இலக்கிய தீபம்- 16

எஸ்.வையாபுரிப் பிள்ளை


16. முத்தொள்ளாயிரத்தின் காலம்

கவிச்சுவை நிரம்பிய தமிழ் நூல்களுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். இது புறத்திரட்டு ஆசிரியர் உபகரித்த தமிழ்ச் செல்வம். நூல் முழுவதும் கிடைக்கவில்லை. அழகுடைய செய்யுட்கள் எனப் புறத்திரட்டின் ஆசிரியர் கருதிய 109  செய்யுட்களே இப்போது நமக்கு அகப்படுவன. பழைய இலக்கண உரைகளில் ஒரு சில செய்யுட்கள் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்தன என்று கருத இடமுண்டு.

இந்த நூல் தோன்றிய காலத்தைக் குறித்துப் பலரும் பல வேறு கருத்துடையராயுள்ளார்கள். இதன் அருமை பெருமைகளை உணர்ந்து முதல் முதலில் அச்சிற் பதிப்பித்து வெளியிட்ட திரு. ரா.ராகவையங்கார் அவர்கள் ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று மட்டும் குறிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பெற்ற புறத்திரட்டில் சங்ககாலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்த சான்றோர் ஒருவரால் இயற்றப்பெற்ற நூல் என்று இது குறிக்கப்பட்டது. பின்னர் தமிழுணர்ச்சியும் கவிநயமும் நம் நாட்டில் மிகப் பெருகும்படிச் சொற்பொழிவுகள் ஆற்றி உழைத்து வருகிற என் நண்பர் திரு. டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் தாம் பதிப்பித்த முத்தொள்ளாயிரம் – உரை நூலிலே, ‘ஏதோ இரண்டாயிர வருஷங்களுக்குமுன் ஒரு கவிஞர் இயற்றியது இந்த நூல்’ என்று எழுதினார்கள். இவர்கள் பதிப்பில் சங்ககாலத்துக் கவிஞர் இயற்றியது என்ற கொள்கை வெளிப்படுகிறது. ஆனால் ‘ஏதோ’ என்று இலேசாக நெகிழ்ந்து கூறுவதிலிருந்து இவர்கள் இந்த நூல் பிறந்த காலத்தைக் குறித்து உறுதியான கொள்கையுடையவர்கள் அல்லர் என்று தோன்றுகிறது. இந்த நூலின் காலத்தை அறுதியிடுதற்கு ஒரு சில சான்றுகள் உள்ளன.

முதலாவது இந்த நூலைக் குறித்துப் பழைய உரைகாரர்கள் கூறுவனவற்றை நோக்குவோம். பேராசிரியர் தொல்காப்பியச் செய்யுளியலுரையில் (சூ. 239) முத்தொள்ளாயிரத்தை உதாரணம் காட்டினர். இவ்வுரைகாரரது காலம் சுமார் 14-ம் நூற்றாண்டாகும். ஆகவே முத்தொள்ளாயிரம் இந்தக் காலத்திற்கு முற்பட்டது என்பது புலப்படும். உரையாசிரியராகிய இளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் (சூ. 5)

ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும்
ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வாரே
கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம்
ஆற்றல்சால் வானவன் கண்

என  ‘முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க’ என்று எழுதிச் செல்லுகின்றார். இவரது காலம் சுமார் 12-ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். எனவே இந்தக் காலத்திற்கும் முற்பட்டதாகும் முத்தொள்ளாயிரம். மேற்குறித்த பேராசிரியர் தம் உரைப்பகுதியில், ‘முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுளும்……கலம்பகம் முதலாயினவும் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்துவர இயற்றப்படும் விருந்து என்பதற்கு உதாரணமாம்’ என விளக்கினர். இதனால் அந்தாதிச் செய்யுட்கள், கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் தோன்றிய 8-ம் 9-ம் நூற்றாண்டுகளை அடுத்து முத்தொள்ளாயிரமும் புதுவதாக இயற்றப்பட்டதாகும் என்பது வெளியாகின்றது.

அன்றியும், பேராசிரியர் ‘பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய்தார் பிற்சான்றோரும்’ (தொல். செய். 158) எனக் கூறினர். பிற்சான்றோர் என்பதனால் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது இந்த நூல் என்பது தெளியலாகும். எனவே கி.பி. 500-க்கு மேல் 850-க்குள்ளாக இந்த நூல் இயற்றப்பட்டதாதல் வேண்டும் என முன் எல்லையையும், பின் எல்லையையும் ஒருவாறு வரையறுக்கலாம்.

