அகமும் புறமும்- 3அ

-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்

அகம்

3. இலக்கியத்தில் வாழ்வு -அ

சமுதாயத்தை அறிய தலைவன், தலைவி, தோழி முதலியோரை வைத்து நூற்றுக்கணக்கான அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது ஒரு தலைவி என்போரின் பெயரை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றுகூட இல்லை. அகத்துறை பற்றி எழுந்த பாடல்களில் தலைவன் பெயர் அல்லது தலைவி பெயர் காணப்பெற்றால் அதனை அகத்துள் சேர்க்காமல் புறத்தில் சேர்த்துள்ளனர். அகத்தினைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம், 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறா' (அகத் திணை:57) என்று ஆணையிடுகிறதாகலின் அகப்பாடல்கள் அனைத்திலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்பெறவில்லை.

குறிஞ்சித் திணை


அகவிலக்கியத்தில் குறிஞ்சித்திணை முதலாவதாக இருப்பது. இத்திணையில் கூறப்பெற்ற ஒழுக்கம் நடைபெறக் கூடிய இடம் மலையும் மலைசார்ந்த இடமுமாம். இது நடைபெறக்கூடிய காலம் குளிர்காலம்; பொழுது, நடு இரவு; இடம், பொழுது என்று வகுக்கப் பெற்ற இவற்றை முதற்பொருள் என்று இலக்கணம் கூறும். பாடல் அமைவதற்கு ஒரு நிலைக்களம் போன்றது இவ் விலக்கணம் வகுக்கும் வரம்பு.

தலைவனும் தலைவியும் சந்திப்பதும், கூடுவதும், இதனுடன் தொடர்புடைய செய்திகளும் குறிஞ்சித் திணைப் பாடலில் இடம் பெறும்.

நீரின்று அமையா உலகம்

பெரியதொரு மலையடிவாரத்தில் அழகாய் அமைந்துள்ளது தலைவனுடைய வீடு. வீட்டைச் சுற்றிலும் வளமான நல்ல செடி கொடிகள் அடர்ந்துள்ளன. அந்த வீட்டின் எதிரே உள்ளது ஒரு தாமரைத் தடாகம். அக் குளத்தில் நீர் நிறைந்திருப்பதால், தாமரை நன்கு செழித்து வளர்ந்துள்ளது. குளத்தின் கரையில் உள்ளவை வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்த சந்தன மரங்கள். ஒரு நாள் தலைவி முற்றத்தில் வந்து நின்றாள். அப்போது கதிரவன் உதித்த காலை நேரம். குளத்தில் உள்ள தாமரை தன் தலைவனாகிய சூரியன் வரவு கண்டு, முகம் மலர்ந்து, அவனுடைய கைகளாகிய கதிர்களைத் தன் முகம் முழுவதிலும் தைவருமாறு விட்டிருக்கிறது. தாமரையின் இந்த இன்பத் திளைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தன தேன்ஈக்கள்.

எப்பொழுது தாமரை முகம் மலரும் என விடிகிற வரை காத்திருந்த அவ்வீக்கள், உடனே அம் மலரில் சேர்ந்து மொய்த்தன. ஏன்? தாமரையில் உள்ள தேனைக் கருதியே அவை புகுந்தன; புகுந்து தேனை உண்டன. அத்தேனை உடைய மலர் திறக்கும் வரையில் அவ்வீக்கள் அம்மலரைச் சுற்றிச் சுற்றிப் பன்னூறு தடவை வட்டமிட்டன. அம்மட்டோ! தன் இனிய குரலால் தாமரையின் பெருமையைப் பலவாறாகப் பாராட்டி யாழும் தோற்று விடும் இன்னிசை பாடின.

ஆனால், மலர் திறந்தவுடன் ஈக்கள் தம் பாடலை நிறுத்திவிட்டன; உடனே மலரினுட் சென்று தேனை வயிறார உண்டன; உண்ட பிறகு வாய் திறந்து மலருக்கு நன்றி பாராட்டவில்லை; அம் மலரை முன்போலச் சுற்றி வரவும் இல்லை. வாயை மூடிக்கொண்டு முன்பின் மலரைப் பார்த்து அறியாதவைகள்போல அகன்றுவிட்டன.

எந்தக் குளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறதோ, அந்தக் குளத்தின் சொந்தக்காரியான தலைவி தன் வீட்டு முற்றத்திலிருந்து இந்த ஈக்களின் செயலைக் கண் கொட்டாமற் பார்க்கிறாள். அவளுடைய வியப்பு அதிகமாகிறது. ‘என்ன ஈக்கள் இவை! சிறிதும் நாணமில்லாமல் தாமரையைப் பாராட்டிப் பாடிச் சுற்றி வந்து அதன் தேனைக் குடித்துவிட்டு இப்படி வாய் பேசாமல் திரும்பலாமா? எங்கேதான் போகின்றன இவை! என்று மீண்டும் அவ்வீக்களையே பார்க்கிறாள். பக்கத்தில் உள்ள சந்தன மரத்தை அடைகின்றன அவை. சந்தன மரப்பூவை அவை நாடுகின்றன. மறுபடியும் அதே பாடல்; அதே சுற்றல்; பிறகு அமைதியாய் இருந்து தேனை உண்ணல். இவையே அங்கும் நடைபெறுகின்றன.

இன்னுங்கொஞ்சம் தன் பார்வையை உயர்த்தினாள் தலைவி. என்ன வியப்பு! எவ்வளவு பெரிய தேன் கூடு? இந்த ஈக்களா இத்துணைப் பெரிய தேன் கூட்டைக் கட்டின! ஆம். இவையேதாம்! எத்தனையோ இடங்கள் இருக்க, ஏன் இவ்வளவு உயர்ந்த சந்தனமரத்தைப் பிடித்தன? ‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ என்ற முதுமொழிப்படி ‘பெருக’ என்ற சொல்லுக்கு ‘உயர’ என்ற பொருளை நினைத்து விட்டனவோ இந்த ஈக்கள்! காரணம் திடீரெனத் தலைவிக்கு விளங்குகிறது. ஆம்! என்னதான் தாமரை சிறந்ததாய் இருந்தாலும், அதில் கிடைக்கும் தேனுக்குத் தனி மணம் கிடையாதல்லவா? ஆகவே, தாமரைத் தேனின் பெருமை வெளிப்பட வேண்டுமானால், அது சந்தன மரத்துடனும், சந்தனப் பூவில் உள்ள தேனுடனும் சம்பந்தப் படல் வேண்டும். ஆகவேதான் தாமரைத் தேனுடன் சந்தன மரத்தைச் சம்பந்தப்படுத்தின போலும் ஈக்கள்.

இக்காட்சியில் ஈடுபட்டிருந்த தலைவிக்குத் திடீரெனத் தோழி முதல் நாள் கூறியது நினைவுக்கு வந்தது. தோழி மிகவும் அறிவாளி. குறிப்பு அறிபவள்; நேற்றுத் தலைவியிடம் பேச்சுவாக்கில் ஒரு காரியத்தையும் கூறிவிட்டாள். சில நாளாகவே தலைவன் ஒரு மாதிரியாய் இருக்கிறான்; திடீரென்று தலைவியின் நெற்றியை உற்றுப் பார்க்கிறான்; ஏன் என்று கேட்டால், ‘ஒன்றுமில்லை. உன் நெற்றியில் உள்ள ஒளியைக் கண்டு மகிழ்ந்தேன்’ என்று கூறிவிடுகிறான். இதனைத் தலைவி பெரிதாகப் பாராட்டவில்லை. மேலும், எப்பொழுதுமே அவனுக்கு அவளுடைய அழகில் ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவளுடைய உறுப்புக்களின் அழகை விரித்து விரித்துப் பேசுவதிலும், அதை அனுபவிப்பதிலும் அவனுக்கு விருப்பம் அதிகம். ஆனால், நேற்றுத் தோழி கூறியது தலைவியை மிகவும் அச்சுறுத்தி விட்டது. ‘தலைவன் பொருள் தேடுவதற்காக வெளிநாடு செல்லப்போகிறான்’  என்பதே தோழி நீட்டி மடக்கிக் கூறியதன் பொருள்.

அவன் பிரியப் போகிறான் என்பதைக் கேட்ட தலைவி நடுநடுங்கிவிட்டாள். பிரிவின் துயரம் என்ன என்பதை முன்னரே களவுக்காலத்தில் அவள் அனுபவித்ததுண்டு. ஆனால், தலைவனை மணந்துகொண்டு அவனுடன் குடும்பம் நடத்தும் இந்நிலையில் அப்பொழுது பிரிவால் பட்ட வருத்தம் கனவுபோல ஆகிவிட்டது; ஏன் – தலைவி அதைக் கூட மறந்துவிட்டாள். ஆனால், தோழி நேற்றுக் கூறியதை மீட்டும் நினைவில் கொண்டு வந்தபொழுது தலைவன் செய்த செயலுக்குப் பொருள் வேறுவிதமாகவே பட்டது. ஏன் அவள் நெற்றியை உற்றுப் பார்த்தான்? ஏன் அதன் ஒளியில் ஈடுபட்டதாகக் கூறினான்? இப்பொழுது அது ஒளியைத் திடீரென இழந்து விட்டதா? ஓஹோ? அவன் பிரிந்து விட்டால், அந்த வருத்தத்தால் அவள் வாட, அவளுடைய நெற்றி ஒளியை இழந்துவிடுமே என்று அஞ்சித்தான் அப்படிப் பார்த்தானா!

‘இல்லை; அவ்வாறு இருக்க முடியாது,’ என்று தலைவி நினைத்தாள். ‘ஒரு வேளை அப்படி இருந்தாலோ?” என்ற எண்ணம் மீட்டும் மனத்தில் முளைத்தது. அவ்வாறாயின், அவன் வாய்ச்சொல் தவறாதவன் ஆயிற்றே என்ற எண்ணம் மறுபடியும் அவள் மனத்தில் உதித்தது.

களவுக் காலத்தில் அவளை முதன்முறை சந்தித்துக் கூடிய பின்னர், ‘இனி ஒரு கணமும் உன்னைப் பிரியேன்; பிரிந்தால், உயிர் வாழேன்! என்றல்லவா கூறினான்? இது வரை அவன், கூறிய சொல்லை மீறுபவன் என்று அறியக் கூடவில்லையே! சாதாரண மனிதர்களானால் சந்தர்ப்பத் துக்கு ஏற்றபடி எதையாவது கூறிவிட்டுப் பிறகு அதனை மறந்துவிடுவார்கள். ஆனால் தன் தலைவனைப் பற்றி ‘உறுதியான சொல்லுடையவன்’ என்ற முடிவுக்குத் தலைவி பல நாள் முன்னரே வந்துவிட்டாள்.

சிலரிடம் பழகுவது கரும்பை அடியிலிருந்து தின்பது போல இருக்கும். அதாவது, முதலில் ‘ஆ! ஹோ!’ என்று பழகிவிட்டு, நாட்கள் செல்லச் செல்ல வெறுப்புத் தட்டும் வகையில் நடந்து கொள்வர். ஒரு சிலர் பழக்கம் அல்லது நட்பு, நாளாக ஆக மிகச் சுவையுடையதாய் இருக்கும். அது கரும்பை நுனியிலிருந்து தின்பது போன்று ஆகும். தலைவனுடைய நட்பு அத்தகையதன்றோ? திருமணமாகி இத்துணை நாட்கள் கழித்தும் அந்நட்பில் தினந்தோறும் புதிய இன்பம் அல்லவா காண்கிறாள் தலைவி? ‘நீடுதோறும் இனியன் அவன்’ என நினைக்கிறாள். மேலும், அவளைப் பிரிந்து இருக்க அவனால் முடியாது என்பதையும் பலமுறை அவனே கூறியிருக்கிறான். இது வரை பிரிந்திருந்ததும் இல்லை அவன்.

