-ஆர்.பி.வி.எஸ்.மணியன்
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் திரு. ஆர்.பி.வி.எஸ்.மணியன், சுவாமி விவேகானந்தரின் கருத்துகளின் அடிப்படையில் எழுதிய அற்புதமான கட்டுரை இது....

நமது பண்பாடு எத்தனை பழமையானதோ அத்தனை பழமையானவை ‘ஆரிய, திராவிட’ என்கிற இரு வார்த்தைகளும். இந்தச் சொற்களையும் இனவாதப் பெயர்களாகச் சுட்டிக்காட்டி நம்மைப் பிரித்தாள முயற்சித்தனர் பிரிட்டிஷார்.
பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கே ஓர் அச்சுறுத்தலாக பின்னாளில் திகழ இருந்த ஆரிய – திராவிட பிரச்னை முளை விட்டிருப்பதை சுவாமி முதன்முதலில் திருவனந்தபுரத்தில் காண நேர்ந்தது.
மெத்தப் படித்த மேதாவியான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் சுவாமிஜியிடம் தன்னை திராவிடர் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துச் சில குரல்கள் அப்போது எழத் தொடங்கியிருந்தன. அதுபோலவே பேராசிரியர் சுந்தரராம ஐயர் போன்றவர்கள் தங்களை ஆரியர்கள் என்று வர்ணித்துக் கொண்டதும். சுவாமிஜிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆரிய- திராவிட இனவாதப் பிரிவு முற்றிலும் தேவையற்றது என்பதே சுவாமிஜியின் கருத்தாக இருந்தது. இது குறித்து பின்னாளில் விவேகானந்தர் கூறியதாவது:
ஆரியர் என்ற சொல்லைப் பற்றி மேலை நாட்டவர் கூறுவதைப் புறந்தள்ளி நமது சாஸ்திரங்களில் காணப்படுகிற விளக்கத்தை நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். ‘ஆர்ய’ என்பது ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக சாஸ்திரங்களில் எங்குமே வரவில்லை. ‘த்ராவிட’ என்பதும் இனப்பெயராக வரவில்லை. வேத சாஸ்திரங்களைப் பார்த்தால் ஆரிய, த்ராவிட என்று இரண்டு வேறு வேறு இனங்கள் இருந்தன என்பதற்குக் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லை”.
சாஸ்திரப் பிரகாரம் இவ்விரு வார்த்தைகளுக்கான பொருள் என்ன?
“ஆர்ய” என்றால் மேலான, உயர்ந்த பண்பாட்டுக்குரிய, மதிப்புக்குரிய என்பதாகவே அர்த்தங்கள் தொனிக்கும் வகையில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.
“க்ருண்வந்தோ விச்வம் ஆர்யம்” என்ற சொற்றொடர் ஒன்று காலங்காலமாக நம்மவரால் பயண்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு “உலகைப் பண்படையச் செய்வோம், உலகை மேம்படுத்துவோம்” என்பதாகவே அர்த்தம். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து “நீ என்ன இப்படிப் பேடி மாதிரி மனத்தளர்ச்சி அடைந்து அனார்யனாகி விட்டாயே” என்கிறார். இங்கு அனார்யன் என்பதற்கு “மதிப்புக்குரியவனாக அல்லாமற் போய் விட்டாயே” என்பதுதான் அர்த்தம்.
பழங்காலக் காவியங்களை, நாடகங்களைப் படித்தால் ராணிகள் தங்கள் கணவன்மார்களான ராஜாக்களை ‘ஆர்ய புத்ர’ என்றே அழைக்கிறார்கள். இதன் பொருள் “மேலான குடும்பத்தில் பிறந்தவனே” என்று தனது புக்ககத்தை அவர்கள் புகழ்ச்சியாகக் கூறுவதாகவே ஆகும்.
ஸீதை ராமரை “ஆர்ய புத்ர” என்பதாக அழைக்கிறார். அப்படியானால் ஸீதை தன் கணவனை இன ரீதியாக அப்படி அழைத்தார் என்று கொள்ள முடியுமா? ராமன் இன ரீதியாக ஆரியன் என்றால் ஸீதை அவனை “ஆர்ய” என்று விளிக்கும் போது இவள்: த்ராவிடப் பெண்மணி ஆகிவிடுவாளே!
ராமாயணத்தில் மண்டோதரியும் தனது கணவன் ராவணனை “ஆர்ய” என்றே மரியாதையோடு அழைக்கிறாள்.
முத்ரா ராக்ஷஸம் நாடகத்தில் அமாத்ய ராக்ஷஸன் ஆரியன் என்று அழைக்கப்படுகின்றான். பிறகு அவன் மீது வீண்பழியைச் சுமத்த முயற்சி நடக்கிறது. உடனே அவன் அனார்யன் (பண்பில்லாதவன்) என அழைக்கப்படுகிறான்.
