விவேகானந்தரை மீண்டும் நினைவில் இருத்துவோம்!

-கோபாலகிருஷ்ண காந்தி

திரு. கோபாலகிருஷ்ண காந்தி, விடுதலைவீரர்கள் மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரன்; இந்திய குடிமைப் பணியில் பல்லாண்டு பணியாற்றி,  ஜனாதிபதியின் செயலாளராகவும் பணியாற்றியவர்;  தென் ஆப்பிரிக்கா, இலங்கை நாடுகளில் இந்தியத் தூதராக இருந்தவர்; மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தவர்.  சிந்தனையாளர், எழுத்தாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…

‘அவர் கண்கள் உன்னை மயக்கத்தில் ஆழ்த்தும்’ என்று ஆங்கிலத்தில்  “ஹிஸ் ஐஸ் ஹிப்-நடைஸ்” சொல்லும்போது எதுகை, மோனையுடன் பள்ளிப் பாடல் போல இருக்கும்.

ஆனாலும் அக்கண்களில் “ஏதோ” ஒரு ஈர்ப்பு இருக்கிறதே, அவை உன்னை விட்டுவிடாது; உன்னைத் துளைத்தெடுக்கும்.

அவரது பேச்சுக்களும் அப்படியே; அவை உன்னை துரத்தும், உன்னை மேலும் சிந்திக்க வைக்கும்.  ஏனென்றால், அவை அவ்வளவு நம்பிக்கையுடன்  சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவை  உள்ளொன்று வெளியொன்று இருப்பதாலோ, எதிர்பாராதபோது வந்ததாலோ, வெளிப்படையாய்ச் சொல்லப்பட்டதாலோ, முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாலோ, இன்ன பிறவாலோ என்று பலரும் அதை வெவ்வேறு மாதிரி சொல்லலாம்.

“எனது வெளிப்படைப் பேச்சால் நான் பேசிக்கொண்டிருந்த இடத்தையே காலி பண்ண வைத்தேன்” என்று அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டார். புகை போட்டு தேனீக்களை விரட்ட எத்தனிப்பவர், ஆனாலும் அவற்றை  இழுக்கும் தேன்கூடு போலவும் இருப்பார்.

அவர் தான் சுவாமி விவேகானந்தர்.

அவரும் வேதமொழியில் தான் பேசினார்; ஆனால் மற்றவர்கள் பேசியது போல அல்ல.  தனக்குப் பிடித்த மந்திரங்களை அவர் எடுத்துக் கொண்டார்;  அதில் நிகழ்காலத்திற்கு ஏற்ற நவீனத்தைப் புகுத்தி, அதற்கேற்ப பொருள் அமைத்து, அதில் தனது முத்திரையைப் பதித்தார். அதன் மணம் மாறும் முன்பே அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்பவரிடம் அதைப் பகிர்ந்துகொள்வார்.

விவேகானந்தர் சொன்னால் எல்லோர்க்கும் தெரிந்த உண்மைகளும் புதியதாகத் தெரியும். புதிதாக அவர் கண்ட விளக்கங்களும் வேதங்களில் சொல்லப்பட்டன போல ஒரு பாரம்பரியம் பெறும்.

தன்னுடன் இருந்தோர் போலவே இந்தியாவைப் பற்றிப் பேசினார்; ஆனாலும் அவர்கள் போல அல்ல. அவர் தாய்நாட்டின் தீரத்தைப் புகழ்ந்தோ, இல்லாமைக்கு இகழ்ந்தோ பேசியதில்லை.

அவர் தனது மனம் எனும் ஒளி விளக்கை ஏற்றினால், இந்தியாவின் பண்டைய பழக்கங்களும்  புது விளக்கம் பெறும்;  தொன்மையான நாட்டின் புதிய கோணங்கள் எங்கிருந்தோ பளிச்சிடும்.

1863-ல் அவர் பிறந்தபோது, அதன் முன் நடந்த விடுதலை இயக்கத்தில் கண்ட விழுப்புண்கள் ஆறாமலும்,  மனம் ஆற்றாமலும் இருந்தன. அதனால் வங்காள க்ஷத்திரியக் குலத்தில் உதித்த இத்தவப் புதல்வன்,  வாளெடுக்கும் வீரனாகி, தீவிரவாதம் சென்று தீரனாகி இருக்கலாம். வேண்டாம் அது என மறுத்து, கலவரங்கள் ஒன்றையே வழி எனக் கொண்ட தேசப்பற்று நம்மை இறுதிவரை கொண்டு செல்லாது என்று, அமைதிவழியில் உறுதியாய் நின்றார்.

