-ரா.கணபதி
அமரர் திரு. ரா.கணபதி, ஆன்மிக எழுத்தாளர்; காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்; மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உபதேசங்களை 7 பாகங்களாக, அற்புதக் கருவூலமாக ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலாகத் தொகுத்தவர்; ‘அறிவுக் கனலே அருட்புனலே’ (ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு), ’சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு’, ’காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பல ஆன்மிக நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்து இவர் எழுதிய இக்கட்டுரை, சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு (1963) விழாவை முன்னிட்டு, கல்கி வார இதழில் (மலர்- 22, இதழ்- 25) இடம்பெற்றதாகும்.

ஸ்வாமி விவேகானந்தர் இம்மண்ணில் தோன்றி நூறாண்டுகள் நிறைவுறும் (1963) புனிதநாளை நாடு நகரமெல்லாம் கொண்டாடுகிறது. பாரதத்தில் மட்டுமின்றி உலகெங்கிலும் அன்று மகானுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
புராதன வேதாந்த மதம் சிதிலமடைந்து, கிறிஸ்துவ மதமும் மேல்நாட்டு வாழ்முறைகளும் இங்கு வேர்விடத் தொடங்கிய சமயத்தில் அவர் தோன்றி வேதாந்த சமயத்தின் வித்தினை மீண்டும் ஊன்றியதற்காக, இந்திய நாடு அவரை நிறைந்த நன்றியுடன் வணங்குகிறது. உலகம் முழுவதற்கும் பொதுவானது நமது வேதாந்த மதம்; பாரதத்தின் அந்த பர தத்துவ ஞானத்தைப் பாருக்கெல்லாம் வழங்கியதற்காக உலகமே அவரிடம் நன்றிக்கடன் பட்டுள்ளது.
குடத்திலிட்ட விளக்காக இருந்த விவேகானந்தரை குன்றின்மீது ஏற்றி, உலகம் முழுவதும் அவரது பெருமையையும் பாரதத்தின் பெருமையையும் அறியச் செய்ததில் தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமான பங்குண்டு. ஸ்வாமிஜி அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் சகாயமளித்தது தமிழகம் தான். இதை எண்ணி நாம் தனிப்பட்ட பெருமிதம் கொள்ளலாம்.
சென்ற நூற்றாண்டில, கல்விக்குப் பெயர் பெற்ற வங்காளம் இந்து மதத்தை நீர்த்துவிடத் தயாராகி வந்தது. வங்காளத்தில் இந்து மதம் வீழ்ந்திருந்தால் அதனைப் பின்பற்றி தேசத்தின் இதர பகுதிகளிலும் நமது பண்டைய பண்பு அடிநாசமாகி இருக்கும். அந்தத் தருணத்தில் தான் ராமகிருஷ்ண முனிவர் அங்கு தோன்றினார். மின்சாரத் தேக்கம் போல் அவரிடம் புராதன ஞானம் உறைந்து விளங்கிற்று. இந்த மின்சாரத்தை தேக்கத்திலிருந்து எடுத்து உலகெங்கும் பரப்பும் பணிக்கே விவேகானந்த ஸ்வாமியின் புண்ணிய ஜனனம் நிகழ்ந்தது; இந்து மதமும் நிலைபெற்றது.
விவேகானந்தப் பெருந்தகையையும் ராமகிருஷ்ண பகவானையும் சிவசக்தியாகவும் நாராயணராகவும் நினைத்து வழிபடுபவர்கள் உண்டு. மகாகவி பாரதியார்,
ஆதி குரவன் அச் சங்கரன் ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும் நண்ணினானெனத் தேசுறும் அவ் விவே கானந்தப் பெருஞ்சோதி!
-என்று அவரை ஆதிசங்கரரின் அவதாரமாகப் போற்றுகிறார்.
இவ்வாறு அவதார புருஷராக மதிக்கப்பெற்ற விவேகானந்தரோவெனில், உருப்படைத்த பரமபுருஷன் அவதார புருஷனாக வருகிறான் என்ற கருத்துக்கும் மேலாக, ஜீவராசிகள் அனைத்துமே உருவும் பெயருமற்ற பரம்பொருள் என்ற உன்னத வேதாந்தத்தை அநுபவித்து போதித்தார்.
இப்படி வேதாந்த வேந்தனாக விளங்கி நமக்கு எண்ணத்தாலும் எட்டாத உயர்நிலைகளை அநுபவித்தவர் ஸ்வாமிகள். எனினும், நடைமுறை உலகில் வாழும் பாமரர்களுக்கும் அளப்பருங் கருணை காட்டியவர் அவர். ‘இந்திய மக்களுக்கு ஆன்மிகத்தை அளிப்பதற்கு முன் அன்னமளியுங்கள்’ என்று அறைகூவியவர் அவர். அதேபோல அன்புத் தத்துவத்தை நாளும் விண்டு கூறியபோதிலும், அந்த அன்பு ஆண்மைக்கு விரோதமானதல்ல என்று கூறி தேசத்தை வீறு கொண்டெழச் செய்த சிம்மம் அவர்.
கவிஞராக, கவியாக, இசைவல்லுநராக, பன்மொழிப் புலவராக, ஆண்டியாக, ஆண்மையின் உறைவிடமாக, அடியவராக, அறிவுப் பெட்டகமாக, அருட்செல்வராக – எல்லாமாக இருந்து உலகு உய்ய உபாயம் வகுத்த உத்தமருக்கு நம் அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறோம். அந்தத் தீர ஞானி தோன்றாத் துணையாக இருந்து நமக்கு அறிவும் உரமும் அளித்து அன்பு வழிப்படுத்த வேண்டும் என, மன, மொழி, மெய்களால் பிரார்த்திக்கிறோம்.
நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர், தொ.ஆ: பெ.சு.மணி, வானதி பதிப்பகம், சென்னை, 1974. (பக்கம்: 258, 259).
$$$