ஒரு வேடிக்கை என்னவெனில் ஐரோப்பிய மொழிகள் எதிலுமே ‘ஆர்ய’ என்ற வார்த்தை இல்லை.
அம்பிகையை “ஆர்யா” என்று மரியாதையோடு குறிப்பிடும் வழக்கம் உள்ளது. துர்வாஸர் அம்பிகைமீது இயற்றியுள்ள ஸ்தோத்திரத்திற்கே “ஆர்யா த்விசதி” என்று தான் பெயர். அமரகோசத்தில் அம்பிக்கையின் நாமங்களைக் குறிப்பிடும்போது “ஆர்யா தாக்ஷாயணி ச ஏவ கிரிஜா” என்று வருகிறது.
ஆதிசங்கரரின் தாயாருக்கே ‘ஆர்யாம்பா’ என்றுதான் பெயர். இந்த ஆர்யாம்பாவின் மகனான சங்கரர் ‘திராவிட சிசு’ என்று தன்னையே அழைத்துக் கொள்வதற்கான அகச்சான்று அவரது சௌந்தர்ய லஹரியின் 75வது சுலோகத்தில் உள்ளது.
“ஆரிய” என்பது தமிழில் “ஐயன்” என்றும், இன்னும் மரியாதை நிமித்தமாக “ஐயர்” என்றும் ஆகியுள்ளது.
த்ராவிட தேசத்தின் கிராம தேவதையான ஐயனார் என்ற பெயர் இந்த ஆர்ய பதத்திலிருந்து பிறந்ததே.
தனது “ஜய வந்தே மாதரம்” பாடலில் பாரதியார்
“ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம் ஜய வந்தே மாதரம்”
என்று பாடும்போது நமது தேசத்தை “உயர்ந்த நாடு” என்ற அர்த்தத்திலேயே வர்ணித்துள்ளார். ஆரியர் யார் என்பதற்கான இலக்கணத்தையே வகுப்பது போல பாரதி தனது “சத்ரபதி சிவாஜி” பாடலில் பல கருத்துக்களைத் தந்திருக்கிறார்.
பிச்சை வாழ்வு உகந்து பிறருடையாட்சியில் அச்சமுற்று இருப்போன் ஆரியனல்லன் புன்புலால் யாக்கையை போற்றியே தாய் நாட்டு அன்பிலாது இருப்போன் ஆரியனல்லன் மாட்சிதீர் மிலேச்சர் மனப்படியாளும் ஆட்சியில் அடங்குவோன் ஆரியனல்லன், ஆரியர் இருமின்! ஆண்கள் இங்கு இருமின்! ஆரியத்தன்மை அற்றிடும் சிறியர் யார் இவண் உளர், அவர் யாண்டேனும் ஒழிக!
‘த்ராவிட’ என்பதும் எங்கும் இனப்பெயராக வரவில்லை. ஒரே ஹிந்து இனத்தைச் சேர்ந்த பாரத ஜனங்களைத்தான் ப்ராதேசிக ரீதியாக கௌடர்கள் என்றும், திராவிடர்கள் என்றும் பிரித்திருக்கிறார்கள்.
முன் காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள ப்ரதேசங்களை பஞ்ச கௌட தேசங்கள் என்றும், விந்திய மலைக்குத் தெற்கே உள்ள ப்ரதேசங்களை பஞ்ச த்ராவிட தேசங்கள் என்றும் நம் முன்னோர் அழைத்தனர்.
எனவே திராவிடர் என்பது தென் பாரத ப்ரதேசங்களைச் சேர்ந்த மக்கள் என்றே அர்த்தமாகிறது. ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பெயரை வைத்தே குறிப்பிடுவார்கள். எனவே தான் வடபாரதத்தில் குடியேறிய தமிழ் தேச பிராமணர்களுக்கு ‘த்ராவிட்’ என்ற surname பயன்படுத்தப்படுகிறது. பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ‘ராஹுல் த்ராவிட்’ பெயர் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமானதே.
மேலே கூறப்பட்டக் கருத்துக்களை வலியுறுத்தி விவேகானந்தர் கூறுவதாவது:|
“ஹிந்து என்று இப்பொது நாம் குறிப்பிடுகின்ற அனைவரையுமே ‘ஆரியர்’ என்ற சொல் குறிக்கிறது. ஹிந்துக்கள் அனைவரும் வேறுபாடற்ற ஆரியர்களே. தென் பாரதத்தில் திராவிடர் என்ற இனத்தினர் இருந்ததாகவும் அவர்கள் வட பாரதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றும், பிற தென்னகத்து பிராமணர்கள் மட்டும் வட பாரத்திலிருந்து வந்த ஆரியர்கள் என்றும், பிற தென்னகத்தவர் எல்லாம் இந்த பிராமணர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஜாதியையும், இனத்தையும் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கொள்கை நிலவுகிறது. இவையெல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாத கொள்கைகள். இவை வெறும் அபிப்பிராயங்களும் ஊகங்களும் மட்டுமே. தமிழர்களை தஸ்யுக்கள் என்று வேதங்கள் இழிவுபடுத்தியதாக ஒரு ஆதாரமற்றக் குற்றச்சாட்டு உள்ளது. தஸ்யுக்கள் என்பது தமிழர்களைக் குறிக்கிற வார்த்தையல்ல.
