திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம்

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை திமுக அரசு பின்பற்றாததால், ஹிந்து அமைப்புகள் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி போராடி வருகின்றன.

இந்நிலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை மற்றும் ஆண்டாள் பேரவை சார்பில் கிரிவலம்,  மாசி மகம்- பௌர்ணமியை ஒட்டி (மார்ச் 2ஆம் தேதி) மேற்கொள்ளப்பட்டது. இந்த கிரிவலத்தை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு கிரிவலம் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கையில் வேல் ஏந்தி கிரிவலம் மேற்கொண்டனர். கிரிவலத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் கிரிவலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ருத்ராட்சங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில்,  “திருப்பரங்குன்றம் மலையுச்சியில் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட, கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து முன்னணி போராடி வருகிறது” என்றார்.

பின்னர் பேசிய பாஜக மாநில ஆன்மிகப் பிரிவு தலைவர் ஷெல்வி  “முருக பக்தர்களின் கிரிவலம் விரைவில் தீபம் ஏற்றும் விழாவாக மாறும்” என்றார்.

தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், முருக பக்தர்களின் எழுச்சியே கிரிவலம் எனத் தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்நிழ்வில் கலந்து கொண்டார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் மேற்கொண்ட கிரிவலம் இரவிலும் தொடர்ந்தது. இரவு நேரத்திலும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கிரிவலம் சென்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

$$$

Leave a comment