இனி நூலினகத்தே காணப்படும் சான்றுகளை நோக்குவோம். சோழ அரசரது தலைநகராக தஞ்சை நகர் சுமார் கி.பி. 850ல் தோன்றியது. இவ்வரசர்களைக் குறித்து இப்போது அகப்பட்ட முத்தொள்ளாயிரப் பகுதியில் பல செய்யுட்கள் உள்ளன. அவற்றில் ஒன்றிலேனும் தஞ்சை நகர் கூறப்படவே இல்லை. உறையூர் என்பது தான் தலைநகராகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே கி.பி.850-க்கு முன்பு இந்த நூல் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்தச் சரித்திரச் சான்றாலும் உறுதியடைகின்றது. நூலில் காணப்படாத ஒன்றினைக்கொண்டு இந்தத்துணிபு கொள்ளப்பட்டது. இதனைக்காட்டிலும் நூலிற் காணப்படும் சான்றுகளே வலியுடையன.

சோழ பாண்டியர்களுக்குரிய குதிரைகளின் பெயர்கள் முதல் முதல் திவாகரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சூத்திரங்கள் வருமாறு:

கனவட்டம் என்பது வழுதி ஊர்மா.
பாடலம் என்பது சேரன் ஊர்மா.
கோரம் என்பது சோழன் ஊர்மா. (III, 11, 12, 13)

இதற்கு முன்னுள்ள நூல்களில் இந்தப் பெயர்கள் வழங்கியனவாகத் தெரியவில்லை. இந்தப் பெயர்களுள் ‘கனவட்டம்’ என்பதும் (புறத்திரட்டு, 1515), ‘பாடலம்’ என்பதும் (புறத்திரட்டு, 1513) முத்தொள்ளாயிரத்திற் காணப்படுகின்றன. ஆதலால் திவாகரத்தின் காலத்தை அடுத்து, சற்று முன் இந்த நூல் தோன்றியிருக்கலாம் என்று நினைக்க இட்முண்டு. திவாகரத்தின் காலம் சுமார் 10-ம் நூற்றாண்டாகும்.

பிற்காலத்து வழக்கிற் புகுந்த சொற்கள் இந் நூலகத்துக் காணப்படுகின்றன. ‘நாணோடு உடன்பிறந்த நான்’ (புறத். 1563), ‘காணேன் நான்’ (புறத். 1535) என்று ஈரிடங்களில் நான் என்ற பிற்பட்ட வழக்கு வந்துள்ளது. இங்ஙனமே ‘போது’ என்பது ‘பொழுது’ என்ற பொருளில் வந்துள்ளது. ‘நெடு வீதி நேர்பட்டபோது (புறத். 1525) என்று முடியும் புறத்திரட்டுச் செய்யுளைக் காண்க. ‘பேர்’ என்பது ‘என்னையுரையல் என் பேர் உரையல்’ (புறத். 1540) என்ற செய்யுளில் காணலாம். இதனையும் ‘போது’ என்பதனையும் நேமிநாதம் (வெண்பா, 35) பிற்பட்டெழுந்த வழுவமைதிகளாகக் கூறுகின்றது. ‘வீணில்’ என்பது ‘கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்’ (புறத். 1541) என ஒரு செய்யுளில் வந்துள்ளது. இதுவும் பிற்காலத்துச் சொல்லென்பது கூற வேண்டா.

இந்தச் சொற்களே அன்றிப் பிற்காலத்து எழுந்த விகுதிகளும் இந்த நூற் செய்யுட்களகத்து மிகுதியாகக் காணப்படுகின்றன. ‘ஏல்’ என்பது அவ்வாறு வருவனவற்றுள் ஒன்று. இது எனின், எனில், ஏல் என்ற சொற்கள் வரிசையில் இறுதியில் திரிந்து வந்த வடிவம்.

தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் - யானோ
எளியேனோர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அனியானேல் அன்றென்பார் ஆர் (புறத். 1523)

