விவேகானந்த பரமஹம்சமூர்த்தி

-மகாகவி பாரதி

தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, பாரதத்தின் ஞான ஒளியாம் சுவாமி விவேகானந்தருக்குச் சூட்டிய அற்புதமான புகழாரம் இக்கட்டுரை.‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்- என்கிறார் இக்கட்டுரையில்...

ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம்.

சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்கோ எல்லையே கிடையாது.

கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகங்களையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் மிகவும் தெளிவாக, எல்லா மக்களும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய ஞானி விவேகானந்தரே ஆவார் என்று தோன்றுகிறது.

‘அமெரிக்காவிற்குச் சென்று ஹிந்து மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற மாத்திரத்தில், வேதசக்தியாகிய பாரசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அருள் புரிந்துவிட்டாள். அவர் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில், புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது; நவீன ஹிந்து தர்மத்தின் அக்கினி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.

‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாகரிகத்துக்கு லட்சிய பூமியாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஹிந்து தர்மம் தன வெற்றிக் கொடியை நிலைநாட்ட வேண்டும்’ என்று, இறைவனின் சங்கல்பம் இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தர் கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹிந்து தர்மத்தின் புதிய கிளர்ச்சிக்கு, ஹிந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலில் அங்கீகாரம் செய்த பிறகு தான் வங்கம், மகாராஷ்டிரம் போன்ற இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.

‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்.

ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில், நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்ம மதத்தைப் பற்றி, சப்த மேகங்கள் ஒன்றுகூடி மழை பொழிந்ததுபோல் சண்டமாருதமாகச் சொற்பொழிவு செய்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை வென்று வெற்றிவீரராக இந்தியாவிற்குத் திரும்பி வருவதற்கு, பாஸ்டன் என்ற துறைமுகத்தில் கப்பலில் ஏறினார்.

விவேகானந்தரின் சத்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் ஆகியவர்களே சமீபத்தில் தோன்றி மறைந்த மகான்கள்.

‘இவர்களில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர்?’ என்று வகுத்துக் கூறுவதற்கு – இது சமயம் இல்லை. அதற்கு நான் தகுதி உடையவனுமில்லை.

சுக்கிர கிரகத்திற்கும்  புதன் கிரகத்திற்கும் உள்ள உயர்வு – தாழ்வு பற்றிப் பேசுவதற்கு, பாறைக்குள் இருக்கும் ஒரு தேரைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?

சுயநலம், ஆசை, அச்சம் என்ற குணங்கள் நிறைந்த உலக மாயை என்ற பாறைக்குள் இருக்கும் தேரையாகிய நான் – ஞானம் என்ற ஆகாயத்தில் சர்வ சுதந்திரமாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் ஜோதி நட்சத்திரங்களாகிய விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கேசவசந்திரர் முதலானவர்களின் உயர்வு தாழ்வு பற்றி எப்படி வகுத்துச் சொல்ல முடியம்?

ஆனால் அந்தப் பாறையிலிருந்தும் ஒரு சிறிய பிளவின் மூலம், ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் ஒளியைப் பார்த்து மகிழும் தன்மை தேரைக்கும் இருக்கலாம் அல்லவா?

அதுபோல் எனக்குத் தெரிந்த வரையில் விவேகானந்தச் சுடரின் பெருமையைச் சிறிது பேசத் தொடங்குகிறேன்.

உண்மையான புருஷத்தன்மையும், வீரநெறியும் மனித வடிவம் எடுத்தது போல் அவதரித்தவர் விவேகானந்தர். அவருக்கு அவருடைய தாய் தந்தைகள், ‘வீரேஸ்வரன்’ – ‘நரேந்திரன்’ என்ற பெயர்கள் வைத்தது, மிகவும் பொருத்தமானது அல்லவா?

‘இந்த ஜகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்று மில்லை’ என்ற மகத்தான கொள்கையை, உலக மக்களுக்கு எடுத்துப் போதனை செய்வதற்கு வந்த இந்த மகான், ‘இந்த ஜகத்தில் தெய்வமே கிடையாது ‘ என்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார். ஆனால், இந்தக் கொள்கைச் சிறிது காலத்திற்குப் பிறகு அவரிடமிருந்து நீங்கிவிட்டது.

