-மகாகவி பாரதி
சூதாட்டத்தில் நாட்டை வைத்திழந்த தருமனிடம் அவனது சகோதரரை வைத்து ஆடினால், அதில் வென்றால் நாட்டை மீட்கலாம் என ஆசை வார்த்தை கூறுகிறான் துரியன். அது கண்டு அவையினர் மருகுகின்றனர். ஆனால், யாருக்கும் துரியனை எதிர்த்துப் பேசும் துணிவில்லை. பீமனும், விஜயனும் நகுலனும் வேதனையில் வாட, அவர்களின் பின்னவனான சகாதேவன் ஊமை போலிருந்தான்; ஏனெனில் அவன் பின்னாளில் நடக்கப் போவதை முன் உணர்ந்தவன் (ஜோதிட வல்லுநன்) என்கிறார் மகாகவி பாரதி. “சிங்க மைந்தை நாய்கள் - கொல்லுஞ் செய்தி காண” சகிக்காமல் அவையோர் தவிக்கின்றனர்...

இரண்டாம் பாகம்
2.1. அடிமைச் சருக்கம்
2.1.6. சகுனி சொல்வது
வேறு
‘செல்வம்முற் றிழந்துவிட்டாய்; – தருமா,
தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந்தாய்.
பல்வளம் நிறைபுவிக்கே – தருமன்
பார்த்திவன் என்பதினிப் பழங்கதைகாண்!
சொல்வதொர் பொருள்கேளாய்; – இன்னுஞ்
சூழ்ந்தொரு பணயம்வைத் தாடுதியேல்,
வெல்வதற் கிடமுண் டாம்; – ஆங்கவ்
வெற்றியி லனைத்தையும் மீட்டிடலாம். 18
‘எல்லா மிழந்த பின்னர் – நின்றன்
இளைஞரும் நீரும்மற் றெதிற்பிழைப்பீர்?
பொல்லா விளையாட்டில் – பிச்சை
புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளைஞர் – சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணயமென்றே;
சொல்லால் உளம் வருந்தேல்; – வைத்துத்
தோற்றதை மீட்’டென்று சகுனி சொன்னான். 19
வேறு
கருணனும் சிரித்தான்; – சபையோர்
கண்ணின் நீரு திர்த்தார்.
இருள் நிறைந்த நெஞ்சன் – களவே
இன்ப மென்று கொண்டான்,
அரவு யர்த்த வேந்தன் – உவகை
ஆர்த்தெழுந்து சொல்வான்;
‘பரவு நாட்டை யெல்லாம் -எதிரே
பணய மாக வைப்போம். 20
‘தம்பி மாரை வைத்தே – ஆடித்
தருமன் வென்று விட்டால்,
முன்பு மாமன் வென்ற – பொருளை
முழுதும் மீண்ட ளிப்போம்.
நம்பி வேலை செய்வோம்; – தருமா,
நாடி ழந்த பின்னர்,
அம்பி னொத்த விழியாள் – உங்கள்
ஐவருக்கு முரியாள் – 21
‘அவள் இகழ்ந்திடாளோ? – அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம்; – மேலே
களிநடக்கு’ கென்றான்.
இவள வான பின்னும் – இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்,
துவளும் நெஞ்சினாராய் – வதனம்
தொங்க வீற்றிருந்தார். 22
வீமன் மூச்சு விட்டான் – முழையில்
வெய்ய நாகம் போலே;
காம னொத்த பார்த்தன் – வதனக்
களைஇ ழந்து விட்டான்;
நேம மிக்க நகுலன், – ஐயோ!
நினைவயர்ந்து விட்டான்;
ஊமை போலிருந்தான் – பின்னோன்
உண்மை முற்றுணர்ந்தான். 23
கங்கை மைந்தனங்கே – நெஞ்சம்
கனலுறத்து டித்தான்;
பொங்கு வெஞ்சினத்தால் – அரசர்
புகை யுயிர்த்திருந்தார்;
அங்கம் நொந்து விட்டான், – விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் – கொல்லுஞ்
செய்தி காண லுற்றே. 24
$$$