அப்படிப்பட்டவன் இப்பொழுதுமட்டும் எவ்வாறு பிரிந்து வாழப் போகிறான்? பிரிதல் என்ற ஒன்று மட்டும் அவன், அவள் இருவருக்குமே இயலாத காரியம். தாமரையில் தேன் நுகர்ந்து சந்தன மரத்தை அடைந்து தேன்கூடு வைக்கும் ஈயைப் போலத் தலைவனும் அவளுடன் இருந்து இன்பம் நுகர்ந்து உயர்ந்ததாகிய ‘இல்லறம்’ என்னும் மணம் அந்த இன்பத்திற்குக் கிடைக்குமாறு செய்துவிட்டான். வெற்றின்பம் ஒன்றையே கருதுபவனாயின், கனவில் அனுபவிப்பதுடன் நின்றிருப்பான். ஆனால், இல்லறமாகிய மணத்துடன் கூடிய இன்பமாகிய தேனை அல்லவா அவன் சேகரித்தான்! இந்த ஈக்களைப் பார்த்தவுடன் தலைவிக்குத் தலைவன் செய்கின்ற செயல் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில் தோழி உள்ளே இருந்து வெளியில் வந்தாள்; தலைவி குளத்தையும் சந்தன மரத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் நிலைபெற்று விட்டதைக் கண்டாள். அவளும் தலைவன் பிரிவைப் பற்றித்தான் நினைந்து வருந்துகிறாள் என்று நினைத்த தோழி, தலைவிக்கு ஆறுதலாக ஏதோ கூறத் தொடங்குகிறாள். ஆனால், தலைவி அவளைப் பேசவிட்டால் தானே! இல்லை, ‘தோழி, அவர் என்னுடைய நெற்றி அழகு கெட்டு ஒளி இழந்து போகும்படியாக ஒரு நாளும் நம்மை விட்டு நீங்க மாட்டார்’, என்று ஒரேயடியாகக் கூறி விடுகிறாள்.

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறி யலரே!
தாமரைத் தண் தாது ஊதி மீ மிசைச்
சாந்தின் தொடுத்த தீம்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறி யலரே? 

      (நற்றிணை-1)

(நின்ற சொல் – தவறாத சொல்; நீடு தோன்று இனியர் – நெடுங்காலம் பழகினும் இனிமையுடையவர்; மீமிசை – மேலே; சாந்தின் தொடுத்த – சந்தன மரத்தில் கட்டிய; புரைய – உயர்ச்சியை உடையன; நறு நுதல் – மணம் பொருந்திய நெற்றி; பசத்தல் – ஒளி கெட்டு விளர்த்துப் போதல்; சிறுமை உறுபவோ – சிறுமை செய்வாரா?)

இப்பாடலில் தலைவி, தலைவன்மாட்டுக் கொண்டுள்ள அன்பின் ஆழத்தைக் ‘கபிலர்’ என்ற புலவர் பெருமான் குறிக்கிறார். பெரியோர்கள் நட்பு (தலைவன் காதல்) தாமரைத் தேன், சந்தன மரத்தில் தேன் அடையானது போல உயர்ந்ததாகும். தலைவிக்குத் தலைவன் எவ்வளவு இன்றியமையாதவன் என்பதை 6, 7 அடிகள் விளக்குகின்றன. உலகத்திற்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவிற்கு தலைவன் தலைவிக்கு இன்றியமையாதனவாம்.

காதல் என்பது கேவலம் கடைச்சரக்காக வாங்கப் படும் இந்நாளில் இத்தலைவியின் காதற்பெருமையும் ஆழமும் அறிந்து மகிழ்தற்குரியன. நம் முன்னோர் காதலையே கடவுளை அடையும் வழியாகக் கொண்டனர் என இலக்கியம் பேசுகிறது. காதல் இத்தகையதாய் இருப்பின், ஏன் அது முடியாது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

***

பொன் வளையல்

தமிழ் இலக்கியத்தில் சாவா இடம் பெற்று வாழும் கவிதைகளில் எல்லாச் சுவைகளையும் (ரசம்) காணலாம். சில இடங்களில் சில சுவைகள் ஆழ்ந்து நோக்கிய வழியே புலனாகும்படி அமைந்துள்ளன. பழந்தமிழ் இலக்கண மாகிய தொல்காப்பியம், சுவை எட்டு எனக் கொண்டது; நகை முதலாக உவகை ஈறாக அவற்றிற்குப் பெயர்களும் தந்துள்ளது. (தொல், மெய்ப்பாட்டியல்–3) இதனுள் நகை என்ற முதற்சுவையும் உவகை என்று இறுதியாகக் கூறப் பட்டதும் ஆய்தற்குரியன. உவகை என்பது மகிழ்ச்சி என்றே கூறப்படலாம். ஆனால், மகிழ்ச்சி காரணமாகப் பிறக்கின்ற நகைக்கும் தொல்காப்பியனார் முதற்சுவையாகக் குறிப்பிட்ட நகைக்கும் வேறுபாடு உண்டு. ‘எள்ளல், இளமை, பேதைமை,மடமை’ என்ற நான்கும் காரணமாக நகை தோன்றும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், இதனை மேலைநாட்டுத் திறனிகள் கூறும் ‘Humour’ என்பதனோடு ஒருவாறு ஒப்பிடலாம். ஒருவாறு தான் ஒப்பிடல் கூடுமே தவிர, இவை இரண்டும் ஒன்று என்று நினைத்து யாரும் இடர்ப்படல் வேண்டா. நம்மவர் நகைச்சுவை தோன்றப் பேசிய இடங்களும், மேலை நாட்டார் ‘ஹ்யூமர்’ தோன்றுகிறது என்று கூறும் இடங்களும் வெவ்வேறானவை. இயற்கையில் தோன்றும் நகைச்சுவை ஒருவருடைய பேச்சின் மூலமும் செயலின் மூலமும் பிறரால் அனுபவிக்கப் பெறுகிறது. ஆனால், ஒவ்வொரு நாட்டினரின் பேச்சும் செயலும் பிற நாட்டினருடைய சொல் செயல்களிலும் மாறுபட்டவை அல்லவா? எனவே, நாம் நகை தோன்றப் பேசும்பொழுது பிற நாட்டாருக்கு அங்கே அச்சுவை தோன்றுவதில்லை. அப் பிறநாட்டார் நம்மொழியை நன்கு கற்றிருப்பினுங்கூட, நகைச்சுவை தோன்றும் இடங்களை அவர் காண்டல் இயலாது. நமது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே இம்மொழியில் தோன்றும் நகைச்சுவையை நன்கு அனுபவித்தல் கூடும். ஆங்கிலப்படக் காட்சிகள் பார்க்கும்பொழுது இந்த அனுபவம் ஏற்படுதலைக் காணலாம். பேசிக் கொள்பவர்கள் விழுந்துவிழுந்து சிரிப்பார்கள்; ஆனால், அதனைக் கேட்கும் நமக்கு அந்த பேச்சு முற்றிலும் விளங்கினாலுங்கூட ஏன் சிரிக்கிறார்கள் என்பது பல சமயங்களில் விளங்குவதில்லை!

எனவே, மேலை நாட்டார் கூறும் ‘ஹ்யூமரை’ அப்படியே தமிழில் ‘நகைச்சுவை’ என்று கூறிவிட்டதாக யாரும் நினைந்துவிட வேண்டா. பிறரைப் புண்படுத்தாத முறையில் அமைய வேண்டிய நகைச்சுவை, பிறரிடம் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் பொழுது கூட, அவர்களும் சேர்ந்து நகைக்குமாறு அமைய வேண்டுமே தவிர, அவர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது. தம்பால் உள்ள குறைகளைத் தாம் எடுத்துக் காட்டுகின்றனர் என்று அறிந்தவிடத்தும் குறையுடையார் வருந்தாமல் ஏற்றுக் கொள்ளும் முறையில் அமைவதுதான் சிறந்த நகைச்சுவை எனப்படும். நகைச்சுவை தோன்றப் பேசும் வன்மை சிலரிடம் காணப்படும்; ஆனால், இவ்வாறு பேசுவதால் யாதொரு பயனையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் பேச்சைக் கேட்பவர்கள் கைகொட்டிச் சிரித்து ஆர்ப்பரிப்பதைத் தவிர வேறு பயனை பேசுபவரும் கேட்பவரும் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால், இலக்கியத்தில் நகைச்சுவை தோன்றும் பொழுது இவ்வாறில்லை. நகை தோன்றச் செய்வதுடன் பெரியதொரு பயனையும் கருதியே இலக்கிய ஆசிரியன் நகைச்சுவையைக் கையாள்கிறான். அவன் கருதும் பயன் தனிப்பட்ட ஒரு மனிதனைத் திருத்தவேண்டும் என்பதாகவும் இருக்கலாம். அன்றே, அவன் காலத்தில் காணப் பெற்ற சமுதாயம் முழுவதையும் திருத்த வேண்டும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம். இவையல்லாத மூன்றாவது வகையும் உண்டு. அகப்பாடல்களில் மருதத்திணைப் பாடல்கள் பலவற்றுள்ளும் நகைச்சுவை உண்டு. தலைவனுடைய நாட்டு வளனை விவரிக்கும் முகமாக அவனுடைய குறைபாடுகள் அனைத்தும் பேசப்பெறும். மேலாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை தோன்றினாலும், ஆழ்ந்து நோக்குகையில் தலைவனைத் திருத்த வேண்டும் என்ற ஆவல் அச்சொற்களுள் அடங்கியிருக்கும். எவ்வளவு பெரிய தவற்றையும் நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினால், பிறர் மனம் நோவாமல் எடுத்துக் கூறலாம். நற்றிணையில் வரும் நுண்மையான நகைச்சுவை ஒன்றைக் காணலாம். அது மூன்றாம் வகையைச் சேர்ந்தது.

பல வகையாலும் சிறப்பெய்திய தலைவன் அவன். அவளும் பெரிய இடத்துப் பெண்தான். அவன் கண்ட பெண்களிடமெல்லாம் மனத்தைப் பறிகொடுத்துத் தவிப்பவன் அல்லன்; அவளும் அவ்வாறே. இவ்வாறு இருந்தும், அவ்விருவரும் ஒருவரையொருவர் சந்தித்தவுடன் காதல் கொண்டனர். ‘கண்டதும் காதல்’ என்று இக்காலத்தார் கூறும் வகையில் அமைந்ததன்று அவர்களுடைய காதல். பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும் ஒன்றுதான் தம்முடைய காதல் என்பதை அவ்விருவரும் நன்கு அறிந்து கொண்டனர். முதன்முறை இருவரும் சந்தித்துக் களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் பிறகு பல முறையும் சந்திப்பதாகவே உறுதி பூண்டு இருவரும் பிரிந்தனர்.

