-ராஜாஜி
ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்து…

விவேகானந்தர் இந்தியாவில் இந்து மதத்தைப் பாதுகாத்தார். இக்காரணம் பற்றியே அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தார் போலும். பகவான் ராமகிருஷ்ணர் அவரை உருவாக்கினார்.
சுவாமி விவேகாந்தர் உலகப்புகழ் பெற்ற பின்னர் 1897 -ல் சிகாகோவிலிருந்து இந்தியாவுக்கு மீண்டபோது, சென்னை கடற்கரையிலிருந்த ‘காசில் கெர்னான்’ என்ற கட்டிடத்திலே சட்டம் படிக்கும் மாணவனாக வாழ்ந்து வந்தேன். அப்போது அவர் ‘காசில் கெர்னானில்’ தங்கினார். அன்று கழித்த அந்நாட்களை நினைக்கும்போது பெருமையும் ஆனந்தமும் எழுகின்றன. அப்போது ‘பிரபுத்த பாரதம்’ என்னும் பத்திரிகை தொடங்கப்பட்டது. சுவாமிஜியின் சொற்பொழிவுகளால் சென்னையில் ஓர் உணர்ச்சி பரவிற்று. இயேசுவைப் போல இந்துமதம் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தது.
இயேசு கிறிஸ்து, சங்கரர் போன்று சுவாமி விவேகானந்தரும் இளம் வயதிலேயே காலமானார். ஆனால், பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு அழிந்துபோகா வண்ணம் தமது பணியைப் பூர்த்தி செய்த பின்னரே விவேகானந்தர் மறைந்தார்.
சாதுவான மகரிஷிகளின் வழிவந்தவரல்ல விவேகானந்தர். பரசுராமர், விஸ்வாமித்திரர் ஆகியோரைப் போன்ற மகரிஷிகளின் வழிவந்தவர் விவேகானந்தர்.
அடிமைத்தனத்தின் மூலகாரணத்தை விவேகானந்தர் ஆராய்ந்தார். தர்மம் புதைக்கப்பட்டு விட்டது என்பதை அவர் கண்டறிந்தார். சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தைக் காப்பாற்றினார்; அவரில்லாவிட்டால் நாம் நமது மதத்தை இழந்திருப்போம்; சுதந்திரத்தைப் பெற்றிருக்க மாட்டோம். ஆகையால் நாம் சுவாமி விவேகானந்தருக்கு ஒவ்வொரு வகையிலும் கடமைப்பட்டிருக்கிறோம்.
சமீபகால வரலாற்றை நோக்குவோமாயின் நாம் எந்த அளவு சுவாமி விவேகானந்தருக்கு கடமைப்பட்டுள்ளோம் என்பது தெளிவாகத் தெரியும். இந்தியாவின் உண்மையான பெருஞ்சிறப்பைக் காண அவர் நமது கண்களைத் திறந்துவைத்தார். அரசியலை ஆன்மிகப்படுத்தினார். இந்தியாவின் சுதந்திரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகத்தின் தந்தை அவர். அவருடைய நம்பிக்கை, ஆற்றல், ஞானம் என்றும் நம்மைத் தூண்டி நடத்தட்டும். அவரிடமிருந்து பெற்ற செல்வக் குவியலை நாம் போற்றிப் பாதுகாப்போமாக.
(ராஜாஜியின் பாராட்டுரைகளின் தொகுப்பிலிருந்து) நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர் (தொ.ஆ: ஸ்ரீ. பெ.சு.மணி), வானதி பதிப்பகம்- 1974
$$$