-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
9. பல ஊர்ப் பிரயாணம்
திருப்பெருந்துறையினின்றும் புறப்பட்டது
பின்பு இக் கவிஞர்பெருமான் திருப்பெருந்துறையினின்றும் புறப்பட எண்ணிச் சுப்பிரமணிய தம்பிரானிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டார். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிதற்கு மனமில்லாதவராகி வருந்தினார்கள். பின்பு ஒருவாறு ஆறுதல் கூறி விடைபெற்று இவர் புறப்பட்டார்.
குன்றக்குடி சென்றது
அப்பொழுது இவரை அழைத்துவர வேண்டுமென்று குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத் தலைவரான ஸ்ரீ ஆறுமுக தேசிகர் அனுப்ப, அவ்வாதீனத்தில் முதற் குமாஸ்தாவாக இருந்தவரும் சிறந்த தமிழ்க் கல்விமானும் அருங்கலை விநோதருமாகிய அப்பாப்பிள்ளை யென்பவர் வந்து அழைத்தார். அவருடன் புறப்பட்ட இவர் இடையிலேயுள்ள அன்பர்களின் வேண்டுகோளின்படி அவ்வவ்விடங்களுக்குச் சென்றுவிட்டு குன்றக்குடி சென்றார். அங்கே ஆதீனத் தலைவர் இவரை வரவேற்று உபசரித்துச் சில தினங்கள் இருக்கும்படி செய்து தக்க ஸம்மானங்கள் வழங்கிப் பின்பு பல்லக்கு வைத்து அனுப்பினார். அக்காலத்தில் அவர் மீது இவர் இயற்றிய சில பாடல்கள் உண்டு. அவை இப்பொழுது கிடைக்கவில்லை.
குருபூசை மான்மியம்
அப்பால் இவர் வன்றொண்டச் செட்டியார், சத்திரம் அருணாசல செட்டியார், வெளிமுத்தி வைரவ ஐயா என்பவர்களால் அழைக்கப்பட்டு தேவகோட்டைக்குச் சென்று சிலநாள் இருந்து அங்கேயுள்ள கனவான்களால் உபசரிக்கப் பெற்றார். பிறகு காரைக்குடி சென்று அங்கே அறுபத்து மூவர் குருபூசை மடத்தில் தங்கினார். அங்கே சில தினம் இருந்தபொழுது குரு பூசையின் பெருமையைப் புலப்படுத்திச் சில செய்யுட்கள் இயற்றித் தர வேண்டுமென்று அங்கேயிருந்த மெ.பெரி.ராம.மெய்யப்ப செட்டியா ரென்பவர் கேட்டுக்கொள்ளவே, குருபூசை மான்மியமென்ற ஒரு நூல் விரைவில் இயற்றி இவரால் அளிக்கப்பெற்றது. அது பதினைந்து செய்யுட்களையுடையது; அச்சிடப்பெற்று வழங்குகின்றது. மெய்யப்ப செட்டியார் கேட்டுக்கொண்டதையும் உடனே விரைவில் யாதொரு தடையுமின்றி இவர் இயற்றியளித்ததையும் உடனிருந்து பார்த்தவராகிய காரைக்குடி சொக்கலிங்கையா அடிக்கடி சொல்லிப் பாராட்டிக்கொண்டேயிருப்பார். அம் மான்மியத்திலுள்ள முக்கியமான செய்யுட்கள் வருமாறு:
(விருத்தம்) “கருதுமொரு மலமுமிரு வினையுமும்மா யையுமகலக் கழற்றி நாளும் ஒருவரிய சிவபோகச் செழுந்தேறல் வாய்மடுப்பான் உள்ளங் கொண்டாம் பருமணிமா ளிகைக்காரைக் குடிவயங்கப் பொலியுமறு பத்து மூவர் திருமடத்தில் வீற்றிருக்கு மனுகூல மழகளிற்றைச் சிந்திப் பாமால்.” “அருவாகி யுருவாகி யருவுருவ மாகியிவைக் கப்பா லாய திருவாகி யநாதிமுத்தத் திரமாகி யானந்தத் திரட்சி யாகிக் கருவாகிக் கண்ணாகிக் கண்ணுண்மணி யாகியுயிர்க் கணங்கட் கெல்லாம் குருவாகி நிறைபரம சிவமொன்றே யனைத்துலகும் குறிக்கொ டேவாம்.” “அடியார்யார் அவர்பூசை செயும்விதமென் னெனவினவின் அறைவாங் கேண்மோ வடியார்வெண் ணீறணிவா ரதனொடுகண் மணிமாலை வயங்கப் பூண்பார் கடியார்சூற் படையானை யருட்குறிமுற் பலவினுட்க னியப்பூ சிப்பார் படியார்நந் தனம்புகுந்து மலர்பறித்துத் தொடுத்துதவும் பணிமேற் கொள்வார்.” “தளிபுகுந்து திருவலகுப் பணிபுரிவார் திருமெழுக்குச் சமையச் செய்வார் ஒளிகிளர்பல் விளக்கமைப்பார் மணங்கமழும் படிபுகைப்பார் உம்ப ராரும் தெளிவரிய தமிழ்மறைபல் காலும்பா ராட்டிடுவார் சிவபு ராணம் அளியமையச் சிரவணஞ்செய் பவரிவரெ லாம்பரமன் அடியா ராவார்.” “இன்னவடி யவர்வயிற்றுப் பசிதீர அனம்படைத்தல் இன்னன் மேனி மன்னவரு பிணியகல மருந்துதவல் குளிர்க்காடை வாங்கி நல்கல் சொன்னமுதல் யாதானும் வேண்டியவை மனமகிழ்ச்சி தூங்க நல்கல் நன்னரிடங் கொடுத்தலிவை முதற்பலவும் பூசையென நவில்வர் நல்லோர்.” “இந்தவித மடியவரைப் பூசித்த லெந்நாளும் இனிய தேனும் சந்தமிகு மரிபிரமா தியர்களெலா மேத்தெடுக்கும் தகைய ராய பந்தமிலோ ரறுபத்து மூவர்திரு நாள்வரவு பார்த்துச் செய்யின் மந்ததர முதனான்கு மொருவியருட் கலப்பினுறும் வாழ்க்கை கூடும்.” “நலமலிசெய் கையராய வறுபத்து மூவரா நாயன் மார்கள் வலமலிமா தேவனடி யடைந்தநாட் சிவநேய மாண்பி னார்க்கு நிலமலிவண் டிருவமுதுங் கறியமுதுஞ் சிற்றுணவும் நெய்யும் பாலும் தலமலிய நிறைத்தூட்டித் தொழுநர்பெறும் பேற்றினையார் சாற்ற வல்லார்.” “நாடியவத் தினத்திலமு தூட்டுசிறப் பொடுமவ்வந் நாயன் மார்க்குக் கூடியமட் டுஞ்சிறப்ப வபிடேக நிவேதனமுங் குலவச் செய்து நீடியவுற் சவமுநடத் திடுதலதி விசேடமென நிகழ்த்தா நிற்பர் பாடியபன் னூலுமுண ராசார வொழுக்கமிகு பண்பி னோரே.” “இந்தவிதம் பூசனைசெய் புண்ணியர்க ளெந்நாளும் இனிமை மேய சந்தமனை வியர்மக்கள் தவாதகடும் பினர்பலரும் தழுவ வாழ்ந்து கந்தமலர்க் கற்பகநா டாதியபல் போகமெலாம் களிப்பத் துய்த்துப் பந்தமினம் பரமசிவ னடிக்கலப்பாம் பெருவாழ்வும் பற்று வாரால்.”