முதன்முறை அவர்கள் சந்தித்தது ஒருவருக்கும் தெரியாது. விதிதான் தங்களைச் சேர்த்துவைத்தது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால், மறுமுறை சந்திப்பது முதன்முறை போல அவ்வளவு எளிதாய் இல்லை. தோழியின் உதவி இல்லாமல் தலைவனைச் சந்திக்க முடியாது என்பதைத் தலைவி உணர்ந்தாள்; தலைவனும் இதனை நன்கு உணர்ந்தான். எனவே, இருவரும் தனித் தனியே தோழியிடம் பேசி அவளுடைய உடன்பாட்டைப் பெற்றுவிட்டனர்.

நாள்தோறும் வந்தான் தலைவன்; தலைவியைச் சந்தித்தான். ஆனால் அதற்குமேல் அவன் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை. வாழ்நாள் முழுதும் களவொழுக்கத்தில் கழித்துவிடமுடியுமா? அவள் நினைக்கிறாள் முடியாதென்று. ஆனால், அவன் அதுபற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. குடும்பப் பொறுப்பு இல்லாமலே இன்பம் பெறுவதைச் சிறந்த வழி என்று கருதிவிட்டானா? அவன் வாய்மூடி இருப்பதால் தலைவி படும் துயரை அவனுக்கு யார் எடுத்து உரைப்பார்? தலைவியே கூறுதல் நலம் என்றுகூடத் தோழி கருதினாள். ஆனால், பண்பாடுடைய அவனுக்கு இதனை எடுத்துக் கூறுதல் பொருத்தமற்றது என்று கருதினாள் தலைவி.

ஒருநாளில் எப்பொழுதோ ஒரு நேரத்தில் வருகிறான் அவன். அந்த நேரத்தில் அவன் எதிர்பார்த்து வரும் இன்பத்திற்கு மறுதலையாக அவனுடைய கடமை பற்றி நினைவூட்டுவது நாகரிகமற்ற செயலாகும் என்று கருதினாள் தலைவி. தலைவிக்குத் தோன்றும் இவ் வெண்ணங்கள் தலைவனுக்குப் புலப்பட்டதாகவே தெரியவில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்திருக்க முடியும்? தலைவன்மாட்டுள்ள அன்பு காரணமாகத் தலைவி பொறுத்திருக்கத் துணியலாம். ஆனால், ஊரார் வாய் சும்மா இராதே! சிறு தூற்றல் பெருமழையானாற் போல ஊரார் பழிச்சொல்லும் மிகுந்துவிட்டதே! இந்நிலையில் இதற்கு ஒரு வழிகாண வேண்டும் என்று முடிவு கட்டினாள் தலைவி.

தலைவி சிறு குழந்தையாய் இருந்தபோது அவளுக்கு மருத்துவம் செய்துவந்தார் ஒரு மருத்துவர். அவளுக்கு மட்டும் என்ன? ஊரார் அனைவரும் நோயுற்றபொழுது அவரிடமே சென்றனர். அவர் எவ்வளவு அறிவும் ஆற்றலும் படைத்தவர்! அவர்,

'நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்' 

      (குறள்-948)

என்ற குறளை நன்கு அறிந்து கடைப்பிடிப்பவர். ஒரே நேரத்தில் இருவர் வயிற்றுவலி என்று கூறிக்கொண்டு வருவர். இருவருக்கும் வயிற்று வலிதானே என்று அவர் ஒரே மருந்தைத் தருவதில்லை. வயிற்று வலியாகிய காரியம் ஒன்றேயாயினும், அதன் காரணம் வெவ்வேறாகலாம் அல்லவா? எனவே, ஒருவருக்கு இனிய மருந்தும், மற்றவருக்குக் கசப்பு மருந்தும் தருவார். கசப்பு மருந்து உண்பவர் தம்முடைய வருத்தத்தைத் தெரிவித்து எவ்வாறாயினும் தமக்கும் இனிப்பு மருந்து தர வேண்டுவார். ஆனால், மருத்துவர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விடுவார். ‘நோய்க்கு மருந்தே தவிர நாவுக்கு மருந்து அன்று’ என்று கூறிவிடுவார். இதனால் நடுவு நிலை திரியாத அறவோர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். பல காலம் அவர் இவ்வாறு செய்வதைத் தலைவி கண்டிருந்தாள். இப்பொழுது அவளுக்கு அவருடைய நினைவு தோன்றிற்று. அவர் செயலை எடுத்துக் காட்டுவதன் மூலம் தலைவனுக்கு அறிவு கொளுத்த முடிவு செய்துவிட்டாள்.

நேரடியாக ஒன்றைக் கூறுவதைக் காட்டிலும் மறைமுகமாகக் கூறுவது எளிது. அவ்வாறு கூறுவதிலும் நகைச்சுவை தோன்றக் கூறுவது இன்னும் நலம் பயக்கும். ஆனால், நகைச்சுவை ததும்பப் பேசக்கூடிய நிலையிலா தலைவி இருக்கிறாள்? எல்லையற்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் அவளால் சுவைபடப் பேசல் இயலுமா? பேச முடியும் என்று ‘சுவை இயல்’ ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும் ஒருவன் நகைச்சுவை ததும்பப் பேசும் பொழுதும் சிரிக்கும் பொழுதும் ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். அவனுடைய உணர்ச்சிகளை ஆழ்ந்து நோக்கினால் கண்ணீர் வரவழைக்கும் ஒரு நிலையிலிருந்தே இந்த நகைச்சுவை தோன்றிற்று என்பதை அறிய முடியும். இவ்விலக்கணத்தைத் திருப்பி வைத்துப் பார்த்தாலும் இதில் உண்மை இருப்பது விளங்கும். எல்லையற்ற துயரம் தோன்றிய பொழுதும் சிரிப்பும், சிரித்தற்கு ஏற்ற பேச்சும் தோன்ற இடமுண்டு என்பதை அறிய முடிகிறது. [For, in every case in which a man laughs humorously there is an element which, if his sensitivity were sufficiently exaggerated, would contain the possibility of tears. – The Sense of Humour by Max Eastman. P.21.] மேலே கூறப் பெற்ற தலைவிக்கு எல்லையற்ற வருத்தத்தினாலேதான் நகை ததும்பப் பேசும் வாய்ப்பு ஏற்படுகிறது.

நகைச்சுவையுடன் வரும் பேச்சு ஏதாவது ஒரு காரணம் பற்றியே தோன்றல் கூடும். அக்காரணத்தை ஆய்ந்த திறனாய்வாளர் இவ்வாறு கூறுகின்றனர்; ‘நகைப் பேச்சு என்பது வைரம் போன்ற ஒளிபடைத்த ஓர் அனுபவமாகும். விளையாட்டில், எதிர்பாராமல் தோன்றிய அதிர்ச்சியோ, ஏமாற்றமோ (அது மனத்திருப்தியை உண்டாக்குவதாயின்) தோன்றும் பொழுதுதான் இந்த அனுபவம் கிட்டுகிறது. [And a joke is a little node, or gem like moment in our experience created by the exact coincidenc of a playful shock or disappointment with a playful or a genuine satisfaction – ibid P.28.]

தலைவியின் எல்லையற்ற நம்பிக்கை மெள்ளத் தகர்கிறது. தலைவன் நீண்ட காலமாகத் தன் எதிர்காலம் பற்றி ஒன்றும் கவலையுறாமல் இருப்பதால், இது எவ்வாறு முடியுமோ!’ என்ற ஐயம் முதலில் தோன்றிற்று, நாளடைவில் அந்த ஐயம் வளர்ந்து பெரிதாயிற்று. ஒருவேளை அவள் அவனை நெருக்கிக் கேட்ட பொழுது அவன் தட்டிக் கழிக்கும் முறையிலோ, அன்றி அவள் மனம் அமைதியடையாத நிலையிலோ பேசியிருக்கலாம். இந்த ஏமாற்றம் அவளுடைய மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. இதன் பயனாகவே அவளுடைய பேச்சும் மாறுபட்டு வெளிவருகிறது. ஒரு நாள் தலைவன் வந்தான்; ஆனால், தலைவியிடம் நேரே வந்துவிடாமல், ஒரு வேலி ஓரத்தில் மறைவாக நிற்கிறான். அவன் வந்து நிற்பதைத் தோழி, தலைவி என்ற இருவரும் அறிந்தனர். அவனிடத்தில் நேரிற் கூற முடியாத ஒன்றை மறைமுகமாகக் கூற விரும்பினாள் தலைவி; அவன் இருப்பதை அறியாதவள் போலப் பேசத் தொடங்குகிறாள் தோழியை நோக்கி; தலைவன் தன்னை விட்டு நீண்ட காலம் பிரிந்திருப்பதால் தன் தோள்கள் மெலிந்துவிட்டன என்று கூற வேண்டும் அவளுக்கு. அதைத்தான் எவ்வளவு திறம்படக் கூறுகிறாள்! ஆத்திரத்துடனும் அழுகையுடனும் பேச வேண்டிய ஒரு நிகழ்ச்சியை ஆழ்ந்த நகைச்சுவை ததும்பப் பேசுகிறாள் தலைவி;

“தோழி, திருத்தமாகச் செய்யப் பெற்றனவும் ஒளி பொருந்தியனவுமான வளையல்களை வேண்டுமென்று யான் அழவும், என் தந்தையார் என்ன செய்தார் தெரியுமா? கடுமையான பிணியுடையவர்கள் விரும்பிய மருந்தைக் கொடாமல், அவர்கள் நோயை ஆய்ந்து அதற்கு ஏற்ற மருந்தையே தரும் அறமுடைய மருத்துவானைப் போலத் தந்தையார் எனது நிலையை உணர்ந்து கொண்டார். தலைவனொடு நமக்குப் பிரிவு நேரிடும்; அந்த நேரத்தில் நம்முடைய தோள் நெகிழும். அவ்வாறு நெகிழ்ந்தால், இந்த வளையல்கள் கழன்று வீழ்ந்துவிடுமே என்று ஐயுற்றவர் போல, மிகவும் இறுக்கமாக அமைந்துள்ள சிறிய வளையல்களையே போட்டு விட்டிருக்கிறார்” என்று கருத்துபடக் கூறுகிறாள்.

திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பினி உறுநர்க்கு வேட்டது கொடாது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என்ஐ வாழிய பலவே! பன்னிய
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின்வரை அமைந்து
தோட்பழி மறைக்கும் உதவிப் போக்குஇல்
பொலம்தொடி செறீஇ யோனே! 

      (நற்றிணை, 136)

‘தலைவன் பிரிந்தபொழுது தோள் இழைத்தாலும் கழன்று விழாத வளையல்களாகப் பார்த்து எனக்குப் போட்டு அனுப்பினார் போலும் தந்தையார்! அவர் வாழ்க!’ என்று கூறுவதில் நகைச்சுவை அமைந்துள்ளது. ஆனால், நுண்ணிதின் நோக்குவார்க்கேயன்றி மேலாகக் கற்பார்க்கு விளங்கா வகையில் அமைந்து கிடக்கிறது அந்தச் சுவை. தன் தோள்கள் இளைத்துவிட்டமையைத் தலைவன் ஆர்வமிகுதியால் காணவில்லையாகலின், சிரிப்புடன் பேசுவதுபோல அவ்வுண்மையை அவன் காது கேட்கக் கூறிவிட்டாள். என்றாலும், அந்த நகைச்சுவையும் அவளுடைய பெண் தன்மைக் கேற்ப அடக்க ஒடுக்கத்துடன் வெளிவருகிறது. வெடிச் சிரிப்புடன் வரும் சொற்களல்ல இவை; மெல்ல முல்லையரும்புப் போன்ற பற்கள் மட்டும் வெளியே தெரியும்படியான புன்சிரிப்புடன் வரும் சொற்கள்.

