-இசைக்கவி ரமணன்
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் ‘மார்கழிப் பனித்துளி’ கவிதைகளை அவ்வப்போது எழுதி வருகிறார். அற்புதமான சந்தம், இனிய தாள லயத்துடன், அரும் பொருளுடன் அமைந்த இசைக்கவிதைகள் இவை. அவரது அனுமதியுடன் இக்கவிதைகள் இங்கே இடம் பெறுகின்றன...

1.
கோதையின் கண்ணன்
.
அன்புக் கண்ணன், ஆசைக் கண்ணன்…
இன்பக் கண்ணன், ஈசன் கண்ணன்…
உன்மத்தக் கண்ணன், ஊர்கள் கண்ணன்…
என் என் கண்ணன், ஏழையின் கண்ணன்
ஐம்புலன் தாண்டிய அமைதி கண்ணன்…
ஒன்றே கண்ணன், ஓமே கண்ணன்…
ஒளவைத் தமிழின் உன்னதம் கண்ணன்!
.
என்று நீங்கள் எத்தனைதான் புகழ்ந்தாலும்
ஏதும் மயங்கான் எதற்கும் இணங்கான்!
அன்றும் இன்றும் என்றென்றும்
ஆண்டாள் பாடிய அழகுக் கண்ணன்
என்னும் மொழிக்கே எந்தை இசைவான்!
இதயம் கசிவான், இன்னும் ஏங்குவான்…
ஏழைபோல் அவள்கவி இசையே வேண்டுவான்!
.
ராதை ஏங்கினாள்.. மீரா உருகினாள்…
கோதையோ அவனைக் கொள்ளை கொண்டொரு
பாதையைச் செந்தமிழ்ப் பாட்டால் காட்டினாள்!
வேதப் பொருளை வீதிக் கிறக்கினாள்!
மீதமி லாதவள் கொஞ்சித் தீர்த்த
போதைத் தமிழ்போல் புவியிலொன் றில்லையே!
கோதையால் செந்தமிழ்க் கொடிமிக உயர்ந்தது!
கோதையால் செருக்கு கெளரவம் கண்டது!
கோதையே மானிடக் கூத்தின் எல்லை!
கோதை இல்லையேல் கோமக னில்லையே!
.
$$$
2
சிவ தச வெண்பா
.
சிந்தை முழுதும் சிவனே உனைநிறைத்து
வந்தனை செய்வதே வாழ்வன்றோ! நந்திபோல்
சற்றும் இமைக்காமல் முற்றும் உனையேநான்
உற்றுப்பார்த் துய்யும் உயிர். 1
.
அம்மையும் அப்பனும் ஆன்றபெரும் தோழமையும்
இம்மையும் இன்னபிற வெல்லாம்நீ! எம்மானே!
என்குருவே! என்னுயிரே! என்னுயிருள் மின்னொளியே!
என்றும்நீ எல்லாம் எனக்கு. 2
.
வனத்துக்குள் தண்ணிழல் வானத்தில் மேகம்
மனத்துக்குள் மெளன மயல்நீ! கனத்துக்குள்
காற்று! கனவுகளில் நேற்றுநீ! நாளையெனும்
நாற்றுநீ! நீயே நலம். 3
.
பெண்ணுக் கிடம்தந்தாய் பெண்ணால் புகழடைந்தாய்
மண்ணால் உயர்ந்த மழையானாய்! எண்ணுக்குள்
நில்லாய்! எழுத்துக்குள் செல்லாய்! இசைக்குமிந்தப்
புல்லையும் காப்பாய் பொசிந்து. 4
.
சிவமிருக்கும் சித்தமிது செந்தமிழின் கொற்றம்
தவம்கொழிக்கும் முற்றமிது தாணூ! உவமை
முழுத்தோல்வி காணும் முழுமை அழகே!
தொழப்பிறந்தேன் உன்செவியே தோது! 5
.
கண்திறந்தால் வெட்டவெளி கண்ணயர்ந்தால் வெட்டவெளி
எண்ணத்தால் தொட்டவொளி என்கவிதை! கண்ணிரண்டும்
முட்டுமுளி யாயென்னை மோதி யுருவானேன்
வெட்டவெளி விட்டவொளி வீடு. 5
.
தமிழெதற்கு? உன்னைத் தழுவி மகிழ!
அமிழ்து? தமிழ்கேட்டு நாண! இமையெதற்கு?
மூடித் திறந்துன்னை முற்றும் பருகுதற்கு!
பாடிக் கறக்கப் பரம்! 6
.
உனைப்பார்த்த கண்கள் உலகத்தைப் பார்க்கா
துனைப்பாடும் வாய்வே றுரைக்கா – துனக்கென்று
வேர்த்தவுயிர் வேறெதையும் வேட்டாது னக்கென்றே
நேர்ந்தபின் ஏது நிகழ்வு? 7
.
உருகிய உள்ளம் உறிவிழியில் விம்மிப்
பெருகிப் பெருந்தலையில் பெய்யும் – அருவியல்லால்
ஆரா தனையென் றடிமை யெதுசெய்வேன்?
பாரா திருக்காதே பார்! 8
.
ஒருசிரம் தாழ்த்தி இருகரம் கூப்பித்
திருநாமம் கோடி பிலிற்றி – வருவினை
செல்வினை யாவையும் செல்லாமற் செய்தவொரு
நல்லவனைக் கண்டுகொண்டேன் நான். 9
.
நான்தீர்ந்தேன்; நல்வாழ்வு வாழுகின்றேன்; நீங்களும்
தான்தீர்ந்து வாழத்தான் சாற்றுகின்றேன் – தேன்வளரும்
செம்மைச் சிவனையும் சித்தத்தில் நட்டுவைத்தால்
நம்மைத் தொழுவான் நமன். 10
.
$$$
3
ராதையின் கீதம்.
.பல்லவி.
ராதையாலே காதல் தன்னை
மாதவன் என நெய்ததோ!
மாதவன் குழல் கீதம் யாவும்
ராதெயென்றே பெய்ததோ!
(ராதையாலே)
.அனுபல்லவி.
பாதம் இரண்டும் பாரி ஜாதம்
பாதையோ அது காதல் வேதம்
போதையே இங்கு ஞான போதம்
போதும் போதும் ஏது மீதம்!
(ராதையாலே)
.சரணங்கள்.
மோகம் கொண்ட ராதை கண்கள்
மோகனங்கள் பாடுதே!
தாகம் கொண்ட மாயன் கால்கள்
தாளம் மறந்து ஆடுதே!
மேக நெஞ்சில் மின்னல் ஒன்று
நெளிந்து நுழைந்து கூடுதே!
ஒன்றை ஒன்று மிஞ்சிக் கொண்டு
தன்னைத் தந்து தீருதே!
(ராதையாலே)
.
$$$