பாஞ்சாலி சபதம்- 2.1.3

-மகாகவி பாரதி

முதல் பாக முடிவில், சூதில் பணையமாக நாட்டை  வைத்து ஆடுமாறு சகுனி கூறியதைக் கண்டித்து அவையில் விதுரன் ஒருவரே பேசினார். இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில், விதுரனுக்கு துரியன் ஆவேச மொழியில் பதில் அளிக்கிறான்.  “ஐவருக்கு நெஞ்சும் எங்கள்  அரண்மனைக்கு வயிறும்” வைத்து, தின்ற உப்பினுக்கே நாசம் தேடும் நன்றி கெட்ட விதுரன் என்று அமைச்சரான தனது தனது சிறிய தந்தையையே ஏசுகிறான் துரியன். அதைக் கண்டபோதேனும் தருமன் சூதை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் விதி வலியதாயிற்றே?

இரண்டாம் பாகம்

2.1. அடிமைச் சருக்கம்

2.1.3. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்

வேறு

அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
      அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான்.
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
      நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
      புருவ மாங்கு துடிக்கச் சினத்தின்
வெறி தலைக்க, மதிமழுங் கிப்போய்
      வேந்தன் இஃது விளம்புத லுற்றான்: 3

வேறு

‘நன்றி கெட்ட விதுரா, சிறிதும்
      நாண மற்ற விதுரா,
தின்ற உப்பினுக்கே நாசந்
      தேடுகின்ற விதுரா,
அன்று தொட்டு நீயும் எங்கள்
      அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான் எந்தை
      மதியை என்னு ரைப்பேன்! 4

‘ஐவருக்கு நெஞ்சும் எங்கள்
      அரண்மனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே, விதுரா,
      செய்து விட்ட தேயோ?
மெய்வகுப்பவன்போல், பொதுவாம்
      விதி உணர்ந்தவன்போல்,
ஐவர் பக்க நின்றே, – எங்கள்
      அழிவு தேடு கின்றாய். 5

மன்னர் சூழ்ந்த சபையில் – எங்கள்
      மாற்ற லார்க ளோடு
முன்னர் நாங்கள் பணையம் – வைத்தே
      முறையில் வெல்லு கின்றோம்.
என்ன குற்றங் கண்டாய்? – தருமம்
      யாருக் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமோ? – பல்லைக்
      காட்டி ஏய்க்கி றோமோ? 6

பொய்யு ரைத்து வாழ்வார், – இதழிற்
      புகழுரைத்து வாழ்வார்,
வைய மீதி லுள்ளார்; – அவர்தம்
      வழியில் வந்த துண்டோ?
செய்யொணாத செய்வார் – தம்மைச்
      சீருறுத்த நாடி,
ஐய, நீஎ ழுந்தால் – அறிஞர்
      அவல மெய்தி டாரோ? 7

அன்பிலாத பெண்ணுக்கு – இதமே
      ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணு வாளோ? – தருணம்
      மூண்ட போது கழிவாள்.
வன்புரைத்தல் வேண்டா, – எங்கள்
      வலிபொறுத்தல் வேண்டா,
இன்ப மெங்க ணுண்டோ, – அங்கே
      ஏகி’டென்று ரைத்தான். 8

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s