இலக்கியத்தில் தோன்றும் இத்தகைய நகைச்சுவைகட்கு ஒரு காரணம் கூறுகின்றனர் திறனாய்வாளர். மனித மனத்தின் ஆழத்தை அது வெளிப்படுத்துகிறது. ஆதலின், அதனைக் காண்டல் வேண்டும்.

“எதிர்பார்த்தது நடைபெறும் பொழுது தோன்றும் இன்பத்தையும், அது நடைபெறாத பொழுது ஏற்படும் துன்பத்தையும் நம் அறிவு எடை போடுகிறது. துன்பந்தான் நேரும் அந்த இக்கட்டான நிலையில், மகிழ்ச்சி தரக் கூடியது எதுவாயினும், அந்த ஒன்று கற்பனை அளவிலே தான் மகிழ்ச்சி தரும். என்றாலும், அறிவு அந்தக் கற்பனை மகிழ்ச்சியைப் பற்ற விரும்புகிறது. இவ்வாறு கற்பனை மகிழ்ச்சியைப் பெறுவதன் மூலம், இன்மையால் நேரும் துன்ப உணர்ச்சி தணிகிறது.”

[Our brain is just balancing, as we might imagine upon the Fine edge between pain and pleasure at the failure of what it had momently desired, when there looms into the void some unexpected rips apple of a thing desired more, or desired at least deeply and continuosly, and with a hunger that can be relied on to be glad. And by this means that arbitrary trick of turning loss into gain is actually warrented and borne out by the facts. – Ibid, p. 28]

தலைவன் செய்த கொடுமையால் ஏற்பட்ட ஆறாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவியைத் தந்தை செய்து போட்ட இறுக்கமான வளையல்கள் பற்றிய நினைவு சிரிக்கச் செய்கிறது. ஏனைய சந்தர்ப்பமாயின், இது நகைப்புக்குரிய செயலன்று. ஆனால், பிரிவினால் ஏற்பட்ட வருத்தத்தின் எதிரே தந்தையின் இந்தச் செயலிலும் ஒரு நகைப்பைப் பெறுகிறாள் தலைவி. இத்துணை நுண்ணிய முறையில் சுவைகளைப் பெய்து பாடும் தமிழ்க்கவிஞர் இனம் இன்று எங்கு மறைந்ததோ, தெரியவில்லை.

***

‘நாடனை அறியலும் அறியேன்!’

தம்முடைய நெஞ்சால் உண்மை என்று அறிந்த ஒன்றை மறைத்துக் கூற முற்படுதல் தவறாக முடியும் என்று கூறினார் வள்ளுவப் பெருந்தகையார். ஆனால், உலக மக்களின் பெரும்பாலோர் அறிந்தும் அறியாமலும் இக்குற்றத்தைச் செய்துதான் வருகின்றனர். நெஞ்சறிந்தே பல சந்தர்ப்பங்களில் பொய் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதால் அந்த நேரத்தில் வரும் துன்பத்திலிருந்து விடுபடவே பல சமயங்களில் இவ்வாறு பொய் பேசுகின்றனர். இன்னுஞ் சிலர் பொய் கூற வேண்டிய இன்றியமையாமை இல்லாத பொழுதும் பொய் கூறுகின்றனர். இவர்களே ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள். காரணமில்லாமல் ஏன் பொய் கூறுகின்றனர் என்று ஆராய்ந்தால், ஓர் உண்மை விளங்கும். இவ்வினத்தார் பொய் கூறுதலை ஒரு கலையாக வளர்த்து விட்டனர். கலைப்பித்துப் பிடித்த கலைஞர்களுக்குத் தங்கள் கலையை மட்டும் மறக்க இயலாது; உணவின்றிப் பட்டினியால் வாடுவார்கள்; ஏனைய எத்தகைய கடுந் தண்டனையை வேண்டுமானாலும் அனுபவிப்பார்கள். ஆனால், அவர்கள் விரும்புகிற கரையிலிருந்து அவர்களைப் பிரித்து விட்டால், நீரிலிருந்து தரையில் எடுத்துப் போடப்பட்ட மீன் போல மூச்சுத் திணறுவார்கள். இந்த இலக்கணமும் கலைஞர் அனைவருக்கும் பொதுவானதே. எனவே, பொய் பேசுதலைக் கலை போல வளர்த்தவர்கட்கும் இது உண்மையாகும். அவர்கள் எந்தத் துன்பத்தை வேண்டுமானாலும் அனுபவிக்கத் தயங்க மாட்டார்கள். ஆனால், ஒரு நாள் மட்டும் பொய் கலவாமல் பேச வேண்டும் என்று கட்டுப்பாடு செய்துவிட்டால்- பாவம்- அவர்கள் பாடு பெருந் திண்டாட்டமாய்ப் போய்விடும்! இந்த வியப்பான பிராணிகளிடம் மற்றொரு புதுமையையும் காணலாம். அதுதான் காரணமில்லாமல் இவர்கள் பொய் பேசுவது. ஒரு பயனைக் கருதிப் பொய் பேசுபவர்களை நாம் மன்னித்துவிடலாம். ஆனால், எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் பொய்யைப் பொய்க்காகவே பேசும் இயல்புடையவர்கள் இவர்கள். ஆதலாலேதான் இவர் கலைக் கலைஞர்கள் என்று கூடக் கூறலாம் போலத் தோன்றுகிறது.

ஏனைய கலைகளில் ஆண்- பெண் என்ற வேறுபாடு இல்லை; இரண்டு தரத்தாரும் ஒத்த மதிப்புடைய கலைஞராய் விடலாம். ஆனால், ‘பொய்க் கலை’யில் மட்டும் நம் சோதரிமார்கள் நம் பக்கத்திற்கூட வர இயலாது. ஆண் மக்களாகிய நம்முடைய இனத்தின் தனி உரிமை இக்கலை. இக்காலத்தில் வாழும் நமக்கும் மட்டும் இதனைக் கூறுவதாக யாரும் நினைத்து மகிழ்ந்துவிட வேண்டா. நம்முடைய முன்னோர்கட்கும் இது பொருந்தும். அதுவும் ‘காதல்’ விஷயத்தில் இது முற்றிலும் உண்மை. காதல் சம்பந்தமான விஷயங்களில் தலைவன் அஞ்சாது பொய் உரைப்பான். ஆனால் ஒன்று; அந்நாளில் பொய் பேசிய நம் இனத்தவனாகிய தலைவனுக்கும் இன்று வாழும் நமக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு. அவனுடைய பொய்யால் பிறருக்குத் தீமை ஏற்படுவதில்லை. இன்று நாம் கூறும் பொய்களால்….?

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தலைவனுடைய பொய் ஒரு புறம் இருக்க, சில சந்தர்ப்பங்களில் பெண்களும் இதனைக் கையாண்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் பொய் கூற வேண்டிய இன்றியமையாமை ஏற்படுவதும் அந்தச் சமுதாய வாழ்வில் உண்டு. ஓர் ஆண் மகனும் ஒரு பெண் மகளும் சேர்ந்து தாமே களவு வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். அப்படி இருக்க, ஊரார் அனைவரும் அந்தப் பெண்ணைப் பற்றித்தான் அலர் (பழி) தூற்றினார்கள். அவள்மேல் வந்த பழிக்கு அவனும் சரிபாதி காரணமாவான் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை! அறிந்தாலும் அவனைக் குற்றம் கூறுவதும் இல்லை.

எனவே, தம்முடைய களவு வாழ்க்கையைப் பிறர் அறியாமல் மறைத்து ஒழுக வேண்டுமென்று அவன் கவலைப்படவே இல்லை. இவ்வாழ்க்கை வெளிப்பட்டு விடக்கூடாதே என்ற கவலையெல்லாம் – பாவம் – அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தோழிக்குமே உண்டு. இதனால், சில சந்தர்ப்பங்களில் தலைவியும் தோழியும் வேறு வழி இன்றிப் பொய் பேசி உள்ளனர். இலக்கியத்தில் எங்கோ இரண்டொரு பாடல்கள் இத்தகைய காட்சியைச் சித்தரிக்கின்றன.

அத்தலைவனிடம் சில காலமாக அத்தலைவி களவில் ஈடுபட்டு வருகிறாள். இந்தச் சந்தர்ப்பத்தில் அவள் தினைப்புனத்தில் காவல் காத்து வருவது அவளுடைய களவு வாழ்க்கைக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. தினைப்புனம் அவர்களுடைய வீட்டிலிருந்து நெடுந் தூரத்திற்கு அப்பால் அமைந்திருக்கிறது, நீண்ட தூரத்தில் அமைந்துள்ள அப்புனத்திற்கும் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வருதல் என்பது இயலாத காரியம். எனவே, தலைவியும் தோழியும் இரண்டொரு பணிப் பெண்களுமே தினைப்புனத்தில் தங்குவார்கள். தினைப்பயிர் அறுவடை ஆகிற வரையில் அவர்கள் புனத்திலேயே தங்கி இருக்க வேண்டும். வீரக்குடியில் பிறந்த பெண்கள் ஆதலின், வேறு ஆண் மக்களின் துணை இன்றி அவர்கள் மட்டுமே அங்குத் தங்கியுள்ளார்கள். ஆண் மக்களின் வாடையே இல்லாமல் ‘அல்லி ராஜ்யம்’ நடத்தும் தலைவி, ஏனைய தோழிகளோடு சேர்ந்து வாழ்க்கையை மிக இன்பமாகக் கழிக்கிறாள். என்றோ ஒரு நாள் அவள் தந்தை மகளைப் பார்த்துவிட்டுப்போக வருவான். மற்றொரு நாள் தாய் வருவாள். பிறிதொரு நாள் தலைவியின் உடன் பிறந்தார் வந்து அவளைக் கண்டு போதலும் உண்டு. அவளுடைய வாழ்க்கை தினைப்புனத்தில் நன்கு நடைபெற இன்றியமையாத பொருள் ஏதேனும் தேவைப்பட்டால், அவர்கள் அதைக் கொண்டு வந்து தந்து போவார்கள். தந்தைக்கும், அண்ணன்மார்க்கும் குடும்பத்தைத் தாங்க வேண்டிய பொறுப்பு இருத்தலின், அவர்கள் புனத்திற்கு எப்பொழுதாவது வந்தாலும் நீண்ட நேரம் தங்க இயலாது. தாயும் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கட்டுப்பாடு உடையவள். ஆதலால், அவளும் அடிக்கடி வர மாட்டாள். வந்தாலும், இவர்களுடன் தங்க மாட்டாள். எனவே, தலைவியின் பாடு கொண்டாட்டந்தான்!