குன்றைத் திரிபந்தாதிக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது
காரைக்குடியி லிருந்தபொழுது அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த தமிழ் வித்துவான்கள் வந்துவந்து இவரைப் பார்த்துத் தத்தம் கருத்துக்களை நிறைவேற்றிக்கொண்டு சென்றார்கள். அவர்களுள், மழவராயனேந்தலென்னும் ஊரினராகிய அஷ்டாவதானம் பாலசுப்பிரமணிய ஐயரென்பவர் இயற்றிய குன்றைத் திரிபந்தாதியைக் கேட்டு மகிழ்ந்து அவருடைய விருப்பத்தின்படியே இவர் ஒரு சிறப்புப் பாயிரம் அளித்தனர்; அது வருமாறு:
(நேரிசை ஆசிரியப்பா) *1 “திருமா மகளுஞ் சிறந்தவெண் டிங்களும் ஒருவா ரணமு முயரிரு நிதிகளும் கோட்டிள முலைநயங் காட்டர மகளிரும் வாட்டமற் றண்டர் கூட்டுணு மமுதமும் தருகவென் றிரப்பார் தரமுணர்ந் தன்னோர் இருகரங் கொளவெலா மீந்தகற் பகமும் வந்தா ருளத்துனு மாண்பொரு ளளிக்கும் சிந்தா மணியுஞ் செழுங்காம தேனுவும் இனையபல் வளனு மீன்றிடு முததி புனையுடை யாகப் பொருந்துபு பூமகள் வதனமா விலங்கு மழவையம் பதியான் புதனிவ னாமெனப் புலவர் குழாமும் பார்க்கவ னிவனெனப் பார்த்திபர் பலரும் தீர்க்கமா நவிலுந் திடத்தகல் வியினான் கயிலையங் கிரியிற் கண்ணுதன் முன்னாள் அயிலிலங் கியவே லரசினை யளித்தோன் பருப்பதம் பயந்த பசுங்கிளி நெடுநாள் விருப்பமுற் றணையு மெய்யுடை வேதியன் அட்டமூர்த் தம்பெற் றளவிலாப் பேதம் தட்டறக் காட்டுந் தகையே போல அட்டாவ தானியென் றானாப் பெயருறீஇ மட்டடங் காவவ தானம் புரிவோன் காரை நகர்க்கொரு கண்ணா னவன்பெரி யோரை வழிபடு முத்தம குணத்தான் மறையவர் குலசிகா மணிமறை யொழுக்கினும் திறனுடைச் சிதம்பர தீக்கிதர் புத்திரன் தோமிலாப் பால சுப்பிர மணிய நாமனெவ் வுலகும் நாட்டிய புகழான் ஆறம் புலிமுய லன்றிவிண் ணிடத்தில் வீறுட னிருக்கிலோர் விதநேர் தருமென ஆன்றோ ருரைசெயு மாறுமா முகத்தோன் தோன்றுகுன் றைக்குடித் தொன்னகர்ப் பாலதாத் திரிபந் தாதி செப்பினன் விரிகலை யுணர்ந்தோர் மிகவியப் புறவே."
அவர் தம்முடைய நண்பராகிய மகாலிங்கையரென்பவர் பிறந்த மழவராயனேந்தலென்னும் ஊரினராதலாலும் சிறந்த கல்விமானாதலாலும் அவரிடத்தில் இவருக்கு அன்பு அதிகமாக உண்டாயிற்று.
அதன்பின்பு முற்கூறிய பாலைவனம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்கங்கேயுள்ள ஜமீன்தார்களால் உபசரிக்கப்பெற்றுச் சில தினங்கள் இருந்தார். அங்ஙனம் சென்ற இடங்களில் தம்மை அன்புடன் ஆதரித்தவர்கள் திறத்தில் நன்றி பாராட்டி இவர் செய்த தனிப்பாடல்கள் பல உண்டு. அவை இப்பொழுது கிடைக்கவில்லை.
சிங்கவனம் சென்றது
இவருடைய மாணாக்கராகிய சுப்பு பாரதியாரையும் அவர் பரம்பரையினரையும் ஆதரித்து வந்த சிங்கவனம் ஜமீன்தார் அந்தப் பாரதியார் முதலியவர்களை அனுப்பி இவரை அழைத்துவரச் செய்து சில தினம் உபசாரத்துடன் வைத்திருந்து சம்பாஷணை செய்து இன்புற்றார். அந்த ஜமீன்தாருடைய நற்குண நற்செய்கைகளையும் அவருக்குத் தமிழில் இருந்த ஈடுபாட்டையும் அறிந்து மகிழ்ந்து அவர்மீது இவர் செய்த பாடல்கள் வருமாறு:
(விருத்தம்) (1) "பூமேவு சிங்கவனம் புகுந்தனமப் பெயராய பொருண்மை தேர்ந்தேம் பாமேவு புருடசிங்கம் ராசசிங்கங் கல்விநலம் பயின்ற சிங்கம் மாமேவு மகராச மெய்க்கங்கோ பாலனெனும் வள்ளற் சிங்கம் தாமேவும் படிகண்டோ மதனாலிப் பெயரென்றும் தக்க தாமே." (2) "குணங்கொள் செவ்வாய் விசயரகு நாதமக ராசமெய்க்கங் கோபா லப்பேர் மணங்கொண்மகா புருடனிரம் பியதிருவும் பெருங்கல்வி மாண்புஞ் சேர்ந்தே இணங்குதிறத் தினனிதனால் யாவோரும் வியப்புறுவார் இயல்செந் நாவார் அணங்கிருவே *2 றுலகத்தி யற்கையெனற் கிரங்கானாய் அன்புற் றானே."
புதுக்கோட்டை சென்றது
அப்பால் வழியிலுள்ள ஊர்களிற் பல கனவான்களால் உபசரிக்கப்பட்டுத் திருவாவடுதுறையை நோக்கி வருகையில் புதுக்கோட்டையைச் சார்ந்த திருக்கோகர்ணம் சென்று அந்த ஸமஸ்தான வித்துவானான கணபதி கவிராயர் வீட்டில் தங்கினார்.