தட்சிணேஸ்வரம், கல்கத்தாவுக்கு வடக்கில் நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த தட்சிணேஸ்வரத்திற்கு நரேந்திரன் ஒரு நாள் சென்று, மகாஞானியைத் தரிசித்தார். அந்த ஞானி தான் புகழ் பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று சொல்ல வேண்டியதில்லை.

‘உலகிற்கெல்லாம் ஒரு புதிய ஒளி கொடுப்பதற்குப் பிறந்த மகான் இவர்!‘ அந்த ஞானியின் திருவுள்ளத்தில் தோன்றிவிட்டது.

அப்போது பரமஹம்சர் நரேந்திரருக்கு ஞான நெறி உணர்த்தினார். அதனால் பிரம்மத்தேனை நரேந்திரரை முற்றிலும் அருந்தி, பரஹம்சர் வெற்றிக்கொள்ளும்படி செய்துவிட்டார். அந்த மகா ஞானவெறி, நரேந்திரரைவிட்டு ஒருபோதும் நீங்கவில்லை.

பிரம்மக் கள்ளுண்டு, இந்த நரேந்திரப் பரதேசி பிதற்றிய வசனங்களே இனி, எந்நாளும் அழிவில்லாத தெய்வ வசனங்களாகப் பெருங்ஞானிகளால் போற்றப்பட்டு வருகின்றன. ஞானோபதேசம் பெற்ற காலம் முதல், நரேந்திரர் தனது பழைய இயல்புகளெல்லாம் மாறிப் புதிய ஒரு மனிதராகிவிட்டார்.

தாய்க்குக் குழந்தையின் மீது இருக்கும் அன்பைக் காட்டிலும், நரேந்திரர் மீது பரமஹம்சர் அதிக அன்பு செலுத்தினர்.

சுமார் ஆறு வருட காலம் நரேந்திரர், தன்னுடைய குருவுடன் செலவிட்டார். இந்த ஆறு வருடங்களில் தான் – உலகம் முழுவதையும் கலக்கத் தோன்றிய அற்புதப் பெரிய எண்ணங்கள் இவர் மனதில் உதித்து நிலைப் பெற்றன.

வேறு பல சாதாரண சந்நியாசிகளைப் போன்று சுவாமி விவேகானந்தர் பெண்களைக் குறித்து தாழ்வான – கெட்ட அபிப்பிராயங்கள் உடையவர் அல்லர்.

எல்லா ஜீவாத்மாக்களும் – முக்கியமாக எல்லா விதமான மனிதர்களும் – தெய்வங்களைப் போலவே கருதி நடத்துவதற்கு உரியவர்’ என்ற தன கொள்கையை, சுவாமி விவேகானந்தர் மிகவும் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

சுவாமி விவேகானந்தர் நம்முடைய நாட்டிற்கு விமோசனம் ஏற்பட வேண்டுமானால் – அதற்கு மூலாதாரமாக நம்முடைய பெண்களுக்கும் பரிபூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வானத்துப் பறவைகள் போல் சுதந்திரமாக இருப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும்,அவர்கள் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்றும், தங்களுக்கு வேண்டிய பொருளைத் தாங்களே உத்தியோகங்கள் செய்து தேடிக் கொள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும், ஆண்கள் தொழில் புரியும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொழில் புரிவதற்கு இடம் தர வேண்டும் என்றும், பெண்களை நாம் பொதுவாக பராசக்தியின் அவதாரங்கள் என்று கருத வேண்டும் என்றும் கருதினார் என்று தெளிவாகத் தெரிகிறது.

சுவாமி விவேகானந்தரின் கல்வி பெருமையும், அறிவுத் தெளிவும், தெய்வீகமான அன்பும், அவருடைய தைரியமும் மேருமலை போன்ற மனவலிமையும்,அவர் செய்திருக்கும் சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் இருப்பதைக் காட்டிலும் அவருடைய கடிதங்களில் ஒருவாறு அதிகமாகவே தெரிகின்றன என்று கூறுவது தவறாகாது.

நன்றி: ஸ்ரீ மீனாட்சி மலர் – 2010,  (பக்கம்: 88- 91).
தொ.ஆ: சுவாமி கமலாத்மானந்தர்  
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மதுரை வெளியீடு.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s