-ஜக்மோகன்
திரு. ஜக்மோகன் (1927 செப். 25 – 2021 மே 3) முன்னாள் அரசு அதிகாரி; முன்னாள் மத்திய அமைச்சர்; ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர்; பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இது…

உறங்கும் பாரதத்தை எழுப்புதல்
சுவாமி விவேகானந்தருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே பொதுவாக அம்சங்கள் என்ன? ஆன்மிக எழுச்சி நாயகனுக்கும், அரசியல் எழுச்சி நாயகனுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றியும், உலக அரங்கில் ‘இந்தியாவின் தனிவழி’ என்றதொரு புதிய கோணத்தை உருவாக்கியதற்கு அவர்கள் இருவரின் பங்களிப்பையும் பற்றியும் சிந்திப்பது மிகுந்த ஆர்வமும் ஊக்கமும் அளிப்பதாக இருக்கிறது.
மகாத்மா காந்தியின் பிறப்பிடமான போர்பந்தரில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் (2011) அன்று ‘விவேகானந்தா மையம்’ ஒன்று தொடங்கப்பட இருக்கிறது. பத்தொன்பது, மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் மறுமலர்ச்சி பற்றி தீர்க்கதரிசனமாக முன்னறிவித்த இவ்விரு தலைவர்களும் இந்திய சமூகத்திற்கும், இந்து சமயத்திற்கும் ஆற்றிய தொண்டுகளைப் பற்றி இந்தச் சமயத்தில் நினைவுகூர்வது மிகப் பொருத்தமே.
நெஞ்சுக்கு நீதி
விவேகானந்தர், காந்தி இருவருமே மிகுந்த உத்வேகம் கொண்ட மனத்தைக் கொண்டவர்கள். நல்வாழ்வுக்கு உதவும் வேதாந்தக் கருத்துக்கள் மீது இருவருக்குமே நம்பிக்கை உண்டு. தவிர, மதிப்பு மிக்க, நீதிநெறிகளை ஆதாரமாகக் கொண்ட இந்து மதம் சேவை மனப்பான்மையுடன் நல் வாழ்வு வாழ்வதற்கும் வழிகாட்டுகிறது என்பதிலும் இருவரும் உறுதியாக இருந்தார்கள்.
மன உறுதி மிக்க மக்கள் மட்டுமே ஒரு நல்ல, நெறி மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று இருவருமே இப்படிச் சொல்லிவந்தார்கள். “தூய்மையும் நேர்மையும் நீதியும் உங்கள் உள்ளத்தில் இல்லாவிட்டால், உங்கள் இல்லத்தில் அவை இருக்காது; அவ்வாறு இல்லத்தில் அவை இல்லாவிட்டால், உங்கள் சமுதாயத்திலும் இருக்க முடியாது; உங்கள் நாட்டிலும் அவை இருக்காது”
குறிப்பாகச் சொல்லப்போனால், விவேகானந்தர், காந்தி இருவருமே வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தமும், போதுமென்ற மனதிற்கு ஒரு வடிவும் கொடுப்பவர்களாயும், கருணை, சமத்துவம், ஒற்றுமை போன்ற குணங்களுக்கு ஒரு வழிகாட்டி போலவும் விளங்கினார்கள்.
“ஒரு பண்பட்ட மனதின் மென்மையும், சகிப்புத் தன்மையும், இன்னமும் வேண்டும் என்று நினையாத ஓர் ஆன்மாவின் சாந்தமும், எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் ஒரு மனதின் அமைதியும், சகல ஜீவராசிகளையும் அமைதிப்படுத்தி ஒன்றாய் இணைக்கும் அன்பும்” என்று வில் டுரான்ட் என்ற தத்துவ மேதை சொன்னது போல, அவர்கள் இருவரும் வாழ்ந்து, அவர்கள் பிறந்து வாழ்ந்த இந்தியா உலகிற்கே ஒரு புனித வழிகாட்டியாகும் அளவிற்கு உருவாகவேண்டும் என்று விரும்பினார்கள்.
ஆக்கபூர்வமாய் இருந்து ஒருவனை உயர்த்தக்கூடிய ஒரு மகத்தான சக்தி தான் மதம் என்றும், இந்து மதம் கூறுவது மக்கள் அனைவருக்கும் உகந்த பொதுவான ஆன்மிக வழி என்றும் உறுதியாக நம்பிய விவேகானந்தர், மற்றும் காந்தி அவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள அவர்களது கூற்றுகளையே எடுத்துக்கொண்டு பார்ப்போம்.
பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) மதம் பற்றிய தனது ஆய்வு சம்பந்தமாக ஒருமுறை காந்தியை மூன்று கேள்விகள் கேட்டார்:
- உங்களுடைய மதம் எது?
- அதுதான் உங்கள் மதம் என்று உங்களுக்கு எப்படித் தெரிகிறது?
- உங்களது சமூக வாழ்க்கையில் அதனுடைய தாக்கம் என்ன?
