இந்தியாவை தலைமிர்ந்து நிற்கச் செய்தவர்

-ஜவஹர்லால் நேரு 

பாரதத்தின் முதல் பிரதமரான திரு.  ஜவஹர்லால் நேரு (1889- 1964), சுவாமி விவேகானந்தர் குறித்துக் கூறியவை…

சுவாமி விவேகானந்தர் எத்தனையோ விஷயங்கள் பற்றிக் கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய பேச்சிலும் எழுத்திலும், இடைவிடா மல் மீண்டும் மீண்டும் ஒரு பல்லவிபோல் ஒலிக் கும் ஒரு கருத்து  “அச்சம் தவிர்! பயப்படாதே! வலிமையோடு இரு!” என்பதுதான்.

அவருடைய கருத்தின்படி, ‘மனிதப்பிறவி என்பது பலவீனத்தில் உழன்றுகொண்டிருக்கும் ஒரு பாவ வாழ்க்கை இல்லை; மனிதன் என்பவன் இறைவனின் ஓர் அம்சம்- ஒரு கணிப்பொறி!’

இப்படியிருக்கும்போது, மனிதன் எதைப் பற்றியும் ஏன் கவலைப்பட வேண்டும்? எதற்காகக் கவலைப்பட வேண்டும்? “பாவம் என்ற ஒன்று உலகில் இருந்தால், அது பலவீனம் தான். பலவீனங்களைத் தவிர்த்து விடு, வலிமைதான் வாழ்க்கை; பலவீனமே மரணம். இது உபநிஷதங்களின் மகத்தான உபதேசம்!”

அச்சம் தான் எல்லாத் தீமைகளுக்கும் தாய், அச்சம் தான் அழுகையை உண்டாக்குகிறது; ஒப்பாரி வைக்கத் தூண்டுகிறது! அழுகையும் ஒப்பாரியும் போதும், போதும்; அதனால் ஏற்படும் நலிவும் மெழுகுத்தனமும் போதும், போதும்!

சுவாமி விவேகானந்தர் கூறுவதைக் கேளுங்கள்:

“இன்று நம் நாட்டிற்கு இரும்பு போன்ற தசைகளும், எஃகு போன்ற நரம்புகளும், எதனாலும் தடுக்க முடியாத வஜ்ராயுதம் போன்ற அளவற்ற மனவலிமையும் வாய்ந்தவர்களே இப்போது தேவை! இந்தப் பிரபஞ்சத்தின் அந்தரங்க ரகசியங்களையெல்லாம் ஊடுருவி ஆழ்ந்து அறியக் கூடிய மனவலிமை; ஆழ்ந்த கடலின் அடித்தளத்திற்குப் போக வேண்டியிருந்தாலும், மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிவந்தாலும், எடுத்த காரியத்தை எப்படியாகி லும் முடிக்கும் அஞ்சா நெஞ்சம்- இவையே நமக்கு இப்போது வேண்டும்.”

(Ref: Discovery of India)

விவேகானந்தரின் நூல்களைக் கட்டாயம் படியுங்கள்:

சுவாமி விவேகானந்தர் என்ன என்ன எழுதினாரோ, என்ன என்ன பேசினாரோ, அவை எல்லாவற்றையும் நான் ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன்.

நான் அவருடைய பேச்சுக்களையும் நூல்களையும் படிக்கும்போதெல்லாம் அவருடைய கருத்துக்களில் என்னையே மறந்துவிடுகிறேன். இந்த என்னுடைய நிலையைத் தான், அவருடைய நூல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் அடைவார்கள்.

“நீங்கள் ஒவ்வொருவரும் விவேகானந்தரின் நூல்களைக் கட்டாயம் படிக்க வேண்டும்” என்று, உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அவ்விதம் சுவாமி விவேகானந்தரின் நூல்களைப் படித்தபிறகு, அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பற்றி நீங்கள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவருடைய ஒவ்வொரு நூலையும், ஒவ்வோர் இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டும்.

விவேகானந்தர் பேசியதையும் எழுதியதையும் படிக்கும் நீங்கள், அதில் ஓர் அற்புதத்தைப் பார்ப்பீர்கள்: அவை அந்தக் காலத்துச் சூழ்நிலைக்கு ஏற்ப பேசப்பட்டிருந்தாலும் எழுதப்பட்டிருந்தாலும், அவை இன்றைக்கும் புத்தம் புதியதாகவே இருக்கின்றன. அதற்குக் காரணம், அவை வாழ்க்கையை மேலோட்டமாக நுனிப்புல் மேய்வதுபோல் பார்த்துச் சொல்லாமல், நம் இந்திய மக்களின், உலக மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளின் அடிப்படைகளை ஆராய்ந்து, அவற்றின் சிக்கல்களைத் தீர்க்கும் வழியைக் கூறியிருப்பது தான்.

சுவாமி விவேகானந்தர் எழுதியவை அனைத்தையும், நாம் ஆழ்ந்து படிக்க வேண்டும். அவற்றை நீங்கள் படித்தால் எல்லையற்ற வலிமை பெறுவீர்கள்.

அவர் மிகுந்த மனவலிமையுடன் எதிர்ப்புக்களைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார். உலகத்தின் முன்னால் அவர் இந்தியாவைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்தார். அவரால் நாம் வலிமை பெற்றோம்.