இம்மாதிரி வாழ்க்கை நடைபெற்று வருகையிலேதான் ஒரு நாள் அவன் வந்தான்; தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்; உடன் காதலும் பிறந்தது. பின்பு இருவரும் தனியே சந்தித்தனர்; மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழித்தனர். தலைவனுடன் சேர்ந்த தலைவி, அந்த மலைப்புறமெல்லாம் சுற்றி அலைந்தாள்; அவனுடன் சேர்ந்தே மலைச் சுனைகளில் நீராடினாள்; அருவிகளிலும் குளித்து விளையாடினாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் வாழ்ந்து வரத் தலைப்பட்டனர். தலைவியின் உயிர்த் தோழிக்கு மட்டும் தலைவியின் இந்தப் புதிய வாழ்க்கை தெரியும். அவளும் தன்னால் இயன்ற அளவுக்குத் தலைவியின் வாழ்க்கை இன்பம் அடைய உதவுவாள். மற்ற பணிப்பெண்களைப் பொறுத்த மட்டில் தலைவியின் புது வாழ்வு நன்கு தெரியாது. தெரிந்தாலும், அவர்கள் அவள் செயல்களில் ஈடுபடுவதுமில்லை. அவள் நடத்தையைக் கவனிக்க அவர்கள் யார்? புனத்திற்கு வெளியிலிருந்து ஒருவரும் வாராத வரை தலைவியின் இன்ப வாழ்வு ஆற்றோட்டம் போல நன்கு நடைபெற்றுத்தான் வந்தது.

தாயோ, தந்தையோ வருகின்ற அந்த நேரத்தில் தலைவி பரண்மேல் நின்று கொண்டிருந்துவிடுதல் போதுமானது. என்றாவது தலைவியின் முகம் மாறுபட்டு இருப்பதாகத் தாய்க்குத் தோன்றும். அவளுடைய நடை, உடை, பாவனைகள் அனைத்திலுங்கூடச் சில சந்தர்ப்பங்களில் வேறுபாடு தோன்றுவதுண்டு. அம்மாதிரி நேரங்களில் எல்லாம் அந்தப் பைத்தியக்காரத் தாய்க்கு மகள் மேல் ஐயந் தோன்றுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் தங்களைப் பிரிந்து இருப்பதால் இந்த மாறுபாடு ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம் என்று அவள் நினைத்துக் கொண்டு சென்றதும் உண்டு.

தாய் இவ்வாறு வந்து சென்றுகொண்டிருந்த வரை தலைவிக்கு எவ்வித துன்பமும் நேரவில்லை. ஆனால் உலகத்தில் நாம் நினைத்தவை நினைத்தபடி நடைபெறுவதில்லை அல்லவா? அவ்வாறு நடைபெற்றால், இதனை உலகம் என்றுதான் கூற முடியுமா? ஒரு நாள் தாய் வருவாள் என்று தலைவி சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், முதல் நாள்தான் அவள் வந்து போனாள். எனவே ஊரிலிருந்து ஒருவருமே தன்னைக் காண வரமாட்டார் என்று நினைத்துவிட்டாள் தலைவி. எனவே, தலைவன் வந்தவுடன் அவனுடன் புறப்பட்டு விட்டாள். நேரம் போவதே தெரியவில்லை அவளுக்கு. மாலை நெடுநேரம் ஆகிவிட்டது. ஏன் அதற்குள் அந்திப் பட்டுவிட்டது என்று கேட்கத்தான் அவளுக்குத் தோன்றுகிறது. தன்னால் காவல் காக்கப்பட வேண்டிய தினைப் புனம் என்ன கதியாயிற்றோ என்றுகூட அவள் கவலைப்படவில்லை.

அவள் எல்லையற்ற இன்பக்கடலில் திளைத்தபடியே மாலை நேரத்தில் பரணை நோக்கி வந்தாள். பரண் அமைந்திருக்கும் இடத்திற்கு சிறிது தூரம் வரை தலைவனே அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றான். பரண்மேல் ஏறிச் சென்றாள் தலைவி. என்ன வியப்பு! அவள் தாய் அங்கே அமர்ந்திருந்தாள். கால தேவனைக் கூடத் தலைவி அந்த இடத்தில் அஞ்சாமல் சந்தித்திருப்பாள்; ஆனால், அவளுடைய தாயை மட்டும் சந்திக்க விரும்பவில்லை. என்ன செய்வது!

எவ்விதமான ஐயமும் கொள்ளாமல், “எங்கே அம்மா இவ்வளவு நேரம் சென்றிருந்தாய்?” என்று கேட்டுவிட்ட தாயையும், அவளுடைய கேள்வியையும் சற்று எதிர்பாராத தலைவி, வாயடைத்து நின்றுவிட்டாள். அவள் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டுவிட்டாள். தன் கோபத்தை எங்கே மகள் அறிந்து கொண்டு மனவருத்தம் அடைவாளோ என்று அஞ்சிய தாய், உடனே. “ஏன் அம்மா, தினைபுனக் காவலைக்காட்டிலும் முக்கியமான காரியம் என்ன இருக்கிறது? எங்கு சென்றிருந்தாய்?” என்று கேட்டுவிட்டாள். ‘புனக்காவலை விட்டுவிட்டு ஏன் போனாய்?” என்று தாய் கேட்டதும் தலைவி மிகவும் அஞ்சிவிட்டாள். தான் தலைவனுடன் இருந்ததைத் தாய் கண்டுவிட்டாளோ என்ற ஐயம் மகள் மனத்தில் தோன்றி விட்டது. மேலும் தான் ஒரு தவற்றைச் செய்துவிட்டு அஞ்சி நிற்கையில் பிறர் யாது கூறினாலும், உண்மையை அறிந்துவிட்டர்களோ என்ற ஐயம் தோன்றுவது இயல்பு. ‘பூசணிக்காய் திருடியவன் முதுகு வெள்ளை நிறம் ஏறி இருக்கும்,’ என்று கூறினால், உடனே திருடியவன் முதுகைத் தடவிப் பார்ப்பது உறுதியன்றோ? எனவே, தாயின் இக்கேள்விக்கு, ‘நான் எங்கும் வெளியே செல்லவில்லை’ என்று விடை இருக்க நினைத்தாள் தலைவி. நன்கு பொய் கூறிப் பழக்கப்பட்டிருந்தால், பதறாமல் இவ்வாறு கூறியிருப்பாள். ஆனால் இதற்கு முன்னர்ப் பொய் கூறிப் பழக்கம் இல்லை தலைவிக்கு. எனவே, அவளையும் மீறி மெய்ம்மை வெளிப்பட்டு விடுகிறது. மெய்ம்மையை மறைக்க வேண்டும் என்று முயன்றதால் வேடிக்கையான முறையில் விடை வெளிவருகிறது. ‘நான் தலைவனைப் பார்க்கவும் இல்லை; அவனை நான் அறியேன்; சுனையில் யாருடனும் சேர்ந்து நீராடவும் இல்லை’ என்று கூறுகிறாள்.

இவ்வாறு மகளிடம் ஒரு விடையை அந்தத் தாய் எதிர்பார்க்கவே இல்லை. இவ்விடையைக் கேட்டு அப்படியே தலையைத் தொங்கவிட்டுக்கொண்டாள் தாய். பதில் பேச அவளுக்கு வாய் ஏது? இனி மகளைத் தினைப்புனக் காவலுக்கு விடுவாளா என்பது ஐயந்தான்.

இவ்வாறு ஒரு நாள் நடந்ததாகவும் இனித் தலைவியின் நிலைமை யாதாகுமோ என்று கவலையுறுவதாகவும் தோழி கூறுகிறாள். தலைவன் பரணின் பக்கத்தே மறைந்து கொண்டிருக்கிறான். அவன் காதில் இது விழ வேண்டுமாம். இதைக் கேட்டவுடன் இனித் தலைவியைச் சந்திக்க முடியாதென அஞ்சி விரைவில் மணந்துகொள்வானாம்.

இனிய தேன் பிலிற்றுகிற சாரலினிடத்துச் சிறிய தினைப்பயிரின் பெரிய கதிர்களைச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் திருடுமாறு விட்டுவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய் என்று தாய் கேட்டாளே! நீ அவள் எதிரே நின்று, ‘அருவி ஒலிக்கும் மலை நாடனை நான் அறியேன்; கண்டதும் இல்லை. கிளியை ஓட்டும் கருவியைக்கொண்டு பூக்களைக் கொய்து, அவனுடன் சுனையில் ஆடவும் இல்லை,’ என்று நீ பொய் கூறுவது போல மெய்யைக் கூறிவிட்டாய். அதைக் கேட்டுத் தாய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள். இனி உன்னைத் தினைப்புனக் காவலுக்கும் விடமாட்டாள். நம் கதி யாதாகுமோ!’ என்கிறாள் தோழி:

யாங்குஆ குவமோ அணிநுதல் குறுமகள்!
தேம்படு சாரல் சிறுதினைப் பெருங்குரல்
சிவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற்று
எவ்வாய்ச் சென்றனை அவண்? எனக் கூறி
அன்னை ஆனாள் கழற, முன்நின்று
'அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன்! காண்டலும் இலனே!
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து
சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்!' என நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை! அதுகேட்டுத்
தலைஇறைஞ் சினளே அன்னை
செலவுஒழிந் தனையாள் அளியைநீ புனத்தே!' 

       (நற்றிணை, 147)

(யாங்காகுவமோ- நாம் இனி எவ்வாறு தப்பப் போகி றோமோ; தேம்படு சாரல்- இடம் அகன்ற மலைச்சாரல்; பெருங்குரல்- பெரிய கதிர்; வெதிர்புனைதட்டை- மூங்கிலாற் செய்த கிளியை விரட்டும் கருவி; பொய்யால் வாய்த்தனை – பொய் கூற முடியாமல் உண்மை கூறி விட்டாய்; இறைஞ்சினள்- தொங்கவிட்டாள்; அளியை- நீ இவ்வாறு குடும்பம் நடத்தப் போகிறாய் என்று பிறரால் இரங்கத் தக்கவள்).

***

‘மன்ற மடவை, வாழிய முருகே!’

தலைவிக்கு உற்ற துணைவியாய் உள்ள தோழியின் சிறப்பையும் அவள் தலைவிக்குச் செய்த உதவியையும் பற்றிக் கூறும் பாடல் இது:

வானை முட்டும் மலை ஒன்று. பல வளங்களும் நிறைந்துள்ளன அங்கு. குறிஞ்சித்திணை என்றால் மலையும் மலையைச் சுற்றியுள்ள இடங்களுமே குறிக்கப்படும். இம் மலைநாட்டை ஆள்பவன் ‘நாடன்’ என்று பொதுவாகக் குறிக்கப்படுவான். அவனுடைய மலை பல வளங்களுக்கும் உறைவிடமாய் இருப்பதற்கு நீர்வளம் வேண்டுமல்லவா? அவ்வளத்தை அங்கு ஓயாமல் பெய்யும் மழை தருகிறது. ஆனால், மலையில் பெய்யும் மழை நில்லாமல் ஓடிவிடும் இயல்புடையது. எனவே அம்மழை நீரைத் தேக்கி வைத்துக்கொள்ள, இயற்கை அன்னை குளங்கள் தோண்டி வைத்திருப்பாள். அவற்றிற்குச் ‘சுனைகள்’ என்று பெயர் கூறுவர்.