1885-ல் அவருக்கு இருபத்தியிரண்டே வயதாயிருந்தபோது, இந்திய தேசிய காங்கிரஸ் உருவாயிற்று. அதனால் நரேந்திரன் என்று அப்போது அழைக்கப்பட்ட அந்த இளைஞருக்கு பொதுமக்களிடம் கலந்து  தேசப்பற்றை வளர்க்கும் வழி ஒன்று கிடைத்தது. ஆனால் நரேந்திரருக்கோ பலரும் சென்ற பாதை என்பதால் பயணம் எளிது என்ற எண்ணம் என்றுமே கிடையாது. “தேவைக்கு ஏற்ப வேண்டியவற்றைத் தேக்கி வைக்காமல், கூட்டத்தில் நின்று கூவிப் பிதற்றல் எதற்காக?”என்றே கேட்டார்.

அப்படிச் சொல்லிவிட்டுத்  தனது கடமையை நினைவு கொண்டவராயும், தனது குண விசேஷங்களை வெளிப்படுத்தும் வகையிலும், “தேச நலன் என்று சொல்லும்போது மற்றவர்களின் உணர்வுகளையும் உள்வாங்க வேண்டும் ….. உலகோருக்கு நம்மிடம் உள்ள மதத்தையும், தத்துவங்களையும்  உணர வைக்க வேண்டும்…..” என்று சொன்னார்.

விவேகானந்தர் தீவிர ஆன்மிகத் தேடலில் இருந்தார். ஆனாலும் அதை அவர் தனது தனி மனிதப் பயணமாகக் கருதவில்லை. மக்கள் மலிந்து கிடந்த இந்தியாவின் பிரச்னைகளையும் அவர் தனதாக்கிக் கொண்டார்.

தனது ஆன்மிக முதிர்ச்சியால் அவர் ஒரு முறை மட்டுமல்ல, பலமுறை  காளி அம்மனைத் தரிசித்தார்.

விவேகானந்தருக்கு பாடுவது பிடிக்கும். பாடினால் மெய்மறந்து பாடுவார். “காளிபாத நீல் கமலே, ஷ்யாமபாத நீல் கமலே” என்ற ஒரு வங்க மொழிப் பாடல் ஒன்றுண்டு. உங்கள் கண்களை மூடிக்கொண்டு அதைக் கேட்டால், விவேகானந்தரே அதைப் பாடுவது போல் உணர்வீர்கள்.

அதைக் கேட்பவரெல்லாம் தனக்காகவே அவர் பாடுவதாக உணர்ந்து கொண்டால் அது தவறில்லை.

ஆனால் அவர் தங்கள் தங்கள் மனத்தில் இருப்பதைச் சொல்கிறார் என்று நினைத்தால் அது தவறே.

இந்து மதப் பழமைவாதிகள் அவரைத் தங்கள் மதத்தின் சீர்திருத்தவாதி என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சியும் காத்திருந்தது. அவர் சொன்னார்: “ நான் எல்லா மதங்களையும் ஒப்புக்கொள்கிறேன்…. கடவுளின் கடமை அத்துடன் முடிந்துவிடுமா?…… இறைவனின் லீலைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்க வேண்டாமா?….. கருத்து வேற்றுமை என்பதே எண்ண ஓட்டத்தின் முதல் அறிகுறி …… அவை  மேலும் வளர்ந்து எத்தனை மனித இனங்கள் இருக்கின்றனவோ அத்தனை பெருக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்….” இப்படிச் சொல்பவரை எந்த மதவாதிகள் ஒப்புக்கொள்வார்கள்?

கற்கும் நோக்கத்துடன் அவர் 1890-வது வருடத்தில் பிரயாணம் மேற்கொண்டார். அவர் தன்னைப் பற்றி அறிவிப்பதை எவ்வளவு தான் தவிர்த்தாலும், பின்னே வரும் யானையின் முன்னே ஒலிக்கும் மணி போல, அவரது புகழ் அவருக்கும் முன்பாகச் சென்று கொண்டிருந்தது. நாட்டை ஆள்வோர்  அவரை அலங்கரித்தார்கள்; வயலை உழுவோர்  அவரை அரவணைத்தார்கள். மைசூர் மகாராஜாவோ அவரை கையேந்திப் பிழைப்பவராக எதிர்பார்த்திருந்தார். அரசரை எந்த விதமாகவும் அவர் ஏமாற்றாமல் அப்படித் தான் காட்சி அளித்தார் சுவாமி. ஆனாலும் அவர் யாசித்தது வேறுவிதமாக இருந்தது. பரிசுப் பொருட்கள் பலவற்றைப் பரப்பி வைத்து, சுவாமி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசர் சொல்ல, நம் சுவாமியோ சுருட்டு ஒன்றையும், புகையிலை அடைக்கும் குழாய் ஒன்றையும் தேர்ந்தெடுத்தார்.