இவர் வரவைக் கேள்வியுற்ற புதுக்கோட்டையிலுள்ள தமிழபிமானிகள் பலர் வந்து வந்து விசாரித்துவிட்டுச் சம்பாஷித்து வேண்டியவற்றை அப்பொழுது அப்பொழுது அளித்து வந்ததன்றிச் சிலதினம் இருந்து செல்லும்படிக்கும் கேட்டுக்கொண்டார்கள்.
புதுக்கோட்டை மன்னராகிய கெளரவம் பொருந்திய இராமசந்திர தொண்டைமானவர்களுடைய மூத்த தேவியாரான ஸ்ரீ பிரகதம்பா பாய் சாகேபவர்கள் அங்கே இவர் வந்திருத்தலைக் கேள்வியுற்றுத் தக்கவர்களை அனுப்பி இவரை அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து நாடோறும் பல அரிய விஷயங்களைக் கேட்டார்கள். தேவாரங்கள் சிலவற்றிற்கும் பெரிய புராணத்திலுள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் பொருள் கேட்டு அறிந்து தக்க ஸம்மானங்கள் பல செய்வித்து இவருடைய பூஜைக்கு வேண்டிய பாத்திரங்களை வெள்ளியினாலே செய்வித்து அளித்தார்கள்.
பின்பு இவர் புதுக்கோட்டையிலேயே ஒரு மாதம் இருந்தார். அப்பொழுது சிறந்த உணவுப்பொருள்கள் இவருக்கு அரண்மனை உக்கிராணத்திலிருந்து நாள்தோறும் அனுப்பும்படி திட்டம் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது பாய் சாகேப் அவர்களுடைய அன்புடைமையைப் பாராட்டி இவர் ஐந்து பாடல்கள் இயற்றினார். அவை கிடைக்கவில்லை. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளை முதலிய அன்பர்கள் இவர் புதுக்கோட்டைக்கு வந்திருப்பதைக் கேள்வியுற்று இவரைப் பட்டீச்சுரத்துக்கு அழைத்துச் செல்வதற்கு அங்கே வந்து இவருடன் சில தினம் இருந்தார்கள்.
திருவரன்குளப் புராணம்
புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளதான திருவரன்குளமென்னும் சிவஸ்தலத்து அபிமானிகளாகிய வல்லநாட்டுப் பெருங்குடி வணிகர் சிலர் வந்து இவரைப் பார்த்துப் பேசி மகிழ்ச்சியுற்றனர்; திருவரன்குளத்திற்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு போகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அங்ஙனமே இவர் அங்கே சென்று ஸ்ரீ ஹரதீர்த்தஸ்தலேசரையும் பெரிய நாயகியம்மையையும் தரிசனம் செய்தனர். அக்காலத்தில் அத் திருக்கோயில் அர்ச்சகர்களாகிய ஆதிசைவர்களும் தருமகர்த்தர்களாகிய மேற்கூறிய வணிகர்களும் அத்தலத்திற்கு ஒரு வடமொழிப் புராணம் இருப்பதைச் சொல்லி அதனை மொழிபெயர்த்துத் தமிழ்க் காப்பியமாகப் பாடித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அங்ஙனமே செய்வதாக இவர் வாக்களித்து வடமொழிப் புராணத்தை வாங்கிக்கொண்டு சென்றனர். புதுக்கோட்டைக்கு மீண்டு வந்த பின்பு அங்கேயே இருந்து அந் நூலிற் சில பாடல்களை இயற்றினர்; திருவாவடுதுறைக்கு வந்தபின்பும் சில செய்யுட்கள் இயற்றப்பெற்றன. *3 கடவுள் வாழ்த்து, ஆக்குவித்தோர் வரலாறு, அவையடக்கமென்பனவும் திருநாட்டுப் படலத்தில் பத்துப் பாடல்களுமே இவராற் செய்யப்பெற்றன. பின்பு அது பூர்த்திசெய்யப் பெறவில்லை. அதிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
(அவையடக்கம்) (விருத்தம்) “சுவைபடு கருப்பங் காட்டிற் றோன்றவீற் றிருந்து ளோனச் சுவைபடா வேப்பங் காட்டுந் தோன்றவீற் றிருத்த லாலே நவைபடாப் பெரியோர் சொற்ற நயக்குமின் பாட லோடு நவைபடு மடியேன் சொற்ற பாடலு நயந்து கொள்வான்.” [இத் தலவிருட்சம் வேம்பு.] “விட்புனன் முடிமேற் கொண்டு மேவினோர் குடங்கர் கொண்டு மட்புனன் முகந்தே யாட்டி வழுத்திட வுவப்பர் மேன்மேற் கட்புனல் பொழிந்து நால்வர் கரைந்தபா வேற்றார் கண்ணில் எட்புன லுந்தோற் றாவென் பாட்டுங்கேட் டினிது வப்பார்.” [ விட்புனல் - கங்கை . குடங்கர் - குடம். எட்புனல் - எள்ளளவு நீர்.] (நாட்டு வளம்) (கலிநிலைத் துறை) “முதிரு மாக்கனி பலபடு விடபமேன் முழங்கி அதிரும் வானரம் பாய்தர வாங்குதிர் கனியால் உதிரு நெற்பல வேனைநாட் டறுத்தடித் துறச்செய் பிதிரு றாதநெற் பொலியெனப் பிறங்குவ நாளும்.” [விடபம் - மரக்கொம்பு]
தியாகராச செட்டியாரைச் சந்தித்தது
அப்பால் அந்நகரிலிருந்து புறப்பட்டுத் தஞ்சை வழியாகக் கும்பகோணம் வந்து தியாகராச செட்டியார் வீட்டில் தங்கினார். அப்பொழுது திருப்பெருந்துறையிற் கிடைத்த ரூ. இரண்டாயிரமும் இடையிடையே சில ஜமீன்தார் முதலியவர்களால் கிடைத்த ரூ. இரண்டாயிரமும் ஆக ரூபாய் நாலாயிரமும் இவரிடம் இருப்பதை உடன் வந்தவர்களால் அறிந்த தியாகராச செட்டியார் இவரைப் பார்த்து, “இந்தத் தொகையை என்னிடம் கொடுத்தால் வட்டிக்குக் கொடுத்து விருத்திபண்ணி வட்டியை அவ்வப்பொழுது ஐயா அவர்களுடைய குடும்ப ஸெளகரியத்திற்காக அனுப்பிவருவேன். அந்த நாலாயிரமும் குடும்பத்துக்கு மூலதனமாக இருக்கும். உங்கள் கையிலிருந்தால் சில தினங்களிற் செலவழித்து விடுவீர்கள். இளமைப் பருவத்தில் நீங்கள் பணத்தின் அருமையை அறிந்ததுபோல இப்பொழுது அறிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு என்னைப்போலச் சொல்லுபவர்கள் ஒருவருமில்லை; நான் சொல்வதைக் கேட்க வேண்டும்” என்றார். அதற்கு இவர் சிறிதும் உடன்படவில்லை. இவர் இளமையில் வறுமையால் துன்புற்றதை அவர் விரிவாக அறிவித்துப் பல முறை வற்புறுத்தியும் இவர் கேட்கவில்லை.