சுவாமிஜி கூறுவதாவது:
“வேதங்களில் தஸ்யுக்களின் அழகற்ற உடலமைப்பைப் பழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற அடைமொழிகளில் ஒன்றுகூட பெருமை வாய்ந்த தமிழினத்திற்குப் பொருந்தவில்லை”
பாரத நாட்டின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஆராயப் புகுந்தவர்களில் ஒருவரான ம்யூர் (MUIR) என்பவர் கூறியுள்ளதாவது:
“எந்தவிதமான ஸம்ஸ்க்ருத புத்தகத்திலும் எவ்வளவு பழமையானதாயிருந்தாலும் சரி, ஆரியர்கள் வெளிநாட்டவர் என்பதற்குச் சான்றோ, குறிப்போ எங்கும் கிடைக்கவில்லை. ரிக்வேதத்தில் கூறியுள்ள தாஸ, தஸ்யூ, அஸுர என்பன போன்ற பெயர்கள் ஆரியர்கள் அல்லாதார்களுக்கோ அல்லது இந்நாட்டுப் பழங்குடி மக்களுக்கோ உபயோகப்படுத்தப்பட்டதாக யாதொரு ஆதாரமும் குறிப்பும் கிடைக்கவில்லை.”
வரலாற்றாளர் பி.டி.ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்கள் தமது ‘DRAVIDIAN STUDIES’ என்ற நூலில் கூறுவதாவது:
ஆர்யர்கள், தஸ்யுக்கள் என்ற சொற்கள் வெவ்வேறு இனங்களைக் குறிப்பன அல்ல. இந்த வார்த்தைகள் இருவேறு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றியவர்களைக் குறிக்கின்றன.
தஸ்யுக்கள் அக்னி வழிபாடில்லாதவர்கள், யாகங்களை வெறுத்தவர்கள். யாகய க்ஞங்களில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் ஆர்யர்கள்.
ரிக் வேதம் எட்டாம் மண்டலத்தில் வரும் 70வது அனுவாகத்தில் 11வது ரிக் இதற்கு ஆதாரமாக உள்ளது.
ரிக்வேத மந்திரத்தில் (10-22-8) தஸ்யுவின் லக்ஷணத்தை இவ்வாறு விளக்கியிருக்கிறது.
“எவன் தீர ஆலோசிக்காமல் செயல் புரிகிறானோ, எவன் அஹிம்ஸை, ஸத்யம், தயை முதலிய நல்ல விரதங்களை அனுஷ்டிக்காது இதற்கு மாறாக ஹிம்ஸை, அஸத்யம், கொடூரத்தனம் முதலிய ஆசரணங்கள் உள்ளவனோ, மனிதத் தன்மைக்கு உகந்த காரியங்களைச் செய்யாதவனோ அவனே ‘தஸ்யு’ ஆவான்”.
வி.ஆர்.ராமச்சந்திர தீக்ஷிதர் என்பவரும் தமது ‘ORIGIN AND SPREAD OF TAMILS’ என்ற நூலில், “திராவிடர்கள் ஒரு காலத்தில் பஞ்சாபிலும் கங்கைச் சமவெளியிலும் வாழ்ந்தார்கள் என்பதும், பின்னர் படையெடுத்து வந்த ஆரியர்களால் அவர்கள் விரட்டப்பட்டுத் தெற்கே ஓடி வந்தார்கள் என்பதும், அதன் பிறகே திராவிடர்கள் தென் பாரதத்தைத் தங்கள் தாயகமாக்கிக் கொண்டார்கள் என்பதும் ஆதாரமற்ற நிரூபிக்கப்பட முடியாத செய்திகள்” என்று கூறியிருக்கிறார்.