இந்திய விடுதலைப் போரில் விவேகானந்தரின் சிந்தனைகள்:

என்னுடைய கருத்தின்படி, இந்திய விடுதலைப் போருக்கு உரிய தேசியப் போராட்டத்தைத் துவக்கிய மாமனிதர்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர். அதோடு, அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தை விவேகானந்தருக்குப் பிறகு நாடு முழுவதும் பரப்பிய பலரும் அதற்கு உரிய வலிமையையும் வேகத்தையும் அவரிடமிருந்து தான் பெற்றார்கள்.

பெரும்பாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும், இன்றைய இந்தியா சுவாமி விவேகானந்தரால் தான் உருவாக்கப்பட்டது. அவருடைய முழக்கம், இந்தியாவின் இதயத்திலிருந்து எழுந்த முழக்கமாகும்.

அவர் அன்றைய இந்தியாவின் அடிமைத்தனம் ஆன்மிகச் சீரழிவு முதலிய அனைத்தையும் ஆண்மையோடு எதிர்த்துப் போரிட்டார்; எதிர்த்து வீர முழக்கம் செய்தார். இந்தியா தன்னுடைய வீரத்தையெல்லாம் இழந்து கோழையாக இருந்த சமயத்தில் இந்த நாடு ஆண்மை இழந்து சிதறிப் போயிருந்த சமயத்தில் அவர் இந்திய நாட்டிற்கு வீரத்தையும் ஆண்மையையும் ஊட்டினார்.

பெரிய ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்:

விவேகானந்தர், தான் வாழ்ந்த காலத்தில் இந்தியா வீரத்தையும், ஆண்மையையும் அடியோடு இழந்து பேடியாக நிற்பதைப் பார்த்தார். அதனால் அவர் இந்தியா முழுவதிற்கும் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் இருந்த ஒவ்வோர் இந்தியனின் நாடி நரம்பிற்கும் தன்னிடமிருந்து வலிமை என்ற ஆற்றலை வாரி வாரி வழங்கினார். அவ்விதம் அவர் வீசிய அந்த வலிமை வாய்ந்த அறிவுரைகள் நம் மக்கள் உள்ளத்தில் பதிந்து பெரிய ஒரு புரட்சியையே ஏற்படுத்தின.

நம்முடைய சிந்தனைகள் சுவாமி விவேகானந்தர், காந்திஜி ஆகியவர்களால் ஒளி பெற்றன. அந்த ஒளியால் தான் இந்தக் காலத்தில் நாம் கொஞ்சமாவது முன்னேற முடிந்தது.

இளைஞர்களின் லட்சிய மாமனிதர்:

ஜவஹர்லால் நேரு

நாம் ஒவ்வொருவரும் தனிமனிதன் என்ற நிலையிலும், நாடு என்ற நிலையிலும் மகத்தான வலிமை பெற்றவர்களாக விளங்க வேண்டும். அதனால் தான் அனைவரையும் அதிலும் முக்கியமாக இளைஞர்களை நான், “சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களுடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொள்கிறேன்.

யாராவது ஒருவர் என்னிடம் வந்து, “குழந்தைகள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? எந்த ஒரு பெரியவரை முன்னுதாரணமாக வைத்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்?” என்று கேட்டால், இந்தக் குழந்தைகள் கற்றுக்கொள் வதற்கு என்று நிறைய விஷயங்கள் இருக் கின்றன; அவர்கள் தாங்கள் முன்மாதிரியாக ஒருவரை வைத்து, தாங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும் வரலாற்றில் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் இளைய தலைமுறையினர் பின்பற்றிச் சிறந்த பயன் அடைவதற்கு உரிய ஒரே ஒருவராக, சுவாமி விவேகானந்தர் ஒருவரை மட்டும் தான் என்னால் காட்ட முடியும். அவரைத் தவிர, வேறு யாரையும் காட்டும் ஆற்றல் எனக்கு இல்லை.

நாம் சரியான பாதையில் நடக்க வேண்டும். நம் சிந்தனைகளை நாம் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நான் நீங்கள் பின்பற்றக்கூடிய லட்சிய மனிதராக குழந்தைகளும் இளவயதிலிருந்தே பின்பற்றக்கூடிய வீரராக என்னால் சுவாமி விவேகானந்தர் ஒருவரை மட்டும் தான் உங்கள் முன்பு நிறுத்த முடியும்.

சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களிலிருந்து, தங்களுக்குத் தேவையான எல்லா ஆற்றல்களையும் இளைய தலைமுறையினர் பெற முடியும்.

நம் நாட்டு மக்களை அதிலும் முக்கியமாக சிறுவர்களையும் இளைஞர்களையும் “விவேகானந்தரின் வாழ்க்கையை உங்களுக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளுங்கள்” கொள்ளுங்கள்” என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சுவாமி விவேகானந்தரிடமிருந்து பொங்கிப் பெருகும் அறிவாற்றல், உற்சாகம், ஆர்வம் ஆகியவற்றைப் பெற்றுப் பயனடையும் என்று நான் நம்புகிறேன்.

  • நன்றி: மீனாட்சி மலர்- 2010

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s