“எனது மதம் இந்து மதம். என்னைப் பொருத்தவரை அது அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை உள்ளடக்கியதால் அது மனித வர்க்கத்துக்கே பொதுவான மதம்” என்று காந்திஜி அந்த முதல் கேள்விக்குப் பதிலளிக்கிறார்.
“உங்களது இரண்டாவது கேள்விக்கான வரியில் நீங்கள் கடந்த காலம் அல்லாது நிகழ் காலத்தை வேண்டுமென்றே உபயோகித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் எனது மதத்தை சத்தியம் மற்றும் அஹிம்சை மூலம் அணுகுகிறேன். பலமுறை நான் இந்து மதத்தை உண்மையே பேச வைக்கும் மதம் என்று வருணிக்கிறேன். அண்மைக் காலமாக இறைவன் உண்மை வடிவில் இருக்கிறான் என்பதற்குப் பதிலாக நான் உண்மையே இறைவனாகக் காணப்படுகிறான் என்று சொல்லி வருகிறேன்….
எங்களுக்கு உண்மையை மறுத்துப் பேசுவது என்பது தெரியாது…..நாங்கள் அனைவருமே சத்தியம் எனும் தீயின் பொறிகள்…. இந்தப் பொறிகளின் ஒட்டுமொத்த விளைவும், இதுவரை விண்டு விவரிக்கப்படாத சத்தியம் என்னும் இறைவன்தான்…..எனது தினப்படி இறைவணக்கங்கள் மூலம் நான் அதன் அருகில் செலுத்தப்படுகிறேன்” என்று காந்திஜி இரண்டாவது கேள்விக்கு விடை தருகிறார்.
சேவையே வழிமுறை
மூன்றாவது கேள்விக்குப் பதில் அளிக்கும்போது “சமூக வாழ்வில் இந்து மதத்தின் தாக்கத்தைக் காண்பதற்கு ஒருவன் தினந்தோறும் அந்தச் சமூகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும். தனது வாழ்க்கையில் தாம் காணும் அனைவர்க்கும் சேவை செய்து ‘நான்’ எனும் அகந்தையை அழித்துக்கொள்வது என்ற மனப்பான்மையுடன் ஒருவன் இருப்பதே இத்தகைய மதத்தின் வழியில் உண்மையாக நடப்பது என்பதாகும்” என்று காந்திஜி சொன்னார்.
மேலும் அவர் சொன்னது: “அனைத்து ஜீவராசிகளையும் உள்ளடக்கி பரந்து விரிந்து விளங்கும் சம்சார சாகரத்தில் மூழ்காமலும், தன்னை அதன் சேவையில் அர்ப்பணிக்காமலும், ஒருவன் உண்மை என்ன என்பதை உணர முடியாது. அதனால் என் கணிப்புப்படி அவன் சமூக சேவை செய்யாமல் இருப்பது என்பது இயலாத காரியம். அதைச் செய்வதைவிட இன்பம் தரக்கூடியது என்பது உலகில் வேறு எதுவும் இல்லை.
சமூக சேவை என்று சொல்லப்படுவதில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் அடங்கியிருக்க வேண்டும். இந்த அமைப்பில் உயர்வு என்றும் தாழ்வு என்றும் எதுவும் இருக்கலாகாது. நாம் பலராக இருந்தாலும், அனைவரும் ஒன்றே என்ற பார்வை வேண்டும்”.
அதை விளக்கும் முகமாக அவர் தொடர்ந்து சொன்னது: “நான் இந்துத்துவத்தைப் பற்றி மேன்மேலும் ஆராய, இந்து மதம் பிரபஞ்சத்தைப் போல பரந்து விரிந்து அனைத்தையும் உள்வாங்கி இருக்கிறது என்ற எனது நம்பிக்கை மேலும் வலுவடைகிறது. எம்மதமும் எனக்கு சம்மதமே என்று நான் அனைத்து மதங்களையும் மதித்தாலும், நான் ஒரு ஹிந்து என்ற எண்ணம் வலுவடைகிறதே தவிர, வலுவிழக்கவில்லை என்று என் உள்மனம் சொல்கிறது…
உண்மைக்கு நான் அளிக்கும் மதிப்பு தான் என்னை அரசியலுக்கு இழுத்து வந்திருக்கிறது. அரசியலுக்கும் ஆன்மிகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவோர் உண்மையில் மதங்களையும் உள்ளடக்கிய ஆன்மிகம் பற்றி ஏதும் அறியாதவர்களே”.
காந்திஜியின் நிலை இவ்வாறு இருக்க, விவேகானந்தருக்கும் இந்தியாவில் புழங்கும் மதம் என்பது அனைத்தையும் ஈர்க்கும் ஒரு தூண்டுகோல் சக்தியாக அமைந்தது.
“ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் உண்டு. அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. இந்த தேசியப் பின்னணி சில நாடுகளில் அரசியலாக இருக்கிறது. சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக இருக்கிறது.. மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக இருக்கிறது. ஆனால், நமது நாட்டின் அடிப்படையாகவும் முதுகெலும்பாகவும், அதன் தேசிய வாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான உறுதியான அடித்தளப் பாறையாகவும் மதமே உள்ளது” என்று அவர் சொன்னார்.
நாட்டின் பல பாகங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவர் கன்யாகுமரி முனையில் பாறை மேல் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்துவிட்டு எழுந்ததும், “மதமே நமது நாட்டின் ஆதாரம்; இந்நாட்டின் ரத்தத்தில் சேர்ந்த சில அசுத்தங்களே நமது மாபெரும் வீழ்ச்சிக்கு காரணங்கள். நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டால், நாடு மீண்டும் முந்தைய பொலிவுடன் விழித்தெழும்” என்று 1892 டிசம்பர் 25-ஆம் தேதியன்று சொன்னார்.
விவேகானந்தர் அளித்த செய்தி மிகவும் எளிமையானது. ‘சீவனே சிவன்’என்று சொல்லி, ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று குறிப்பிட்டார்.
வாழும் மதம்
‘தரித்திர நாராயணர்கள்’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் மக்களில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், வறுமையில் வாடுபவர்கள், மற்றும் அடக்கி வைக்கப்பட்டவர்கள் என்ற இம்மக்களுக்குச் சேவை செய்வதையே விவேகானந்தர் மிக முக்கியமான பணியாகக் கருதினார்.“இந்த மாபெரும் மக்கள் திரளுக்கு, கடவுளின் மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சந்நியாசிகளான நாம் என்ன செய்திருக்கிறோம்?” என்று அவர் தங்களது பங்களிப்பு பற்றியே விளக்கம் தேடினார்.
பாமர மக்கள் தங்களது விதியைப் பற்றி சதா நொந்து கொள்வதையும் அவர் குற்றம் சாட்டினார். தங்கள் மேலேயே அவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி ஊக்குவித்தார். “பழைய மதம் கடவுளிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்றது. எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். புதிய மதம், தன்னம்பிக்கை இல்லாதவனையே நாத்திகன் என்கிறது. கோழையும் முட்டலும் மட்டுமே, எல்லாம் விதிப்பயன் என்று சொல்வார்கள். வலிமையானவர்களோ, இந்த விதியை நான் மாற்றிக் காட்டுவேன் என்று தோளுயர்த்தி முழக்கமிடுவார்கள்” என்று சொல்லி அவர்களைத் தூண்டினார்.
“நாட்டின் உயர்சாதிக்காரர்களே, நீங்கள் வாழும் மக்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் பத்தாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட மம்மிகள் (செத்த பிணங்கள்) மட்டுமே… மாய உலகத்திலோ நீங்கள் வெறும் கானல் வடிவங்களே. நீங்கள் பெருவெள்ளத்தில் சங்கமமாகி தனித்தன்மையை கரைக்க வேண்டும். அப்போது புதிய இந்தியா உங்களிடமிருந்து உருவாகும்” என்று சமுதாயக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைப் பார்த்து முழங்கினார்.

அதன்படியே புதிய பாரதம் முளைத்து எழுந்தது! இப்படியாக விவேகானந்தரும், காந்தியும் உறங்கிக் கொண்டிருந்த இந்தியாவின் ஆன்மாவை உலுக்கி எழுப்பினார்கள்.
‘உறங்கிய மகா பாரதம் எழுந்து விட்டது’ என்று அதை விவேகானந்தர் விவரித்தார். ஆனாலும் சரியான திசையில் சில அடிகள் எடுத்து வைத்த பாரதம் அதற்குப் பின் திசை தவறிப் போயிற்று.
கட்டற்ற நுகர்வு கலாச்சாரம், நாட்டை விழுங்கும் ஊழல்கள், பொறுப்பின்மை, குழப்பம் என்கிற பலவிதமான பனி மூட்டங்கள் சூழ்ந்திருக்க, இன்று அது ஒரு வழுக்குகிற பாதையில் தட்டித் தடவிப் பயணித்துக் கொண்டிருக்கிறது தேசம்.
உறையும் குளிரில், திசை அறிய முடியாதபடி தடுமாறும் பாரதம் இந்த இக்கட்டிலிருந்து மீண்டு, தனது உன்னத இடத்தை மறுபடியும் பிடித்துக்கொண்டு முன்னேற வேண்டுமானால், அது விவேகானந்தரும், காந்தியும் விளக்கிக் காட்டிய ஒளிச்சுடரை நோக்கி முன்செல்ல வேண்டும்.
அந்த விளக்கும், அதன் பேரொளியும் பாரத மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள மக்கள் அனைவருக்குமே சொந்தமானது; வழிகாட்டியாக விளங்கக் கூடியது.
குறிப்பு: ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையை தமிழில் வழங்கியவர் திரு. எஸ்.ராமன், சென்னையில் வசிக்கிறார்; மொழிபெயர்ப்பாளர்; மின்னணுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
$$$