சுவாமிஜி நமது தேசியத்தின் தன்மானம்

 -பிரணாப் முகர்ஜி

முன்னாள் ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி, ஆங்கில வார இதழான ‘THE WEEK’ பத்திரிகையில் 2012-இல் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

நமது வாழ்வெனும் ஆகாயத்தில் தோன்றிய பிரகாசமான நட்சத்திரம் போன்றவர் சுவாமி விவேகானந்தர். மனித குலத்திற்கே நம்பிக்கை தரும் சுடரொளி அவர்.

சுவாமிஜியின் 150-வது பிறந்த வருடத்தில் (*அச்சமயத்தில் எழுதிய கட்டுரை இது.) அந்தப் புகழ்ச்சுடரில் ஒளிரும் பாரதப் புதல்வனுக்கு மரியாதையும் நன்றியும் செலுத்த நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

சுவாமி விவேகானந்தர் பெரும் தேசபக்தர், சிந்தனையாளர், ஆன்மிகத் தலைவர், மனிதநேயர். மேலும் ஜீவாத்மாக்களைத் தட்டி எழுப்பியவர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்திலும், பாரதத்தின் பிற பகுதிகளிலும் கலாச்சார மறுமலர்ச்சி ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகித்தவர்.

சுவாமிஜியின் உரைகளும் எழுத்துகளும், காந்திஜி, நேருஜி, நேதாஜி, ராஜாஜி மற்றும் பலருக்கு ஊக்கத்தின் ஊற்றாக அமைந்திருந்தன. இந்தியாவின் வீழ்ச்சிக்கும் பின்தங்கிய நிலைமைக்கும், ஏழைகளை நிராகரித்ததும் அவர்களைச் சுரண்டியதுமே காரணம் என்று சுவாமிஜி சுட்டிக் காட்டினார். பெருவாரியான மக்களுக்காக, சமீப காலங்களில் பேசிய பல மதத்தலைவர்களில் சுவாமிஜி முன்னோடி. இந்தியாவில் ஏழைகளின் நிலைமையைப் பற்றிய தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் முயற்சித்தார்.

 “கோடானுகோடி மக்கள் பசியிலும் அறியாமையிலும் மூழ்கியிருக்கின்றனர்; அவர்களது செலவில் கல்வி பெற்று, அவர்களுக்காக ஒருசிறிதும் கவலையின்றி இருக்கும் ஒவ்வொருவனையும் நான் துரோகி என்பேன்” என்ற அவரது பெருமுழக்கம் பல இளைஞர்களை ஊக்குவித்து, சமூக சேவையை ஒரு வாழ்க்கை முறையாக மேற்கொள்ள வைத்தது.

1893-ல் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு சுவாமிஜி இந்தியா முழுவதும் சஞ்சரிக்கும் யோகியாகச் சில வருடங்கள் விளங்கினார்.

அந்தப் பயணங்களின்போது கோடிக் கணக்கான சாமானிய இந்தியர்களின் ஆதரவற்ற நிலைமை மற்றும் ஏழ்மையைக் கண்டு மிகவும் மனம் கலங்கினார். எனினும் ஏழ்மையிலும், அவர்களின் வாழ்வில் பண்டைய ஆன்மிகக் கலாச்சாரம் ஒரு மகத்தான சக்தியாக இருந்ததைக் கண்டார்.

இந்தியாவின் பின்தங்கிய நிலைமைக்கு, நாட்டின் வளங்களை உற்பத்தி செய்யும் பெருவாரியான மக்கள் நிராகரிக்கப்படுவதும் சுரண்டப்படுவதுமே உண்மையான காரணம் என்ற முடிவிற்கு சுவாமிஜி வந்தார்.

அம்மக்களின் பொருளாதார நிலைமை மேம்படுவதற்கு, நவீன விவசாய முறை, கிராமத் தொழில்கள் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்குக் கற்றுத் தருவது அவசியம் என்று அவர் கருதினார்.

