உங்க பேர் என்ன? எந்த சேனல்?

-ச.சண்முகநாதன்

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ச.சண்முகநாதன், கம்ப ராமாயணத்திலும் இளையராஜாவின் இசையிலும் தோய்ந்தவர். அவரது முகநூல் பதிவே இக்கட்டுரை….

நீ யார்? உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்? என்ற கேள்விகளெல்லாம் பிரச்னையாகி விடுகிறது இப்பொழுதெல்லாம்.  “நான் யார் தெரியுமா, எங்க அப்பா யார் தெரியுமா?” என்ற சவடால் விடும் நபர்கள் கேமரா முன்னால் தான் யார் என்று சொல்ல விரும்புவதில்லை. அவ்வளவு கோழைத்தனம்!

இந்த இடத்தில், இரண்டு மாபெரும் வீரர்கள் தங்களை எப்படி அறிமுகம் செய்துகொண்டனர் என்று பார்ப்போம்.

அனுமன் ராம – லக்ஷ்மணனைச் சந்திக்கும் அழகான நெகிழ்ச்சியான தருணம். ஒருவருக்கொருவர் தன்னுடைய பெயர், தன் வரலாறு, தன்னுடைய பின்புலம் என்ன என்பதை அழகாகப் பரிமாறிக் கொள்கின்றனர். 

சுக்ரீவன் இருக்குமிடம் தேடி அலைகின்றனர்  ராமனும்  லக்ஷ்மணனும். அனுமன் இருப்பிடம் சேர்கின்றனர். அவர்கள் தன் இருப்பிடம் வரக் கண்ட  அனுமன் அவர்கள்  எதிர்சென்று  ‘கவ்வை இன்றாக, நுங்கள் வரவு!’ (உங்கள் வரவு நல்வரவாகுக) என்று முகமன் கூறி வரவேற்கிறான்.

கருணையின் வடிவான ராமன் அனுமனைப் பார்த்து   “எவ் வழி நீங்கியோய்! நீ யார்?” என்று அன்புடன் கேட்கிறான் “நீ யாரப்பா? உன் பெயர் என்ன? எவ்விடத்தை சார்ந்தவன்?” என்று. 

அனுமனும் ஒரு அன்னியோன்யம் இருப்பதை உணர்ந்து,  ராமனை புகழ்ந்துவிட்டு 

“...யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்”

-என்று பணிவாகச் சொல்கிறான். 

நீ யார் என்ற கேள்விக்கு, தன்னுடைய பெயர், தந்தை தாய் யார் யார் என்று விலாவாரியாகச் சொல்கிறான். வீரனல்லவா, எல்லாவற்றையும் தெளிவாகத் திறந்து வைக்கிறான் அனுமன். கோழைகள் தான் தன்னுடைய பெயரைக்  கூட வெளியில் சொல்ல அச்சம் கொள்ள வேண்டும். 

ராமனும் அனுமனின் சொல்லைக் கேட்ட பின்  இவன்  “ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும்” நிறைந்தவன் என்று கண்டுகொண்டான். 

“எங்களுக்கு சுக்ரீவன் இருக்குமிடம் தெரிய வேண்டும். எங்களை அழைத்துச் செல்வாயா?” என்று கோரிக்கை வைக்கிறான் ராமன்.

“எவ் வழி இருந்தான், சொன்ன கவிக் குலத்து அரசன்? யாங்கள்,
அவ் வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்;
இவ் வழி நின்னை உற்ற எமக்கு, நீ இன்று சொன்ன
செவ் வழி உள்ளத்தானைக் காட்டுதி, தெரிய’ என்றான்”

ஒரு வழி கேட்கும் இடத்தில் கம்பன் எத்தனை  ‘வழி’களை உபயோகிக்கிறான்,  “எவ் வழி, அவ் வழி, இவ் வழி, செவ் வழி” என்று. தமிழின் சக்கரவர்த்தி அல்லவா கம்பன்!

ராம லக்ஷ்மணர்களைக் கண்ட அனுமன் பெரும் மகிழ்ச்சி கொண்டான். தன்னிடம் வழி கேட்பது உலகுக்கு வழிகாட்டும் ராமன் என்று அப்பொழுது தெரியவில்லை அனுமனுக்கு. ஆனால் மனதில் ஒரு நெருக்கத்தை உணர்கிறான் அனுமன். 

“நான் அழைத்துச் செல்கிறேன். சுக்ரீவனை நானே அறிமுகம் செய்து வைக்கிறேன். ஆனால் நீங்கள் யார் என்று கேட்டால் நான் என்ன சொல்லி உங்களை அறிமுகம் செய்வது. தயவு செய்து அதையும் சொல்லி விடுங்கள்” என்று பணிவுடன் கேட்கிறான்.

“யார் என விளம்புகேன் நான், எம் குலத் தலைவற்கு, உம்மை?
வீர! நீர் பணித்திர்!’ என்றான், மெய்ம்மையின் வேலி போல்வான்”

 “யார் என விளம்புகேன் நான்?” அனுமனின் பணிவா, தமிழின் ஆற்றலா இந்தக் கேள்வியில் விஞ்சி நிற்பது!

லக்ஷ்மணன் தங்கள் இருவரையும் யார், ஏன் இங்கே வந்தோம் என்பதை பெருமையுடன் விவரிக்கிறான்.

“அன்னவன் சிறுவனால், இவ் ஆண்தகை; அன்னை ஏவ,
தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி,
நல் நெடுங் கானம் சேர்ந்தான்; நாமமும் இராமன் என்பான்;
இந் நெடுஞ் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே”.
ச.சண்முகநாதன்

அன்னையின் ஆணையால் தன்னிலும் சிறுவனான தம்பிக்கு அரசு ஈந்து கானகம் வந்து சேர்ந்தான்.  நாமமும் இராமன் என்பான். நான் அவனுக்கு ஏவல் செய்யும் இளவல்.  தாங்கள் யார், வரலாறு என்ன, எதற்காக கானகம் வந்தோம் என்பதை  “யார் என விளம்புகேன் நான்” என்ற ஒரு கேள்விக்கு பதில் சொல்கிறான் லக்ஷ்மணன். 

நாமமும் அனுமன் என்பேன்.

நாமமும் இராமன் என்பான்.

-இரண்டு மாபெரும் வீரர்களின் அறிமுகம். 

கோழைகளே தங்கள் அடையாளம் மறைப்பார்கள்.  வீரர்களிடம் அவர்களின்  பெயர் கேட்டால் பெயரும், ஊரும் தன் வரலாறும் சேர்த்துச் சொல்வார்கள்.

$$$

Leave a comment