பாறைகள் மூடிய சுனைகள் பக்கம் மாந்தர் செல்லவும் அஞ்சுவர். சின்னாட்களில் அவைகளும் கடவுள் தன்மை பெற்றுவிடும். இத்தகைய கடவுட் சுனையை உடைய மலைக்கு அவன் தலைவன். அவனுடைய மலையில் உள்ள இந்தச் சுனையில் மக்கள் செல்வதில்லை யாகலின், அங்குத் தேவமாதர்கள் வருவார்களாம். அவர்களைச் ‘சூர் அரமகளிர்’ என்று சங்கப் பாடல்கள் குறிக்கும். அத்தேவ மாதர்கள் அந்தத் தலைவனுடைய மலையில் உள்ள கடவுட் சுனைக்கு வந்து, அங்கு மக்கள் பறிக்க அஞ்சி விட்டுச் சென்ற மலர்களைப் பறிக்கிறார்கள். அப்பூக்களைக் கவிஞன் ‘பறியாக் குவளை’ என்றே குறிப்பிடுகிறான். பறியாக் குவளை என்றால், மக்களால் பறிக்கப்படாத குவளை மலர்கள் என்பது பொருள். மக்களால் தீண்டப்படாத அக்குவளை மலர்களை அத் தேவ மாதர்கள் பறிக்கிறார்கள்; அக்குவளையுடன் சேர்த்துக் கட்டுவதற்காக, இரத்தம் போன்று சிவந்த நிறமுடைய ‘காந்தள்’ பூவையும் பறிக்கிறார்கள்; பிறகு அவை இரண்டையும் அழகு பொருந்தக் கட்டுகிறார்கள், அந்த மாலைகளை அணிந்து கொண்டு அத்தேவ மாதர்கள் ஆடுகிறார்களாம். பலர் சேர்ந்து ஆடும் அந்நாட்டியத்திற்கு இசை வேண்டும் அன்றோ? மலையில் சுனையின் அருகே வீழ்கின்ற அருவி சிறந்த பின்னணி இசையை அமைக்கிறதாம். இயற்கையில் பிறந்து வளர்கின்ற சூர் அரமகளிர் ஆடும் ஆட்டத்திற்கு அருவியின் ‘ஓங்கார’ ஒலி நல்ல பின்னணி இசையாய் அமைந்துவிடுகிறதாம். முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த குறிஞ்சி நிலத்தில், அச்செம் மேனியனுக்கே உரிய மலையில், அவனுடைய சுனை என்று கருதி, மக்கள் நெருங்க அஞ்சுகிற சுனைக்கரையில், அச்சுனையில் பூத்த குவளை மலர்களையும் காந்தட் பூவையும் சூடிக்கொண்டு சூர் அரமகளிர் நாட்டியமாடு கின்றனர், அருவியின் ஓசையைப் பின்னணி இசையாகக் கொண்டு. எனவே, அச்சூர் அரமகளிரும் முருகனுக்கு மிகவும் விருப்பமான அடியார்கள் போலும்!

இத்துணைப் பெருமை வாய்ந்த அருவி, சுனை முதளியவற்றையுடைய மலைக்குத் தலைவன் அவன்; நம்மைப் போன்ற மனிதன்தான். எனவே, அவனுக்கும் நம்மைப் போலக் காதல் முதலிய உணர்ச்சிகள் உண்டல்லவா? அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளும் அந்த மலையை அடுத்த சிற்றூரில் வாழ்ந்து வருகிறாள். நீண்ட நாளாகவே அவனுக்கும் அவளுக்கும் நட்பு உண்டு. ஆனால், பிறர் அறிய மணந்து வாழும் நிலைமையை அவர்கள் இன்னும் அடையவில்லை. ஆனால், ஒருவர் இன்றி மற்றவர் வாழ முடியாது என்று கூறும் அளவுக்குக் காதல் கொண்டவர்கள். அவன் ஏறத்தாழத் தினம் ஒருமுறை சென்று தலைவியைக் கண்டு, ஆவலுடன் மகிழ்ந்துவிட்டு வருவான். அப்பொழுதெல்லாம் அவளும் வீட்டில் தங்கவில்லை. அவள் வீட்டை விட்டுச் சற்றுத் தூரத்தேயுள்ள தினைப்புனத்தைக் காவல் காத்து வந்தாள். அவளும் அவளுடைய உயிர்த் தோழியும் சேர்ந்து புனத்தில் காவல் காத்து இருந்தமை யின், வேறு ஆடவர் துணை இல்லாமல் இருந்தது, தலைவன் முதன்முறை தலைவியைச் சந்தித்த பொழுது, தோழிக்குத் தெரியாமலே சந்தித்தான். அனால், முதற் கூட்டம் முடிந்த பிறகே, தோழியின் தயவு இல்லாமல் தாம் இருவரும் நீண்ட காலம் இவ்வாறு களவுப் புணர்ச்சியில் இருக்க முடியாது என்பதைக் கண்டு கொண்டான். எனவே, மறுமுறை தோழியைச் சந்தித்துக் குறிப்பால் தன்னுடைய காதலை அவளிடம் கூறித் தலைவியைத் தான் சந்திப்பதற்குத் தோழியின் சம்மதியைப் பெற்றுவிட்டான்.

தடைஇல்லாமல் நீண்டகாலம் அனுபவிக்கக் கூடியது என்ற இன்பம் ஒன்றும் இந்த உலகில் இல்லை, ஆதலால், தலைவனுடைய இன்பத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பது போலத் தினைக்கதிர்கள் நன்கு முற்றி அறுவடையாகி விட்டது. தினைப்புனத்தில் வேலை முடிந்தவுடன் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். வீடு ஊரின் நடுவே இருக்கிறது. ஊருக்கோ, கட்டும் காவலும் மிகுதி. தலைவன் விருப்பம்போல வந்து தலைவியைக் கண்டு போக முடியவில்லை இப்பொழுது. எத்தனையோ முறைகள் வந்து தலைவியைச் சந்திக்க முடியாமற் போய் விட்டான். அவன் அடைந்த வருத்தம் கொஞ்சமன்று; ஆனாலும், அவன் ஆண் மகன் அல்லனோ! எனவே, தன் வருத்தத்தை அடக்கிப் பிறருக்கும் புலப்படா வண்ணம் மறைத்துக் கொண்டும், தன் பிற கடைமைகளில் ஈடுபட்டும், கவலையை மறந்தும் வாழ்ந்து வருகிறான். ஆனால், தலைவியின் நிலைமை என்னாவது?

கட்டுக் காவல் மிகுந்த ஊரில், தன்னுடைய ஒவ்வொரு செயலையும் கூர்ந்து நோக்கும் தாயினுடைய பாதுகாவலில் இருந்து வருகிறாள் தலைவி. அவளுக்கு மட்டும் தலைவன் நினைவு இல்லையா? அவள் நேரம் முழுதும் அவனைப் பற்றிய நினைவிலேதான் கழிகிறது. ஆனால், அவள் படும் துயரை உயிர்த் தோழி தவிர வேறு யாரும் அறியவில்லை; அறியவும் முடியாது. அறிவதை அவள் விரும்பவும் இல்லை. ஆனால் பாரதியார் கூறியபடி, ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கிறது அவள் உள்ளம். மனத்தில் தோன்றிய இந்த வருத்தம் சும்மா விடுமா அவளை? அது மெள்ள மெள்ள அவளை அரிக்கத் தொடங்கி விட்டது. உடலில் மெலிவு கண்டு கைவளைகள் தாமாகக் கழன்று விழலாயின. உணவு செல்லவில்லை. உறக்கம் கொள்ளவில்லை. ஏதோன்றிலும் மனம் நாடவில்லை. தலைவியின் இந்த நிலையைத் தாயும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். என்ன செய்வாள் பாவம்! அவளுக்குத் தெரிந்த கைம்முறை மருத்துவமெல்லாம் செய்து பார்த்து விட்டாள். பக்கத்துவீட்டுப் பாட்டிமார்கள் வந்து பார்த்தார்கள். ஒருமுகமாக அவர்கள் தீர்ப்பும் கூறி விட்டார்கள். தீர்ப்பு என்ன தெரியுமா? தலைவியைத் தெய்வம் பிடித்துக் கொண்டது என்பதுதான். அவள் தினைப்புனம் காவல் செய்து கொண்டிருந்த அந்த வேளையில், கடவுட்சுனை என்று தெரிந்துகொள்ளாமல் அதில் ஒருவேளை சென்று குளித்து இருக்கலாம். கடவுட் பூ என்பதை அறியாமல் அதைச் சூடி இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் தெய்வம் அவளைத் தீண்டிவிட்டது. அதைத் தணிப்பதற்கு வழி யாது? ஒரே வழிதான் உண்டு. அவளைப் பிடித்த தெய்வக் குற்றம் நீங்கும்படியாக வேலன் வெறியாட வேண்டும். இன்று நாம் பூசாரி என்று கூறும் இனத்தான் அன்று வேலன் என்று வழங்கப் பட்டான். ஊரில் உள்ள பாட்டிமார் அனைவரும் கூடிச் சொன்ன இந்த முடிவைத் தாய் ஏற்றுக் கொண்டாள்.

வெறியாடுதலுக்கு உரிய சகல ஏற்பாடுகளும் ஆகி விட்டன. ஆனால், இதனால் ஒரு பெரிய இடையூறு தலைவிக்கு உண்டு. உண்மையிலேயே அவளைத் தெய்வம் தீண்டியிருந்தால், வேலன் வெறியாடிய பின் அது தீர்ந்து விடும். ஆனால், அவளைத் தலைவன் அல்லவோ தீண்டி இருக்கிறான்? வெறியாடுவதால் யாது பலன்? மீட்டும் தலைவன் வந்து அவளைத் தொட்டால் ஒழிய அவளுடைய நோய் தீரப் போவதில்லை என்பதை ஊரார் அறிந்து விட்டால் பழி தூற்றுவார்கள். இவ்வாறு தலைவியை ஐயுற்றுப் பழி தூற்றுதலை ‘அம்பல்’ என்ற பழந்தமிழர் இலக்கியம் பேசுகிறது. கொஞ்சம் ‘கசமுச’ என்று தூற்றப்பெறும் இதுவே பெரிதாகிப் பலரும் வெளிப்படையாகப் பேசும் நிலைமையில் ‘அலர்’ எனப் பெரும்.

இந்த நிலையில் தோழிக்கு வருத்தம் மிகுதிப்பட்டு விட்டது. எவ்வாறாவது அன்னை வெறி எடுப்ப முயல்வதைத் தடுக்க வேண்டும் என்று, அத்தோழி, அன்னை காதில் விழும்படி சில வார்த்தைகளைக் கூறுகிறாள். இதுவே பாடல் அமைந்த விதம்.

“முருகப் பெருமானே, நீ நெடுங்காலம் இந்த மடமையோடு வாழ்வாயாக! தலைவியானவள், கடவுள் தன்மை பொருந்திய மலையிலுள்ள சுனைகளில் மலரும் குவளைப் பூவையும் உதிரம் போலச் சிவந்துள்ள காந்தட்பூவையும் அழகு பொருந்தக் கட்டிக் கொண்டு பெரிய மலையின் பக்கங்கள் எல்லாம் அழகுபொருந்தச் சூர் அர மகளிர் அருவியின் இனிய ஓசையைப் பின்னணியாகக் கொண்டு ஆடும் மலைக்குத் தலைவனுடைய மார்பு தந்த வருத்தத்தால் உண்டான நோய் நின்னால் ஏற்பட்ட துன்பம் அன்று என்பதை நீ நன்கு அறிந்திருந்தும், வேலன் வெறியாடும் களத்தில் இறுமாந்து அங்கே கொடுக்கப்படும் பழியை ஏற்றுக் கொள்வதற்காக வந்தவனே, நீ கடவுளாய் இருப்பினும் இருக்கட்டும்! திண்ணமாக நீ அறியாமை உடையவன்தான்!”