அப்பொழுது பிள்ளையவர்களுடன் இருந்த சுப்பையா பண்டாரத்தைத் தியாகராச செட்டியார் பார்த்து, “நீரும் உடன்போய் வந்தீரா? யாராவது உம்மைத் தெரிந்து கொண்டார்களா?” என்று கேட்டார். அவர், “ஐயா அவர்களைக் கேட்டால் தெரியும்” எனவே, செட்டியார் பிள்ளையவர்களைப் பார்த்தனர்; இவர், “நான் சென்ற இடங்களில் பெரும்பான்மையானவர்கள் இவருக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர்; இவர் உடன் இருந்தது அவர்களுடன் பழகுவதற்கு எனக்கு அநுகூலமாக இருந்தது” என்றார். கேட்ட செட்டியார் வியப்புற்றார்.
பட்டீச்சுரம் சென்றது
பின்பு ஆறுமுகத்தா பிள்ளையினது வேண்டுகோளால் இவர் அங்கிருந்து பட்டீச்சுரம் சென்று சில தினம் இருந்தார். அங்கே இருந்த நாட்களுள் ஒருநாள் இரத்தினம் பிள்ளை சோழன் மாளிகைக்கு இவரை அழைத்துச் சென்று உபசரித்தனர். அவருடைய அன்புடைமையை நினைந்து இவர்,
(விருத்தம்) “சீர்பூத்த சிவபத்தி சிவனடியார் பத்திமிகு சீலம் வாய்மை கார்பூத்த கொடைமுதலா கியநலங்க ளொருங்குற்றுக் கவினு கின்ற பேர்பூத்த விரத்தினமொன் றினைச்சோழன் மாளிகையிற் பிறங்கக் கண்டேன் பார்பூத்த விதனுண்மை தனைநேரிற் கண்டுணர்வீர் பாவல் லோரே”
என்னும் செய்யுளை இயற்றினர்.
திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தது
சில தினங்களுக்கப்பால் இவர் பட்டீச்சுரத்திலிருந்து திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். வந்தவுடன் திருப்பெருந்துறை முதலிய இடங்களில் நிகழ்ந்தவற்றை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பிக்க அவர் கேட்டு மிகவும் சந்தோஷித்தார். புராணத்திலுள்ள சில பகுதிகளையும் சேக்கிழார் பிள்ளைத்தமிழையும் படிக்கச் சொல்லி மெல்லக் கேட்டுக் கேட்டுப் பிள்ளையவர்களுடைய பெருமையை உடனுடன் பாராட்டிக்கொண்டே வந்தார்.
கொண்டுவந்த தொகையில் அவசரமாகக் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்த்த பின்பு எஞ்சியதைத் தாமே வைத்துக் கொண்டு சில தினங்களில் சிறிதும் பாக்கியில்லாமல் தாராளமாக இவர் செலவழித்து விட்டனர்.
கஞ்சனூர்ச் சாமிநாதையர்
திருவாவடுதுறைக்கு வடமேற்கிலுள்ள கஞ்சனூரில் சாமிநாதையரென்ற ஒரு மிராசுதார் இருந்தனர். அவ்வூரிலுள்ள சில தமிழ்க் கல்விமான்களுடைய பழக்கத்தால் சில பிரபந்தங்களையும் நைடதம் திருவிளையாடல் முதலியவற்றையும் அவர் படித்தறிந்தார். இவரிடம் படிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இவர்பால் வந்து தம்முடைய விருப்பத்தைப் புலப்படுத்தி ஆங்கிரஸ வருஷந் தொடங்கிப் பாடங் கேட்டு வந்தார். அடிக்கடி இவரை மாணாக்கர்களுடன் தம்மூருக்கு அழைத்துச் சென்று விருந்து செய்வித்து அனுப்புவார்; சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர். அவரிடத்தில் இவருக்கும் விசேஷ அன்புண்டு. தம்முடைய தவசிப் பிள்ளைகளுள் ஒருவராகிய சாமிநாத செட்டியாரென்பவருக்கு வீடு கட்டுதற்கு விட்டம் முதலியவற்றிற்காக மரங்களை விலைக்கு வாங்கி அனுப்ப வேண்டுமென்று இவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அதன் தலைப்பில்,
(விருத்தம்) “திருவாத வூரர்முதற் சிறந்தவர்போற் சிவபத்திச் செல்வம் வாய்ந்து பெருவாய்மை கல்வியறி வொழுக்கத்தா லளவாத பெருமை மேவி வெருவாத வொப்புரவு முதலியநற் குணங்களெலாம் விட்டோர் போதும் ஒருவாத புகழ்ச்சாமி நாதமா மறையவனீ துவந்து காண்க” [ஓர்போதும் ஒருவாத - ஒருபோதும் நீங்காத.]
என்னும் பாடலை வரைந்தனுப்பினார்.
அவர் அதைப் பார்த்துவிட்டு உடனே ரூ. 200 மதிப்புள்ள மரங்களை வாங்கி அனுப்பினார். அவற்றின் விலையை இவர் கொடுக்கத் தொடங்குகையில் அவர் வேண்டாமென்று மறுத்து விட்டார். அம்மரங்களைக் கொண்டு வீடு கட்டப்பட்டு நிறைவேறியது; அவ்வீடு இன்றும் உள்ளது.
வீழிதாஸ நயினார்
ஒரு சமயம் திருவீழிமிழலையிலிருந்து வீழிதாஸ நயினாரென்னும் ஒரு பிரபு திருவாவடுதுறைக்கு வந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்தார். அவர் திருவீழிமிழலை ஆலயத்திற்குப் பெரும்பொருள் செலவிட்டுப் பலவகைத் திருப்பணிகளைச் செய்தவர். பிள்ளையவர்களைக் கொண்டு அத்தலத்துக்குப் புதிதாக ஒரு புராணம் இயற்றுவிக்க வேண்டுமென்பது அவருடைய விருப்பம், அதற்காக அத்தலத்திற்குரிய வடமொழிப் புராணத்தையும் பழைய தமிழ்ப்புராணத்தையும் கொணர்ந்திருந்தார். அவற்றை இக்கவிஞர் பெருமானிடம் கொடுத்துத் தம்முடைய விருப்பத்தை வெளியிட்டார். இவர் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டு அங்ஙனமே செய்வதாகக் கூறினார். ஆனாலும், இவருக்கு உண்டான தேக அஸெளக்கியத்தால் அது பாடுதற்குத் தொடங்கப்படவேயில்லை.