என ஈரிடங்களில் வருகின்றது. ‘ஆர்’ என்பதும் பிற்பட்ட வழக்காகும் (நேமிநாதம், 35). ‘அல்லால்’ (புறத். 1528), ‘ஆனக்கால்’ (புறத். 1526) முதலிய பிற்பட்ட வடிவங்களும் இந்நூற் செய்யுட்களில் வந்துள்ளமை காணலாம். எதிர்காலத்து வரும் தன்மை ஒருமை விகுதி ‘அல்’ என்பது. இது பிற்பட்ட காலத்து ‘அன்’ எனத் திரிந்து பிற்பட்ட நூல்களில் வழங்கப்பட்டது. இவ் ‘அன்’ ஈறு முத்தொள்ளாயிரச் செய்யுளில் காணப்படுகின்றது. ‘புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண் நிற்பன்’ (புறத். 1533) என்பது செய்யுள். இவ் ‘அன்’ ஈற்றைக் குறித்து இளம்பூரணர் (தொல். வினை. 6,உரை) ‘உண்பல், தின்பல் எதிர்காலம் பற்றிவரும். இப்பொழுது அதனை உண்பன், தின்பன் என அன் ஈறாக வழங்குப’ என்று சொல்லுகிறார். எனவே இவ்வீறு மிகப் பிற்பட்ட காலத்தது என்பது எளிதின் உணரலாம். இளம்பூரணர் காலத்திற்கு 2, 3-நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இவ்வழக்குப் பயின்று வந்திருக்கலாம்.

இனி முத்தொள்ளாயிரச் செய்யுட்களில் எடுத்தாளப்பட்டுள்ள ஒரு சில தொடர்களை நோக்குவோம். ‘பண்டன்று பட்டினங் காப்பு’ (புறத். 1562) என முத்தொள்ளாயிரத்துள் வருவது பெரியாழ்வார் திருமொழியில் (V, 2, 1-10) ‘நெய்க்குடத்தை’ என்னும் பதிகத்தில் காணப்படுகின்றது. இது போன்றே ‘யார்க்கிடுகோ பூசல் இனி’ (புறத். 1519) என்பது நாச்சியார் திருமொழியில் (IX, 2) ‘ஆர்க்கிடுகோ தோழி அவன் தார் செய்த பூசலையே’ என வருகின்றது. இவை பெரியாழ்வார் காலத்தை அடுத்துத் தோன்றியது முத்தொள்ளாயிரம் என்பதை உணர்த்துகின்றன.

முடிவாக, பழமொழி நூலிலிருந்து சில பழமொழிகள் இந் நூலினகத்தே எடுத்தாளப்பட்டுள்ளன. நீரொழுகப் பாலொழுகா வாறு’ (புறத். 1521: பழமொழி 243. செல்வக்.) என்ற உதாரணத்தைக் காண்க. பழமொழியாயிருத்தலால் இந்நூலிலிருந்துதான் கொள்ளவேண்டும் என்ற நியதி இல்லையே எனச்சிலர் கூறலாம். மறுக்கமுடியாதபடி ஓர் உதாரணம் உள்ளது

செய்யா ரெனினுந் தமர்செய்வர் என்னுஞ் சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் (புறத். 1306)

என்று முத்தொள்ளாயிரம் கூறுகிறது. இது பழமொழியில் உள்ளது. (பழமொழி. 351 செல்வக்.) ஆதலால் பழமொழி நூலின் காலத்திற்குப் பின்பு முத்தொள்ளாயிரம் தோன்றியது என்பது உறுதி. பழமொழியின் காலம் சுமார் கி.பி.750 – ஆக இருக்கவேண்டும் என அறுதியிட்டுள்ளேன்.

மேற்காட்டிய காரணங்கள் அனைத்தும் முத்தொள்ளாயிரம் கி.பி. 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது என்று தெளிவிக்கின்றன.

$$$

.

எஸ்.வையாபுரிப் பிள்ளை

இந்நூலின் கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள் முதலியன:

1.இருவகை இலக்கியம்.கலைமகள்
2.பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்செந்தமிழ்
3.திருமுருகாற்றுப்படைமதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு: முன்னுரை
4.நெடுநல் வாடையும் நக்கீரரும்சற்குணர் மலர்
5.பாலையின் அரங்கேற்று மண்டபம்கலைமகள்
6.தொகை நூல்களின் காலமுறைகுமரி மலர்
7.குறுந்தொகைகரந்தைக் கட்டுரை
8.குறுந்தொகைச் செய்யுளில் ஒரு சரித்திரக் குறிப்புகலைமகள்
9.‘எருமணம்’கலைமகள்
10.பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துகலைமகள்
11.அதியமான் அஞ்சிகலைமகள்
12.மெளரியர் தென் இந்தியப் படையெடுப்புசெந்தமிழ்
13.காவிரிப்பூம்பட்டினம்ஹனுமான்
14.தொண்டி நகரம்சக்தி
15.முத்தொள்ளாயிரம்.வசந்தம்
16.முத்தொள்ளாயிரத்தின் காலம்கலைமகள்

(இலக்கிய தீபம் நூல் – நிறைவு)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s