பல நூற்றாண்டுகளாக  சுரண்டலுக்கும், சமூகச் சீரழிவிற்கும் உட்பட்டதால், மக்கள் சுயமதிப்பு, தன்னம்பிக்கை மற்றும் ஊக்கத்தை இழந்திருந்தனர். தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்ள அவர்களுக்குச் சக்தியூட்டும் சொற்கள் தேவைப்பட்டன. அதற்கு நம் தொன்மையான வேதாந்தம் உதவியது.

சுவாமிஜி சிகாகோ சர்வமத சபையில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். ஆங்கிலேயர்களின் அடிமைகளாக தாழ்ந்த நிலையில் இருந்த மக்களின் உயர்வு குறித்த ஆழ்ந்த கவலையுடன், ஒரு பாரதப் புதல்வராக அங்கு சென்றார்.

அந்த மேலைநாடுகளில் இந்தியாவைப் பற்றிய எண்ணங்கள் மாறும் விதமாக, இந்தியர்களின் தினசரி வாழ்க்கை முறையே எவ்வாறு சங்கிலித்தொடர் போன்ற உயர் சாஸ்திர உண்மைகளின் வழிவந்த பழமையான நாகரிக முறையை ஒட்டியுள்ளது என விளக்கினார்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமிஜி அமெரிக்காவில் ஒரு பெரிய சிந்தனைத் தாக்கத்தையே ஏற்படுத்தினார். கீழை நாட்டு ஆன்மிகத்தைப் பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்கள் இன்று மேலைநாடுகளில் காணப்படுவதற்கு மிகப் பெரிய காரணம் சுவாமி விவேகானந்தரே.

பல ஹிந்து, புத்த மதங்களின் ஆசிரியர்கள், குருமார்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு  மேலாக, விவேகானந்தரின் அடியொற்றியே அமெரிக்காவில் செயல்புரிந்து வருகின்றனர்.

இந்தியாவிலுள்ள சாதிப் பாகுபாடுகள் குறித்து சுவாமிஜி மிகுந்த மனவேதனை கொண்டார். அவர் எல்லா நாடுகளிலும், எல்லா சாதிகளிலும் இருந்த ஏழைகளிடம் மிக்க கருணை கொண்டிருந்தார். நம் நாட்டின் வீழ்ச்சிக்குப் பாமர மக்களைப் புறக்கணித்ததும் பெண்ணடிமைத்தனமும் காரணம் என்றார்.

இந்தியாவிற்குத் திரும்பி வந்த பிறகு மக்களிடம் குறிப்பாக, இளைஞர்களிடையே ஆன்மிக, தேசிய உணர்வுகளை விழித்தெழச் செய்து அவர்களிடம் தங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த பெருமையை உருவாக்க முயன்றார். படித்த மக்களிடையே பெருவாரியான கீழ்த்தட்டு மக்களின் நிலைமையை உயர்த்தக் கூறி, அவர்களைத் தங்கள் நாட்டு மக்களுக்காக உழைக்க ஊக்குவித்தார்.

மக்களிடையே லௌதீக மற்றும் ஆன்மிகக் கல்வியைப் பரப்ப வேண்டும் என்பதில் சுவாமிஜி தெளிவாக இருந்தார். அதற்கு வழி, ஏழையின் வீட்டு வாசலுக்கும் உயர்ந்த கருத்துகளைக் கொண்டு செல்லும் ஒரு ஸ்தாபனம் தேவை என்று உணர்ந்தார்.

இதுவே 1897-ல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் – மிஷன் உருவாகக் காரணமாயிருந்தது. அன்று முதல் ராமகிருஷ்ண மிஷன் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, நம் நாட்டுக்கு மிக உயர்ந்த வகையில் பலவித சேவைகளைப் புரிந்து வருகிறது.