'கடவுள் கற்சுனை அடையிறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தன்
குறுதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன்இயத்து ஆடும் நாடன்
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணின் சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக!
மடவை மன்ற வாழிய முருகே! 

     (நற்றிணை-34)

(அடை இறந்து – இலைகளை விலக்கிக்கொண்டு; அவிழ்ந்த-மேலே மலர்ந்துள்ள; குருதி – இரத்தம்; உருகெழ -அழகு பொருந்த; அடுக்கம் பொற்ப-பக்க மலைகள் அழகு பொருந்த; இன் இயத்து – (பின்னணியான) இனிய வாத்தியமாக; படர்மலி அருநோய்-நினைப்பதால் மிகுதிப் பட்டு நீக்க முடியாத அரியநோய்; நின் அணங்கு அண்மை -நீ தொட்டதால் வந்த வருத்தமன்று; அண்ணாந்து– மிக்க செருக்குடன்; கடம்பு-கடம்பம் பூ; கண்ணி- தலைமாலை).

சமுதாயத்தை அறிய தலைவன், தலைவி, தோழி முதலியோரை வைத்து நூற்றுக்கணக்கான அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது ஒரு தலைவி என்போரின் பெயரை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றுகூட இல்லை. அகத்துறை பற்றி எழுந்த பாடல்களில் தலைவன் பெயர் அல்லது தலைவி பெயர் காணப்பெற்றால் அதனை அகத்துள் சேர்க்காமல் புறத்தில் சேர்த்துள்ளனர். அகத்தினைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம், ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறா’ (அகத் திணை:57) என்று ஆணையிடுகிறதாகலின் அகப்பாடல்கள் அனைத்திலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்பெறவில்லை. இது ஏன் என்று சிந்தித்தால் ஓர் உண்மை நன்கு விளங்கும்.

அகப்பாடலில் வரும் தலைவன் – தலைவி என்பவர்கள் அன்றைய சமுதாயம் ஒட்டு மொத்தத்திற்கும் குறியீடாக உள்ளவர்கள். அன்றைய தமிழர்களில் ஓர் ஆண்மகன் தனியனாய்த் தோன்றி அன்பின் அடிப்படையில் ஒரு தலைவியைத் தேடிக் கொண்டான். இருவர் சேர்ந்து வாழும்பொழுது குடும்பம் அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. நூறு அல்லது மேற்பட்ட குடும்பங்கள் ஒன்று சேரும்பொழுது புறநிலையில் ஒரு கிராமம் உருவாயிற்று. அந்த கிராமத்தில் வாழ்கின்றவர்கள் அனைவரும் சமுதாயம் என்ற தொகுப்பின்கீழ் இடம் பெறலாயினர்.

சமுதாய வாழ்க்கை என்று வந்தபிறகு, தனி மனிதனுக்குள்ள உரிமைகள் சிலவற்றை இழக்க வேண்டி நேரிட்டது. கூடி வாழும் பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையும் உருவாயிற்று. இதனையடுத்து ஒருவருக் கொருவரும், குடும்பத்திற்குக் குடும்பமும் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கும் உதவ வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. இது எப்படி முடிந்தது? அன்பு என்ற ஒன்றின் அடிப்படையில்தான் தனிக்குடும்பம் சமுதாயத்திற்கு உதவவும், சமுதாயம் தனி ஒருவருக்கு உதவவும் முடிந்தது. அப்படியானால் இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாய், குறிக்கோள் தன்மை பெற்றதாய், பிறர் கண்டு வியக்கும் சிறப்புடையதாய் வளர அஸ்திவாரமாக இருந்தது இந்த அன்பு ஒன்றுதான்.

இந்த அடிப்படையான அன்பை தனிமனிதன் எங்கே பெற்றான்? ஆம். பிறர் பற்றி அதிகம் கவலைப்படாமல் தான் உண்டு, தன் வாழ்க்கை உண்டு என்றிருந்த தலைவன் ஒரு நாள் ஒருத்தியைக் கண்டு அன்பு கொண்டு அந்த அன்பே காதலாக முதிர்வதைக் கண்டான். ‘யாயும் ஞாயும் யாராகியரோ; எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்; யானும் நீயும் எவ்வழி அறிதும்’ (குறு) என வரும் குறுந்தொகைப் பாடல் (40), மேலே கூறியவற்றிற்கு அரண் செய்கிறது.

ஒருத்தி மாட்டு தோன்றிய இந்த அன்பு காதலாக முதிரும்பொழுது அந்தத் தலைவன் தன்னலத்திலிருந்து விடுபடுகிறான். அவளில்லாமல் தனக்கு வாழவில்லை என்று நினைக்கும் அளவிற்கு அந்த அன்பு வளர்ந்து, ஓருயிர் ஈருடல் என்ற அளவிற்கு முதிர்ந்து விடுகிறது. இங்கு தலைவனுக்குக் கூறிய அனைத்தும் தலைவிக்கும் பொருந்தும். இப்படி அன்பை வளர்த்துக் கொண்டதனால்தான் தனி ஒருவனும், தனி ஒருத்தியும் சமுதாயத்தின் சிறந்த உறுப்புகளாக மலர்கின்றனர். எனவே அக இலக்கியம் சமுதாய வரலாற்றைக் கூறும் கண்ணாடி என்று கூறுவது பொறுத்தமாவதைக் காணலாம். சமுதாய வரலாற்றையும் வளர்ச்சியையும் குறிக்கும் பாடல்கள் ஒரு தலைவன் அல்லது தலைவியின் பெயரைக் கூறுவது பொருத்தமற்றது, என்பது சொல்லத் தேவையில்லை. மேலே காட்டிய பாடல்கள் தமிழர் சமுதாயத்தின் அன்றைய ஒட்டுமொத்த வரலாற்றை எடுத்துக் காட்டுவனவாகும் என்பதை மனத்தில் கொள்ளுதல் நலம்.

***

போரும் அமைதியும்

சங்கப் புலவர்களுள் தலையாய பெருமை வாய்ந்தவர் கபிலர் ஆவார். அவர் பாண்டி நாட்டிலே உள்ள திருவாதவூரர் அந்தணர் மரபில் அவதரித்தவர். பரணர், இடைக்காடர் முதலிய புலவர் பெருமக்களோடு ஒருங்கு வாழ்ந்தவர். ஆரிய அரசனாகிய பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்துவான் வேண்டி ‘குறிஞ்சிப் பாட்டு’ என்றதொரு பாடலைப் பாடினார். அவ்வொரு பாடலின் மூலம் தமிழ்ச் சுவையை ஓரளவு அறிந்த அவ்வரசன், தமிழை நன்கு கற்றுத் தானும் தமிழ்க் கவி இயற்றும் அளவிற்குப் புலவனாயினான். கபிலருடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த பகுதி அவர் வள்ளல பாரியினிடத்து நட்புக் கொண்டிருந்ததாகும். அவர், மூவேந்தரும் பாரியைக் கொன்ற பிறகு, பாரியின் மகளிர் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று, ஓர் அந்தணரிடத்து அவர்களை ஒப்படைத்தார்; பின்னர்ப் பாரியின் பிரிவுத் துயர் தாங்காமல் வடக்கு முகமாய் இருந்து, இந்திரியங்களை ஒடுக்கி, உணவு உட்கொள்ளாமல் உயிர் துறந்தருளினார்.

அவர் பாடினவற்றுள் மிகப் பெரும்பகுதி குறிஞ்சித் திணை பற்றியது. ஆகலின், ‘குறிஞ்சி பாடக் கபிலன்’ என்ற முதுமொழியும் பிற்காலத்தெழுந்தது. அவர் பாடியனவாக நற்றிணையில் 19ம், குறுந்தொகையில் 29ம், ஐங்குறு நூற்றில் 100ம், பதிற்றுப் பத்தில் 10ம், அகநானூற்றில் 16ம் ஆக 174 செய்யுட்கள் கிடைத்துள்ளன. இவற்றையல்லாமல் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டும் அவர் பாடியதே. அப்புலவர் பெருந்தகை பாடிய நற்றிணைப் பாடலுள் ஒன்றை இங்குக் காண்போம்.

மலை போன்ற பெரிய யானையின் பிடரியில் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி அமர்ந்திருக்கிறான். அவனைச் சூழக் கடல் போல பெறும் படை செல்கிறது. பறை கொட்டும் புலையன் மிக்க எக்களிப்போடு கொட்டிச் செல்கிறான். மிக நீண்ட தூரம் சென்ற பிறகு பகைவனுடைய புலத்தில் மலையமானின் மாட்சிமிகு சேனை புகுந்துவிட்டது. புதிய நாட்டைப் போர் செய்து வெல்லுகிற வரை அது படைகளின் வேலை. படைகள் போரிட்டு வென்று தந்த பின்னர் அரசியலாரின் வேலை தொடங்குகிது. முதல் வேலையைவிட இவ்வேலை கடினமானது. பாரியின் மாட்டுக் கழிபெருங்காதல் கொண்டு அவன் அவையில் நீண்டகாலம் வாழ்ந்த கபிலருக்கு இந்த அரசியல் நுணுக்கங்கள் நன்கு பிடிபட்டிருக்கும் அல்லவா? எனவே, அவர் தகுந்த சமயத்தில் இதனைப் பயன்படுத்துகிறார்.

