதியாரின் கவிதைகளைப் பாராட்டி அக்கவிதைகளை மலிவுவிலையில் அச்சிட்டு இலவசமாக மக்களிடம் கொண்டுசெல்ல பெருந்தொகையை அளித்தார் ஐயர். பாரதியின் ‘சுதேச கீதங்கள்’ நூல் அவ்வாறாகத் தான் அச்சானது. என்றபோதும், மகாகவி பாரதி கிருஷ்ணசாமி ஐயரின் மிதவாதப்போக்கை சிறிதும் மன்னிக்கவில்லை.
கிருஷ்ணசாமி ஐயர் எப்போதும் அரசுக்கும் சென்னை கவர்னருக்கும் அணுக்கமானவராகவே இருந்தார். இவருக்கும் கவர்னர் ஆர்தர் லாலிக்குமான உறவு விமர்சனத்திற்குள்ளானது. இவர் நீதிபதி பதவி ஏற்கையில் மகாகவி பாரதி அதை சுதேசி இயக்கத்திற்குச் செய்த துரோகமாகவே பார்த்தார்; மிகக் கடுமையான சொற்களால் கண்டித்தார். அவரது ‘நடிப்புச் சுதேசிகள்’ என்னும் கவிதை வி.கிருஷ்ணசாமி ஐயரைக் கண்டித்து எழுதப்பட்டது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மகாகவி பாரதி ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயர் குறித்து எழுதிய சில செய்திகளின் பட்டியல்:
- ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயரும் ஸ்ரீ திலகரும் (இந்தியா – 12.01.1907)
- நிந்தை செய்தோருக்குச் சன்மானம் (இந்தியா – 26.01.1907)
- மிஸ்டர் ஜி.சுப்பிரமணிய அய்யரும், மிஸ்டர் வி.கிருஷ்ணசாமி அய்யரும்- ஓர் கவனித்தற்குரிய வேறுபாடு (இந்தியா – 15.06.1907)
- சித்திர விளக்கம் (இந்தியா – 08.06.1907)
- எதிர்க்கிறாயா துணை செய்கிறாயா? (விஜயா – 05.10.1909)
- கனம் ஜஸ்டிஸ் பிர்மஸ்ரீ வி.கிருஷ்ணஸாமி அய்யரவர்களின் வேதாந்த புருஷார்த்த ஸித்தி (இந்தியா – 23.10.1909)
வழக்கறிஞராக இருந்த வி.கிருஷ்ணசாமி ஐயர் அரசு ஆதரவில் நீதிபதி பதவி அடைந்தபோது, மகாகவி பாரதி வெகுண்டெழுந்து எழுதியதே ‘விஜயா’வில் வெளியான ‘எதிர்க்கிறாயா துணை செய்கிறாயா?’ கட்டுரை. அதில் அவர் எழுதுகிறார்…
ஸூரத் காங்கிரஸ் சமயத்தில் “திலகரையும் அவரது கூட்டத்தாரையும் கவர்ன்மெண்டார் சீக்கிரம் ஹதம் செய்து விடுவார்கள்’’ என்று ஜோதிடம் சொல்லி, அந்த ஜோதிடம் பலனடையக் கண்டு மகிழ்ச்சி பெற்ற வி.கிருஷ்ணசாமி ஐயருக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் சொன்னது ஜோதிடம் தானா, கவர்ன்மெண்டாருக்கு வேண்டுகோளா என்பது சந்தேகம். திலகரை ஸர்க்கார் அதிகாரிகள் சிறையிட்டு விட்டனர். திலகர் கூட்டம் என்று வி.கிருஷ்ணசாமி அய்யர் யாரைச் சொல்லுகிறாரோ அவர்கள் ஒருபோதும் முடிவுபெறப் போவதில்லை… ………………………… ………………… உமக்கு மாதம்தோறும் ஐயாயிரம் ரூபாய் கிடைத்தால் எங்கள் ஜாதி உஜ்ஜீவித்து விடுமா? இந்த ஜாதி உஜ்ஜீவிக்க வேண்டுமென்ற எண்ணமே உமக்கில்லாதிருக்குமாயின் இதுவரை எங்களுடன் சேர்ந்திருந்து ஏன்காணும் ஏமாற்றிக்கொண்டு வந்தீர்? வெட்கமில்லை? ரஹஸ்ய சம்பாஷணைகளை வெளியிடுவது சாதாரணமாக தர்மத்துக்கும் ஒழுக்கத்துக்கும் அடுத்தன்று. ஆனால், அசாதாரணமான சந்தர்ப்பங்களை உத்தேசித்து அசாதாரணமான காரியங்கள் செய்ய நேரிடுகிறது. சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன், மைலாப்பூரில், உமது வீட்டிலே ஓர் ஸ்வதந்திர பக்தருடன் நீர் சம்பாஷணை செய்துகொண்டிருந்த காலத்தில், மிக உருக்கத்துடன், “உம்மைப் போலவே நாங்களும் ஸ்வதந்திர தாகமுடையவர்களாகத் தானிருக்கிறோம். உமக்கு இந்த நாட்டிலுள்ள பக்தி எங்களுக்குமுண்டு. உமது உபாயங்கள் வேறு. நமது லக்ஷயமொன்றுதான், இதுபற்றி நாம் பரஸ்பரம் விரோதம் பாராட்டலாகாது” என்று நீர் சொல்லிய வார்த்தை நினைப்பிருக்கிறதா? அந்த ஸ்வதந்திர தாகந்தான் இப்போது உம்மை ஹைகோர்ட்டு ஜட்ஜ் வேலையை ஒப்புக்கொள்ளும்படி தூண்டி விட்டதோ? நாளைக்கு அதே மனிதர் சென்னப்பட்டினத்தில் ஸ்வதந்திர போதனை செய்யும் பக்ஷத்தில் போலீசார் அவரைப் பிடித்து உமது முன்னே நிறுத்துவார்களே, நீர் ‘தபையையும் நீதியையும் கலந்து’ 8 வருஷம் கடுங்காவல் விதிப்பீரே, ‘நம்மிரு திறத்தாரின் லக்ஷியமும் ஒன்றுதான்’. சந்தேகமா? சீச்சீ! வி.கிருஷ்ணஸ்வாமி ஐயரே! என்ன வார்த்தை காணும் சொல்லி விட்டீர்? ‘நம்மிரு திறத்தாரின் லக்ஷியமும் ஒன்றுதான்.’ இப்போது அந்த வார்த்தை சொல்லுவீரா? ஐயோ, வி. கிருஷ்ணசாமி ஐயரே, என்ன ஜன்ம மெடுத்து விட்டீர்!
-இவ்வாறு மிகவும் ஆவேசமாகக் கட்டுரை தீட்டினார் மகாகவி பாரதி. இவ்வளவு காட்டமாக மகாகவி பாரதியால் வசை பாடப்பட்ட சமகால அரசியல்வாதி ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயராகத் தான் இருப்பார்.
தீப்பிழம்பு போன்ற தேசபக்தியும், உணர்ச்சி வேகமும், சத்திய ஆவேசமும் கொண்டிருந்த மகாகவி பாரதியால், மிகச் சிறந்த தேசபக்தராக இருந்தபோதும் அரசுப் பதவியை ஏற்ற வி.கிருஷ்ணசாமி ஐயரின் சமரசங்களை ஏற்க முடியவில்லை என்பதே இந்தச் செய்திகள் கூறும் சாரம்.
$$$