*4 மருதவாணர் பதிகம்
பவ வருஷத்தில் குமாரசாமித் தம்பிரானுக்குத் தேக அசெளகரியம் உண்டாயிற்று. ஆதீனத் தலைவருடைய கட்டளையின்படி திருவிடைமருதூர் சென்று கட்டளை மடத்தில் தங்கி அங்கேயுள்ள தக்க வைத்தியர்களிடம் மருந்து வாங்கி உட்கொண்டு வந்தார். அப்பொழுது அவரைப் பார்க்கச் சென்ற இவர் அவர் தேக நிலையையறிந்து வருத்தமுற்றார். அவர், “தினந்தோறும் நான் ஸ்தோத்திரம் பண்ணும்படி ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியின் மீது ஒரு பதிகம் இயற்றித்தரல் வேண்டும்” என்று விரும்பவே, இவர் ஒரு பதிகம் இயற்றினார். அது மருதவாணர் பதிகமென்று வழங்கும். அதை அவர் தினந்தோறும் பாராயணம் செய்து கொண்டு வந்தார்.
அப்பதிகத்திலுள்ள 1, 4, 9- ஆம் செய்யுட்களால் நோயை நீக்க வேண்டுமென்று விண்ணப்பித்திருத்தல் விளங்கும். சில தினத்தில் அவருக்குப் பிணி நீங்கிவிட்டது. அப்பால் அவர் திருவாவடுதுறைக்கு வந்து வழக்கம் போலவே பாடங் கேட்டு வந்தார்.
‘சூரியமூர்த்தி சாட்சி’
ஒருநாள் முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை சில உத்தியோகஸ்தர்களோடு மாயூரத்திலிருந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய தரிசனத்திற்கு வந்தார்; அவர்களுள் டிப்டி கலெக்டராக இருந்த சூரியமூர்த்தியா பிள்ளை யென்பவர் முக்கியமானவர். தேசிகருடைய குணங்களில் ஈடுபட்ட வேதநாயகம் பிள்ளை தாம் இயற்றிய சில புதிய பாடல்களைச் சொல்லிக் காட்டினர். அப்பொழுது மகிழ்ந்து இவர் சொல்லிய பாடல் வருமாறு :
(விருத்தம்) “மாமேவு புகழ்த்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய வள்ளற் கோமான் பாமேவு சந்நிதியிற் பாக்கள்பல செய்துடனே பயிலச் செய்தான் நாமேவு வேதநா யகசுகுணன் சான்றெவரோ நவில்க வென்னிற் கோமேவு பலர்புகழ்சூ ரியமூர்த்திச் செம்மலிது குறிக்கொள் வீரே.”
ஏதாவது ஓர் உண்மையைக் கூறும்பொழுது ‘சூரியன் சாட்சி’ எனச் சொல்லும் உலக வழக்கைக் குறிப்பாக அமைத்து இவர் பாடிய இச் செய்யுளைக்கேட்ட எல்லாருடைய செவிகளும் குளிர்ந்தன.
ஷஷ்டியப்த பூர்த்தி
இவருக்கு அப்போது பிராயம் 60 ஆகிவிட்டமையால் அதனை யறிந்த சுப்பிரமணிய தேசிகர் அக்காலத்தில் இவருக்கு நடத்த வேண்டிய ஷஷ்டியப்த பூர்த்தி யென்னும் விசேஷத்தைப் பங்குனி மாதத்தில் மடத்துச் செலவிலிருந்தே மிகவும் சிறப்பாக நடத்துவித்தார்.
அம்பர் சென்றது
அம்பர்ப்புராணம் பூர்த்தியாகியும் அரங்கேற்றப்படாமல் இருந்ததையறிந்த சுப்பிரமணிய தேசிகர் அப்புராணத்தை ஆக்குவித்தோராகிய அம்பர் *5 வேலாயுதம் பிள்ளை யென்பவருக்கு அந் நூலை விரைவில் அரங்கேற்றுவித்தல் உத்தமமென்று ஒரு திருமுகம் அனுப்பினார். அவர் அதனைச் சிரமேற்கொண்டு விஷயத்தைப் படித்தறிந்து உடனே திருவாவடுதுறைக்கு வந்து தேசிகரைத் தரிசனம் செய்துவிட்டுப் பரிவாரங்களுடன் இக்கவிநாயகரை அழைத்துக் கொண்டு சென்றார்; அங்கேயிருந்த சொர்க்கபுர ஆதீன மடத்தில் இவரைத் தங்கும்படி செய்து வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்து நாடோறும் சென்று ஸல்லாபம் செய்து வந்தனர்.
நான் அம்பருக்குச் சென்று இவரைப் பார்த்தது
முன்பு திருப்பெருந்துறையிலிருந்து இவரிடம் விடைபெற்றுப் பிரிந்த நான் விரைவிற் கொடுத்துத் தீர்க்க வேண்டிய கடனுக்காகப் பொருளீட்டும் பொருட்டுப் பெரும்புலியூர் (பெரம்பலூர்)த் தாலூகாவிலுள்ள காரையென்னும் ஊருக்குச் சென்று அங்கே உள்ள சின்னப்பண்ணைக் கிருஷ்ணஸாமி ரெட்டியாரென்பவர் முதலிய அன்பர்களின் விருப்பத்தின்படி திருவிளையாடற் புராணத்தைப் படித்துப் பொருள் சொல்லிக்கொண்டு வந்தேன். இடையிற் சில நாட்கள் ஓய்வு ஏற்பட்டமையால் இவரைப் பார்த்து வர வேண்டுமென்னும் அவாவோடு திருவாவடுதுறைக்கு வந்து இவர் புராணம் அரங்கேற்றுதற்கு அம்பர் சென்றிருப்பதைக் கேள்வியுற்று ஒருநாள் அங்கே சென்று பார்த்து ஆறுதலடைந்தேன்.
அன்று பிற்பகலில் திருக்கோயிற்குச் சென்று தரிசனம் செய்கையில் ஒவ்வொரு விசேடத்தையும் சொல்லி வந்தார்; ஒரு பஞ்ச காலத்திற் பொருளில்லாமல் வருத்தமுற்ற நந்தனென்னும் அரசனுக்கு நாள்தோறும் படிக்காசு அருளினமையால் அத்தல விநாயகருக்குப் படிக்காசுப் பிள்ளையாரென்னும் திருநாமம் அமைந்ததை எனக்கு விளங்கச் சொன்னதன்றி, அங்கே யிருந்த தீர்த்தத்தைக் காட்டி, “இதுதான், *6 ‘அன்னமாம் பொய்கை சூழ் அம்பரானை’ எனத் தேவாரத்திற் சொல்லப்பட்டுள்ள அன்னமாம் பொய்கை; அன்னவடிவங் கொண்ட பிரமதேவர் உண்டாக்கிய தீர்த்தம் இது” என்று கூறினார். சுவாமி எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைக் காட்டி, “இது கோச்செங்கட் சோழ நாயனாரால் திருப்பணி செய்யப்பெற்ற பெருமை வாய்ந்தது; இத்தலத்துத் *7 தேவாரங்களால் இது விளங்கும்” என்று சொன்னார்;
பின்னும், “இந்த ஊர் மிகப் பழைய நகரம். திவாகரத்தில், ‘ஒளவை பாடிய அம்பர்ச் சேந்தன்’ என்றதிற் கூறப்பட்டதும், ‘தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே, மண்ணாவ துஞ்சோழ மண்டலமே – பெண்ணாவாள், அம்பர்ச் சிலம்பி யரவிந்த மேமலராம், செம்பொற் சிலம்பே சிலம்பு’ என்ற தனிப்பாடலிற் சொல்லப்பட்டதும் இந்த அம்பரே” என்று அந்நகரத்தின் சிறப்பை விரித்துச் சொல்லி வந்தார்.