ஒரு தலைவியைத் தலைவன் ஒரு நாள் சந்தித்தான். அதற்கு முன்னர் அவனும் அவளும் சந்தித்ததுகூட இல்லை. ஆனால், இன்று இந்தச் சந்திப்பு எவ்வாறு ஏற்பட்டது? ‘பால்வரை தெய்வம்’ என்று கூறப்படும் ‘விதி’ தான் அவர்களைக் கூட்டுவித்தது. இதற்கு முன்னர் அத் தலைவனும் பல பெண்களைக் கண்டதுண்டு; அத்தலைவியும் பல ஆடவர்களைக் கண்டதுண்டு. ஆனாலும், இருவரும் தம் உறுதிப்பாட்டை இழந்ததில்லை, இன்று அத்தலைவனும் தலைவியும் சந்தித்தவுடன் ஒரு பெரிய போராட்டமே தொடங்கிவிட்டது. அவனும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்; இருவரும் நோக்கிய ‘நோக்கு எதிர் சென்று’, ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்’. ஆனால், இவ்வளவு விரைவில் இந்நிகழ்ச்சி நடந்துவிட்ட போதிலும், நடைபெற்ற போராட்டம் எளிதானதன்று. புதிய ஆடவன் தன் மனத்துள் இடம்பெற அவள் விரும்பவில்லை. அவள் பிறப்புடன் பிறந்த நாணமும் நிறையும் அப்புதிய ஆடவன் அவள் மனத்துள் இடம் பெறுவதைத் தடுத்து நிற்கின்றன. எனவே, அவை இரண்டும் ஒருபுறம் நின்று போரிடுகின்றன. ஆனால், அவள் மனமும் அன்பும் அவனை வரவேற்று நிற்கின்றன. ஆனால், இப் போராட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. தலைவனுடைய ‘கண்கள்’ தலைவியின் ‘நாணம்’ என்ற முதற் கோட்டையை அழிக்க வேண்டும். அதனை அழித்த பிறகு உள்ளே ‘நிறை’ என்று கூறப்படும் இரண்டாவது கோட்டை Second line of defense இருக்கிறது. தலைவன் தன்னுடன் பிறந்த ‘ஆண்மை’ என்ற படைகொண்டு தலைவியின் நாணம், நிறை என்ற கோட்டைகளைத் தகர்க்கிறான். நெடுநேரம் வரை வெற்றி தோல்வி யாருக்கு என்று கூற முடியாதபடி போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டம் இந்த முறையில் ஒருவரிடம் மட்டும் நடைபெறுவதன்று. தலைவனிடம் உள்ள ‘பண்பாடு’ என்ற கோட்டையைத் தலைவியின் ‘கண்கள்’ தாக்குகின்றன. இவ்வாறு இருவரும் போரிட்ட நிலைமையில் இருவருக்கும் வெற்றி கிட்டி விடுகிறது. ‘காதற்போர்’ ஒன்றிலேதான் இரண்டு கட்சியாளர்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

போரில் வெற்றி கிட்டியவுடன் அரசன் அமைதியை நிலைநாட்டும் வேலையை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு இளைப்பாறுகிறான். தலைவனுக்கும் இத்தகைய போர் ஒன்று கிட்டியதன்றோ? அப்போரில் தலைவியின் நாணம் முதலியவற்றை வெற்றி கண்ட பிறகு அவன் இளைப்பாறத் தொடங்கினான். தலைவியும் தன் போராட்டம் முடிந்து வெற்றி பெற்றவுடன் இளைப்பாறுகிறாள். போரில் மிக்க அனுபவம் உடைய தலைவன் கூறுவது போல அமைந்துள்ளது பாடல். இந்நிலையில் தலைவனுக்கு வியப்பு உண்டாகிறது. தன்னுடைய ஆண்மை முதலியவற்றை நினைந்து பார்க்கிறான். பகைவர்கள் தன் பெயரைக் கேட்டவுடன் நடுங்குவதை அவன் கண்டும் கேட்டும் இருக்கிறான். அத்தகைய வீரம் பொருந்திய, தானா இந்நிலைக்கு வர நேரிட்டது என்று வியப்படைகிறான். இவ்வாறு தன் தோல்விக்குக் காரணமாய் இருந்தவள்தான் யார்? போர் புரிதலில் வல்லவனாகிய தன்னைத் தோற்கச் செய்தவள் ஒரு பெண்தானே!

அதிலும் கலை நலம் நிரம்பப்பெற்ற ஒரு பெண்ணினாலா தான் தோல்வியடைய வேண்டும் என்று வியக்கிறான். மேன்மையுடைய அப்பெண் தானும் வேறு படைக்கலங்களின் உதவியின்றித் தான் குவளை மலர் போன்ற கண்களால் அல்லவா வெற்றி கொண்டு விட்டாள்? போர் என்றால் ஒருவரை ஒருவர் கோபித்துக் கொண்டல்லவா போரிடுவர்? ஆனால், அப்பெண் சிரித்துக் கொண்டல்லவா வெற்றி பெற்றாள்? குவளை மலர் போன்ற அவளுடைய கண்களால் மகிழிச்சியைக் காட்டிக் கொண்டே வெற்றியடைந்து விட்டாள்.

இனி இத்தனை எண்ணங்களும் தலைவன் மனத்தில் ஊடாடுகின்றன என்பதைக் கவிதை தெரிவிக்கிறது. ‘மலையமான் திருமுடிக்காரி பெரிய யானையின் மேல் ஏறிக்கொண்டு, புலையனின் துடிப்பறை ஒலிக்கப் பகை வருடைய நாட்டில் புகுந்து, அவர்களுடைய அரிய கோட்டையை அழித்து வெற்றிகொண்டு இளைப்பாறியது போல, நெஞ்சே, சிவந்த வேர்களையுடைய கிளைதோறும் தொங்குகிற பலாப் பழத்தின் சுளைகளையுடைய வீட்டு முற்றத்தில் மனைவியானவள் அருவியின் இனிய ஓசையில் உறங்க, சிற்றூரின் சேரியில் வாழும் கைத்தொழில் வல்ல வினைஞன் கையால் அறுத்துச் செய்த சங்கு வளைகள் தன் கையில் அழகுபொருந்த விளங்கும் தலைவியினுடைய குவளை மலர் போன்ற மையுண்ட கண்களில் தோன்றும் மகிழ்ச்சி பொருந்திய நோக்கமானது நம்மை இத் தலைவி பால் செலுத்துகிறது. (அம்மன்னன் வெற்றியின் பின்னர் அயாவுயிர்த்தது போல) நாமும் இவள் உடன்படும் வரை பொறுத்திருப்போம்’. என்னும் கருத்தமைந்த அக்கவி இது:

'மலையன்மா ஊர்ந்து போகிப் புலையன்
பெருந்துடி கறங்கம் பிறபுலம் புக்குஅவர்
அருங்குறும்பு இருக்கி அயாவுயிர்த் தாங்கு
உய்த்தன்று மன்னே நெஞ்சே! செவ்வேர்ச்
சினைதொரும் தூங்கும் பயம்கெழு பலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலிவெள் அருவி ஒலியில் துஞ்சும்
ஊரலம் சேரிச் சீறூர் வல்லோன்
வாள்அரம் பொருத கோண்ஏர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை ஒண்ணுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண மகிழ்மட நோக்கே'. 

       (நற்றிணை-77)

(மா-யானை; கரங்க-ஒலிக்கள; அருங்குறும்பு-காவல் பொருந்திய கோட்டை; எருக்கி-அழித்து; அயாவுயிர்த் தாங்கு-ஓய்வு எடுத்தது போல; உய்த்தன்று-செலுத்தியது; வாள் அரம் பொறுத-கூறிய அரத்தால் அராவிய; கோண் ஏர்-வளைந்த அழகிய; ஒண்ணுதல்-ஒளி பொருந்திய நெற்றி; திதிலை-தேமல்; குறுமகள்-இளம்பெண்; மடநோக்கு-இளமையுடைய பார்வை.)

‘அரசன் அரிய அரணை அழித்து இளைத்துப் போனது போல யானும் இத்தலைவியின் மனத்தின் திண்மையை நெகிழ்த்தி இளைத்துவிட்டேன். அரசன் அமைதியை நிலைநாட்டும் தொழிலை அமைச்சர் முதலானவர்க்கு விட்டுவிட்டு, தான் இளைப்பாறியது போல யானும் இத்தலைவியை என்னிடம் சேர்ப்பிக்கும் வேலையைத் தோழனிடம் விட்டுவிட்டு இளைப்பாறுவேன் ஆகலின், நெஞ்சே, நீ இனிக் கவலைப்பட வேண்டா’ என்ற குறிப்புப் பொருளும் இந்த உவமையால் பெறப்பட்டது.

இதனையடுத்துத் தலைவி அணிந்திருக்கும் வளையலின் வரலாறு பாட்டின் 5ஆம் அடிமுதல் 10ஆம் அடி வரை பேசப்படுகிறது. இவ்வரலாற்றில் பிறிதோர் அழகும் தோன்றுமாறு கவிதை புனையப்பட்டுள்ளது. வளையல் அறுப்பவன் ஊர் வளம் பேசப்படுகிறது. முதற்கண் பலாமரத்தின் கிளைதோறும் நல்ல பலாப் பழம் தொங்குகிறது. அப் பலா மரமும் வீட்டின் முன்றிலில் தழைத்து நிற்கிறது. அம்மரத்தின் அருகே வெண்மையான அருவி ஒலி செய்து கொண்டு வீழ்கிறது. அவ்வொலியே பின்னணி இசையாய் இருக்க, அக்கலைஞன் மனைவி உறங்குகிறாள். அவள் உறங்கிக் கொண்டு இருக்கையில், அவ்வினைஞன் பக்கத்தில் அமர்ந்து வலையல்களைச் செய்கிறான். வளையல் அறுப்பவனுடைய காதல் வாழ்வின் படப்பிடிப்பாகும் இவ்வடிகள். அமைதி நிறைந்த வாழ்வு வாழ்பவனாகலின், அவன் கடமையைக்கூடக் கலை போலச் செய்கிறான். வளை அறுப்பது அவன் தொழிலே யாயினும், இன்று அதனை மகிழ்வுடன் செய்கிறான். ஆகலின், அது கலைபோலப் பரிணமிக்கிறது. உணவு நிறைந்த ஊரில் காதல் வாழ்வு வாழ்பவன் வளை செய்பவன்; அவன் அறுக்கும் வளைகள் கலையாகச் செய்யப் பெற்றவை. இத்தகைய வளையல்கள் தலைவியின் கையை அலங்கரிக்கின்ற காரணத்தால் தலைவியின் பிற் கால வாழ்க்கை வளம் நிறைந்ததாய், காதல் வாழ்வுடையதாய் செம்மை பொருந்தி இருக்கும் என்பதும் குறிப்பால் பெற வைத்தார் கவிஞர் திலகராகிய கபிலர்.

தலைவி தன் கண்களின் உதவியால் தலைவனை வென்று விட்டாள். தலைவனும் ஆண்மையின் உதவியால் தலைவியின் நாணம், நிறை முதலியவற்றை வெற்றி கொண்டுவிட்டான். சில வினாடிகளில் இப்போராட்டம் நடந்து முடிந்துவிட்டாலும் இந்நிகழ்ச்சிகள் ஆழ்ந்த பொருளாழம் உடையன. கபிலர் மலையமானின் போர் முறையையும், வெற்றியையும் பின்னர் அமைதியை நிலை நிறுத்தினதையும் நேரே கண்டிருக்கிறார். பின்னர், எங்கோ ஒரு முறை இக்காதலர் போராட்டத்தையும் அவர் கண்டிருத்தல் வேண்டும். தலைவன் வெற்றிகண்ட பிறகு தோழியின் உதவியை நாடுகிறான். அந்தத் தோழி மணம் இரங்கித் தலைவியை அவனிடம் சேர்த்துவைத்தால் ஒழிய அவன் அவளை அடைய முடியாது. தான் போரிட்டு வெற்றி கொண்ட தலைமகளைத் தன்பால் சேர்ப்பித்து இல்லறம் நடத்துமாறு செய்யத் தோழியின் உதவியை நாடுகிறான். அரசன் -தலைவன்; பகைப்புலம் -தலைவி; பகைவர்கள் கோட்டை -தலைவியின் நாணம் முதலியன; அரசன் படைகள்- தலைவனின் ஆண்மை முதலியன; அரசன் அமைதியை நாட்ட அமைச்சரை ஏவி இளைப் பாறுதல்- தலைவனது வெற்றியின் பின்னர்த் தோழியை வேண்டித் தலைவியை தன்பால் சேர்க்கச் சொல்லுதல். இம்முறையில் உவமை அமைந்துள்ளமை அறிந்து மகிழ்தற் குரியது.

(தொடர்கிறது)


$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s