புகையிலையைப் பயன்படுத்துவதை அவர் ஆதரிக்கவில்லை. தான் சம்பிரதாயங்களை ஆதரிப்பதில்லை என்று தான் அவர் காட்டினார்.

ஒரு முக்கியமான விஷயத்தில் அவர் தனது ஆழ்மனம் சொல்லியிருக்கக் கூடியதையும் மீறி, தன் நம்பிக்கைக்கு வடிகால் அமைத்துக் கொடுத்தார். அப்பாவித்தனமாக அறியாமையில் மூழ்கியிருந்த காலம் முடிந்து விட்டது என்று அவர் சகோதரி நிவேதிதையிடம்  கூறினார். அந்த விடிவுகாலம் இன்னமும் மலரவில்லை என்பது அனைவருக்கும் கண்கூடு. இந்த அவல நிலை அவர் ஆவலுடன் எதிர்பார்த்ததையும்  மீறி நீடித்துக் கொண்டிருக்கிறது.

முன்பிருந்ததை விட தற்போது நிறைய மக்கள் மகான்களை வணங்குகிறார்கள். ஆனால் அவர்கள் சடங்கு, சம்பிரதாயங்களுக்கும் சட்டதிட்டங்களுக்கும் ஒடுங்கி வாழ்கின்றனர்; மூடநம்பிக்கைகளால் முடங்கப்பட்டிருக்கின்றனர். இப்படியாக அவர்கள் முன்னம் இருந்ததைவிட இன்னும் தீவிரமாக சத்தற்ற சடங்குகளுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு “சடங்குகள் மதங்களின் தொடக்கப் படிகளே” என்று விவேகானந்தர் சொன்னது தெரியவேண்டும்.

பயணங்கள் பல செய்த விவேகானந்தரின் பெயரால் ‘யாத்திரை’கள் நடத்துவது அரசியலா, மதமா என்று புரியாத புதிர். அரசியல்வாதிகள் அவரைத் தங்களது ரதத்தில் ஏற்றி, அமர்த்தி விடுகிறார்கள். தங்களது பொய்மைகளை மறைக்க  அவரது உண்மைகளை முன்னிறுத்துகிறார்கள்.

அனைவரும் அடிபணிவதற்கு அவரைக் காட்டி, அவரால் வரும் பெருமை, புகழில் அவர்கள் திளைக்கிறார்கள்.

விவேகானந்தரை அடிபணிந்த பின் அவரை அடியோடு மறப்பார்கள் என்றும், விவேகானந்தருக்குக் கோவில் கட்டிவிட்டு அவரை அப்படியே பிணைத்துக் கட்டிவிடுவார்கள் என்றும், விவேகானந்தரைத் தேர்ந்தெடுத்துவிட்டுத் தாமும் ஏதாவது தேற்றுவோம் என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள்.

ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ அவரைப் பற்றி, “அவர் ஆசானாக விளங்குவார்…” என்று சொன்னார். அவரல்லவோ தன் சீடனைப் பற்றி நன்கு அறிந்தவர்?

அவரைத் துணைக்கு அழைப்போர் அவரது உருவ அட்டைகளைத் தாங்கிக்கொண்டு தங்களது உரையை நிகழ்த்துவார்கள். அவர்களது தன்னலம் அவர்களுக்குத் தெளிவாய்த் தெரியும்.

ஆசான் சொல்வது அறிவைப் புகட்டுவதற்கே. மற்றவர்கள் உரை  நிகழ்த்துவது கூட இருப்போரின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கே.

உலகைத் துறந்தவர் விவேகானந்தர் என்றாலும், அவர் உலகைச் சுற்றிவந்து பலரது கண்களையும் திறந்தவர். இறைவனைப் பற்றி அவர் அமெரிக்காவில் ஒருமுறை பேசி முடித்ததும், பெண்களின் கூட்டம் அவரை அண்டவிடாது இருந்த தடைகளையும் தாண்டி அவர் பக்கம் வந்தனர். “ஆஹா, இந்தப் பெண்களின் வெள்ளத்தையும் உன்னால் எதிர்கொள்ள முடியுமானால், நீ நிச்சயமாகக் கடவுள் தான்”  என்று அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி அவருக்குச் சான்றிதழ் கொடுத்தாள்.