அப்போது சில நாட்கள் உடன் இருந்து இவரிடம் சில நூல்களைப் பாடங்கேட்டேன். இவர் குறிப்பிட்டபடி அங்கே இருந்த குழந்தைவேற்பிள்ளை யென்னும் கனவானுக்குத் திருவிடைமருதூருலாவைப் பாடஞ்சொன்னேன். அது முற்றுப்பெற்ற பின்பு இவரே சில நூல்களை அவருக்குப் பாடஞ் சொல்லி வந்தார்.
கொங்குராயநல்லூர் சென்றது
ஒருநாட் காலையிற் பக்கத்திலுள்ளதாகிய கொங்குராயநல்லூரில் இருந்த ஒரு வேளாளப் பிரபுவின் வீட்டிற்கு அவருடைய விருப்பத்தின்படி இவர் சென்றார். அப்பொழுது அவர் குமாரராகிய ஐயாக்கண்ணுப் பிள்ளைக்கு முத்துவடுகநாத தேசிகரென்னும் வித்துவான் தமிழ்ப்பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தார். அத் தேசிகர் இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரையில் இருந்த ஒரு பெரியாரிடம் முறையே பாடங்கேட்டுத் தேர்ந்தவர்; வடமொழியில் தர்க்க சாஸ்திரத்திலும் காவிய நாடகங்களிலும் நல்ல பயிற்சி யுடையவர்; நன்மதிப்புப் பெற்றவர்.
மேற்கூறிய பிரபு இவரைப் பார்த்துத் தம் குமாரரைப் பரீட்சிக்கும்படி கேட்டுக்கொண்டார்; “ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லப்பா” என்று இவர் வினாவினர். அவர் திருவிளையாடலில் திருநாட்டுச் சிறப்பின் முதற் பாடலாகிய,
(கலிநிலைத்துறை) “கறைநி றுத்திய கந்தரச் சுந்தரக் கடவுள் உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளொதுக்கி , மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோல் முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம்”
என்ற பாடலைச் சொன்னார். அதற்கு இவர் பொருள் கேட்டார். அவர் பதவுரை சொல்லிவிட்டு முதலிரண்டடிக்குப் பதசாரம் சொல்லிக்கொண்டு வருகையில், ‘வாளினாற் பகையிரு ளொதுக்கி’ என்பதற்கு, ‘கத்தியாகிய ஒளியினாற் பகையாகிய இருளை ஒட்டி’ என்று பொருள் சொல்லவே இவர் கேட்டு மகிழ்வுற்று, “இத்தகைய அரிய பொருள்களையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே காரணம். இந்த ஐயா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களை நீண்ட காலம் வைத்திருந்து உங்கள் குழந்தைக்கு நன்றாகக் கற்பிக்க வேண்டும்” என்று அந்தக் கனவானை நோக்கிக் கூறினார். பின்பு அவ்வூரின் பக்கத்திலேயிருந்த சொர்க்கபுர ஆதீனகர்த்தரிருக்கும் மடத்துக்குச் சென்று அங்கேயுள்ள குருமூர்த்தங்களைத் தரிசனம் செய்து கொண்டு அந்த மடத்தில் இருந்த ஏட்டுப் புத்தகங்களை யெல்லாம் ஒருநாள் சென்று பார்த்துவிட்டு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு தம்முடைய இருப்பிடத்திற்கு வந்துவிட்டார்.
அப்பால் முத்துவடுகநாத தேசிகர் இவரிடம் நாள்தோறும் பிற்பகலில் வந்து இலக்கணக் கொத்தைப் பாடம் கேட்டு முடித்தார். அம்பர்ப் புராணம் அரங்கேற்றி முடிந்த தினத்தில் அவர் இயற்றிய சிறப்புப்பாயிரத்துள்ள,
“சிவபெரு மாற்குச் சிறந்திடு பூசனை
நாடொறு மன்பால் நடத்திடு நல்லோன்
தொல்காப் பியமும் தொல்காப் பியமும்
பல்காற் கூர்ந்து பயின்றோ னின்றமிழ்
நூலுள் முழுதுணர் நுண்மாண் தேர்ச்சியன்
கோவையந் தாதி குலவுசீர்ப் புராணம்
பிள்ளைத் தமிழ்முதற் பிரபந் தம்முள
முழுது மியற்றிய மூதறி வாளன்.
இலக்கணக் கொத்தெனு மிருநூற் பொருளென்
கருத்துத் தெருட்டியென் கருத்தினுங் கண்ணினும்
நீங்கா தென்றும் நிகழ்புகழ்க் குன்றம்
.................. . .......... ......................
மாட்சியால் வாழ்மீ னாட்சி
சுந்தர னென்னுஞ் செந்தமிழ்க் கடலே”
என்னும் பகுதியால் இது விளங்கும்.
நான் மீண்டும் காரைக்குச் சென்றது
திருவிளையாடலைப் பூர்த்திசெய்ய வேண்டியவனாக இருந்தமையின், ”என்னை ஊருக்கு அனுப்ப வேண்டும்” என்று நான் கேட்டுக்கொண்டேன். பழக்கம் இல்லாமலிருந்தும் மேற்கூறிய கிருஷ்ணசாமி ரெட்டியாரென்பவருக்கு இவர் ஒரு பாடல் இயற்றித் தலைப்பில் அமைத்து, “திருவிளையாடற் புராணத்தை விரைவிற் பூர்த்தி செய்வித்துச் சாமிநாதையரை இங்கே அனுப்பினால் எனக்குத் திருப்தியாயிருக்கும்” என்று ஒரு கடிதம் எழுதுவித்துத் தந்தார். நான் விடைபெற்றுச் சென்று காரை சேர்ந்து அந்த ரெட்டியாரிடம் கடிதத்தைச் சேர்ப்பித்தேன். அவர், “நான் அறியாதவனாக இருந்தும் என்னையும் ஒரு பொருட்படுத்திப் பிள்ளையவர்கள் கடிதம் எழுதினார்களே; பாக்கியசாலியானேன்; இதற்குக் காரணம் உங்கள்பால் அவர்களுக்குள்ள அன்பே” என்று வியந்தனர்; கடிதத்திற் கண்டவாறே என்னை விரைவில் அனுப்ப அவர் முயன்று வருவாராயினர்.
