பாஞ்சாலி சபதம்- 1.1.8

-மகாகவி பாரதி

அழுக்காறால் புகைந்த மருகனுடன் நாட்டின் மன்னனும் அவனது தந்தையுமான திருதராஷ்டிரனிடம் செல்லும் சகுனி, தனது மைத்துனரின் மனதில் விஷம் விதைக்க முயல்கிறான். ஆனால், திருதராஷ்டிரன் தனது மகனைப் பார்த்து, “பாண்டவர் போன்ற அரும் சகோதாரர்கள் உடன் இருக்கையில் உனக்கு வேதனை ஏன்?” என்று கேட்டு எரியும் கொள்ளியில் நெய் வார்க்கிறார். அப்போது நாடு மன்னரின் கடமைகள் என்ன என்று சகுனி உரைப்பதாக இப்பாடல்களைப் புனைத்திருக்கிறார் மகாகவி பாரதி... 

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.18. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்

மற்றதன்பின்னர் இருவரும்-அரு
      மந்திரக் கேள்வி உடையவன்-பெருங்
கொற்றவர் கோன்திரித ராட்டிரன்-சபை
      கூடி வணங்கி இருந்தனர்;-அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான்-‘ஐய!
      ஆண்டகை நின்மகன் செய்திகேள்;-உடல்
வற்றித் துரும்பொத் திருக்கின்றான்;-உயிர்
      வாழ்வை முழுதும் வெறுக்கின்றான்.       58

‘உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின்
      உடுப்ப திகழ உடுக்கின்றான்,-பழ
நண்பர்க ளோடுற வெய்திடான்;-இள
      நாரியரைச் சிந்தை செய்திடான்;-பிள்ளை
கண்பசலை கொண்டு போயினான்;-இதன்
      காரணம் யாதென்று கேட்பையால்;-உயர்
திண்பரு மத்தடந் தோளினாய்!’-என்று
      தீய சகுனியும் செப்பினான்.       59

தந்தையும் இவ்வுரை கேட்டதால்-உளம்
      சாலவும் குன்றி வருந்தியே,-‘என்றன்
மைந்த!நினக்கு வருத்தமேன்?-இவன்
      வார்த்தையி லேதும் பொருளுண்டோ?-நினக்கு
எந்த விதத்துங் குறையுண்டோ;-நினை
      யாரும் எதிர்த்திடு வாருண்டோ?-நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம்-கணந்
      தேடிக் கொடுப்பவர் இல்லையோ?       60

‘இன்னமு தொத்த உணவுகள்,-அந்த
      இந்திரன் வெஃகுறும் ஆடைகள்,-பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர்,-வருந்
      துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள்,-மிக
நன்னலங் கொண்ட குடிபடை-இந்த
      நானில மெங்கும் பெரும்புகழ்-மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர்-இவை
      வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ?’       61

தந்தை வசனஞ் செவியுற்றே-கொடி
      சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமகன்
வெந்தழல் போலச் சினங்கொண்டே-தன்னை
      மீரிப் பலசொல் விளம்பினான்,-இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை-அந்த
      மாமன் மதித்துரை செய்குவான்;-‘ஐய;
சிந்தை வெதுப்பத்தி னாலிவன்-சொலும்
      சீற்ற மொழிகள் பொறுப்பையால்.       62

‘தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன்
      சந்நிதி யிற்சென்று சொல்லிட-முதல்
என்னைப் பனித்தனன்;யானிவன்-றனை
      இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்;-பிள்ளை
நன்னய மேசிந்தை செய்கின்றான்;-எனில்
      நன்கு மொழிவ தறிந்திலன்-நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ்
      செய்தி தெளிய உரைப்பரோ?       63

‘நீபெற்ற புத்திரனே யன்றோ?-மன்னர்
      நீதி யியல்பில் அறிகின்றான்-ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய-பந்தம்
      தேசு குறைய எரியுமோ?-செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்-மன்னர்
      சாத்திரத் தேமுதற் சூத்திரம்;-பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில்
      அன்னியர் செல்வம் மிகுதல்போல்?       64

‘வேள்வியில் அன்றந்தப் பாண்டவர்-நமை
      வேண்டுமட் டுங்குறை செய்தனர்;-ஒரு
கேள்வி யிலாதுன் மகன்றனைப்-பலர்
      கேலிசெய் தேநகைத் தார்,கண்டாய்! புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே-புகழ்
      ஆர்ந் திளை யோரது கொள்வதைப்-பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே-கய
      மக்களென் றெண்ணி நகைத்திட்டார்.       65

‘ஆயிரம் யானை வலிகொண்டான்-உந்தன்
      ஆண்டகை மைந்த னிவன்,கண்டாய்;-இந்த
மாயிரு ஞாலத் துயர்ந்ததாம்-மதி
      வான்குலத் திற்கு முதல்வனாம்;-ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினி-தன்னை
      நாடித் தொழுதிடுந் தன்மைபோல்,-அவர்
வேயிருந் தூதுமொர் கண்ணனை-அந்த
      வேள்வியில் சால உயர்த்தினார்.       66

‘ஐய!நின் மைந்தனுக் கில்லைகாண்-அவர்
      அர்க்கியம் முற்படத் தந்ததே;-இந்த
வையகத் தார்வியப் பெய்தவே,-புவி
      மன்னவர் சேர்ந்த சபைதனில்-மிக
நொய்யதொர் கண்ணனுக் காற்றினார்-மன்னர்
      நொந்து மனக்குன்றிப் போயினர்;-பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும்-உன்றன்
      சேயினை வைத்தனர் பாண்டவர்.       67

‘பாண்டவர் செல்வம் விழைகின்றான்;-புவிப்
      பாரத்தை வேண்டிக் குழைகின்றான்;-மிக
நீண்ட மகிதலம் முற்றிலும்-உங்கள்
      நேமி செலும்புகழ் கேட்கின்றான்;-குலம்
பூண்ட பெருமை கெடாதவா-றெண்ணிப்
      பொங்குகின் றான்நலம் வேட்கின்றான்,-மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ?-இல்லை
      யாமெனில் வையம் நகுமன்றோ?       68

நித்தங் கடலினிற் கொண்டுபோய்-நல்ல
      நீரை அளவின்றிக் கொட்டுமாம்-உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கையா-றது
      வீணிற் பொருளை யழிப்பதோ?-ஒரு
சத்த மிலாநடுக்காட்டினில்-புனல்
      தங்கிநிற் குங்குளம் ஒன்றுண்டாம்;-அது
வைத்ததன் நீரைப் பிறர்கொளா-வகை
      வாரடைப் பாசியில் மூடியே.       69

சூரிய வெப்பம் படாமலே-மரம்
      சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே-முடை
நீரினைநித்தலும் காக்குமாம்;-இந்த
      நீள்சுனை போல்வர் பலருண்டே?-எனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கே-நெறி
      ஆயிரம் நித்தம் புதியன-கண்டு
வாரிப் பழம்பொருள் ஏற்றுவார்;-இந்த
      வண்மையும் நீயறி யாததோ?’       70

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s