விவேகானந்தர் கடவுளில்லை என்பதை நினைத்து, அந்தக் கடவுளுக்கே நன்றி கூறுவோம்.

அவர் மனிதர் என்பது மட்டுமல்ல, ஒரு மனிதனின் குற்றம் குறைகளும் அவருக்கு உண்டு.

பிராமணன் என்பவன் யார், பிராமணீயம் என்றால் என்ன என்ற தத்துவார்த்தங்கள் எல்லாம் அவரது தட்டி எழுப்பும் போதனைகளில் இருக்காது. சாதீயம் பற்றிய அவரது கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவையே. பெண்ணினத்தைப் பற்றிய அவரது சில எண்ணங்கள் இன்று பொருந்தாமல் இருக்கலாம்.  அமெரிக்க அடிமைகளைப் பற்றியும், அடிமை முறைகள் பற்றியும் அவர் கூறிய கருத்துக்கள் இன்று தயக்கப்படாமல் மறுக்கப்படக் கூடியவையே.

விவேகானந்தரைக் கரம் கூப்பி வரவேற்றவர்களுக்கும், அவரைக் கையசைத்து மறுத்தவர்களுக்கும் இடையில் நமது இந்திய சமூகம் அவரை அனைவரும் வழிபடக் கூடியவராக உருவாக்கியது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, விவேகானந்தர் மூவரும் மும்மூர்த்திகளாக வலம் வந்தனர்.

இந்து மதத்தின் வலது கரமாகவும், இடது கரமாகவும், இந்து மதத்தினரின் மனசாட்சியாகவும் விளங்கிய அந்த மூவரும் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டவர்கள், நிராகரித்துக் கொண்டவர்கள்.

பண்பட்ட ஆன்மிகவாதிகளின் உள்ளத்திலும், உயர்ரக சிந்தனையாளர்களின் எண்ணத்திலும் உலவக்கூடிய ஓர் அரிய வாய்ப்பினை அவர்கள் தாங்களே தவிர்த்தவர்கள்.

இன்னும் சில காலம் விவேகானந்தர் வாழ்ந்திருந்தாரானால், காலப் போக்கின் மாற்றங்கள் இன்னமும் புத்தம் புதிய, மற்றும் வெகுவாக உருமாறிய பழைய கோணங்களில் அமைத்திருந்த பலவிதமான பாதைகளில் அவர் பயணித்திருக்கக் கூடும் என்பது எனது அனுமானம். அதேபோல காலத்தின் சுவடுகள் அவரது பல கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் மாற்றியிருக்க அவர் அனுமதித்திருக்கக் கூடும் என்பதும் எனது கணிப்பு. தனது குருவாகிய ராமகிருஷ்ணரையே கேள்விகள் கேட்டுத் துளைத்தவர், தனது எண்ணங்களையும் எடைபோடாது விட்டுவிட்டிருப்பாரா? ஆனால் காலன் அதற்குத் தேவையான காலத்தை அவருக்கு அருளவில்லை.

கோபாலகிருஷ்ண காந்தி

அவர் ஆன்மிகவாதிகளின் ஆன்மிகவாதி. அவரது ஆன்மிக அறிவு அவரை ஓர் இந்திய முனிவராக்குகிறதே தவிர,  முகமூடி ஆக ஆக்கவில்லை.

அவர் சிந்தனையாளர்களின் சிந்தனையாளர். இந்திய சமூகத்தின் பிரச்னைகளைப் பற்றிச் சிந்தித்து அவற்றை எதிர்கொண்டதால் அவர் ஒரு சமூவியல்,  தத்துவ மேதை. அதனால் அவரை காவியுடை அணிந்த மத போதகராக மட்டும் அறிந்து மதிப்பிட வேண்டாம்.

அறிவு என்னவென்று அறியாத மயக்கத்திலும், அரசியலால் சூழப்பட்டுள்ள சமூக உணர்விலும், தத்துவம் தெரியாச் சூழ்நிலையிலும் மக்கள் அல்லாடும் இக்காலகட்டத்தில், அவர்களை உலுக்கி, எழுப்பி, அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழவைப்பதற்கு, விவேகானந்தரின் வசீகரப் பார்வையும், துளைத்தெடுக்கும் கண்களும் மிக மிக அவசியம் ஆகிறது. 

குறிப்பு:

இக்கட்டுரை, ஆங்கில நாளிதழான தி ஹிந்துவில் (12.1.2013) வெளியானது. அதனை திரு. எஸ்.ராமன் தமிழில் வழங்கியுள்ளார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s