அம்பர்ப்புராண அரங்கேற்றம்
நல்ல தினம் பார்த்து அம்பர்ப் புராணம் அரங்கேற்றத் தொடங்கப்பெற்றது. அதனை அறிந்து பல வித்துவான்களும் கனவான்களும் பல ஊர்களிலிருந்து வந்து நாள்தோறும் கேட்டு வருவாராயினர். பழைய மாணாக்கராகிய *8 சொக்கலிங்க முதலியாரென்பவர் அங்கே வந்து உடனிருந்து இவருக்கு ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்துச் செய்து வருவாராயினர். அரங்கேற்றம் நிறைவேறிய தினத்தன்று சிறப்புடன் புராணச் சுவடி ஊர்வலம் செய்யப்பெற்றது. பிள்ளையவர்களுக்கு வேலாயுதம் பிள்ளை தம்முடைய குடும்பத்தாருடன் சேர்ந்து தக்க ஸம்மானஞ் செய்தார். அப்போது உடனிருந்த மாணாக்கர்களும் பிறரும் வேலாயுதம் பிள்ளையையும் பிள்ளையவர்களையும் நூலையும் பாராட்டிச் சிறப்புக்கவிகள் இயற்றிப் படித்தார்கள்.
சிவராமலிங்கம் பிள்ளை
அன்றைத்தினத்தில் தற்செயலாக திருவனந்தபுரம் வலிய மேலெழுத்துச் சிவராமலிங்கம் பிள்ளை யென்பவர் சிவஸ்தல யாத்திரை செய்துகொண்டே அங்கே வந்து ஸ்வாமி தரிசனஞ் செய்துவிட்டு புராணப் பூர்த்தி விழாவையும் கண்டு மகிழ்ந்து இப்புலவர்திலகருக்குத் தம்மாலியன்ற ஸம்மானத்தைச் செய்து வேறு ஸ்தல தரிசனத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். *9 திருநணா வென்பது இன்ன பெயரால் வழங்குகின்றதென்பது அவருக்கு விளங்கவில்லை. அதனையும் சில தேவாரங்களுக்குப் பொருளையும் அவர் இவர்பால் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அம்பர்ப் புராணம் 15 – படலங்களையும் 1007 – செய்யுட்களையும் உடையது. சோமாசிமாற நாயனார் வரலாறும் கோச்செங்கட் சோழநாயனார் வரலாறும் இப்புராணத்தில் உள்ளன. அப்பகுதிகள் இவருக்கு நாயன்மார்கள்பாலுள்ள பேரன்பையும் சிறிய வரலாற்றையும் விரிவாக அமைத்துப்பாடும் வன்மையையும் புலப்படுத்தும். இந்நூலிலிருந்து சில செய்யுட்கள் வருமாறு:
(முருகக்கடவுள் துதி) (விருத்தம்) “வள்ளியபங் கயக்கிழவன் முடிகொடுத்த லொடுவணங்கி மற்றை வானோர் தெள்ளியபொன் முடிகொடுத்த புறச்சுவட்டுப் பொலிவினொடும் சிறிய நாயேம் கொள்ளியசூட் டலினெமது முடிகொடுத்த வகச்சுவடும் குலவக் கொள்ளும் ஒள்ளியகை காலொடம ரொருமுருகப் பெருமாளை உன்னி வாழ்வாம்.” (சேக்கிழார் துதி) “ஓங்கு சைவத் துயர்பரி பாடையும் வீங்கு பேரொளிப் பத்திசெய் மேன்மையும் தேங்கு பேறுந் தெரித்தருள் சேக்கிழான் பாங்கு சேர்மலர்ப் பாதம் பரசுவாம்.” (ஆக்குவித்தோர்) “சொற்கொண்ட திருவம்பர் நகர்புரக்குங் கோமான் தூயகங்கா குலன்மேழித் துவசன்மணக் குவளை கற்கொண்ட புயத்தணிவோ னிராமலிங்க வள்ளல் கனதவத்தில் வந்துதித்த வேளாளர் பெருமான் விற்கொண்ட புருவவய லார்பொல்லா னென்று விளம்புநல்லா னல்லொழுக்க முருக்கொண்டா லனையான் நற்கொண்டல் பொருங்கரத்தான் சைவசிகா மணிநன் னாவலர்கொண் டாடுவே லாயுதபூ பாலன்.” “பெருமையிற் பொலியு மம்பர்ப் பெருந்திருக் கோயின் மேய கருமையிற் பொலியுங் கண்டக் கடவுளர் திருப்பு ராணம் - அருமையிற் பாடு கென்ன வடமொழி யனைத்து மாராய்ந் தொருமையிற் பாட லுற்றேன் தமிழினா லுரைம றாதே.” (அவையடக்கம்) “செறிகுறி லுடையைந் தோடு குறிலிலா விரண்டுஞ் சேர்த்து மறிவினெட் டுயிரே யென்று மாத்திரை நோக்கிக் கொள்வார் அறியிய லுடைய பாவோ டியலிலா வடியேன் பாவும் குறியிலான் சரிதநோக்கிக் குறிகொள்பா வென்றே கொள்வார்.” (அம்பர் நகர்ச் சிறப்பு) (கொச்சகக் கலிப்பா) “பூமேவு தமிழரும்பும் பொதியவரைக் காலரும்பத் தேமேவு மாந்தருவிற் செய்யபசுந் தளிரரும்பும் காமேவு மகத்தூமங் கண்டுமுகி லெழுந்ததெனத் தாமேவு சிறைமஞ்ஞை நடமாடுந் தனியம்பர்.” (சோமாசிமாற நாயனார் யாகம் செய்ய எண்ணுதல்) “இகமொன்று களிப்படைய வீரிரண்டு சூழநடு முகமொன்று கொண்டபிரான் மொய்பனிகூர் வான்றடவும் நகமொன்று மங்கையொடு நண்ணியவி யுணாக்கொள்ள மகமொன்று செயல்குறித்தார் மாதவத்து மாறனார்.” (மாற நாயனார் வழிபடு படலம், 1, 20.) (பஞ்சகால வருணனை) (விருத்தம்) “மாறுவேண் டினரலர் மள்ளர் மாதவப் பேறுவேண் டினரலர் பெரிய ராடுதற் காறுவேண் டினரல ரந்த ணாளருண் சோறுவேண் டினர்பலர் துறையு ளார்களும்.” “ஒருவருண் டிடுபொழு தொருவ ரீர்ப்பர்மற் றிருவரு மீர்ப்பர்மிக் கிவர்க லாய்த்திட மருவரு மயலுளார் வந்து பற்றுவார் பெருகுவற் கடம்புரி பெற்றி யென்சொல்கேன்.” [வற்கடம் – பஞ்சகாலம்] (பஞ்ச நீக்கம்) ”உழவொலி யெழுந்தன வுறுசெய் யெங்கணும் , முழவொலி யெழுந்தன மொய்த்த வில்லெலாம் மழவொலி யெழுந்தன வானு நாணுற விழவொலி யெழுந்தன மேய கோயிலே.” (நந்தன் வழிபடு படலம், 116, 119, 138)
நைமிசாரணியப் படலத்தில் முதற்செய்புளும் இறுதிச் செய்யுளுமாகிய இரண்டும் அல்லாத 39 – செய்யுட்களிலும் சொல்லணிகளை இக்கவிஞர் கோமான் அமைத்திருக்கின்றனர். அவற்றில் அமைந்துள்ள அணிகள் வருமாறு:
திரிபு, யமகம், பாடகமடக்கு, தகரவருக்கச் செய்யுள், ஏகபாதம், கோமூத்திரி, கூட சதுக்கம், முரசபந்தம், அக்கரவருத்தனை, அக்கரசுதகம், சுழிகுளம், சருப்ப தோபத்திரம், மாலை மாற்று, காதைகரப்பு, கரந்துறை செய்யுள், மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், இரட்டைநாகபந்தம், அட்டநாகபந்தம், இரதபந்தம், கமலபந்தம், நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், பிறிதுபடு பாட்டு, திரிபங்கி, நிரோட்டகம், அநாசிகம், அகரவுயிரால் வந்த செய்யுள், ஆகாரவுயிரால் வந்த செய்யுள், இகர வுயிரால் வந்த செய்யுளென்பன.