அவை கல்வி, மருத்துவம் மற்றும் பலவித சமூக சேவைகளாக ஏழைகளுக்கும், வாய்ப்பு குறைந்தவர்களுக்கும் கிடைக்கச் செய்கிறது. நாடு முழுதும் பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றக் காலங்களில் மிஷனின் பங்களிப்பு அனைவரும் அறிந்தது.

சுவாமிஜியின் முக்கியமான கவலை, மனிதகுலத்தின் ஆன்மிக உயர்வு குறித்தே இருந்தது. மனிதர்களுக்குள் பல சக்திகள் மறைந்து கிடந்ததை அவர் கண்டார். அதனால் அவர், மதம், கல்வி, பணி ஆகிய மூன்றின் நோக்கமும் மனிதனிடம் மறைந்து கிடக்கும் சக்திகளை வெளிக்கொணர்வதே என்றார்.

ஒவ்வொருவரும் தங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேற, மறைந்துள்ள தத்தம் சக்திகளை வெளிக்கொணர உதவுவதே அவரது நோக்கம்.

சுவாமிஜியே கூறுகிறார்:  சமுதாயத்திலுள்ள எல்லோரும் சக்தி கொண்டவர்களல்லர். அவர்களுக்கு வெவ்வேறு உயர் லட்சியங்கள் தேவைப்படுகின்றன. எனவே எந்தவொரு லட்சியத்தையும் நிந்திக்க நமக்கு உரிமையில்லை.

சுவாமிஜி ஒட்டுமொத்த மனித சமுதாயமும் ஒருமைப்படும் ஒரு செய்தியைக் கூறினார்:

நீங்கள் வெளித்தோற்றத்திற்குள் ஆழ்ந்து சென்றால், நீங்கள் காண்பது ஒருமையே – கடவுளர்கள், மனிதர்கள், இனங்கள், உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழைகள் மற்றும் விலங்குகள் உட்பட யாராயினும் நாம் காண்பது ஒருமையே.

இதற்கு மேலும் ஆழமாக நோக்கினால் யாவுமே அந்த ஒன்றேயான தத்துவத்தின் பல்வேறு பரிமாணங்களே என்று காணலாம்; யார் இந்தப் பரம்பொருள் தத்துவத்தை அடைகிறாரோ, அவருக்கு அதன் பின் எந்த மயக்கமும், குழப்பமும் இல்லை.

சுவாமிஜியால் ஏற்பட்ட தாக்கம் பற்றி காந்திஜி கூறுவார்: நான் சுவாமிஜியின் கருத்துகளை முழுமையாகப் படித்துள்ளேன். அதன் பிறகு என் நாட்டின் மேல் எனக்கிருந்த அன்பு ஆயிரம் மடங்காகப் பெருகியது.

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த வருடத்தைக் கொண்டாடும் விதமாக, பிரதமர் தலைமையில் ஒரு தேசிய கமிட்டியும், நான் நிதிமந்திரியாக இருந்தபோது என் தலைமையில் ஒரு தேசிய செயலாக்க கமிட்டியும் ஏற்படுத்தப்பட்டன. இந்த கமிட்டிகளின் வழிகாட்டுதலில் ரூ. 200 கோடி செலவில் 20 விதமான செயல்திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்களில், சுவாமிஜியின் வாழ்வு மற்றும் உபதேசங்களைப் பல்வேறு மொழிகளில் புத்தக வெளியீடு மற்றும் மறுபதிப்பு செய்தல்; குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வழங்குதல்; சுவாமிஜி குறித்த ஒலி, ஒளித் தகடுகள் தயாரிப்பு மற்றும் விநியோகம்; தேசிய மற்றும் பிராந்திய தொலைக்காட்சிகளின் மூலம் சுவாமிஜியின் உபதேசங்களைப் பரப்புதல் ஆகியவை அடங்கும்.