சுவாமிஜி கூறுவதாவது:
“திருவாளர் மொழியியல் அறிஞரே, உங்கள் கருத்து முற்றிலும் ஆதாரம் அற்றது. (இங்கு மொழியியல் அறிஞரே என்று சுவாமிஜி குறிப்பிட்டிருப்பது ராபர்ட் கால்டுவெல் பற்றியதாக இருக்க வேண்டும்) வடபாரதத்து மொழிகளுக்கும் தென்பாரதத்து மொழிகளுக்கும் இடையே உள்ள மொழி வேற்றுமையைத் தவிர வேறு எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தார்கள் என்றும், பூர்விகக் குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும் அவர்களை நிர்மூலமாக்கிவிட்டு பாரதத்தில் குடியேறினார்கள் என்றும் கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்பற்ற பொய், முட்டாள்தனமான பேச்சு ஆகும்”
இத்தகைய பொய்யான ஒரு செய்தியை பிரிட்டிஷார் ஐரோப்பிய வரலாற்றாளர்களைக் கொண்டு பரவச் செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. 1600களிலிருந்து 1800 வரை இங்கு நிலைகொண்டுவிட்ட பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஹிந்துக்கள் போரிடத் தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக 1857-இல் நடந்த சுதந்திரப் புரட்சியும் எழுச்சியும் பிரிட்டிஷாரை பீதியடையச் செய்தன. நாடே ஒருங்கினைந்து நடத்திய இந்தப் புரட்சி – இந்த சுதந்திரப் போர் பாரத நாட்டின் அடித்தளமான பண்பாட்டு ஒற்றுமையின் வலிமையை ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தியது. இதனை எப்படியாவது குலைத்துவிட வேண்டும் என்று அவர்கள் துடித்தனர்.
இவர்களுக்குக் கைகொடுக்கும் விதத்தில் ஆர்தர் -டி- கோபிநியூ என்பவர் அளந்து விட்ட ‘ஆர்யன் இனம்’ (aryan race) என்பதான ஆராய்ச்சி என்ற பெயரில் அவர் செய்த சூழ்ச்சி அப்போது தொடங்கியிருந்தது. எனவே மாக்ஸ்முல்லரைப் பயன்படுத்தி, ஆரியர்கள் ஐரோப்பிய சம்பந்தம் உடையவர்கள் என்றும், அவர்களே பாரதத்தில் நுழைந்து இங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த திராவிடர்களின் மொஹஞ்சோரோ- ஹரப்பா கலாச்சாரத்தை அழித்துத் தங்களது வேத கலாச்சாரத்தை நிறுவினார்கள் என்றும் கதை கட்டிவிட்டனர்.
திராவிடர்களும் பாரதத்தின் பூர்விகக் குடிமக்கள் அல்ல என்றும் அவர்களுக்கும் முன்னதாக வாழ்ந்த மலைவாழ் மக்களும் கானகத்தில் வாழ்ந்த மக்களுமே இந்த நாட்டின் ஆதிவாசிகள் அதாவது பூர்விகக் குடிமக்கள் என்றும் அளந்தனர்.
டாக்டர் கேய்னே கூறுவதாவது. “ஆரிய மொழிபேசும் மக்கள் இங்கு நுழைவதற்கு முன்பே திராவிடர்கள் ஊடுருவல் செய்துள்ளனர். ஆக மொத்தம் இந்த ஆரியர்கள், திராவிடர்கள் இருவருமே பூர்வகுடியினர் அல்ல, இவர்களுக்கு முன்பு நீக்ரோ இனத்தைக் கிட்டத்தட்டச் சார்ந்த கூட்டம் ஒன்று இங்கு வாழ்ந்து வந்துள்ளது. காலப்போக்கில் அந்த இனம் அழிந்து விட்டிருக்கின்றது.”
ஆதாரமே இல்லாத இத்தகைய நச்சுக் கருத்துக்கள் அபத்தத்திலும் அபத்தம்.
ஆகவே இந்த நாட்டிற்கு உரிமை கொண்டாட ஹிந்துக்கள் தகுதியற்றவர்கள் என்று நிரூபிக்கப் பார்த்தனர். முதலில் இந்த நாட்டை ஆக்கிரமித்த ஆரியர்களே ஹிந்துக்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்வதாக பொய்ப் பிரசாரம் செய்தனர்.
தென் பாரத மக்கள் யாவருமே ஒருகாலத்தில் வடக்கிலிருந்து ஆரியர்களால் தெற்கே விரட்டப்பட்டவர்கள் என்று கதை கட்டிவிட்டனர். இதற்கு சாதகமாக ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரி மொழி ஆராய்ச்சி என்ற பெயரில் திராவிடர்களின் மொழியும் கலாச்சாரமும் வடபாரதத்து ஆரியர்களின் மொழியினின்றும் கலாச்சாரத்தின்றும் வேறுபட்டது என்று பொய்ப் பிரசாரம் செய்தார்.
இத்தகைய பின்னணியில் நாம் விவேகானந்தரது கருத்துக்களைக் காண வேண்டும்.
இதோ விவேகானந்தர் கூறுவதைக் கேட்போம்.