அம்பர்ப் புராணம் அரங்கேற்றிய பின்பும் இவர் அம்பரிலேயே சிலதினம் இருந்தார்.
சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதிய விண்ணப்பம்
அங்கே இருக்கும் நாட்களுள் ஒருநாள் இவர் ஒரு ஸ்தல தரிசனத்திற்குச் சென்றிருந்தார். சென்றபொழுது அத்தல விசாரணைக் கர்த்தரும் ஓர் ஆதீனத் தலைவருமாகிய ஒருவர் இவரைச் சிறிதும் மதியாமலும், இவரை இன்னாரென்று அங்கே உள்ளவர்கள் எடுத்துச் சொல்லவும் கவனியாமலும் தம்முடைய பெருமைகளை மட்டுமே பாராட்டிக்கொண்டு இவரை மதியாமலே இருந்து விட்டார். அப்பால் ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு இவர் அம்பருக்கு வந்தார்.
விசாரணைக் கர்த்தரைக் கண்டு பேசி அளவளாவி வர வேண்டுமென்று எண்ணியிருந்த இவருக்கு அவருடைய இயல்பு வருத்தத்தை உண்டாக்கியது. ஓர் ஆதீன கர்த்தராக இருப்பவர் பிறரை மதியாமலும் வந்தவர்களை விசாரியாமலும் இருப்பதைப் பார்த்த இவருக்கு எல்லா விதத்திலும் உயர்ந்த நிலையில் இருந்து விளங்கும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய ஸௌலப்ய குணம் ஞாபகத்துக்கு வந்தது. எந்த வித்துவான் வந்தாலும் முகமலர்ந்து ஏற்றுப் பேசி ஆதரிக்கும் அவருடைய பெருந்தன்மை இவருடைய மனத்தை உருக்கியது. “நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்” என்பது உண்மையல்லவா?
உடனே இவர், அம்பர்ப்புராண அரங்கேற்றம் பூர்த்தியானதையும் விரைவில் வந்து தரிசனம் பண்ணிக் கொள்ள எண்ணியிருப்பதையும் புலப்படுத்தி ஒரு விண்ணப்பக் கடிதம் சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதி ஒருவர்வசம் அனுப்பினார். அதன் முதலில் இவர் எழுதுவித்த பாடல் வருமாறு:
(விருத்தம்) “ஒப்புயர்வில் லவன்சிவன்மூன் றும்முடைமை யாலிரண்டும் ஒன்று மேற்றோர் தப்பறத்தாழ்ந் தவரெனல்தேர்ந் தனந்திருவா வடுதுறைநற் றலத்துள் வார்தம் வைப்பனைய சுப்பிரம ணியகுரவன் றன்பெயரை வகித்து ளாரை எப்படியும் விலக்கலின்மற் றிவன்மூன்று மிலனென்றே இயம்பு வோமே.” [மூன்று - சிருஷ்டி முதலிய மூன்று தொழில்கள். மூன்றும் இலன்; மூன்று - ஒப்பு, உயர்வு, தாழ்வு]
இதனைக் கண்ணுற்ற சுப்பிரமணிய தேசிகர் பாடலின் பொருளையும் குறிப்பையும் அறிந்து, “இன்ன இடத்திற்குப் பிள்ளையவர்கள் போயிருந்தார்களோ?” என்று வந்தவரைக் கேட்டார். அதனை அவர் இவரிடம் வந்து சொல்ல இவர் கேட்டு, “ஸந்நிதானத்தின் பேரறிவை அடியேன் என்னவென்று பாராட்டுவது!” என்று சொல்லி மனமுருகித் திக்குநோக்கி அஞ்சலி செய்தார்.
திருவாவடுதுறைக்குத் திரும்பியது
அம்பர்ப்புராணம் அரங்கேற்றப் பெற்றபின் சில ஸ்தலங்களுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்து வரலாமென்று நினைத்திருந்தார். இவருக்கு ஒரு வகையான சரீரத்தளர்ச்சி ஏற்பட்டமையால் இவர் அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொண்டு திருவாவடுதுறைக்கே போய்ச்சேர எண்ணினார். வேலாயுதம் பிள்ளை முதலியவர்கள் தங்களுடைய பேரன்பையும் இவருடைய பிரிவால் உண்டான துயரத்தையும் புலப்படுத்தினார்கள். பின்னர் இவர் எல்லோரிடத்தும் விடைபெற்றுக்கொண்டு மாணாக்கர்களுடன் திருவாவடுதுறையை அடைந்தார்.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:1. பின்பு கிடைத்தமையால் இச்செய்யுள் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டிற் பதிப்பிக்கப் பெறவில்லை.
2. “இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு” (திருக்குறள்.)
3. மீ. பிரபந்தத்திரட்டு, 3370 – 3408.
4. மீ. பிரபந்தத்திரட்டு, 21 – 30.
5. இவர் பெயர் வேலுப்பிள்ளையெனவும் வழங்கும்.
6. திருநா. திருநாகைக்காரோணம்.
7. “அரிசிலம் பொருபுன லம்பர் மாநகர்க், குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே”, “ஐயகன் பொருபுன லம்பர்ச் செம்பியர், செய்யக ணிறைசெய்த கோயில் சேர்வரே”, “அங்கணி விழவம ரம்பர் மாநகர்ச், செங்கண லிறைசெய்த கோயில்8. இவர் பிற்காலத்தில் துறவியாகித் தொண்டர் சீர் பரவுவாரென்னும் நாமம் பூண்டு பலராலும் மதிக்கப்பெற்று விளங்கி வந்தார்.
9. திருநணா- பவானியென வழங்கும் ஸ்தலம்.
$$$