சுவாமி விவேகானந்தரின் மத சகிப்புத்தன்மைக்குக் காணிக்கையாக, நான்கு வெவ்வேறு மதங்களின் நினைவுச் சின்னங்களான போதிமலர் கட்டடம் (பஞ்சாப்), பதேபுரி மசூதி (தில்லி), கூடல் மாணிக்கம் கோயில் (கேரளா) மற்றும் ராச்சோல் மதப்பள்ளி (கோவா) ஆகியவை இந்திய  தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

பிற சின்னங்களான பாட்னா சாஹிப் குருத்வாரா (பிகார்) மற்றும் தவாங் மடாலயம் (அருணாசலப் பிரதேசம்) ஆகியவையும் புதுப்பித்தலுக்கு எடுத்துக் கொள்ளப்படும். ராமகிருஷ்ண மிஷனுடன் தொடர்புள்ள பல நிறுவனங்களுக்கும் தங்கள் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

சிகாகோ சொற்பொழிவு நிகழ்ந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், சுவாமிஜி முழங்கிய அந்த இடம் குறிப்பேதுமின்றி, கவனிக்கப்படாமல் இருந்தது. சுவாமிஜியோடு தொடர்புடைய இந்த நகரத்திற்குச் செல்லும் ஆயிரக் கணக்கான இந்தியர்களுக்கும் மற்ற சுற்றுலாப் பயணிகளுக்கும், இது ஏமாற்றத்தை அளித்தது.

நான் ஜனவரி 2012-ல் சிகாகோவுக்குச் சென்றபோது இந்தப் புனிதமான இடத்தில் ஒரு பெயர்ப் பலகையைத் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்கு வாய்த்தது.

பிரணாப் முகர்ஜி

இந்திய அரசாங்கமும் சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு 1.5 மில்லியன் டாலர்களைக் கொடுத்து, சுவாமிஜி போற்றிய கருத்துகளில் ஏதேனும் ஒன்றை மேலும் நுணுக்கமாகப் பயில, ஒரு விவேகானந்த கல்விப்பீடம் நிறுவ உதவியுள்ளது. இது உலக அளவிலான கல்வியாளர்கள் பணிபுரியும் கேந்திரமாகத் திகழும்.

இதன்மூலம் சிகாகோ பல்கலைக்கழகம், எதிர்காலத்தில் சுவாமிஜியின் வாழ்வையும், வாக்கையும் மேலைநாடுகளில் எடுத்துக் கூறும் வகையில் செயல்படும்.

சுவாமி விவேகானந்த கல்விப்பீடத்திற்கு இரண்டு வருட காலங்களுக்கு ஒருவர் தலைமையேற்பார். சிகாகோ பல்கலைக் கழகமும் இந்திய ஆராய்ச்சி அறிஞர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

இத்துடன் சுவாமிஜியின் உரை நிகழ்ந்த அதே இடத்தில் அமைந்துள்ள சிகாகோ கலைக்கழகம் – Art Institute of Chicago அருங்காட்சியக மேம்பாட்டிற்கான விவேகானந்த நினைவு நிகழ்ச்சியை நடத்தும்.

இதன் மூலம் சிகாகோ கலைக்கழகம் நம் அரசுடன் இணைந்து அருங்காட்சியக நிர்வாகத்தில் பல நவீன முறைகளைக் கற்றுத் தரும்.

சுவாமிஜி, இனி வரும் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் மனிதர்களை எழுச்சி பெற ஊக்குவிக்கும் உருவமற்ற ஒலியாக நான் இருப்பேன் என உறுதி கூறியுள்ளார்.

நாம் அனைவரும் சுவாமிஜியின் குரலைக் கவனித்துக் கேட்டு, அவரது தீர்க்கதரிசனத்தின் ஒளியைத் தரிசிக்கும் பேறு பெறுவோமாக!

நன்றி: தி வீக்  (டிசம்பர்- 2012)
தமிழாக்கம்: எம்.பைரவ சுப்பிரமணியம்
நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (ஜனவரி -2014)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s