“ஐரோப்பியப் பண்டிதர்களின் இத்தகைய கருத்துகளுக் கெல்லாம் பாரத அறிஞர்கள் கூட ‘ஆமாம்’ போடுவது விந்தையாக இருக்கிறது. இந்த ராக்ஷஸப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இது உண்மையில் மிக மிக மோசமான செயலாகும். … ஆதிவாசிகள் யார்? ஐரோப்பியர்கள் அப்பாவி ஆஃப்ரிக்கர்களைக் கொடுமைப் படுத்தியது போலவே இங்கேயும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்ற செயல் நடந்திருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார் இந்த மேற்கத்திய தொல்பொருள் ஆய்வாளர். ஆரியர்கள் பின்னால் வந்தவர்களாம். சர் யு டர்னர், சர். பு. ரிஸ்லே, டாக்டர் டபிள்யூ.டபிள்யூ. ஹேண்டர், ஹக்கல், டாக்டர் கேய்னே, எட்வர்ட் தாமஸ், ஜே.என். ரோட், ஹெச்.ஜி.வெல்ஸ், பிஷப் கால்டுவெல் போன்ற பல வெள்ளையர்கள் மொழி ஆராய்ச்சி என்ற பெயரிலும் பல பொய்யான கருத்துக்களை உலகத்தவர் முன்வைத்துள்ளனர். ஆரிய இன வாதம் பேசும் இந்த மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளில்தான் எத்தனை முரண்பாடுகள் தெரியுமா? சிலருடைய கருத்துப்படி ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். இந்த ஆரியர்கள் சிவப்புத் தலைமுடியைக் கொண்டவர்கள் என்று சில ஆங்கிலேயர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இவர்கள் கறுப்பு முடியுள்ளவர்கள் என்கிறார்கள். ஆரியர்கள் சுவிட்சர்லாந்தின் ஏரிக்கரைகளில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளும் சமீப காலத்தில் தோன்றியுள்ளன. இத்தகைய கொள்கைகளுடன் அந்த ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து அந்த ஏரியில் மூழ்கினால் கூட எனக்கு வருத்தமில்லை. ஆரியர்கள் வடதுருவத்தில் வாழ்ந்ததாக இப்போது சிலர் கூறுகிறார்கள் ஆரியர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக. இந்த ஆர்ய இனவாதக் கொள்கையில் உண்மை இருக்கிறதென்றால் நம் சாஸ்திரங்களில் அது பற்றிய ஒரு சிறு குறிப்பாவது இருக்க வேண்டும். ஆர்யர்கள் என்ற இனத்தவர்கள் பாரதத்திற்கு வெளியேயிருந்து வந்தார்கள் என்று கூறுகின்ற ஒரு வார்த்தை கூட நமது சாஸ்திரங்களில் இல்லை”.
உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் எல்ஃபின்ஸ்டன் கூறுவதாவது:
மனுஸ்ம்ருதியிலோ, வேதத்திலோ மற்றும் மனுவுக்கு முற்பட்ட எந்தப் புத்தகத்திலோ ஆர்யர்கள் பாரதத்திற்கு முன்பு வேறு தேசத்தில் இருந்ததாகக் கூறப்படவில்லை. [Elphinston History of India Vol.I] மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டப் பழமையான நாகரிகத்தின் தடயங்கள் திராவிடப் பண்பாடு எனும் தனியான கலாச்சாரம் ஒன்றைச் சுட்டிக் காட்டுவதாக சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறான கற்பனையே.
மொஹஞ்ஜதாரோவில் கிடைத்த ஒரு ‘முத்திரை’ (SEAL) யில் உபநிஷதக் கருத்து ஒன்றை விளக்கும் படம் காணப்படுகிறது. (Plate no, cxll seal no 387 from the excavation at Mohenjodaro) (source; indus civilization edited by Sir John Marshall, Cambridge 1931)
5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் சிந்து சமவெளி நாகரிக ஆராய்ச்சியில் ஒரு உண்மை தெளிவாகிறது, அந்த நாகரிகம் பாரத நாட்டின் தொன்மையான வேத கலாச்சாரத்தின் ஓர் அங்கமே என்பதுதான் அந்த உண்மை.
மொஹஞ்சோதாரோவில் ஸ்ரீ கிருஷ்ணலீலா பற்றிய பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உஜ்ஜயினியில் உள்ள விக்ரம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் டாக்டர் விஷ்ணு ஸ்ரீதர் வாகங்கர் என்பவர் தன்னுடன் 30 உயர்மட்ட புராதன ஆராய்ச்சி அறிஞர்களின் ஒத்துழைப்போடு ஹரப்பா, மொஹஞ்ஜதாரோவில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை வைத்து 20 ஆண்டுகள் தீவிர அராய்ச்சி செய்து வெளியிட்ட முடிவாவது:
ஹரப்பா நாகரிகத்தின் மூலம் ஆரிய கலாச்சாரமே. அதாவது ஆரிய கலாச்சாரம் ஹரப்பா கலாச்சாரத்தைவிட பழமையானது, ஹரப்பா கலாச்சாரம் ஆரிய கலாச்சாரத்தின் ஓர் அங்கமே ஆகும்.
