-திருநின்றவூர் ரவிகுமார்

திருவிளையாடல் திரைபடத்தில் பாலையாவின் நடிப்பில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பாடிய “ஒரு நாள் போதுமா?” என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சம்பவம் திருவிளையாடல் புராணத்தில் உள்ளது.
திருவிளையாடல் புராணத்தில் ஏமநாதன் என்ற வடநாட்டு பாடகன் மதுரை வந்து, ‘எனக்கிணையாக பாடக் கூடியவர் பாண்டிய நாட்டில் உண்டா? ‘ என சவால் விட்ட கதை உண்டு. பாண பத்திரர் சிவபெருமானிடத்தில் முறையிட, இறைவன் விறகு வெட்டி வேடத்தில் வந்து சாதாரி பண்பாட, அந்த இசை கேட்டு மயங்கிய ஏமநாதன் ‘விறகு வெட்டியே இவ்வளவு சிறப்பாக பாடும் மதுரையில் பாண பத்திரர் எத்தனை அற்புதமான பாடுவாரோ’ என்று எண்ணி இரவோடு இரவாக ஓடிவிட்டதாக புராணம் சொல்கிறது.
அதே போன்றதொரு சம்பவம் சியாமா சாஸ்திரிகள் வரலாற்றிலும் உண்டு.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் எனப்படும் நாகஜோதி ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், சத்குரு தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள் மூவருமே சோழ நாட்டுத் திருவாரூரில் பிறந்து வாழ்ந்தது அதிசய ஒற்றுமை தான் !
பொ.ஆ.1762 சித்திரை மாத கார்த்திகையில் பிறந்து வேங்கட சுப்ரமணியன் என பெயர் சூட்டப் பெற்றவர், செல்லமாக சாமா என்று அழைக்கப்பட்டு பின்னர் சியாமா சாஸ்திரிகள் ஆனார்.
ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரத்தில் குடியேறிய வட தேசத்து வடமாள் வகுப்பினர். பிரம்ம தேவர் ஸ்தாபித்த பங்காரு காமாட்சியை வழிவழியாக பூஜை செய்யும் உரிமை பெற்ற பரம்பரையினர் இவரது முன்னோர்!
அந்நியர் படையெடுப்பால் நமது ஆலயங்கள்,சிலைகள், விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். பங்காரு காமாட்சியுடன் தங்களை காப்பாற்றிக் கொள்ள செஞ்சி, உடையார்பாளையம், விஜயபுரம் முதலிய சமஸ்தானங்களுக்கு வந்து தங்கி பின் தஞ்சை சேர்ந்தனர் இவரது பெற்றோர். இரண்டாம் துளஜாஜி மன்னன் பங்காரு காமாட்சிக்கு கோவில் கட்டி, முறைப்படி பூஜை நடக்க உதவினான்.
பொப்பிலி கேசவய்யா என்ற பாடகர் பல இடங்களுக்கு சென்று அங்குள்ள பாடகர்களை வென்று, அவர்களுடைய தம்பூராவைப் பறித்து வந்து விடுவாராம். தஞ்சை வந்த அந்த கேசவய்யாவை எதிர்க்க சியாமா சாஸ்திரிகளை வேண்டினர்.
அவர் காமாட்சி முன் அமர்ந்து சிந்தாமணி ராகத்தில்,
“லோக ஜனனி! நாபை தயலேதா!நீ தாஸுடு காதா, ஸ்ரீ காஞ்சி விஹாரிணி கல்யாணி”
(உலகை ஈன்றவளே, என் மீது தயை இல்லையா ? நான் உன் தாசன் அல்லவா, காஞ்சியில் உறைபவளே, கல்யாணி….)
என முறையிட்டு பாடினார்! அம்பாள் கருணையால் வெற்றி பெற்றார் சியாமா சாஸ்திரிகள்.
கேசவையா சிம்ம நந்தன தாளத்தில் பல்லவி பாடினாராம். சாஸ்திரிகள் சரபநந்தன தாளத்தில் பல்லவி பாடிச் சென்றாராம்.
காமாட்சியை வழிபட்டு நாமும் அவள் கருணையை பெறுவோமாக !
$$$