ஆரிய – திராவிட இனவாத மேதாவிகள் மனிதர்களின் தோலின் நிறத்தை வைத்து இனங்களை அளக்கத் தொடங்கினார்கள். தென் பாரதத்தில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மக்களின் நிறம் சற்றும் கருமையாக இருப்பதால் வட பாரதத்தில் உள்ள வெளுத்த நிறத்தவர்கள் ஆர்யர்கள் என்றும் தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும் கதை கட்டினார்கள்.
ஆனால் வரலாற்று உண்மை வேறாக உள்ளது. இவர்கள் ஆரிய இனத்தின் அதி உன்னத பிரதிநிதிகளாகக் கருதும் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் கருமை நிறத்தவரே. திராவிடர்களின் தெய்வம் என்று மொஹஞ்சோதாரா கண்டுபிடிப்புகள் மூலம் உறுதியாகியுள்ள சிவன் வெளுத்த நிறத்தவன். வேதங்களைத் தொகுத்து வழங்கிய வியாஸர் (கிருஷ்ணத்வைபாயனர்) கறுப்பு நிறத்தவர். பாஞ்சால தேசத்து ஆரிய மன்னன் துருபதன் மகள் திரௌபதி கறுப்பு நிறுத்தவள்.
மூக்கின் வடிவையும் முடியின் நீளத்தையும் வைத்து இனவாதக் கதைகள் கூறும் இவர்களது அறியாமையை என்னென்பது?
விவேகானந்தர் மேலும் கூறுவதாவது:
“நமது நாட்டுப் பண்டிதர்களுக்குச் சொல்கிறேன். ‘நீங்கள் எல்லாம் கற்றறிந்த மனிதர்கள். தயவு செய்து நமது பழைய நூல்களையும் சாஸ்திரங்களையும் துருவி ஆராய்ந்து சொந்தமான முடிவுக்கு வாருங்கள்’ என்று சொல்லுகிறேன். ஐரோப்பியர்கள் தங்களுக்கு எங்காவது வாய்ப்பான சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆங்காங்குள்ள பூர்வீகமான குடிமக்களைப் பூண்டறுத்துவிட்டு, அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஸௌகரியமாகவும் வசதியாகவும் குடியேறி விடுவார்கள். ஆகவே ஆரியர்கள் என்று அவர்கள் கருதும் ஹிந்துக்களும் அவ்வாறே செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேற்கத்தியவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கிக் கொண்டு, தங்களது உள் நாட்டு விளை பொருள் வசதிகளையே முற்றிலும் நம்பி வாழ்ந்திருப்பார்களேயானால் அவர்கள் மிக மோசமான காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்திருப்பார்கள். ஆகவேதான் அவர்கள் ஆக்கிரமிப்பு வெறி கொண்டு உலகெங்கும் ஓடிச் சென்றார்கள். பிறருடைய நிலங்களின் செழுமை வளத்தால் தம் ஊனை வளர்க்க வகை தேடினார்கள். ஆகவே ஆர்யர்கள் என்று அவர்களால் வர்ணிக்கப்பட்ட ஹிந்துக்களும் அதுபோலவே செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டுகிறார்கள். இப்படி கூறுவதற்கெல்லாம் ஆதாரங்கள் எங்கே? கற்பனைக் கதையளக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லுவேன். ‘மேற்கத்தியப் பண்டிதர்களே உங்களுடைய விசித்திரக் கற்பனைக் கதைகளை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்’. எந்த வேதத்தில் எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆர்யர்கள் என்ற இனத்தவர் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது? காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த பூர்விகக் குடிகளை அவர்கள் பூண்டறுத்தார்கள் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள். இது போன்ற மடமைப் பேச்சுக்கள் பேசுவதால் உங்களுக்கு என்ன லாபம்?”
ராமாயணமே ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிகொண்ட வரலாறு தான் என்று சில வக்கிரபுத்தி கொண்ட வரலாற்றாளர்கள் கூறுவதற்கு சுவாமிஜி பதில் கூறியிருக்கிறார்.
“நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய அருமையான கட்டுக்கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்? அது சரி ராமாயணம் என்பது என்ன? தென்பாரதத்திலிருந்த காட்டுமிராண்டிப் பூர்விகக் குடிகளை ஆரியர்கள் என்போர் தோற்கடித்ததா? ஸ்ரீ ராமர் பண்பாடுடைய மன்னராக, மனிதராகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். உங்கள் கண்ணோட்டத்தில் அவர் ஓர் ஆரிய மன்னர். யாருடன் அவர் போரிடுகிறார்? இலங்கை மன்னனான ராவணனுடன். ராமாயணத்தைச் சற்றே படித்துப் பாருங்கள். ராவணன் ராமனைவிட உயர்ந்த நாகரிகம் வாய்ந்திருந்தானே யொழிய தாழ்ந்தவனாக இருக்கவில்லை. இலங்கையின் நாகரிகம் அயோத்தியைவிட ஒரு விதத்தில் உயர்ந்து இருந்ததே தவிர நிச்சயமாகத் தாழ்ந்திருக்கவில்லை. ராமாயணத்தில் வரும் வானரர்களை நீங்கள் தென் பாரதத்தின் பூர்விகக் குடிமக்கள் என்று கருதினால் அவர்கள் எல்லாம் ஸ்ரீ ராமரின் நண்பர்களாக, ஸ்ரீ ராமரின் படைவீரர்களாக அன்றோ சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்! வாலியின் ராஜ்யத்தையோ ராவணனது ஸ்ரீ லங்கா ராஜ்யத்தையோ ஸ்ரீ ராமர் தமது அரசுடன் இனைத்துக் கொண்டாரா? சொல்லுங்கள்….”
இந்த ராமாயண விவகாரத்தில் விவேகானந்தரது அடிச்சுவட்டைப் பின்பற்றி சுவாமி சித்பவானந்தர் தமது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடான ‘தர்ம சக்கரத்தில்கூறியுள்ள சில விஷயங்களையும் இங்கு காண்போம்:
“ராமாயணம் போன்ற நூல்களில் ஆரியன் என்பவன் ஒரு அலாதியான இனத்தைச் சார்ந்தவன் என்று பொருள்படும் விளக்கம் எவ்விடத்திலும் இல்லை .
ஆரியன் என்னும் பதத்துக்குப் பொருள்- பண்பட்டவன் அல்லது மேன்மகன் என்பதாகிறது. கானகத்தில் தன் உயிரைக் கொடுத்து ஸீதையைக் காக்க முயன்ற ஜடாயுவை அவள் “ஆர்ய” என்று அழைக்கின்றாள். நான் ஆரியன் என்னும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கிறதென்றால் ஜடாயு ராமாயணத்தின்படி ஆர்யன் ஆகிவிடுகிறான். ராவணன் பிராமணன். இக்கோட்பாட்டின் படி தென் இலங்கையிலிருந்த ராவணன் ஆரியன் ஆகின்றான்.
வடக்கே அயோத்தியில் இருந்த பிராமணன் அல்லாத க்ஷத்திரியனாக இருந்த தசரத ராமன் இவர்களின் கொள்கையின்படி திராவிடன் என்று யூகிக்க இடமிருக்கின்றது.
ஆக ராமாயணம் தர்மம் அதர்மம் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள போராட்டத்திற்கு விளக்கமாக அமைகிறதே ஒழிய இனப் போராட்டத்தை விளக்குவது அல்ல”.
ஐரோப்பியர்களை நோக்கி விவேகானந்தர் விடுக்கும் சவாலைப் பாருங்கள்.
“…ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்ந்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்களது நிலங்களில் நீங்கள் குடியேறியிருக்கிறீர்கள். நிரந்தரமாக அவர்கள் தீர்ந்து போனார்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? அங்கிருந்த ஆதிக் குடிமக்கள் இப்போழுது எங்கே? அவர்கள் வேரறுக்கப்பட்டு விட்டார்கள். காட்டு மிருகங்களைப் போல அவர்களைக் கருதி நீங்கள் அடியோடு கொலை செய்து விட்டீர்கள். எங்கே அவ்வாறு செய்ய உங்களுக்கு ஆற்றல் இல்லையோ அந்த நாடுகள் மட்டுமேதான், அந்த தேசந்தான் இன்றும் உயிருடன் இருக்கிறது. ஆனால் பாரதம் ஒரு போதும் அவ்வாறு செய்யவில்லை. ஆரியர்கள் என்று நீங்கள் வர்ணிக்கும் ஹிந்துக்களாகிய நாங்கள் அன்பும், தாராள மனப்பான்மையும் வாய்ந்திருந்தவர்கள். எங்கள் முன்னோர்களது உள்ளங்கள் கடலைப் போலப் பரந்தும் எல்லையில்லாமலும் இருந்தன. அவர்களது மூளைகள் மனித வரம்புக்கு மீறி மேதா விலாசம் வாய்ந்திருந்தன. உலகத்தில் தோன்றி மறைகிற, வெளிப்பார்வைக்கு இன்பம் போலத் தோன்றுகிற ஆனால் உண்மையில் பார்த்தால் மிருகத்தனமான செயல்கள், அவர்களது உள்ளத்திலும் மூளையிலும் இடம் பெறவே இல்லை. தாமே வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும். தம்முடைய தரத்திற்கு, இல்லை, தம்மையும் விட உயர்ந்த நிலைக்கு எல்லோரையும் உயர்த்துவது ஹிந்துக்களின் நோக்கம். ஐரோப்பிய நாகரிகத்தின் பாதை வாள் ஆகும். ஹிந்துக்களின் பாதை வாழ்வு ஆகும். பிறரை வாழ வைப்பது ஆகும். மக்கள் சமூகத்தை உயர்த்த நாகரிக நிலைக்கு முன்னேறச் செய்யும் வர்ண விபாகம் ஆகும். ஒருவனது கல்விக்கும் பண்பாட்டுக்கும் தக்க அளவில் அவனை மேலும் மேலும் உயர்ந்து எழுந்து முன்னேற செய்கிறது இந்தப் பாகுபாட்டு அமைப்பு. ஐரோப்பாவில் எங்கு பார்த்தாலும் பலமுள்ளவனுக்கு வெற்றி, பலவீனனுக்குச் சாவு என்பது நிலை. பாரத பூமியில் சமூகச் சட்டம் ஒவ்வொன்றும் பலவீனனின் பாதுகாப்புக்காக ஏற்பட்டதாகும். தென்னகத்து சூத்திரர்கள் எல்லோருமே பூர்விக திராவிடர்கள் என்று அவர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியபின் சூத்திரர்கள் என்பதாக இழிவுபடுத்தப் பட்டார்கள் என்று ஒரு வாதம் ஐரோப்பிய அறிஞர்களால் பரப்பப்பட்டது. ஒரு சில ஆரியர்கள் வந்து குடியேறி லக்ஷக்கணக்கான திராவிடர்களை அடிமைப்படுத்தி அடக்கியாண்டார்கள் என்பது அந்தக் காலத்தில் நடக்கக்கூடிய ஒன்றா? அப்படி அடக்கி ஆண்டிருந்தால் அந்த அடிமைகள் அவர்களை ஐந்தே நிமிடங்களில் சட்னி செய்து சாப்பிட்டிருப்பார்கள்.

விவேகானந்தருக்கு பல ஆண்டுகள் முன்னதாகவே சுவாமி தயானந்த ஸரஸ்வதி ஆரிய – திராவிட இனவாதத்தை வேரறுக்கும் விதத்தில் வேத மந்திரங்களின் உண்மைப் பொருளை எடுத்துரைத்திருக்கிறார்.
விவேகானந்தருக்குப் பின்னாலும் அரவிந்தர் தமது ‘The secret of Veda’ என்ற நூலில் மிகவும் ஆணித்தரமாக ஆரிய – திராவிட இனவாதத்தை மறுத்திருக்கிறார்.
பின்னாளில் ஹிந்து மதத்தை முற்றிலுமாக வெறுத்து புத்தமதத்தைத் தழுவிய பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும் கடந்த கால நூல்களை எல்லாம் நேரடியாகப் படித்து ஆரிய – திராவிட இனவாதம் பேசுவோருக்கு சம்மட்டி அடி தந்திருக்கிறார்.
அவரது கருத்துக்களைக் காண்போமா?
1. வேதங்களில் ஆரிய இனம் என்பதாக ஒன்று எங்குமே குறிக்கப்படவேயில்லை . 2. ஆரிய இனத்தினர் பாரதத்தின் மீது படையெடுத்து வந்தார்கள் என்பதற்கோ, அவர்கள் பாரத நாட்டில் பூர்விகக் குடிமக்களாக வாழ்ந்து வந்த தாஸர்கள், தஸ்யுக்கள் ஆகியோரை வென்றதற்கோ எவ்வித அகச்சான்றும் வேதங்களில் இல்லை. 3. தாஸர்கள், தஸ்யுக்கள் என்பதாக வேதங்களில் குறிப்பிடப்படுவோர் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதற்கான அகச்சான்றுகளும் வேதங்களில் இல்லை. 4.ஆரியர்கள் தஸ்யுக்களின் தோலின் நிறத்தினில் வேறுபட்டிருந்தார்கள் என்பதற்கும் வேதங்களில் சான்றுகள் இல்லை. 5.பிராமணர்களும், தீண்டத்தகாதார் எனப்படுவோரும் ஒரே இனத்தவரே. பிராமணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டத்தகாதோர் எனப்படுவோரும் ஆரியர்களே. பிராமணர்கள் திராவிடர்கள் எனறால தீண்டத்தகாதோரும் திராவிடர்களே. (அம்பேத்கரின் உரைகளும் கட்டுரைகளும். தொகுதி -7 பக்கம் 85 மற்றும் 302-303)
$$$